தினமலரில் சமீபத்தில் ரசித்த ஜோக். ராகுல் காந்தி திடீர் திடீரென உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து ஏர் பிடிக்கிறேன், கூழ் குடிக்கிறேன், ஏழைகளுடன் குடிசையில் தங்குகிறேன் என்று ஃபிலிம் காட்டிக் கொண்டிருப்பதை கிண்டலடிக்கும் ஜோக். "சீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்.." நியூஸ் சானல்களுக்கு ராகுல் ஃபாலோ அப் நல்ல தீனி.
தயாநிதி ராஜினாமா செய்த நாளில் மற்ற அனைத்து சேனல்களும் அதைச் சொல்ல கலைஞர் டிவியில் மட்டும் 'பிரபுதேவா ரமலத் விவாகரத்துக்கு முக்கியத்துவம் தந்த அளவு இதைப் பற்றி ஒரு வரி கூட கிடையாது! தி மு கவுக்கு இரண்டு இடம் நிறுத்தப் பட்டுள்ளது என்கிறது காங்கிரஸ். பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்க புதிய துறைகள் உருவாக்கலாம். அறிக்கைத்துறை, சமாளிப்புத்துறை, இப்படி...
"மீடியாக்கள் ராஜ்ஜியம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது... யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம்...தயாநிதி விதிவிலக்கல்ல" என்பது கலைஞரின் கருத்து. கலைஞர் டிவி, சன் டிவி மீடியாக்கள் இல்லையா... இவர்கள் செய்யாததா... இது ஒருபுறமிருக்க இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
சமீபத்தில் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் ஆகியோருக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் ஒரு யோக்கியமான காரணத்துக்காக (கங்கையைக் காப்பாற்றுங்கள்) இந்த வருடம் பிப்ரவரி முதல் உண்ணாவிரதம் இருந்து யாராலும் கவனிக்கப் படாமல் உயிர் நீத்த சுவாமி நிகமானந்தா பற்றி செய்தி எங்காவது வெளியில் வந்ததா... துக்ளக்கிலும் கல்கியில் ஞானியும் சொல்லியிருக்கிறார்கள். சம்பவம் நடந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் பா ஜ க வும் கண்டு கொள்ளவில்லை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை, மீடியாக்களும் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் எல்லோரும் கண்டு கொண்ட ஆட்டம் ஒன்று உண்டு! ராம்தேவின் நள்ளிரவு போராட்டக் கலைப்புக்கு கண்டனம் தெரிவித்த நிகழ்வில் பி ஜே பியின் சுஷ்மா ஸ்வராஜ் நடனமாடியது செய்தியாகியதாம். தேசபக்திப் பாடல்களுக்குத்தானே ஆடினேன் என்ன தவறு என்றாராம் அவர்! ஆனால் நடுத்தர மக்கள் உண்மையிலேயே ஆடிப் போய்விட்டார்கள் கேஸ் சிலிண்டர் அநியாய விலை ஏற்ற விவரம் கேட்டு.



ஓரிரு வருடங்களுக்கு முன்னால் அமைச்சர்கள் தலைமைச் செயலர் எதிரிலேயே ஒரு போலீஸ் ஆபீசர் வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தோம். உதவி கேட்டு அவர் எழுந்து எழுந்து அலறியும் யாரும் பக்கத்திலேயே போகவில்லை அப்போது. அதே போல ஒரு காட்சி சென்ற வாரம் கோவையில் அரங்கேறியது. 'குடிமகன்கள்' இடையே நடந்த சண்டையில் பைக்கில் மோதி கீழே தளளி அடித்துத் துவைத்து, தலையில் கல்லைப் போட்டு கொல்லுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கூட்டமான பொது ஜனம்...! cctv யில் ரெகார்ட் ஆனதை சேனல்களில் தமிழ்பட காட்சி போல காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் வேறு இருந்ததாம். ஏன் இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனத்தில் ஒருவர் கூட தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முன் வரவில்லை? சிக்னல் விழுந்ததும் ஏதோ ரோடில் பிச்சை எடுப்பவர்களைத் தாண்டிச் செல்வது போல வாகனங்கள் தங்கள் வேலையைப் பார்க்க விரைந்தது ஏன்? கலிகாலம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் ...