Anna Hazare லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anna Hazare லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.5.11

பார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை - 3

            
 (கீழே காணப்படும் பதிவு, ஏற்கெனவே, வெளியிடப்பட்டது. அதற்கு 

வாசகர்களும்  கருத்துரை அளித்திருந்தார்கள். கூகிள் பிளாகரில் ஏதோ பிரச்னை இருக்கின்றது என்பது, மற்ற தளங்களையும், கூகிள் பஸ்ஸில் சிலர் விட்ட பஸ்சிலும் தெரிகின்றது. பதிவில் படங்கள் இணைப்பதும் இயலாமல் இருந்தது. அதனால் அதே பதிவை, இங்கே வெளியிடுகின்றோம். ஏற்கெனவே கருத்துரைத்த வாசகர்களும், இன்ட்லியில் வாக்கு அளித்தவர்களும் - எங்களை மன்னித்தருள்க. நேற்று தமிழகத்தில் அடித்த புயலில் நாங்கள் எங்கேயும் போட்டியிடவில்லை - ஆனாலும் எங்களுடைய டெப்பாசிட் காலியாகிவிட்டது!)
   
முன்பெல்லாம் பத்திரிகைகளில் சில பெயர்கள் வழக்கமாக வரும். ஏன், பல பெயர்கள் இன்னும் கூட வந்து கொண்டிருக்கின்றன. அயன்புரம் த். சத்தியநாராயணன், சீர்காழி வி.ரேவதி, லட்சுமி செங்குட்டுவன் வேலூர்,
                        
...அயன்புரம் த.ச இன்றும் பத்திரிகைகளில் பெயர் வரும்படி பார்த்துக் கொள்கிறார். சமீபத்தில் கூட கல்கியில் அவர் பெயர் பார்த்தேன். அது போல இப்போது ஒரு பெயர் எல்லா பத்திரிகைகளிலும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. K G ஸ்ரீராமன், பெங்களுரு!! எங்கள் ஆசிரியர்களின் பெயர்கள் சம்பந்தப் பட்டிருப்பது போலத் தோன்றுகிறது! "யாரோ...இவர் யாரோ..."
         
 
தபால் காரரைப் பார்ப்பதே அரிதாகி விட்ட இந்நாளில் இவர்கள் எல்லாம் இன்னும் போஸ்ட் கார்டில்தான் எழுதிப் போட்டுக் கொண்டிருக்கிறார்களா...அல்லது ஈ மெயிலில் அனுப்புகிறார்களா...நான் தபால்காரரை அடிக்கடி பார்க்கிறேன். அமுதசுரபி எனக்கு தபாலில்தான் வருகிறது! தொலைபேசிக் கட்டணமும்! இனி கணையாழியும் வரும். தினமணி முன்னாள் ஆசிரியர் மற்றும் கணையாழி கி. கஸ்துரி ரெங்கன் மறைவு ஒரு சோகம்.

"நான் அனுப்புவது கடிதம் அல்ல...உள்ளம்...அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல...எண்ணம்..."

---------------------------------------------------------------
 
 

முன்பெல்லாம் தினமணி பேப்பர் படிக்க சுவாரஸ்யமே இருக்காது... எழுத்துகளும், செய்தியும் ஒரு மாதிரி 'போரா'க இருப்பது போலத் தோன்றும். மாற்றம் என்னிடமா, அல்லது பேப்பரிலா தெரியவில்லை...தினமணி ஆசிரியர் தலையங்கமும் அதன் கீழே தினம் ஒரு குறளும் கவர்கின்றன. தலையங்கம் நேர்மையாக எழுதப் படுவது விசேஷம். அந்தப் பக்கத்தில் வரும் கட்டுரைகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஞாயிறுகளில் தினமணி ஆசிரியர் கலாரசிகன் என்ற பெயரில் எழுதும் கட்டுரைகள் ரொம்ப சுவாரஸ்யம். அவர் ரசித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள், பிடித்த, படித்த கவிதைகள் என்று பல்சுவைப் பத்தி எழுதுகிறார்.

