வண்டலூர் ஜூவில் சமீபத்தில் ஒரு மலைப் பாம்பு பெற்ற செல்வங்களில் ஒன்று தப்பித்துச் சென்றது. 'குட்டிதான், பயம் வேண்டாம் ஒன்றும் செய்யாது' என்கிறது வண்டலூர் நிர்வாகம். கேமிரா வைத்து அதன் நடமாட்டத்துக்குக் காத்திருக்கிறார்களாம்!.
பள்ளிக்கரணையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செல்போ ன்கள், 'பென் டிரைவ்'கள் தொடர் திருட்டுக்குப் பின் மருத்துவமனை நிர்வாகம் தந்த புகாரில் நடவடிக்கை எடுத்த போது திருடன் சிக்கினானாம்... ஸாரி, திருடர் சிக்கினாராம். அவர், அங்கு பணி புரியும் ஒரு டாக்டராம்.
ஒருநாள் போட்டிகளை 25 , 25 ஓவர்களாக நான்கு இன்னிங்க்ஸ் விளையாடவும் வேறு சில மாற்றங்களைச் சொல்லியும் யோசனை சொன்ன சச்சினின் கோரிக்கையை ஐ சி சி ஏற்க மறுத்து விட்டது!
இந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப் வியாழக்கிழமை அன்று சுவாசக் கோளாறு காரணமாக காலமானார். வயது எழுபது. மிக இளம் வயதில் கேப்டனான பெருமை, அயல் மண்ணில் இந்திய அணியை முதல் முறை வெற்றி பெற வைத்த பெருமை (நியூசிலாந்துக்கு எதிராக) முதல் முறை ஆட்டத்தில் மூன்று ஸ்பின்னர்களை வைத்து ஆடச் செய்த பெருமை என்று ஏகப் பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.அவருக்கும் நடிகை ஷர்மிளா டாகூருக்கும் நடந்த காதல், திருமணம் பற்றி சேனல்களில் பார்த்தது சுவாரஸ்யமாக இருந்தது.
Controversially yours என்ற தனது சுய சரிதையில் சோயப் அக்தர் சில வம்புப் பந்துகள் வீசியுள்ளதாகத் தெரிகிறது! புத்தகம் விற்க வேண்டுமே....! 'முதல் முறை சச்சின் எனக்கு பயந்து பந்து பேட்டில் படா விட்டாலும் வெளியேறினார், அப்புறம் எப்போதுமே என் பந்து வீச்சுக்கு அவர் பயப்படுவார், இவர் ராகுல் டிராவிட் எல்லாம் மேட்ச் வின்னர்கள் இல்லை, பவுன்சர்களுக்கு பயப்படுவார்கள்' என்றெல்லாம் சொல்லியுள்ளாராம். 'இதற்கெல்லாம் பதில் சொல்லி என் மதிப்பைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை' என்பது சச்சினின் பதில்!
வெளிநாட்டவர், வெளியூர்க்காரர்களுக்குப் புரியும் வகையில் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் சார்பில் ஒரு சிறப்பு வழிகாட்டிக் கையேடு வெளியிடப் போகிறார்களாம். அது தவிர கோவில் வரலாறு, திருவிழாக்கள் பற்றியெல்லாம் சொல்லி 45 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு குறும்படம் ஒன்றும் தயாரிக்கிறார்களாம்.
திருக்கோவிலூர் பக்கத்தில் பசுமாட்டுக்கு ஆண்குழந்தை பிறந்ததாகக் கிளம்பிய வதந்தியால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் வாசலில் வெற்றிலை, பாக்கு வைத்துக் கற்பூரம் காட்டி தேங்காய் உடைத்து 'பரிகாரம்' செய்த வகையில் பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாசம் என்கிறது ஒரு செய்தி. "என்று மறையும் இந்த ......"
பாலச்சந்தர் விகடன் மேடையில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தனக்கு மிகவும் பிடித்த தனது கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும், பிடித்த படமாக புன்னகையையும் சொல்லியிருக்கிறார்.
அவர் படத்தில் அடிக்கடிக் காட்டப்படும் கடல் சம்பந்தப் பட்ட காட்சிகள் பற்றிய கேள்விக்கு அவர் பதில் கவர்ந்தது.
"The language of eternal questions என்று கடலை வர்ணிப்பார் ரவீந்த்ரநாத் தாகூர். ஏன்? கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. சிலர் தினமும் மெரீனாவுக்குப் போகிறார்கள். கடலைப் பார்த்தால் உங்களுக்கு பிரமிப்பாக இல்லையா? பாறைகளின் கன்னத்தில் அறையும் கடலின் சக்தி என்னை பிரமிக்க வைக்கிறது. ஜப்பானில் சமீபத்தில் தோன்றிய சுனாமியின் வீரியத்தை டிவியில் பார்த்த போது, கொஞ்சம் பயம் வந்தது. நாம் வாழும் நிலம் என்பது கடலின் பிச்சை. கொஞ்சம் காலாற நடப்போம் என்று அது உள்ளே வந்தால், நாம் என்ன ஆவது?
கடல், மனதைப் போல் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கடலில் அது அலைகளாகவும், மனதில் அது உணர்ச்சிகளாகவும் தெரிகின்றன. பின், கடலை விட வேறு எது என்னைக் கவர்ந்து விட முடியும்?"
படம் எடுக்கா விட்டாலும் பாலச்சந்தர் புத்தகம் எழுதலாம்!
நாகேஷுக்கு ஏன் எந்த விருதும் தரப் படவில்லை என்ற ஒரு கேள்விக்கு,
"அதேதான் என் கேள்வியும். நாம் இருவருமே சேர்ந்து கேட்போம்... யாரிடம் கேட்பது? THE POWERS THAT BE. இது ஒரு மகா சரித்திரத் தவறு. ஒரு புறக்கணிப்பு என்று சொல்லிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்? என் மனதில் ஆறாத காயங்களில் இதுவும், எம் எல் வி அவர்களுக்கு பெரிய அளவில் விருது வழங்கப் படாததும் உறுத்திக் கொண்டே இருக்கின்றன." என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு நாகேஷ் பாடலை இங்கு இணைக்க விழைந்தேன். இணைக்கும் வசதி நிறுத்தப் பட்டு, பகிரும் வசதி மட்டுமே தரப் பட்டுள்ளதால் லிங்க் கீழே...