நங்கநல்லூரிலிருந்து விசு அலைபேசியபோது மிக முக்கியமான வேலையில் இருந்தேன். (ஹி....ஹி.. தூக்கம்தான்!)
"என்னடா... வேலையா இருக்கியா..."
"நானா... எனக்கு என்ன வேலை...? சொல்லுங்க... "
கே டிவி பாருடா... பணக்காரக் குடும்பம்... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ஸீன்..."
"கண் போன போக்கிலே வா?"
"அடச்சீ... அது வேற படம்... இது எம் ஜி ஆர் சரோஜா தேவி நடிச்ச படம்... 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை..' பாட்டு"
"ம்.... பார்க்கறேன்" சொல்லி விட்டு முக்கிய வேலையைத் தொடர்ந்தேன்.
ஐந்து நிமிடத்தில் மறுபடி அலைபேசி "இது குழந்தை பாடும் தாலாட்டு.." என்று பாடியது! என்ன முரண் என்று யோசித்தபடி மறுபடி முக்கிய வேலையிலிருந்து கலைந்து கையிலெடுத்தேன்.
"என்ன பார்த்தியா..."
"ஓ... ஊம்... பார்த்தேன்.. சூப்பர்!"
"என்ன ஒரு பாட்டு இல்லே... இது ஹிந்தியில என்ன பாட்டு சொல்லு..."
"என்கிட்டயேவா.... இதோ யோசிச்சுச் சொல்றேன்..."
"ஹம்ஜோலிடா... இதுலே இன்னொரு பாட்டு வரும்... 'பறக்கும் பந்து பறக்கும்..." பாடிக் காட்டுகிறார்.
"ஆமாம்... ஆமாம்... தெரியும்... அது கூட ஹம்ஜோலியில் இருக்கு" என்றேன்.
"என்ன பாட்டுடா இதெல்லாம்... இல்லை? அந்தக் காலத்துல..." என்று இடைவெளி விட்டார்.
"டென்னிஸ் ஆடியபடியே இன்னொரு பாட்டு இருக்கு... என்ன பாட்டு சொல்லுங்க பார்ப்போம்..." என்றேன். (நாமும் ஒரு கேள்வி கேட்டு, அவர் யோசனை செய்யும் நேரத்தில், நமது முக்கியமான வேலையைத் தொடரலாமே என்கிற நப்பாசையோடு!)
"அடச்சீ.... ஹம்ஜோலி பாட்டு சொல்றே... அதான் சொல்லியாச்சே.."
"ச்சே.... இல்லை! தமிழ்லயே..."
"நீயே சொல்லு"
(ஆஹா தோசையைத் திருப்பிப் போட்டுவிட்டாரே!)
"இதயமலர் படத்துல ஜேசுதாஸ் பாடற பாட்டு 'செண்டுமல்லி பூப்போல் அழகிய' என்று வரும் ஜெமினி சுஜாதா நடிச்சது "
"இருந்துட்டுப் போகட்டும் போ.. கல்யாணமாலை பார்ப்பியோ...?"
"ஊஹூம்"
"நேத்து ஒரு ஆள் வந்தார். மோகன், 'என்ன படிக்கிறான் பையன்' என்று கேட்கிறார்.... அதற்கு அவர் 'ஐ ஏ எஸ் படிச்சிட்டு இருக்கான்' என்றார்" இன்னொரு ஆள் 'பையன் சொந்த பிசினெஸ் பண்றான்' என்று சொல்லிவிட்டு 'அடக்கவொடுக்கமா, பாந்தமா, அழகா குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா வேண்டும்' என்றார். வருமானம்? என்றார் மோகன். 'அது போதிய அளவு வருது' என்ற அவர், 'பொண்ணு பத்தாவது படிச்சிருக்கணும்' என்றார். என்னடா மணல் கயிறு மாதிரி கண்டிஷனா இருக்கே என்று கவனிச்சேன். பையன் என்ன படிச்சிருக்கான் என்று மோகன் கேட்டார்... அவருக்கும் ஒரு கியூரியாசிட்டி வந்திருக்கணும்... பையனோட அப்பா சொன்னார்.. 'எட்டாவது படிச்சிருக்கான்'...

