ஞாபகம் வருதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாபகம் வருதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.5.13

துள்ளித் திரிந்ததொரு காலம்


குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்
கொடுக்காப்புளி புளியங்காய்
திருட்டு மாங்காய்ச் சுவையும்
குட்டிப் போடும் என்று காத்திருந்த
மயிலிறகும்

சீவிய பென்சில் துகள்களைப்
பாலில் ஊற வைத்து
ரப்பராகக் காத்திருந்ததும்
சாணி மிதித்த நண்பன்
தொட்டால் தீட்டு என
கொடுக்கு வைத்துக் கொண்டு
வெறுப்பேற்றிய நாட்களும்

பள்ளி விட்டு
நடந்து வந்த பாதையில்
நண்பன் கையில் கடிகாரம் கண்டு
நேரம் கேட்ட
கல்லூரி ஏந்திழைக்கு
வெட்க பதில் சொன்ன
நண்பனை
அதைச் சொல்லியே 
அழவைத்த நினைவுகளும்

சீரான இடைவெளியில்
வீட்டை விட்டு
ஓடிப் போய் விடும்
நண்பனும்
தற்கொலை செய்து கொள்ள
யோசனையும்,
'சாகும்வரை கூடப் படு'
என்று துணையும்,
கேட்ட நண்பனுக்குத் 'துணை'
ஏற்பாடு செய்த நினைவுகளும்

நூலகத்தில் 'அவள்'
எந்தப் புத்தகம் கையில் எடுத்தாலும்,
'நீங்க படிச்சுட்டு எனக்கு'
என்று அருகிலேயே
பார்வையால் வருடிக்
காத்திருந்த நாட்களும்,
காலனி சினிமாவில்
கன்னியவள் அருகிலேயே
இடம்பிடிக்க ஓடி
நண்பர்களின் கிண்டல்,
விரோதம் தேடிய நாட்களும்,

பள்ளிப்பணம் கட்ட வழியின்றி
மாதா கோவில் பின்புறம்
பாடி இருந்த நாட்களும்,
காய்கறி அடுப்புக்கரி
வாங்குவதில்
கமிஷனும்
குச்சி ஐஸ் பால் ஐஸ் வாங்கிக்
கையொழுக நக்கியதும்.........



துள்ளித் திரிந்ததொரு காலம்....


***************************************************

 நினைப்பாயா அம்மா...

கடுத்த தோசையும்
கசப்புக் காஃபியும்
எப்போது சுவைத்தாலும்
வந்து விடுகிறது
அம்மாவின் நினைவு...

சொர்க்கத்தில்
அடை அவியலும் தவலை வடையும்
கிடைத்தால்
அம்மாவும் நினைக்கக் கூடும்
என்னை...