My first article லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
My first article லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.8.13

முதல் பதிவின் சந்தோஷம்... தொடர்பதிவு - DD கேட்டுக்கொண்டபடி.

          
DD என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திண்டுக்கல் தனபாலன் என்னை(யும்) ஒரு தொடர்பதிவு எழுத .அழைத்திருந்தார். சரி, ஆளைக் காணோம்...லாங் லீவில் போயிருக்கிறார், அது முடிந்து அவர் திரும்பி வருவதற்குள் எழுதி விடலாம் என்று எண்ணியிருந்தால். இன்றைய சைக்கிள் பதிவில் வந்து ரிமைன்டர் போட்டு விட்டுப் போய் விட்டார்! மெமோ கொடுப்பதற்குள் எழுதி விட வேண்டும் என்று தொடங்கி விட்டேன்.
   
உண்மையில் மூன்று நாட்களுக்கு முன்னரே முயற்சியைத் தொடங்கி விட்டேன். ராஜி மற்றும் திரு வே. நடனசபாபதி அவர்கள் பக்கம் சென்று அவர்கள் எழுதியிருப்பதைப் படித்து வந்தேன்.
    
தலைப்பு என்னவென்றால் 'முதல் பதிவின் சந்தோஷம்'.
     
பதிவுலகில் முதல் பதிவு என்றில்லாமல்...
    
அங்க இருக்கற அந்த டார்டாயிசைக் கொஞ்சம் எடுங்க..... சுருள் சுருளா விஷ்ணு சக்கரம் மாதிரி இருக்கே.....அதான்.....ஆங்...உடைந்துவிடப் போகிறது... ஜாக்கிரதையாப் பார்த்து எடுங்க....ஆங்... எடுத்துட்டீங்களா... அப்படியே ஒரு குச்சியில் சொருகி உங்கள் முகத்துக்கு எதிரே சுழற்றுங்கள்.... ஆமாங்க....ஃபிளாஷ்பேக்தானுங்க....
      
முதல் பதிவு இப்போதல்ல, என்  பள்ளிப்பிராயத்துக்குப் போகிறேன். பதின்ம வயதுகளில் என் அண்ணனும் அவன் தோழனும் 'வசந்தம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினர். ஆர்வமான நானும் என்னுடைய ஒன்றிரண்டு படைப்புகளை அதில் வெளியிடச் சொல்ல, அவர்கள் மறுத்து விட்ட காரணத்தால் நானே 'தென்றல்' என்ற பெயரில் ஒரு கை.ப. தொடங்கினேன்.
     
பிரபல பத்திரிகைகளில் வந்த, கொஞ்சம் பழசாகி வாசகர்கள் நினைவிலிருந்து மறந்து போன பிரபல ஓவியர்களின் படங்களை ஒரு காகிதத்தில் அதன் அவுட்லைன் மட்டும் கார்பன் வைத்துப் பிரதி எடுத்துக் கொள்வேன். ஏற்கெனவே பத்திரிகைக்காக வெட்டி வைத்திருக்கும் பக்கங்களில் இரண்டில் (இரண்டு பிரதிகள் வெளியிடப்படும்.  ஒன்று 'வாசகர்'களுக்கு! இன்னொன்று அலுவலகக் காபி!!!) அந்த அவுட்லைனை பிசிறடிக்காமல்  ஒற்றி எடுத்து வைத்துக் கொண்டு அப்புறம் லேசாக அதில் பதிந்திருக்கும் அந்த அவுட்லைனில் முகம், உடல் எல்லாம் வரைந்து வண்ணம் கொடுப்பேன்.
     
அம்மா, நண்பர்கள் சொன்ன ஜோக்ஸ், காலனி நிகழ்வுகள், ஸ்போர்ட்ஸ் செய்திகள், மற்றும் வெவ்வேறு பெயரில் என் சிறுகதைகள்!
     
லைப்ரேரியனைக் கெஞ்சிக் கூத்தாடி புத்தகத்தை லைப்ரேரியில் போட்டு விட்டு, யாராவது படிக்கிறார்களா, அவர்கள் முகம் எப்படி மாறுகிறது என்று வேறொரு புத்தகம் படிப்பது போல பாவ்லா செய்து, பார்த்துக் கொண்டிருப்பேன். பதிவுலகம் மாதிரியேதான்! பெரும்பாலும் யாரும் சீந்துவதில்லை.
       
