சிறுகதை? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.3.15

தொலை(த்)ந்த நிம்மதி


தினம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும்வரை மெகானிகலாக ஒரே மாதிரி வாழ்க்கை.  ஐந்து மணிக்கு அலாரமே வேண்டாம், தானே தூக்கம் விட்டுப்போய்விடும். எழுந்து ஒரு சிறு நடைப்பயிற்சி.  வயதாக, ஆக இதுமாதிரிக் கட்டாயங்கள் சேர்ந்து விடுகின்றன. அப்புறம் வீடு வந்து கொஞ்ச நேரம் ஒட்டாமல் கணினியில் ஃபேஸ்புக். 
 

                                                                  Image result for working in computer clipart images
 
டிவியில் பக்தி சேனலும், செல்லில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஓடிக்கொண்டிருக்க, அவன் மனைவி அவனுக்காக அவசரம் அவசமாக ('ர' கூட விட்டுப் போகுமளவு அவ்வளவு அவசரம்) சமைத்துக் கொண்டிருந்தாள்.  இதோ கிளம்ப வேண்டும்.  இப்போதே கிளம்பினால்தான் அலுவலக பஸ் வரும் தூரத்தை அடைய முடியும். அலுவலக பஸ் பிடித்தால் சுத்தமாக ஒரு மணிநேரம் பயணம். 
 

                                                                   Image result for reading newspaper clipart images
 
ஒரே பாதையில், ஒரே மாதிரி தினமும் அலுவலக பஸ் பிடித்து பயணம்.  அலுவலகத்தில் ஒரே மாதிரி பணிச்சுமை.  மாலை வீடு திரும்பி, காலை இவன் கிளம்பிய பிறகு வந்திருக்கும் செய்தித் தாள்களை மேய்ந்து, தொலைகாட்சி பார்த்து, இரவு உணவு உண்டு படுக்கச் சென்றால்,  மறுநாள் மறுபடி...


மகன் வெளியூரில் வேலை பார்க்கிறான்.  மகளுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது. 

சமீப காலமாக மனது முழுவதும் ஒரு அலுப்பு மண்டிக்கொண்டு வருகிறது.  சுஜாதா தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்' பதிவில் சொல்லிய ப்ராக்ரஸ்ஸிவ் காம்ப்ரமைஸ் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. 


வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவனுக்கும் கனவுகள் இருந்தன. காதல் இருந்தது.  கனவுகள் போலவே காதலும் கட்டுப்படுத்தப்பட்டது.  கனவுக்கு சம்பந்தமில்லாமல் வேலை கிடைத்தது.  வேலையில் சேர்ந்ததும் ஆறுமாதமோ ஒரு வருடமோ கழித்து சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், அதை மனைவியின் பெயரில் தொடங்க வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது.  காதலி மனைவியாகாமல் புதிய முகம் ஒன்று மனைவியாக வந்தபோது தன் எண்ணம் நிறைவேறும் என்ற எண்ணம் அடிபட்டுப் போனது. 


அப்போதே தொடங்கி விட்டது இயந்திர வாழ்க்கை.  வெளிவரும் திசையறியாது அதன் போக்கில் போகத் தொடங்கினான். சீக்கிரம் ஒரு மாறுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு நினைவில் இருந்தது.   நாள்பட அதுவும் மறந்து, அப்படியே காலமும் ஓடிவிட்டது.


அலுப்பு ஏற்பட்ட ஒரு உச்ச நாளில் ஒருநாள் தன் வழக்கத்திலிருந்து மாறத் தீர்மானித்தான். 

இரண்டு நாட்களாக கணவன் சற்றுத் தாமதமாகக் கிளம்புவதை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.  அதுவும் இரண்டாம் நாளும் அவன் தாமதமாகக் கிளம்பிய போதுதான்,  'நேற்றும் இப்படித்தான் கிளம்பினான்' என்று நினைவு வந்தது. அது மட்டுமில்லாமல், இரவும் நேரம் கழித்துதான் வந்ததும் நினைவுக்கு வந்தது.

