Bajji taste. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bajji taste. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.11.09

கத்தரிக்காய் பஜ்ஜி

 மழை நாட்களில் - சாப்பிட சரியான சமாச்சாரம் - என்னைக் கேட்டால் - பஜ்ஜிதான்.
அதுவும் சூடான பஜ்ஜி. - எவ்வளவு சூடு?
அந்த பஜ்ஜியை, வலது கை கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் நடுவே வைத்து, ஒரு சிறிய அளவு, அதாவது இருபத்தைந்து கிராம் - அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்போ - நடுவே உள்ள காய் தகடு விட்டு, பொன்னிற உறைகள் - பிரியும். அந்த நேரத்தில் ஒரு பொன்னிற உறையை நாவால் அகற்றி, பல்லால் கடித்தபடி - காய் தகட்டின் மேல் பகுதியை உற்று நோக்குங்கள் -- ஆவி தயங்கித் தயங்கி - மேலே செல்கிறதா?
இதுதான் சரியான உஷ்ண நிலை - பஜ்ஜியை கபளீகரம் செய்ய.
அந்தக் காலத்தில் எங்க அம்மா பஜ்ஜி செய்யும்போது - நாங்க எல்லோருமே - ஆளுக்கொரு தட்டு வெச்சிகிட்டு - ஆவலாக வெய்ட் செய்வோம்.
நாந்தான் - ஹோட்டல் பிருந்தாவன் என்பார் பெரிய அண்ணன்.
நாந்தான் - ஹோட்டல் தினகர விலாஸ் என்பார் சிறிய அண்ணன்.
நாந்தான் - சங்கர ஐயர் ஹோட்டல் என்பேன் நான் (அப்போ எனக்குத் தெரிஞ்ச ஒரே ஹோட்டல் அதுதான்)
நாந்தான் - நாந்தான் -- என்று யோசனை செய்துகொண்டே இருப்பாள் என் தங்கை.
நாந்தான் கடத்தெருவுல  இருக்கற கலியபெருமாள் கடை என்பான் தம்பி.
எங்க எல்லோருக்கும் அம்மா சரக்கு மாஸ்டர்; அக்கா சப்ளையர்.
ஒவ்வொரு ஈடு பஜ்ஜி தயாரிக்கும்போதும் அம்மா - எவ்வளவு தலைகள் இருக்கின்றனவோ அவை  இண்டு டூ + a constant என்கிற பார்முலா பயன்படுத்தி உற்பத்தி செய்வார்.
அது என்ன கான்ஸ்டன்ட்? - என்ன  வகை பஜ்ஜியோ - அது எங்களில் யார் யாருக்கு அதிகம் பிடிக்குமோ - அவர்களுக்காக - இரண்டிரண்டு  எக்ஸ்ட்ரா!
நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசா பஜ்ஜி சாப்பிடுவோம். - மத்தவங்க சாப்பிட்ட வகை ஞாபகம் இல்லை - நான் பஜ்ஜிகளை - கை பொறுக்கும் சூட்டில் கையில் எடுத்து, அவைகளை மேல் தட்டு - உள் தகடு, கீழ்த் தட்டு என்று மூன்று பகுதிகளாக்கி தட்டின் ஓரத்தில் ஆறப் போட்டுடுவேன். அப்புறம் உள்தகடுகளைத் தனியாகவும், பொன்னிற ஓடுகளைத் தனியாகவும் - மென்று, சுவைத்து சாப்பிடுவேன். 
பிடித்த பஜ்ஜி வகைகள் - வெங்காயம் - கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு. பிடிக்காத வாழைக்காய் பஜ்ஜிகளை, பெரிய அண்ணனுடன் பண்டமாற்று செய்துகொண்டதும் உண்டு. பின் நாட்களில் - அப்பள பஜ்ஜி புதுமையாக இருந்ததால் சாப்பிட்டது உண்டு. 
நெல்லூரில் ஒரு முறை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் அறுபது ரூபாய்க்கு மிளகாய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டோம். பஜ்ஜி பற்றி சுவையான தகவல்கள் தெரிந்தோர் சுடச் சுட இங்கே பின்னூட்டம் இடுங்க - எல்லோரும் ரசிச்சுச் சாப்பிடலாம்.
(எனக்கு வெங்காய பஜ்ஜி கொரியர் பண்ணுகிறேன் என்று 'நீரு', என்னுடைய facebook ல எழுதி உற்சாகப் படுத்தியதால், கொரியர் வந்து சேருவதற்குள் - இந்த சுவையான கட்டுரையை எழுதி முடித்துவிட்டேன்!)