தேங்காய் சீயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேங்காய் சீயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.11.16

"திங்க"க்கிழமை 161107 :: தேங்காய் சீயான் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி




தேங்காய் சீயன்

இது என்னடா சீயன் அப்படின்னு நினைக்காதீங்க. இது எங்கள் வீட்டுப் பழக்கம். சீயனை நான் எங்கள் வீட்டில், கிருஷ்ணஜெயந்திக்கும் சிராத்தத்தின்போதும்தான் செய்துபார்த்திருக்கிறேன். சின்ன வயதில் கிருஷ்ணஜெயந்தி பட்சணங்கள் மூக்கைத் துளைக்கும்.. ஆனால் ஒண்ணும் தராமல் தூங்கச் சொல்லிவிடுவார்கள். அப்புறம் எல்லா பூஜையும் முடித்து, கிட்டத்தட்ட நடுநிசியில் எழுப்பி எங்களுக்கு எல்லாப் பட்சணங்களையும் பிரசாதமாகக் கொடுப்பார்கள். ‘நாங்க என்ன பெரியவங்களா.. கடவுளுக்குப் படைக்கும்வரை உணவை எண்ணி ஆசைப்படாமல் இருப்பதற்கு. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்தவுடனேயே பட்சணங்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். அதுவே பயங்கர மகிழ்ச்சியாக இருக்கும். அப்புறம் தூங்கும் வரை அதே நினைப்புதான். என் மாமனார் வீட்டுல, 10 மணிக்குள்ளாற பிரசாதம் கிடைத்துவிடும். (இதுவே லேட்டுதானே… யார் கிருஷ்ணனை நடுநிசியில் பிறக்கச்சொன்னார்கள். ஓ.. அது மாறிடுத்துன்னா கதையே மாறிடுமே.. எப்படி குழந்தையை இடம் மாற்றுவது?)




இந்தச் சீயனை, செட்டிநாட்டில், சீயம் அல்லது சுகியன் என்று சொல்வார்கள். பருப்பு வெல்லம் சேர்த்து அவர்கள் சுகியன் செய்வார்கள். கேரளா கடைகளில், பயறு, வெல்லம் சேர்த்து உள்ள ஸாஃப்டா இருக்கிற சுகியனை (இனிப்பு போண்டா என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.. தில்லையகத்து…. உதவிக்கு வாருங்கள்) சாப்பிட்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் தேங்காய் சீயனுக்கு இணையாகாது (பல்லு கொஞ்சம் ஸ்டிராங்கா இருப்பவர்களுக்கு). அதுவும் வெளியில் கொஞ்சமாக தேங்காய் வெல்லம் சேர்ந்த பாகு வந்துகொண்டிருக்கும்.. எழுதும்போதே நாக்குக்கு டேஸ்ட் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. சீயன், தேங்காய் போளி எல்லாம் ஒரே குடும்பம் (தேங்காய் போளி டிரெடிஷனாச் செய்யறது. கர்நாடகாவுல செய்யற மாதிரி ஈஷிச் செய்யறது இல்ல. அது தோசை ரோஸ்ட் மாதிரி இருக்கும். நம்ம ஊர்லதான் பூரணம் வைத்து, அதன் மேல் மாவு வைத்து சப்பாத்திமாதிரி இட்டு அல்லது கையால் தட்டி, நல்லா எண்ணெய் விட்டு தேங்காய் போளி செய்வார்கள்). 




தேங்காய் சீயன் எப்படிச் செய்யறதுன்னு பார்ப்போம்.

ஒரு டம்ளர் துருவின தேங்காய் எடுத்துக்கொள்ளுங்கள்.  கால் டம்ளர் வெல்லத்தைக் கடாயில் விட்டு, அத்துடன் கால் டம்ளருக்கும் கொஞ்சம் குறைவாக தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நல்லா பாகுபதம் வரணும். கரண்டில எடுத்தா பாகு பதம் தெரியணும். பாகாக ஆகலைனா உருண்டை பிடிக்க வராது. இங்கல்லாம், நல்ல, குப்பைகள் இல்லாத கோலாப்பூர் வெல்லம் கிடைக்கும். வெல்லத்தின் தரம் குறைவாக இருந்தால், கொஞ்சம் சூடான உடனேயே, வெல்லஜலத்தை வடிகட்டி, மீண்டும் கடாயில் விட்டு பாகுபதத்திற்குக் கொண்டுவரவேண்டியதுதான். (வெல்லத்துல உள்ள அழுக்கை எடுக்க, சூடான வெல்ல ஜலத்தில் கொஞ்சம் பால் விட்டால் அழுக்கு ஓரத்துக்கு வந்துடும்னுலாம் சொல்லி உங்களைப் படுத்த விரும்பவில்லை) பாகு காய்ச்சினபின், அதில் துருவின தேங்காய் போட்டுக் கிளறவும். இத்துடன் ஏலப்பொடி சேர்க்கவும். கெட்டியானபின், அடுப்பை அணைத்துவிடலாம். நல்லா ஆறினபின்பு, சின்னச் சின்னதாக உருண்டை பிடிக்கலாம். இந்த உருண்டைகளை நல்ல தாம்பாளத்தில் வைத்துவிடவும்.




அடுப்பில் எண்ணெயைக் காயவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ½ டம்ளர் மைதா, 1 ஸ்பூன் அரிசி மாவு, சொட்டு மஞ்சள் பொடி இவற்றைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைக்கவும். பஜ்ஜி மாவு பதம்.  இது ரொம்பக் கெட்டியா இருந்ததுனா, கொழக்கட்டை பண்ணுவதுபோல், தேங்காய் வெல்ல உருண்டையில் மாவை நாம ஒட்டும்படி ஆகிடும். ரொம்ப ஜலமா இருந்ததுனா, மாவு பூசினமாதிரியே தெரியாது. 




இப்போ எண்ணெய் காய்ந்திருக்கும். ஒரு உருண்டையை எடுத்து, மாவுல முக்கி எண்ணெயில போடவேண்டியதுதான். எண்ணெய் தெரிக்காமப் பார்த்துக்கணும்.  ஒரு சின்ன டம்ளருக்கு சுமார் 11 சீயன் வரும்).  செய்வது சுலபம். சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். ஓடு மட்டும் கொஞ்சம் கட்டியா இருக்கறமாதிரி இருக்கும். அதுவும் தேங்காய்ப்பூரணமும் சேர்த்துச் சாப்பிட அட்டஹாசமா இருக்கும்.





பின்குறிப்பு – படத்துல இருக்கற மைதா தோசையப் பார்த்துட்டு என்ன காம்பினேஷன் இது என்று நினைக்க வேண்டாம். ஒண்ணு டிபன். மற்றது அப்போ அப்போ சாப்பிட.  யாராவது ஒருத்தராவது, சீயனை, சீயான் என்று படித்து நடிகர் விக்ரமை நினைவுகூர்ந்தால் நான் பொறுப்பல்ல.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.