வீட்டிலிருக்கும் முதியவர்களை அன்புடனும்,
மதிப்புடனும் நடத்திய காலம் போய், இப்போது பொறுத்துக் கொள்ளவே மனமில்லா
நிலைக்கு வந்து விட்டோம். முதுமை என்பது அவர்களின் இரண்டாவது குழந்தைப்பருவம் என்பதை மறந்து விடுகிறோம்.
அப்பாவின் சட்டைப்பையிலிருந்து உரிமையாக பணத்தை எடுத்து செலவு செய்தோமே...
அதே உரிமை அப்புறம் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ நம்மிடம் இருக்கிறதா? அந்தக்
காலத்தில் வீட்டுக்கு மூத்தவர்களிடம்தான் பணப்பெட்டியின் சாவி இருக்கும்.
இப்போது
ஏன் சேர்ந்து வாழ முடிவதில்லை? அந்தக் காலத்தில் வேலை வாய்ப்புகள் கம்மி.
சொந்த நிலங்கள் வைத்திருந்தவர்கள் விவசாயம் செய்து கொண்டோ, தோட்டம் துரவு
என்று இருந்தவர்களோ நகர்ப்புறத்தின் கவர்ச்சிகள் இல்லாமல், பணத்தின்
தேவைகள் இல்லாமல் ஒன்றாக இருக்க முடிந்தது. முடிந்தவரை சொந்தங்களிலேயும்
திருமணம் செய்த காலம் அது.
அப்புறம் சொந்தத்தில் திருமணம் செய்வது தப்பு என்றார்கள்.
நாமிருவர், நமக்கிருவர் என்றார்கள். அதற்கும் பிறகு நாமே இருவர்,
நமக்கெதற்கு இருவர்? ஒருவர் போதுமே என்றார்கள்.
விவசாயம் பார்த்தவர்கள் மழை பொய்த்ததாலோ வேறு காரணங்களுக்காகவோ நிலம் விற்று நகரத்துக்கு நகர்ந்தார்கள்.
படித்தவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் வேலை கிடைக்கும்போது,
எல்லோரும் ஒரே இடத்தில் வாழ்தல் சாத்தியமற்றுப் போனது. வெளியூர் என்பது
வெளிநாடாகிப் போனபோது இடைவெளி இன்னும் அதிகரித்தது.
பணம் பார்க்கும் நோக்கில் சேர்ந்திருக்கும் சந்தோஷங்களையோ, உறவுகளின் மதிப்பையோ மிஸ் செய்கிறோமோ...
வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும், அங்கேயே
செட்டிலாகி விட்ட தோழி ஒருவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது அவரைச்
சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பேசிக் கொண்டிருந்தபோது அவர் தந்தை சில
வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார் என்ற செய்தியைச் சொன்னார். அவர்
தந்தை இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தும் அவரால் இந்தியா வர
முடியவில்லை என்பதையும் சொன்னார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து
வந்தவர் அவர். இவர் இப்படி மேலே வர, அவர் தந்தை அந்நாளில் பட்டினியுடன்
பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்தது. இந்தச் செய்தியைச் சொன்னபோது அவரிடம்
பெரிய வருத்தம் ஒன்றையும் என்னால் பார்க்க முடியவில்லை.
அந்தக் காலத்தில் பள்ளிகளே குறைந்த
எண்ணிக்கையில்தான் இருந்தன. பள்ளி நேரமும் 9.30க்கு மேல்தான். 4 மணிக்கும்,
3.30 க்கும் விட்டு விடுவார்கள். ஸ்ட்ரெஸ் கிடையாது. மாலை பள்ளி விட்டு
வீடு வந்ததும் புத்தகப்பையை ஒரு ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு தெரு
நண்பர்களுடன் விளையாடப் போய்விட முடிந்தது. தொலைகாட்சி கிடையாது. கணினி
கிடையாது. முக்கியமாக தொலைபேசி/அலைபேசி கிடையாது! தெருவில், பரந்த
மைதானங்களில் ஓடியாடி விளையாட முடிந்தது. கபடி என்ன, கால் பந்து என்ன, கிரிக்கெட் என்ன, ஓடிப்பிடித்து என்ன, கண்ணாமூச்சி என்ன, கோலி விளையாட்டு என்ன, கிட்டிப்புள் என்ன.....
இப்போது...? விளையாட இடமும் இல்லை, நேரமும் இல்லை! எல்லா விளையாட்டுகளும் கணினியிலும், அலைபேசியிலுமே முடிந்து விடுகிறது! ஆரோக்கியக்கேடு!
காலை பள்ளிக்குக் கிளம்பும் வரையிலும் கூட ஹோம்வொர்க்
செய்யும் பிள்ளைகள் பள்ளிக்கு ஓடுவதும், பள்ளி விட்டு வந்ததும் மாலை வேறு
டியூஷன்களுக்கோ, சிறப்புத் தகுதிக்கான படிப்பு வகுப்புகளுக்கோ
துரத்தப்படும் மாணவர்கள். நாட்டிய வகுப்பு, பாட்டு வகுப்பு என்று
துரத்தப்படும் மாணவிகள்.
