Hotels and tastes. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Hotels and tastes. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.11.11

நாக்கு நாலு முழம் ..1



குறைந்த புத்தகங்களே வந்த காலத்தில் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் பழக்கம் இருந்தது.பிரசண்ட விகடனோ, ஆனந்த விகடனோ, குமுதமோ.... அப்புறம் குங்குமம், இதயம் பேத்துகிறது, மன்னிக்கவும்(!) இதயம் பேசுகிறது, சாவி என்று வந்த கால கட்டத்தில் கூடப் படிக்கும் பழக்கம் குறையாததற்கு தொலைக் கட்சி, கணினி என்று கவனக் கலைப்புச் சமாச்சாரங்கள் இல்லாததும், (அதனாலேயே) அப்போது அதிக அளவு நூலகங்கள் போகும் பழக்கம் இருந்ததும் காரணமாயிருந்திருக்கலாம்.
   

                   
எம் கே டி - பி யூ சின்னப்பா, அல்லது டி ஆர் எம்,- எம் கே ராதா, அப்புறம் எம் ஜி ஆர்- சிவாஜி இடையிடையே ஜெமினி, ஜெய் படங்கள் என்று மட்டும் குறைந்த படங்கள் வரும்போது அவை நீண்ட நாட்கள் ஓடுவதும், மக்களும் ஓரளவு எல்லா படங்களையும் பார்த்து விடுவதும் வேறு பொழுது போக்கு இல்லாததாலும், குறைந்த திரை அரங்குகளே ஓரொரு ஊரிலும் இருந்ததும் காரணங்களாய் இருந்திருக்கலாம் !  

                      
இப்போதெல்லாம் ஏராள புத்தகங்கள், ஏராளமான திரைப் படங்கள்,...
                
முன்பெல்லாம் ஹோட்டல்கள் கூட அப்படித்தான்...அங்கு கிடைக்கும் வெரைட்டிகளும் குறைவாகவே இருந்தன. 
                      
தஞ்சைக் காலங்களில் ரயிலடி அருகில் இருந்த ஆனந்த் பவன், மற்றும் நியூ பத்மா ஹோட்டல்களில் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதை விட்டால் அப்போது புகழ் பெற்ற ஹோட்டல்கள் மங்களாம்பிகாவும், மணிக் கூண்டு தாண்டி இடது பக்கம் ராஜா கலை அரங்கம் திரை அரங்கம் செல்லத் திரும்பும்போது இருக்கும் ஒரு ஹோட்டலும் (சாந்தி ஹோட்டல் என்று நினைவு) கொஞ்சம் பெரிய ஹோட்டல்கள். அப்புறம் பஸ் ஸ்டேண்ட் பின்புறம் வசந்த் பவனோ, சங்கமோ வந்ததாக நினைவு. இருபத்தைந்து காசு பெட்டியில் போட்டு விரும்பிய பாட்டு கேட்டுக் கொண்டே டீ சமோசா சாப்பிடும் கடை அப்போது புதிது, பிரபலம்!
                       
ஆனந்த் பவன், நியூ பத்மாவில்தான் அடிக்கடி சாப்பிடுவோம். அடிக்கடி என்றால் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை! யாகப்பாவில் கிழக்கே போகும் ரெயில் பார்த்து விட்டு வந்து அங்கு சாப்பிட்டது நினைவில் இருக்கிறது. 

அப்புறம் கொஞ்ச காலம் கழித்து ஆனந்த் பவன் வாசலில் சுப்பையாப் பிள்ளைப் பால்கடை என்று ஒன்று உதயமானது. ஹோட்டல்களில் சாப்பிடுவோர் உள்ளே காபியைப் புறக்கணித்து வெளியே வந்து சுப்பையாப் பிள்ளைப் பால் கடையில் நின்று அவர் நுரை பொங்க பித்தளைத் தம்ளர், டபராவில் ஆற்றித் தரும் பாலைச் சுவைப்பது பழக்கமாகி, அந்த ஏரியாவே மாலை வேளைகளில் ஸ்தம்பித்தது! அபபடி என்ன செய்தார் என்று யோசித்துப் பார்க்கும்போது தண்ணீர் அதிகம் ஊற்றாத,   கறந்த பாலில் பனங்கற்கண்டு கலந்து சற்றே (?) சுண்டக் காய்ச்சித் தந்தார் என்று நினைவு. ஆனாலும் இப்போதும் நாவின் அடியில் அந்த சுவை தெரிகிறதுதான். 
                        
ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் தாத்தா ஆகட்டும், மாமா ஆகட்டும் அவர்கள் பெரும்பாலும் ஆர்டர் செய்வது 'ரெண்டு இட்லி, சாப்பிட்டப்புறம் ஒரு தோசை, அப்புறம் ஒரு காஃபி'.  வேறு வித்தியாசமே இருக்காது. நாங்கள் பூரி, சப்பாத்தி என்று ஆசைப் பட்டாலும் 'மசாலா வாசனையா குருமாவா, வேண்டாம்' என்று நிர்த்தாட்சண்யமாய் மறுத்து விடுவார்கள்! அதையும் மீறி அவ்வப்போது இவையும் சாப்பிடக் கிடைத்ததுண்டு. 

        என்னுடைய பள்ளி நாட்களில் என் ஒரு பிறந்த நாளில் அப்பாவின் சாங்க்ஷனாய் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு போய் மருத்துவக் கல்லூரி போகும் சாலையில் இருந்த கேண்டீனில் இரண்டு இட்லி, ஒரு ஸ்பெஷல் தோசை சாப்பிட்டு, என் இளைய சகோதரிக்கு ஒரு பூரி பார்சல் வாங்கி வந்த நினைவு இருக்கிறது. மிச்ச காசு கூடக் கொண்டு வந்து தந்தேன். அந்தக் கேண்டீனில் ஒரு கண்ணாடி தம்ளரில் பாலாடை போட்டுத் தருவார்கள். அது எனக்கு சாப்பிட விருப்பம் இருந்தாலும் அதற்கு அன்று கையில் மிச்சமிருந்த காசு அதற்கு இடம்தரவில்லை!
                   
ஹோட்டல்களில் பரோட்டா போன்ற சமாச்சாரங்கள் அப்புறம்தான் அறிமுகமாகினவா, இல்லை எங்களுக்கு எங்கள் தஞ்சைக் காலங்களில் தெரியவில்லையா நினைவில்லை. ஆனாலும் ஹோட்டல்களில் சாப்பிடுவது ஒரு தணியாத ஆசையாகவே இருக்கும். அதுவும் குறைந்த ஐட்டங்களே சாப்பிடக் கிடைக்கும் காலத்திலும். 
                   
அப்புறம் வேலைக்கு சென்ற காலங்களில் வேறு வழியின்றி காலை ஆறே முக்காலுக்கெல்லாம் பொங்கல் தோசை என்று சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது ஹோட்டல் மயக்கம் மறைந்தாலும் சில ஹோட்டல்களின் சில ஸ்பெஷல்கள் என்றும் மனதில் நிற்கும் வண்ணம் இருந்தன. 
                   
அதே நியூ பத்மா வில் சாம்பார், குருமா ருசி, மங்களாம்பிகாவில் காபி, (எங்கள் பள்ளி ஹாக்கி ப்ளேயர் மங்களாம்பிகா உரிமையாளர் பையன் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை. ஏதோ ஹோட்டலே எங்களுடையது போல!)
                 
தஞ்சையில் ரோட்டோரக் கடைகள் பார்த்த நினைவு இல்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் தஞ்சைப் பக்கம் காஃபி, சாம்பார் போன்றவை சுவைதான். காவிரி உபயம் என்றுதான் தோன்றும். அதே போல தஞ்சாவூரில் கிடைத்த மாதிரி கத்தரிக்காய் (கம்மாக் கத்தரிக்காய்) கீரைத் தண்டுகள் மற்ற ஊர்களில் பார்க்கவில்லை. அது தனி ருசி. கத்தரிக்காயின் அந்த நிறமும், பளபளப்பும் பார்க்கும்போதே ரெசிப்பிகள் மனதில் ஓடும்! 
              
தஞ்சையில் அப்போது அதிகம் டீக் கடைகள் பார்த்த நினைவு இல்லை. ரெயிலடியிலிருந்து மேரிஸ் கார்னர் வரும் வழியில் இருந்த (இப்போது இருக்காது என்று நம்புகிறேன்) 'மேனகா காபி பார்' எங்களுக்குப் பரிச்சயம். அங்கு வருக்கியும் டீ காபியும் சாப்பிடுவது உண்டு. அந்த டீக் கடையை மறக்க முடியாததற்கு என் நண்பன் சம்பந்தப் பட்ட ஒருமறக்க முடியாத சம்பவமும் காரணம். (நாங்கள் அங்கு உட்கார்ந்து "யாருடா மேனகா.. அவளை ஏன் கூப்பிட்டு காபியைப் பாக்கச் சொல்கிறார்கள்" என்று கிண்டலடிப்போம்)
            
என்னுடைய நாக்கு ரொம்ப நீளம் .... ஆனால் பதிவு நீளமாகி விட்ட காரணத்தினால் அடுத்த பதிவில் அது மதுரையைத் தீண்டும்!