இட்லி அடை உங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வேண்டும் என்றால், சனிக்கிழமை மாலை ஐந்து மணி சுமாருக்கு, தயாரிப்பு ஆரம்பிக்கவேண்டும்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி : மூன்று கப்.
உளுந்து : ஒரு கப்.
மோர் : இரண்டு கப்.
இஞ்சி : ஒரு துண்டு.
மிளகாய் வற்றல் : நான்கு அல்லது ஐந்து.
நல்லெண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி.
தேங்காய்த் துருவல் : ஒரு கப்.
கொத்துமல்லித் தழை : ஒரு கைப்பிடி அளவு.
உப்பு : தேவையான அளவு.
(சமையல் சோடா உப்பு : ஒரு டீஸ்பூன்) (சிலருக்கு சமையல் சோடா பிடிக்காது அல்லது ஒவ்வாமை இருக்கும் - அவர்கள் இதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது)
முதலில், அரிசி உளுந்தை, தனித்தனியே , சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கவும். சுமார் இரண்டு மணி நேரம் ஊறவேண்டும்.
பிறகு அவற்றைக் கழுவிக் களைந்து, மிக்சியில் (பெரிய ஜாடி) ஒன்றாகப் போட்டு, சிறிது மட்டும் தண்ணீர் விட்டு, வெண்ணெய் போல் அரைக்கவேண்டும். (வெட் கிரைண்டரும் பயன்படுத்தலாம்.)
அரைத்த மாவில், இஞ்சியை பொடியாக நறுக்கிப் போட்டு, மிளகாய் வற்றல்களைக் கிள்ளிப் போட்டு, மீண்டும் எல்லாவற்றையும் வெண்ணை போல் அரைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, அந்த மாவில், மோர், உப்பு, (சமையல் சோடா) போட்டு, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து, நன்றாகப் பிசைய வேண்டும்.
இந்தக் கலவையை, இரவு முழுவதும் தொந்தரவு செய்யாமல் மூடி வைத்துவிடவேண்டும்.
மறுநாள் காலை, இட்லித் தட்டுகளில் சிறிது நல்லெண்ணெய் தடவி, மாவை இட்லியாக தட்டுகளில் ஊற்றி, இட்லிகளின் மீது, கொஞ்சம் தேங்காய்த் துருவலைத் தூவவும். கொத்துமல்லித் தழையை, பொடியாகக் கிள்ளி, ஒவ்வொரு இட்லியின் மீதும் தூவவும்.
பிறகு, இட்லிகளை ஆவியில் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், இறக்கி, இட்லிகளை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போடவும்.
இட்லி அடை தயார்.
சூடாகச் சாப்பிட, சுவையாக இருக்கும்.
இதற்குத் தொட்டுச் சாப்பிட, வெண்ணெய் நன்றாக இருக்கும். இல்லையேல், வெங்காயச் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.