Debt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Debt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.10.09

அனுபவத்தின் விலை

சமீபத்தில் கோவையிலிருந்து ஸ்ரீதர் தொலைபேசினார். என்னுடைய பழைய ஏமாந்த அனுபவம் ஒன்றை ஞாபகப் படுத்தினார். ஏனென்றால் சமீபத்தில் அவர் மனைவி கீதா அபபடி ஏமாந்ததுதான்....!
   சில மாதங்களுக்குமுன் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. என் பெயரை சொல்லி, என் தகப்பனார் பெயரைக் கேட்டு, தனக்கும் அதே பெயர்தான் என்றும், தகப்பனார் பெயர் வேறே தவிர, முதல் எழுத்து ஒன்றுதான் என்றும், கிட்டத் தட்ட அந்த மாதிரிப் பெயரை தொலைபேசி டைரக்டரியில் தேடி பேசுவதாகவும் சொல்லி, தான் ஒரு ஏழை பிராமணர் என்றும் தன் பெண் கல்யாணத்தை நடத்த காஞ்சிப் பெரியவர் உத்தரவுப் படி மாங்கல்யம் வாங்க இந்த மாதிரி பெயருடையவர்களிடம் உதவி வாங்கி நடத்துமாறு ஆணை வந்ததால் பேசுவதாகவும் கூறி, இன்னும் என்னென்னமோ கூறி சந்திக்க இடம் கேட்டு ஐநூறு ரூபாய் ஏமாற்றி சென்றார். அவர் எங்கள் வீட்டுக்கு வர ஆர்வம் தெரிவித்தும் அதற்கு சம்மதிக்காமல் பொது இடத்தில் சந்தித்து ஏமாந்ததும், அவர் 'ஆயிரம் இரண்டாயிரமாவது எதிர்பார்த்தேன்' என்ற இடத்தில் ஐநூறு மட்டும்(!) ஏமாந்ததும் என் சாமர்த்தியம்! 'டிசம்பரில் திருமணம் திருப்பதியில் நடக்கும் பத்திரிகை அனுப்புவேன் கண்டிப்பாக வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும்' என்று சொல்லி சென்றார். அட்சதையோடு இன்னமும் இரண்டு வருடங்களாகக் காத்திருக்கிறேன்....அவராக சொன்ன பெண்ணின் பெயர் என் தாயின் பெயர் என்பது ஹை லைட்.
   ஸ்ரீதர் சொன்னது, அவர் இல்லாத நேரத்தில் அவர் மனைவியிடம் ஒருவர் Printing Order தருவதாகக் கூறி சில பேப்பர்களையும் மாடல்களையும் நீட்டி உங்கள் கணவர் என் பெஸ்ட் நண்பர் என்றெல்லாம் கூறி அட்வான்ஸ் கொடுக்க முயன்று 'ஆயிரம் ரூபாயாக இருக்கிறது ஐநூறு ரூபாய் கொடுங்கள் இதோ வருகிறேன்' என்று கூறி வாங்கி சடுதியில் காணாமல் போனாராம். அவரே கூட அதற்கு ஆறேழு மாதங்கள் முன்பு ஏமாந்த கதை ஒன்றையும் சொன்னார்...
   ஷீரடி பாபா மேல் பக்தி கொண்ட அவருக்கு அவர் தாயின் மூலம் அவர்பற்றி ஒரு புத்தகம் கிடைத்ததாம். அது கிடைத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தெருவில் எதிரில் பாபா படம் வைத்து ஒரு தள்ளு வண்டி வந்துள்ளது. அதற்குப் பிறகும் இரண்டு, மூன்று நாள் தொடர்ந்து கண்ணில் பட, புத்தகம் கிடைத்த நேரம் பாபா வண்டி தினசரி கண்ணில் பட்டதில் ஏதோ விசேஷம்தான் என்பது போல மனதில் பட்டதாம் அவருக்கு...ஒருநாள் பக்கத்தில் போனவர் என்னதான் இருக்கு அதில் என்று பார்த்துள்ளார். கிளம்ப எத்தனித்தவரை அவர்கள் நிறுத்தி கற்பூர ஆரத்தி பார்த்துப் போக சொல்லி உள்ளார்கள். மறுக்க முடியாமல் நின்றிருக்கிறார். பையில் ஏதாவது ரூபாய் நோட்டு இருந்தால் ஆரத்தித் தட்டில் வையுங்கள்...கற்பூரம் காட்டி முடித்ததும் தந்து விடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். தயங்கிய இவர் பையில் சோதனையாக ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும்! தொடர்ந்து அவர்கள் வற்புறுத்திய வார்த்தை ஜாலத்தில் இவரும் வைத்து விட்டார். பிறகென்ன...ஆரத்தி முடிந்து அவர்கள் கிளம்ப, இவர் பணத்தைத் திரும்பக் கேட்க, அவர்கள் வசனம் : "பாபாவுக்கு துணிமணி கேட்டால் தருவீர்களா?" இவர், "மாட்டேன்" அவர்கள் "சரி என்று சொல்லு, சரி என்று சொல்லு...நல்லது நடக்கும்..." என்று சொல்ல இரண்டு மூன்று முறைக்குப் பிறகு இவர் சரி என்று சொல்லி இருக்கிறார். "சாப்பாடு தருவீர்களா?" இவர், "சரி!". அவர்கள் "வீடு வாங்கித் தருவீர்களா?", இவர், "சரி!!". அவர்கள், "ஏன் சார், இதெல்லாம் தரத் தயாரா இருக்கீங்க...ஒரு ஆயிரம் ரூபாய் பாபாவுக்குத் தர மாட்டீங்களா..." என்று கேட்டு விட்டு நடந்து விட்டார்களாம்...!
   பெண்ணுக்குக் கல்யாணம் என்று கேட்ட இடத்தில் நான் ஏமாந்ததும் சரி, கீதா ஐநூறு ரூபாய், ஸ்ரீதர் ஆயிரம் ரூபாய் எமாந்ததற்கும் என்ன காரணம்? இது ஏமாற்று வேலையாய் இருக்குமோ என்று எனக்குத் தோன்றினாலும் ஒன்றிரண்டு பேரைக் கேட்டு, அவர்களும் வேண்டாம் தராதே என்று சொன்ன பிறகும், என்னை தர வைத்தது எது? அவர் என்பெயர் குறிப்பாக சொல்லி வந்ததா? நான் கடைசி வரை சொல்லாத என் அம்மா பெயரை அவர் பெண்ணின் பெயராக சொன்னதா? கீதா ஸ்ரீதருக்கு தொலைபேசி இவர் உங்கள் நண்பரா என்று கேட்கத் தோன்றாதது ஏன்? பாபா வண்டி பின்னாலேயே சென்று ஆயிரம் ரூபாயைத் திருப்பி வாங்க முடியாமல் ஸ்ரீதரை நிறுத்தியது எது? அவர்கள் பேச்சுத் திறமையா? ஏதாவது கண்கட்டு போல மயங்கவைக்கும் மந்திரவித்தையா?
   ஏதோ ஒன்று...போன ஜென்மக் கடன் என்றும் வைத்துக் கொள்ளலாம்... அல்லது நாம் பெற்ற அனுபவத்துக்கு விலை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.எல்லோரும் எத்தனையோ விதத்தில் ஏமாறுவார்கள்...நாங்கள் இந்தவிதத்திலும் ஏமாந்தோம்...!