தினமணி கதிரில் பிழையின்றி தமிழ் பேச எழுத என்று முதல் பக்கத்தில் மிக உபயோகமான பகுதி ஒன்று. அதைப் படித்தால் தமிழை எவ்வளவு தப்பு தப்பாய் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. நான் ரெண்டு கேள்விகள் கேட்டிருக்கிறேன். பதில் வருகிறதா என்று பார்க்க வேண்டும்!

நடுவில் கொஞ்ச நாள் புஷ்பா தங்க துரை எழுதிய பகுதி ஒன்று தினமணி இணைப்பில் வந்து கொண்டிருந்தது. இப்போது காணோம். இந்த வாரம் கண்ணதாசன் காலத்தில் வாழ்ந்த கவிஞர் மாயவநாதன் பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. (மாயவநாதன் என்று பெயர் படித்ததும் எனக்கு உடல் பொருள் ஆனந்தி ஞாபகம் வந்தது!) ரசித்துப் படிக்க முடிந்தது. தண்ணிலவு தேனிரைக்க, சித்திரப் பூவிழிவாசலில், போன்ற அருமையான பாடல்களை எழுதியவர். சமீபத்தில் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் புத்தகம் வாங்கினேன். இவர் புத்தகம் ஒன்று கிடைத்தால் வாங்க வேண்டும்.

"ஆ...சுகம் சுகம் இது....நான் சுவைத்து ரசிப்பது..."

---------------------------------------------------------
 
 
சென்ற முறை விகடன் பற்றிச் சொன்ன போது சுகா கட்டுரை பற்றிச் சொல்லியிருந்தபோது ராமலக்ஷ்மி நா.முத்துக்குமார் எழுதும் 'அணிலாடும் முன்றில்' பற்றிக் குறிப்பிட மறந்ததைச் சொல்லியிருந்தார். இன்னொரு விஷயம் கூடக் குறிப்பிட வேண்டும். இலங்கையின் இப்போதைய நிலை, மக்கள் படும் அவஸ்தைகள் பற்றியெல்லாம் வாரம் ஓரிரு கட்டுரைகள் வருகின்றன. படித்தால் மனம் கசியும் கட்டுரைகள்.

தம்மைத் தாமே குறிப்பிட்டுக் கொள்ளும் போது 'நான்' என்று குறிப்பிடுவது ஆணவமாக இருக்கும் என்பார்கள். 'யாம்' என்பார்கள். 'அடியேன்' என்பது இன்னொரு வார்த்தை. பணிவாக தன்னைத்தானே சொல்லிக் கொள்வது என்று அறியப் படும் வார்த்தை. விகடனில் வாலி ஒரு தொடர் எழுதுகிறார். தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறார்! அதில் அவர் தன்னைப் பற்றி சொல்லும்போது இப்படிதான் சொல்கிறார்.இந்த வார்த்தையைப் பற்றி யோசிக்கும்போது சில சிந்தனைகள். பாமர ஜனங்கள் இதை உபயோகிக்கிறார்களா? சில புகழ் பெற்றவர்கள் மட்டும் உபயோகிக்கிறார்கள். எனவே இதில் பணிவு என்பது போய் ஒரு மறைமுக ஆணவம் வந்து விடுவதாகத் தோன்றுவது என் குற்றமாகவும் இருக்கலாம்! என்னுடைய புகழிலும் நான் பணிவாக இருக்கிறேன் பார் என்று காட்டும் ஜாலம்!

"பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா..."

