Cricketers we like லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cricketers we like லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.10.09

உள்ளம் கவர் ஆட்டக்காரர்கள்






பழைய பதிவில் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் பற்றி பேசும்போது சில ஞாபகங்கள் வந்தன. அந்த நாளில் எல்லார் வீட்டிலும் டீவிப்பெட்டி கிடையாது. அதற்கு முன்னாளிலும் சொல்ல வேண்டுமென்றால் ரேடியோவில் ஆட்ட நேர்முகவர்ணனை கேட்கும்  நாள் முதலே சொல்லலாம். ஆங்கில நேர்முக வர்ணனைகள், ஆட்டம் சென்னையில் நடக்கும்போது தமிழ் நேர்முக வர்ணனைகள், அதில் ராமமூர்த்தி,வல்லுநர் மணி, "பந்தை வெட்டி அடித்தார்.." போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ... ஆனால் நினைவு அதைப் பற்றி அல்ல. அழகான ஆட்டக் காரர்களின் உண்மையிலேயே அழகான, ஸ்டைல் ஆன ஆட்டம் பற்றி தோன்றிய நினைவுகள்....!


 கேட்டலின் பார்த்தல் நன்று! நேர்முகவர்ணனையாக கேட்டு ரசித்ததை எழுத முடியாது. தொலைக் காட்சியில் பார்த்து ரசித்ததை எழுதமுடியும்.                                                                                                                            இவை எல்லாமே ஓடி ஓடி எங்கு டிவி இருக்கும் யார் வீட்டில் இருக்கும் என்று தேடித் தேடிப் பார்த்தது! சில சமயம் கல்லூரி ஹாஸ்டலில். சில சமயம் கடைகள் வாசலில்...சில சமயம் யார் வீடு என்றே தெரியாமல் நண்பனின், நண்பனின், தம்பியின் நண்பனின் வீடாக இருக்கும்! அப்போது டிவியும் குறைச்சல்..மேட்சுகளும் குறைச்சல்... பின்னர் வீட்டிலேயே டிவி வாங்கியவுடன் நம் வீட்டிலும் யார் என்றே தெரியாத புது முகங்கள் எல்லாம் ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கும்! எனினும் உலகக் கோப்பை ஜெயித்த அந்த இரவில் (இந்திய நேரப் படி) நம்ப முடியாத அந்த செய்தியை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல்... ஆளில்லாத அந்த சாலையில் தெரியாத நபராக இருந்தால் கூட, யாராவது கண்ணில் பட மாட்டார்களா என்று அலைந்த அந்த நாள்...வயது காரணமா...மறக்க முடியாது!  
       பட்டோடி நவாப் உம்ரிகர் காலத்துக்கெல்லாம் செல்லாமல் அதற்குப் பின்னரே தொடங்குகிறேன். அழகான Little Master கவாஸ்கர் தன் முதல் ரன்னை பெரும்பாலும் லெக் திசையில் Flick செய்தே பெறுவார். பின்னர் நேர்முகவர்ணனையாளர்கள் பேசும்போது இங்கிலாந்தின் ஜெப் பாய்காட் கூட அப்படிதான் தொடங்குவார் என்பார்கள். நான் பார்த்ததில்லை. கவாஸ்கர் பந்தை வானத்தில் தூக்கி அடித்து வாண வேடிக்கை காட்டும் ரகமில்லை. டெக்னிகலாக பந்தை திருப்புதல், கவர் டிரைவ், ஸ்ட்ரைட் டிரைவ் என்று அழகாக ஆடக் கூடியவர். டெஸ்ட் மேட்சுக்கு ஏற்ற ஆட்டக் காரர். பின்னாளில் ஒரு நாள் போட்டிகள் தொடங்கிய போது அதற்கு ஏற்றார்போல மாறக் கஷ்டப் பட்டவர்.ஒருநாள் போட்டியில் ஒருமுறை தொடக்க ஆட்டக் காரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சொற்ப ரன்னுடன் இருந்தாராம். என்னவென்று கேட்டால் ஆட்டத்தை Draw வாவது செய்ய முடியுமா என்று பார்த்ததாக சொன்னாராம். பொய்யோ நிஜமோ..ஒருநாள் போட்டிகளில் அவர் சற்று slow தான் என்றாலும் அவர் Retire ஆன நியூ சிலாந்துடனான ஆட்டத்தில் (கான்பூர் என்று நினைக்கிறேன்) ஸ்ரீகாந்துடன் சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி வெளியேறினார். கல்கத்தா, மன்னிக்கவும், கொல்கத்தா ரசிகர்கள் அவரை வெறுப்பேற்றியதில் இனி கொல்கட்டாவில் விளையாடவே மாட்டேன் என்று சொல்லி விளையாடாமலும் இருந்தவர்.
      சொந்த நலனுக்கு ஆடுபவர் என்று பெயருண்டு. ஒரு மேட்சில் தவறாக அவுட் தரப் பட்டபோது உடன் ஆடுபவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டார். அவருக்கும் இன்னொரு ஜாம்பவான் கபிலுக்கும் நடுவில் பனிப் போர் உண்டு என்றெல்லாம் சொல்வதுண்டு. என்றாலும் அழகான ஆட்டக்காரர். பின்னாளில் மிக அழகான ஆங்கிலத்துடன் சுவராஸ்யமாக நேர்முக வர்ணனை செய்து வருபவர், சமீபத்தில்தான் அறுபது வயதை முடித்தவர்.                                     (தொடரக் கூடும்)