பம்பாய் ஜெயஸ்ரீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பம்பாய் ஜெயஸ்ரீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.12.12

இசை விழா

இசை விழா உச்சத்தில் இருக்கிறோம். நித்யஸ்ரீ கணவர் குறித்த செய்தி நீங்கலாக மற்ற எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கின்றன பாவம் நித்யஸ்ரீ. 
                                       
அவரைப் பார்த்தால் நம்ம வீட்டு சொந்தக் காரர் மாதிரி ஒரு உணர்வு வரும். அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டாம் தான். அதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது.
                                                
இசைவிழாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நான் பார்த்த வரை வெகு சில நிகழ்ச்சிகள்  தவிர மற்ற அனைத்துக்கும் உட்கார இடம் அல்லது டிக்கெட் கிடைப்பதில் அதிக சிக்கல் இல்லை.

நிறைய இளம் வித்வான்கள் பாடுகிறார்கள். டெக்னிகலாக நன்றாகவே பாடுகிறார்கள். உள்ளத்தைத் தொடும் இசை அபூர்வமாகவே கிடைக்கிறது.  அவரவர் சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப இவர் பாடினால் மயிர்க்கூச்செறியும் அல்லது அவர் பாடினால் கண்களில் நீர் துளிர்க்கும் என்று சொல்லிக் கொள்ளலாம்.  ஓரிருவர் அப்படிப் பாடுவது என்னவோ உண்மை.

இசை விழா சமயத்தில் படே படே ஆசாமிகள் பஜ்ஜிக்கும் தோசைக்கும் பறக்கும் காட்சி ரொம்ப சகஜம். இந்த முறை பஜ்ஜி பக்கோடா, எதுவும் முப்பதுக்குக் குறைந்த விலையில் கிடைக்கவில்லை.  சாப்பாடு விலை விபரம்  தலையைச் சுற்ற வைக்கும்.  125, 150, 170 எல்லாம் சர்வ சாதாரணம். தரம் சுமாருக்குக் கொஞ்சம் மேலே. அவ்வளவுதான்.  உபசாரம் சில இடங்களில் பலம். சில இடங்களில் அன்ன தானம் செய்யும் சத்திரம் மாதிரி அவர்கள் கருணைக் கண் கொண்டு நோக்கி என்ன கொடுத்தாலும் சாப்பிட வேண்டியதுதான். 
                                                
இந்த ஆண்டு இளைய பாடகர்கள் பலருக்கு சீனியர் ஸ்லாட் கொடுத்து அவர்களின் ரசிக்கக் கூட்டத்தை இளைக்க வைத்துவிட்டார்கள்.  அம்ருதா முரளி மங்கையர் மலரில் சொன்னதை வைத்துப் பார்த்தால் இந்த இளம் மேதைகளுக்கு அவர்களுக்கு அளிக்கப் பட்ட உயர்வு மகிழ்ச்சியை அளித்திருப்பதாகத் தெரிகிறது. சன்மானம் என்ன கிடைக்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. நிறைய ஸ்பான்சர்கள் இருப்பதால் சன்மானம் பலமாக இருந்தால் நமக்கும் சந்தோஷமே.  கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நமது இசை மணிகள் லட்சம், எழுபத்தி ஐந்து ஆயிரம் என்றெல்லாம் கேட்பதாகத்தெரிகிறது. இவ்வளவு கொடுத்து  கூப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கும் சந்தோசம் தான்.  ஆனால் இசை மேல் கொண்ட பற்று காரணமாக அவ்வளவாக பசை இல்லாத அன்பர்கள் கூப்பிட்டால் அந்தக் காலத்தில் மதுரை மணி ஐயர் போன்ற மேதைகள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அற்புதமாகப் பாடுவார்கள் என்பது இவர்களுக்குத் தெரிந்தால் நல்லது.
702       
இசை விமரிசனம் எழுதும் அளவுக்கு எனக்கு ஞானம் பற்றாது என்றாலும் சஞ்சய் சுப்ரமணியம் வெளிப்படுத்தும் கற்பனை வளம், பம்பாய் ஜெயஸ்ரீயின் குரல் இனிமை, பற்பல வயலின் வித்வான்கள், மிருதங்க வித்வான்கள் செய்யும் சாகசம் இவற்றை வியந்து பாராட்டியாக வேண்டும்.  திருச்சி சங்கரன், மன்னார்குடி ஈஸ்வரன் போன்ற சீனியர்கள் தம் சுகமான வாசிப்பால் ரசிகர்களை குதூகலிக்க வைத்தார்கள்.  அக்கரை சுப்புலட்சுமி வாசிப்பு சொக்க வைக்கிறது.  கமல் கிரண் விஞ்சமூரி என்ற ஒரு மிக இளை ஞர்  அருமையாக வாசித்துக் கவர்ந்தார். நெய்வேலி சந்தான கோபாலன் காட்டும் அவை அடக்கம், அவர் பெண் ஸ்ரீரஞ்சனி காட்டும் இசைத்திறன் குறிப்பிடத் தக்கது.பாரத் சுந்தர் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். விஜய் சிவா பாடும் சமஸ்கிரு த சுலோகங்கள் கேட்க மெய் சிலிர்க்கும்.   நான் பார்த்த நிகழ்ச்சி அடிப்படையில் சொல்வதால் இவ்வளவுதானா , வேறு யாரும் நன்றாகப் படவில்லையா என்று திகைக்காதீர்கள் . 

--
K.G.Y.Raman