முதல் கதை எல்லாம் அபத்தம் என்றாலும், மரணத்தைப் பற்றிக் கவலைப் படக்கூடாது, ஆன்மா உடல் என்னும் சட்டையை மாற்றுகிறது துக்கம் கூடாது என்று எல்லாம் மேடைகளில் பேசும் சத்தியமூர்த்தி வீடுவந்ததும் தனது தாயார் மரணம் அடைந்திருப்பது கண்டு துக்கப்படுவது என்று நான் எழுதியிருந்த கதையைப் படித்துப் பலர் பாராட்டாவிட்டாலும், ஒரே ஒரு கிழவர் விசாரித்தது அறிந்து என்னைத் தேடி வந்து சிலாகித்தார்.
     
வாசகர் கடிதங்கள் கேட்டிருந்தும் எதுவும் வராததால், நண்பர்களிடம் வற்புறுத்தி கடிதம் வாங்கிப் போட்டதன் விபரீத பலன், செடி, கொடி, மலர், புயல் என்றெல்லாம் பத்திரிகைகள் முளைக்க, மிரண்டு போன லைப்ரேரியன் வசந்தம், தென்றல் உட்பட எல்லாவற்றையும் தடை செய்தார்.
     
ஆனாலும்  இலக்கிய தாகம் ( ! ) தணியாத நான் பத்திரிகையைத் தொடர்ந்து 'நடத்தி', தனிச்சுற்றில் விட்டு இலக்கியச் சேவை செய்து வந்தேன். வெவ்வேறு சுவாரஸ்யங்கள் தலைதூக்கிய நாட்களில், தாகம் சற்றுத் தணிய, புத்தகம் நிறுத்தப்பட்டது!
     
பதிவுலகில் பதிவு பற்றிய சந்தோஷம் என்றால்....
     
நான் முதலில் எழுதிய பதிவு கன்னா பின்னா என்று எக்கச்சக்க சந்தோஷத்தைக் கொடுத்தது - (எனக்கு மட்டும்!)
    
பலமுறை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கப்பட்டது - என்னால் மட்டும்.
      
அப்போது ஆரம்பகாலங்களில் எல்லாப் பதிவர்களையும் போலவே எங்கள் பதிவுகளுக்கு நாங்கள் மட்டுமே வாசகர்கள்! முதல் வெளி கமெண்ட் என்பது திரு பாலராஜன் கீதாவிடமிருந்து. இரண்டாவது  நெற்குப்பைத்தும்பியிடமிருந்து. அப்புறம் மெண்டல் பாண்டி.
     
கொஞ்சம் படிக்கிற மாதிரி நான் எழுதிய கமல்ஹாசன் பதிவுக்கு அப்பாதுரை முதல் தடவையாக பின்னூட்டம்! அப்புறம் மரணம் பற்றிய சிந்தனைப் பதிவு.
    
பதிவுகள் எழுதுவதைவிட, நண்பர்கள் தளங்களில் பின்னூட்டமிடுவது மிகவும் பிடித்திருந்தது. படைப்பை விட, விமர்சனம் எளிது! வெண்ணிற இரவுகள், புலவன் புலிகேசி, வடலூரான், சைவக் கொத்து பரோட்டா போன்ற இன்னும் பல தளங்களில் தொடர் வாசிப்பு. அப்பாதுரையின் அமானுஷ்யப் பதிவுகளுக்கும் நூடன் பதிவுகளுக்கும் பின்னூட்டம். பல்வேறு தளங்களிலும் பின்னூட்டமிட்ட வகையில் 'எங்களை'ப் பற்றி மெல்ல வெளியில் தெரியத் தொடங்கியது.
           
அப்புறம் இன்டலி, தமிழ் 10, தமிழ்மணம் ஆகியவற்றில் இணைத்துப் பயனடையத் தொடங்கினோம்.
             
முதல் பதிவில் என்றில்லை, இன்னும் என்  எந்தப் பதிவிலும்  சந்தோஷம் இல்லை, என் எழுத்தில் எனக்கே முழு திருப்தி இல்லாததால்.
             
ஆனாலும் ஜீவி ஸார் போன்ற ஜாம்பவான்களின் ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள், கீதா சாம்பசிவம், வல்லிம்மா  போன்ற மூத்த பதிவர்களும், ராமலக்ஷ்மி, ஹேமா அப்பாதுரை போன்ற சக, ஆனால் திறமையான பதிவர்களும் நம் எழுத்தைப் படித்தாலே சந்தோஷம்தான்.  அவர்கள் மனமுவந்து பாராட்டி ஊக்கப்படுத்தும்போது இன்னும் சந்தோஷம். நண்பர்கள் பின்னூட்டமிட்டால்தான் யார் யார் படித்தார்கள் என்று தெரிகிறது.
     
DD யாரையாவது தொடர அழைக்கலாம் என்று சொன்னாரா என்று தெரியவில்லை. எனினும் நான் மன்னை மைந்தன் மாதவனையும், பின்னூட்ட அரசி மஞ்சுபாஷிணியையும் தொடர அழைக்கிறேன்.