-----------------------------------------------------------
 
 
பிடிவாதமாக என் கோரிக்கை நிறைவேறினால்தான் உண்ணாவிரதம் முடிப்பேன் என்று சொன்ன அன்னா ஹசாரே உண்ணா விரதம் முடித்து எத்தனை நாட்களாகிறது? இதுவரை என்ன நடந்திருக்கிறது? ஒரு நாளில் நடக்கக் கூடியதல்ல மாற்றங்கள். உண்மைதான். ஆனால் இவர் திருப்திப் படும் அளவு விஷயங்கள் நடக்கின்றனவா...பூஷன்கள் மீது குற்றச் சாட்டு...மோடியை இவர் பாராட்டியதற்கு மதச் சார்பு என்றெல்லாம் எதிர்ப்பு வந்ததும், நான் அப்படிச் சொல்லவில்லை என்று பின்னால் போனது...சோனியா போன்றவர்களின் ஆதரவும் அதற்கு இவர் மகிழ்ச்சியும்...இப்போது லேட்டஸ்ட் மம்தா தன் ஜாதியைச் சேர்ந்தவர்களும் அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று கேட்டிருப்பது...அபபடி லோக் பால் அமைத்துத்தான் என்ன சாதிக்க முடியும்? பி ஏ.சி கமிட்டிக்கு என்ன கதி வந்தது என்று பார்க்கிறோம்! குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதிபதியை குற்றவாளியாக்குவதாக துக்ளக் அட்டைப் பட கார்ட்டூன் போட்டிருக்கிறது! சீக்கிரம் இன்னொரு உண்ணா விரதத்தை எதிர்பார்க்கலாமா அல்லது.......

"யாரடா மனிதன் இங்கே...கூட்டி வா அவனை இங்கே...இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே..."

------------------------------------------------------------

"நீங்கள் ஒரு தவறு செய்திருந்து, அதை ஒத்துக் கொண்டால் நீங்கள் ஒரு நேர்மையாளர். நீங்கள் செய்தது தவறுதானா என்று சரியாகத் தெரியா விடினும் தவறை ஒத்துக் கொண்டால் நீங்கள் புத்திசாலி. நீங்கள் தவறு செய்தும், உங்களைச் சேர்ந்தவர்கள் செய்த தவறுகளையும் ஒத்துக் கொள்ளாமல் தெரியாது என்றால் நீங்கள் மன்மோகன் சிங்!"

இது எனக்கு வந்த நகைச்சுவை எஸ் எம் எஸ்.

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. தேர்தல் நாளில் நாட்டின் பொறுப்பான பிரதம மந்திரி வாக்களிக்கவில்லை. வேறு ஊர் சென்று வாக்களிப்பதில் அலுப்பு போலும்! அதே சமயம் தமிழ்நாட்டில் தேர்தலை நடத்திய அதிகாரி பிரவீன்குமார் வாக்களித்துள்ளார். அதுவும் 49 O. ஏனெனில் தேர்தல் நடத்தும் அதிகாரி என்பதால் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இருக்கக் கூடாது என்பதால்.  
 
        
துக்ளக்கில் எஸ்.ஜே. இதயா என்பவர் (மதுரைக்காரர்) அவ்வப்போது ஏதாவது எழுதுவார். சமீப காலங்களில் 'இன்டெர்நெட்'டை அலசி சில விஷயங்கள் எழுதி வந்தார். மிகச் சமீபமாக வலைப் பதிவுகளிலிருந்து எல்லாம் எடுத்து விடுகிறார். நாம் பத்திரிகையில் இருந்து எடுப்பதில்லையா...அது போலத்தான். ஆனால் நாம் பத்திரிக்கை பெயர் சொல்வோம்.அவர் என்ன வலைப் பக்கத்திலிருந்து எடுக்கிறார் என்று சொல்வதில்லை. இந்த வாரம் அவர் மன்மோகன் சிங் பற்றி மின் மடலாக வந்த ஒரு கடிதத்தை தமிழ் படுத்தி இருக்கிறார். 'திறமையற்ற நேர்மையற்ற நிழல் பிரதமர் தேவை இல்லை விலகிப் போங்கள், ப்ளீஸ்' என்கிறது கடிதம்!

துக்ளக்கில் இன்னொரு விஷயம். சமீப காலமாக சாரு நிவேதிதா 'காலம்' எழுதி வருகிறார். 'சோ'வுக்கு தகுந்தா மாதிரி எழுதுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

"மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்..நீ சொன்னால் காவியம்"

-----------------------------------------------------------------------
நீலக் கமெண்ட்: சென்னையில் வெயில் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறோம் பதிவாசிரியரே!