ரொம்பக் கவலைப்படாமல் தன் வேலைகளில் மறந்து போனாள். நினைவுபடுத்தியது அலைபேசி!  பிரச்னையும் தொடங்கியது.
 

காலை பதினோரு மணி இருக்கும். திடீரென்று அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. அது அவள் கணவனின் அலைபேசி ரிங் டோன். பரபரப்புடன் ஹாலில் தேடியவள் டிவியின் மேல் இருந்த செட் டாப் பாக்ஸின் பின்னே இருந்த அலைபேசியை எடுத்தாள். 


"மறந்து வைத்து விட்டுப் போய்விட்டாரா?"

"RPK calling..."

அதை எடுத்து உயிர் கொடுத்து காதில் வைத்தாள். இவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க' என்று கேட்டது அவன் மேலதிகாரியின் குரல்.


                                                                           Image result for cell phone near TV clipart images


"எங்க மூன்று நாளாய் ஆளைக் காணோம்... உடம்பு சரியில்லையா? ஆபீஸுக்குச் சொல்ல வேண்டாமா?"

"என்னது.. மூன்று நாட்களாய் ஆளைக் காணோமா... தினமும் அங்கதான வர்றார்?"  அதிர்ச்சியுடன் கேட்டாள்.


"அவர் மிஸஸா?  என்னம்மா ஆச்சு அவருக்கு?  ஒரு வாரமாவே சரியில்லை.  அதுலயும் மூணு நாளாய் ஆளைக் காணோம்... இப்படி இருக்க மாட்டாரே... கூப்பிடுங்க அவரை.."

"ஸார்.. ஸார்..."  எதிர்பாராமல் கேட்ட செய்தியால் திக்கியது, தடுமாறியது அடுத்து வரவேண்டிய வார்த்தைகள். 


"ஆபீசுக்குத்தான் கிளம்பி தினமும் போல வந்துகிட்டு இருக்கார்... இன்னிக்கிக் காலையும் கிளம்பி வந்தாரே....  ஏன் ஃபோனை வச்சுட்டு வந்துட்டார்?  இல்ல, போயிட்டார்?
என்ன ஆச்சு?  மூணு நாளாய் வரவில்லையா?  கடவுளே..."

சிறிய நிசப்தத்துக்குப் பின் எதிர்முனை அமைதியாகியது. 

இவளது அமைதி குலைந்து போனது.  'என்ன ஆச்சு இவருக்கு? என்கிட்டே கூட ஒண்ணும் சொல்லலையே..  வரட்டும்'


மதியம் மீண்டும் அதே அலைபேசி அழைத்தது. பெயர் வராமல் ஏதோ நம்பர் வந்தது. எடுத்துப் பேசினாள்.  கணவன் குரல் கேட்டது.  விட்டு விட்டு வந்தது.

"என்னங்க... என்னங்க... எங்கே இருக்கீங்க...  ஆபீஸ் போகலையா? செல்லையும் விட்டுட்டுப் போயிட்டீங்க..."


அவன் பேசுவதே கேட்கவில்லை. உடைந்து உடைந்து வந்தது. இவள் பெயரை உச்சரிக்கிறான் என்று புரிந்தது.  கட் ஆகி விட்டது.  குழப்பம் ஏறியது.  அந்த எண்ணுக்கு இவள் டயல் செய்து பார்த்தாள். போகவில்லை.

மதியத்துக்குமேல் மீண்டும் அந்தத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. 


இந்தமுறை பேசியது ஒரு காவல்துறையின் அதிகாரக் குரல். 

"இந்த நம்பர் யாருதுங்க... பேர் சொல்லுங்க.. நாங்க போலீஸ்.."

பெயர் சொன்னாள்.

"அட்ரஸ் சொல்லுங்க.."