காதலிக்க நேரமில்லை பாலையா சொல்லும் 'ஓஹோ...பையனுக்கு படிப்பு வேற இல்லையோ... அப்போ ஒண்ணு செய்யுமே...' வசனம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வந்திட்டுது"

காதலிக்க நேரமில்லை பாலையா சொல்லும் 'ஓஹோ...பையனுக்கு படிப்பு வேற இல்லையோ... அப்போ ஒண்ணு செய்யுமே...' வசனம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வந்திட்டுது"
இதுதான் விசு. நாமும் ஒருவேளை நிகழ்ச்சி பார்த்திருந்தாலும், இது மாதிரி யோசித்திருப்போமா தெரியாது. இவர் பார்வையே தனி. அதை விட அவர் அதை விவரித்துச் சொல்லும்போது கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்துக் கொள்வார்.
"இந்தப் படத்துல நாகேஷ் ஜோக் நல்லா இருக்கும்... ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் பண்ணித் தருவார் ..." என்று ஆரம்பித்தார்.
எங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கும்.
"ஓ... அந்த ஞாபகமறதிக்காரராய் வருவாரே... அதுவா... மனோரமா, இவர் ஞாபகமறதி சரியாக டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனா... இவர், மனோரமா கர்ப்பமா இருக்கறதா கூத்தடிப்பாரே..."
"சீ.. அது தெய்வத்தாய்... இது வேற..."
பேச்சு அங்கே இங்கே என்று அல்லாடி, ஊட்டி அசெம்ப்ளி ஹால் தியேட்டரைப் பற்றி வந்தது.
"என்ன தியேட்டர்டா அது? குவாலிட்டி படங்கள்தான் போடுவான்... படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால செய்திச் சுருள் போடுவாங்களே, அது மாதிரி இந்தத் தியேட்டர்ல சின்னச் சின்னக் குறும்படம் போடுவான் பாரு... ஒரு படத்துல..."
"தியேட்டர் பத்தித் தெரியுமே... நான் கூட அங்குதான் ஷாலிமார் பார்த்தேன்"
"அது கிடக்கட்டும்...இது ஒரு இங்க்லீஷ் படம். ஒரு வெள்ளைக்காரன் தண்ணியடிச்சிட்டு முதலாளி மேல வெறுப்புல ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கறப்ப அங்க இருக்கற, அவங்க தேசியக் கொடியை பிச்சு எரிஞ்சு துவம்சம் பண்ணுகிரான். அதை, அந்த வழியா வர்ற அவர் முதலாளி பார்த்துடறார்... இவன் பயந்த மாதிரியே 'நாளை ஆபீசில் என்னை வந்து பார்' என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் ட்ரிம்மாக ஷேவ் செய்துகொண்டு, நீட்டாக டிரஸ் செய்துகொண்டு, ஆபீஸ் சென்று முதாலாளிக்குக் காத்திருக்கிறான். வந்தவர் அவனைப் பார்க்காதது போலச் சென்று விடுகிறார். ரொம்ப நேரம் காத்திருந்தவன் சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்கிறார். உணவு இடைவெளியும் வர, இன்னும் காத்திருக்கிறான்..."
"நான் பார்த்ததில்லை... ஆனால் முடிவு தெரிந்து விட்டது. இது மாதிரி வேற கேள்விப் பட்டிருக்கேன்"
"முழுக்கக் கேளு... மத்தியானம் வந்தும் கூப்பிடலை என்றதும் மறுபடி சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்லி தகவல் வருகிறது. என்ன ஆகுமோ என்ன சொல்வாரோ என்ற பதைபதைப்புத் தொடர்கிறது. கிளம்பும் நேரமும் வந்து விட, இன்னும் அழைக்கப்படாததால் கோபம் கொள்ளும் அவன், முதலாளி அறைக் கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைந்து, 'என்ன செய்வே..வேலையை விட்டு எடுப்பியா..எதுத்துக்கோ...என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கே..' என்ற ரீதியில் ஐந்து நிமிடம் படபடவெனப் பொரிய, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் முதலாளி, 'உன் தண்டனை முடிந்து விட்டது.. வீட்டுக்குப் போய்விட்டு, நாளை ஆபீஸ் வந்து சேர்' என்பார். நான் ரசித்த படம் அது"
"சரி உன் வேலையைக் கவனி... அப்புறம் இன்னொரு கதை சொல்றேன்... ஒரு வெள்ளைக்காரப் பெண் நீக்ரோவைக் காதலித்த கதை..."
"இப்பவே சொல்லுங்களேன்...."
"போடா... தூங்கப் போறேன்... இப்பவே பேச ஆரம்பிச்சு 1111 செகண்ட்ஸ் ஆகி விட்டதாக என் செல் சொல்கிறது... இன்றைய லிமிட் அவ்வளவுதான்.. பை.."
வைத்து விட்டார்.