மீண்டும் கோடை காலம் வந்துவிட்டது.
வீதியில் இறங்கி நடந்தால், எவ்வளவுதான் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு வந்தாலும், ஒரு தெரு கடப்பதற்குள் நமக்கு தாகம் எடுக்கின்றது.
வெயிலிலேயே பறந்து திரிகின்ற காக்கைகள், குருவிகள், புறா எல்லாம் தாகம் எடுத்தால் யார் வீட்டிலும் வந்து கதவைத் தட்டி, குடிக்கத் தண்ணீர் கேட்காது. மினரல் வாட்டர், ரயில் நீர் எல்லாம் வாங்க அவைகளிடம் பைசாவும் இல்லை! நீர் நிலைகள் வற்றி விடுவதால் நீர் தேடி பறக்கின்ற சிறு பறவைகளுக்கு, நாம் உதவ வேண்டும்.
எப்படி உதவலாம்?
அகலமான பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து, அதை வீட்டின் மேல் மாடி திறந்த வெளியில் வைக்கலாம். வீட்டில் நமக்குப் பயன் படாத தானியங்களை மாடியில் வைக்கலாம். பழையதாகிப் போன பருப்புகள், குழந்தைகள் சாப்பிட மறுத்த உணவு, பழங்கள் இத்யாதி - இவைகளை, வீட்டின் மேற்கூரையில் வைக்கலாம்.
இன்று அருகில் உள்ள பார்க் ஒன்றில் நடை பயிற்சிக்குச் சென்ற போது, அங்கு நடை பாதையில் உதிர்ந்திருந்த வாதாம் பழங்களைக் கொண்டு வந்தேன். அவற்றை பறவைகளுக்கு அளிப்பதற்காக மாடியில் வைக்க முடிவு செய்தேன்.
அடையார் ஆனந்தபவன் கடையில் வாங்கிய மைசூர் பாக் பெட்டியில் முழுவதும் நீர் நிரப்பி, அதையும் எடுத்துக் கொண்டேன்.
எல்லாவற்றையும் மாடியில், பறவைகளின் பார்வை படும் இடத்தில், கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தாச்சு.
பறவைகள், இவைகளை பயன்படுத்தியதா இல்லையா என்பதை, நாளை பதிவில், படத்துடன் பதிகின்றேன்.
உங்கள் வீட்டிலும், மேல் மாடியில், பறவைகளுக்காக தண்ணீர் வையுங்கள். மறக்காமல், உடனே, இன்றே, இப்பொழுதே!