சொன்னாள்.

"சரியாத்தான் இருக்கு..  ஏம்மா உன் புருஷனா அவன்.. கள்ள வோட்டுப் போட வந்தான்னு சொன்னாங்க...  பிடிச்சா கஞ்சா வச்சுருக்கான்.  உள்ளே பிடிச்சு வச்சுருக்கோம்..  கிளம்பி வாங்கம்மா..."  காவல் நிலையம் பெயர் சொல்லியபிறகு தொடர்பு அறுந்தது.


" கள்ள ஓட்டா... தன்னுடைய ஒட்டையே இவன் போடவில்லையே... என்ன சொல்கிறார்கள்..."  வயிற்றைப் பிசைவது போல இருந்தது. மயக்கம் வந்தது.  யாருமே இல்லையே...  என்ன செய்வது?

காலிங் பெல் அடித்தது.  கதவைத் திறந்தாள்.  மகன் நின்றிருந்தான். 
 
 

                                                                      Image result for man standing outside the door clip art images
 
"என்னம்மா ஆச்சு உனக்கு?  நீயே கதவைத் திறக்கறே?"

"எனக்கு என்ன?  ஒண்ணுமில்லையே?"  காலையிலிருந்து நடக்கும் எதுவும் சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.

"ஏன் அப்படிக்கேட்கறே?"

"நேத்து ராத்திரி அப்பா ஃபோன் செய்து வந்து அம்மாவுக்குத் துணையாயிரு'ன்னு சொல்லிட்டுக் கட் பண்ணிட்டார்.  அப்புறம் உடனே மறுபடி மறுபடி டயல் செய்தாலும் எடுக்க மாட்டேங்கறார்.  என்ன ஆச்சு அவருக்கு?  ஏன் படுத்தறீங்க?  என்ன நிலைமையில கிளம்பி வந்திருக்கேன் தெரியுமா?  என்னன்னு நினைச்சுக்கறது?"

ஸ்விட்ச் ஆன் செய்த மாதிரி அழத் தொடங்கினாள்.

லேண்ட்லைன் அடித்தது.  மகன் எடுத்தான்.  மகள்.  வெளியூரிலிருந்து பேசினாள்.  மகன் பாடிய அதே பல்லவி. மகன் குழப்பத்துடன் அம்மாவைப் பார்த்தபடியே ஏதோ பேசி விட்டு ஃபோனை வைத்தான்.

சாப்பிட்டு விட்டு, காவல் நிலையம் கிளம்பினார்கள்.

அங்கு அவர் இல்லை. -ஒரு மணி நேரத்துக்கு முன்னால் யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாய்ச் சொன்னார்கள்.

குழப்பத்துடன் வீடு வந்து மாலை வரைக் காத்திருந்தும் அவர் வரவில்லை.

மாலை 6 மணிக்குமேல் தொலைபேசி அலறியது.  பேசியது பெண்குரல்.
 


























இந்தக் கதையை எப்படியோ தொடர நினைத்து எழுதி வைத்து ஆறு மாதங்களாகின்றன.  முதலில் நான் நினைத்தபடி எழுத எனக்குப் பிடிக்கவில்லை.  வேறு எப்படித் தொடரவும் அலுப்பாக இருக்கிறது!  'கனவிலிருந்து விழித்துக் கொண்டவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்று வேகமாகக் கிளம்பினான்' என்கிற வரிகள் எனக்குப் பிடிக்கவில்லை!

வேறு என்ன செய்யலாம்?

உங்கள் யாருக்காவது ஏதாவது தோன்றினால் தொடருங்களேன்...  ஒவ்வொரு பகுதி ஒவ்வொருவர் கூடத் தொடரலாம்.  முடியவில்லையா?  விட்டு விடுங்கள்!  அவன் ஏதோ மிகப் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.  
 
 
தலைவிதி நன்றாயிருந்தால் வெளிவருவான்!




.