நீண்ட நிழல்
இந்த முறை புத்தகத் திருவிழாவுக்கு இரண்டு முறை விஜயம்.
முதல் முறை
உள்ளே இருந்த போது பெய்த பெருமழையில் மேலே உள்ள தகரக் கூரை அதிர்ந்து
பிரளயச் சத்தம் உண்டாக்கி பீதியை வர வழைத்தது! வேலை நாள் என்பதாலும்
மழையாலும் கூட்டம் குறைவுதான். மழை பெய்த போது வெளியில் நடைபாதையில் கடை
விரித்திருந்த வியாபாரிகளுக்கும்,அந்தப் புத்தகங்களுக்கும் என்ன ஆயிற்றோ என்று கவலை
ஏற்பட்டது.
திரளும் மேகம்...
சுஜாதா புத்தகம் இரண்டு மட்டும் வாங்கி முற்றும் போட்டாயிற்று.
இனி
அவர் ஏதாவது எழுதினால்தான் வாங்க வேண்டும்!
காவல்கோட்டம் மிகப் பெரிய
புத்தகமாக ஸ்டாலுக்கு ஸ்டால் காட்சி தந்தது.
டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸ் தமிழ் மொழி பெயர்ப்பு இருந்தது. "போரும் வாழ்வும்"
இப்படியும் அடுக்கலாம்....
ரா கி ரங்கராஜன் புத்தகங்கள் இரண்டு மூன்று கண்ணில் பட்டன. கிருஷ்ணகுமார் கதைகள் கண்ணில் படவில்லை அப்பாஜி...!
முதல்முறை கூட்டமில்லா நாளும் இரண்டாம் முறை கூட்டமும்....
கு. அழகிரிசாமி கதைகள், பு.பித்தன் கதைகள், தீபம் தொகுப்பு...
திருக்குடந்தை
பதிப்பகத்தில்.திரு முக்தா சீனிவாசனிடம் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு
புத்தகம். வெளியே நின்று நோட்டமிட்டபோது "சும்மா உள்ளே வந்து
பாருங்க.... அப்போதான் புத்தகம் என்ன இருக்கு என்று தெரியும்... வாங்கித்தான்
ஆகணும்னு கட்டாயமில்லே"
"உங்கள் வீட்டிலேயே ஒரு நூலகம் நடத்திக் கொண்டிருந்தீர்களே..." என்று தொடங்கியவுடனேயே இடைமறித்துத் திருத்தம் செய்தார்...
"நடத்திகிட்டிருந்தீர்களே
இல்லை... இன்னும் நடந்திண்டு இருக்கு... பணமே கட்ட வேண்டாம்.... எடுத்துப்
போய்ப் படித்து விட்டு பத்திரமாகத் திருப்பித் தரவேண்டும்... நாலாயிரம்
புத்தகங்கள் இருக்கு.." என்றார்.
அப்போது உள்ளே நுழைந்தனர் ஒரு தாயும் சிறுவனும். சிறுவனிடம் முக்தா,
"டேய் பயலே... படிப்பியா...... பாரு.. நீ எடுக்கற புக் காசு வாங்க
மாட்டேன்... உனக்கு ஃப்ரீ..." என்றார்.
'ஓ பக்கங்கள்' விற்கும் ஸ்டாலில் ஞானி அமர்ந்திருந்தார். விடாது ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
எழுத்தாளர்-வாசகர் சந்திப்புக்காக என்று இந்த இடம். போன முறை இப்படி பார்த்ததாக எனக்கு நினைவில்லை.
இப்படி அடுக்கினால் புத்தகத் தலைப்பைப் படிக்க தமிழ்ப் பட ஹீரோ வில்லன்களை அடிக்குமுன் கழுத்தைத் திருகுவாறே அப்படித் திருக வேண்டியதாயிருக்கிறதாயினும் பார்க்க அழகாகவே இருக்கிறது.
திருப்பூர் கிருஷ்ணன்...
வயதான ஒருவரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்தேன். சொந்த ஏற்பாடா... பபாசி ஏற்பாடா தெரியவில்லை.
ஆனந்த விகடன் ஸ்டாலில் ஆர்வமாக 'பொன்னியின் செல்வனை'ப் புரட்டினேன். ஏனோ
திருப்தியில்லை. கல்கியில் வந்த அளவிலேயே படங்கள் எதிர்பார்த்ததா, நிறையப்
படங்கள் எதிர்பார்த்ததா, என்னுடைய எந்த எதிர்பார்ப்பு தவறு?
கீதா பிரஸ்
கடையில் பகவத் கீதை பொழிப்புரையுடன் பாக்கெட் சைஸ் பத்து ரூபாய்க்கும்,
விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலீசா போன்றவை மூன்று நாலு ரூபாய்க்கும்
கிடைத்ததை பதினைந்து வாங்கிக் கொண்டேன். புத்தாண்டுக்கு சிலருக்கு இதைத்
தரலாம் என்று தோன்றியதால்!
பீட்சா எண்பது ரூபாய்க்கும், பர்கர்கள் ஐம்பது ரூபாய்க்கும், ஃப்ரூட்
சாலட் முப்பது ரூபாய்க்கும் கிடைத்தன. தேங்காய்ப் பூ நிறைய வைத்து விற்பனை
செய்தார்கள். முப்பது ரூபாய், நாற்பது ரூபாய்...நான்காக நறுக்கித் தரப்
பட்ட அவற்றை மக்கள் அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த என் டி
ஜி எல் பதறியது!
வெளியே நடைபாதைக் கடைகளில் ஒன்று பத்து ரூபாய், இருபது ரூபாய், முப்பது
ரூபாய் என்று பழைய, நடுவாந்தர, ஆங்கில, தமிழ்ப் புத்தகங்கள் விற்றுக்
கொண்டிருந்தனர். உள்ளே இருக்கும் பெரும்பாலான விலையுயர்ந்த புத்தகங்களுக்கு, மலிவு விலைக் காபி இவர்களிடம் இருந்தது. உள்ளே கிடைக்காத புத்தகங்களும்
கிடைத்தன. ஏதாவது புத்தகத்தைத் தேடினால் அருகில் வந்து எதை தேடுகிறோம்
என்று கேட்டு அறிந்து, எடுத்துக் கொடுப்பது அல்லது கொஞ்ச தூரத்தில் எங்கோ
சென்று அங்கிருந்து நாம் தேடும் புத்தகத்தை உடனே கொண்டு வந்து தருவதும்
நடை பெற்றுக் கொண்டிருந்தது.

