இந்த ஞாயிறு என் நாளாகியது. உடல் நிலை சரியில்லாத மனைவி இன்றைய பொழுதை புளிக்காய்ச்சல் பிசைந்து ஓட்டி விடலாமா என்று கேட்க, அதில் எனக்கும் என் செல்வங்களுக்கும் சம்மதமில்லாமல் போக, சங்கீதாவிலிருந்து குழம்பு, பொரியல் வாங்கிக் கொள்ளலாமா என்ற பேச்சைக் கடந்து, என்னைக் களம் இறக்கி விட்டார்கள். "சிம்பிளா நீங்க ஏதாவது செய்யுங்களேன்"
செய்துட்டாப் போச்சு. என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.
உருளைக்கிழங்கு, தக்காளி வெங்காயம் தவிர வேறு ஏதும் வீட்டில் இல்லை. கரி,கொத். கூட இல்லை. மணி 11.50. சாப்பிடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
டட்..டடாய்ங்க்..
சனிக்கிழமை செய்த பருப்பு வடையில் பாக்கி 12 ஃப்ரிஜ்ஜில் இருந்தன.
அவ்வப்போது
பருப்புருண்டைக் குழம்பு செய்வோம். இதில் மசாலா சேர்க்கும் வழக்கம்
இல்லை. எனவே என், மற்றும் மகன்களின் சுவைக்காக, கடைகளில் மசால் வடை
வாங்கிக் குழம்பு செய்வேன். ஒரே வேளையில் ஓடி விடும். வீட்டிலேயே மசால்
வடையும் செய்யலாம்தான். 1) பொறுமையும் நேரமும் இல்லாத தருணங்கள், 2) அது மசால்வடையின் வாசனைகளைச் சரி விகிதத்தில் தாங்கி நிற்பதில்லை! (சில) கடைகளில் ம.வ அபாரமாகச் செய்கிறார்கள்.
'இப்போது இந்த பருப்பு வடையில் மசாலா வாசனை இல்லையே...' மகனின் கவலையைத் தீர்த்தேன்!
புளி கரைத்து, உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கரைத்து எடுத்துக் கொண்டு அடுப்பில் ஏற்றி, தாளித்துக் கொண்டு கொதிக்க ஆரம்பிக்கும்போது இந்தக் கலவையையும் ஊற்றி கொதிக்க விட்டு,
இறக்கிக் கீழே வைத்து (கறிவேப்பிலைதான் இல்லையே) வடைகளைத் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் சேர்த்து, மூடி,
இடையிலேயே குக்கரில் வைத்து எடுத்த உருளைக் கிழங்கை உரித்து, வெங்காயம் வதக்கி, உரித்த உ.கி சேர்த்து, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கையிலேயே,
இன்னொரு அடுப்பில் புளித் தண்ணீருடன் தக்காளியைச் சேர்த்துப் பிசைந்து, மாடித் தோட்டச் செடியில் இருந்த ஒற்றைப் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு, உப்பு, சாம்பார்ப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பெருக்கி, பெருங்காயத் தூள், மிளகு சீரகப்பொடி சேர்த்து இறக்கித் தாளிக்கவும், மணி 12.20 அகவும் சரியாக இருந்தது!
நடுவிலேயே குழம்பிலும், உ.கி பொரியலிலும் வெங்காயம், பூண்டு சேர்க்குமுன் தனியாக எடுத்துக் கொஞ்சம் பாஸுக்காக வைத்து விட்டேன்!
சமையல் ரெடி!
பி.கு : புகைப்படம் எடுத்துக் கொண்டால் 'திங்க'க்கிழமைக்கு ஆகுமே என்று தாமதமாகவே தோன்றியதால் இரண்டு படங்கள் மட்டும்!