ஆயுள் காப்பீட்டைப் பற்றி ஒரு ஜோக் சொல்வார்கள். இளமை
முழுவதும் சேர்க்கும் பணத்தை சேர்த்து வைக்க வேண்டி ஆயுள் காப்பீட்டில்
இட்டு, அப்படிச் சேர்த்த பணத்தை இளமை தொலைந்தவுடன் வரும் நோய்களுக்காகச் செலவழிக்கிறோம் என்று!
அதுபோல, இளமையை வீணாக்கி, சந்தோஷத்தை மறந்து ஓடி ஓடிப் படித்து, முதல்
வகுப்பு, டிஸ்டிங்ஷன் என்று அலைந்து வேலையில் சேர்ந்து பணம் சேர்த்து வீடு,
சொத்து வாங்கி, திருமணம் செய்து பிள்ளை பெற்று அவர்களைப் படிக்க வைக்க ஓடி
ஓடி சம்பாதித்து, அவர்களையும் மிஷின்களாக்கி, பணம் சம்பாதிக்க வெளிநாடு
அனுப்பி விட்டு, வயதான காலத்தில் தனிமையில் இங்கு காலம் கழித்துக்
கொண்டு...எதைப் பெறுகிறோம், எதை இழக்கிறோம்?
முன்பு ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் ஒன்று வரும். ஓய்வாக
அமர்ந்து கவலையின்றி குளிர்பானம் குடிக்கும் ஒருவனிடம், அவசரமாக
ஓடிக்கொண்டிருக்கும் அவன் நண்பன் ஒருவன் ஓடி ஓடி சம்பாதிப்பதின்
அவசியத்தைச் சொல்வான். 'ஓடி?' என்று இவன் கேட்க, 'ஓடி ஓடி சம்பாதிக்கணும்'
என்பான் அவன். 'சம்பாதித்து?' என்பான் அவன். 'நிறைய சம்பாதித்தபின் ஓய்வாக
அமர்ந்து குளிர்பானம் அருந்த வேண்டும்' என்பான் அவன். 'அதைத்தான் நான்
இப்போதே செய்கிறேன்' என்பான் இவன்.
போதுமென்ற மனம் இருப்பவனே பெரிய பணக்காரன்.
முதல்
முதியோர் இல்லம் எப்போது வந்தது? வீட்டில் இருக்கும் இளையவர்கள் பேசும்
பேச்சில், நடத்தையில் மனம் புண்பட்டு இருப்பதைவிட,முதியோர் இல்லங்களில்
இருப்பதும் தவறில்லை. அதை முதியோர் இல்லம் என்று பார்க்காமல் முதியவர்களின்
தனிக்குடித்தனமாகப் பார்க்க வேண்டியதுதான். (சம்சாரம் அது மின்சாரம்
லக்ஷ்மி வசனம் நினைவுக்கு வருகிறதா?) ஏனென்றால், வீட்டின் மூத்த
உறுப்பினர்களாகிய இவர்களும் தங்கள் அனுபவத்தை வைத்து சில சமயம்
எதிர்பார்ப்பில்லாமல் வாழவும், ரொம்பக் கேள்விகள் கேட்டும், எல்லா
விஷயத்திலும் தலையிடுவதைத் தவிர்க்கவும் வேண்டும் என்று இளைய தலைமுறை
எதிர்பார்க்கிறது.
மாமியாருக்கு மருமகளைப் பிடிக்கவில்லை. மருமகளுக்கு (அதனாலேயே) மாமியாரைப்
பிடிக்கவில்லை. பின்னால் மாமியாராகப் போகும் இந்த மருமகள் தானாவது நல்ல
மாமியாராக இருக்கலாம் என்று நினைக்கிறார்களா? அதுவும் பெரும்பாலும் நடப்பதில்லை! ஆனால் மூத்தோர் தங்கள் விஷயத்தில் தலையிடுவதைத்தான் இளையவர்களும் விரும்பவில்லையே... கீதா சாம்பசிவம் மேடம் கேட்டிருக்கும் பத்து கேள்விகள் நினைவுக்கு வருகின்றன!
எனக்கு
முந்தைய தலைமுறையில் 14 சகோதர, சகோதரிகள். எங்கள் தலைமுறையில் 4 அல்லது 5.
இப்போதெல்லாம் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்பதே கூட அரிதாகி
வருகிறது. சிக்கனம். பாதுகாப்பு. முன்பு அத்தனை குழந்தைகளையும் வளர்த்து
ஆளாக்க முடிந்தது. இப்போது இரண்டு பெற்றவன் கூட படிப்புக்கும், திருமணம்
செய்து வைப்பதற்கும் முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறான். போட்டி. மற்ற உறவினர்களின் பிள்ளைகளைவிட, தன் பிள்ளைகள் இன்னும் உயர்ந்தவர்கள் என்று காட்டும் போட்டி!