அது என்னப்பா வெண்டைக்காய் விஷயம்! என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த *உ கா மா திணி வெண்டைக்காய் விஷயம் சுலபமானது, சுவையானது.
செய்து பாருங்கள்!
தேவையானவை:
இளசான வெண்டைக்காய் பதினைந்து.
கடலை மாவு : நான்கு தேக்கரண்டி.
மிளகாய்த் தூள்: இரண்டு தேக்கரண்டி.
சீரகம் : ஒரு தேக்கரண்டி.
உப்பு: தேவையான அளவு.
ஒரு அகலமான தட்டில், கடலைமாவு, உப்பு, மிளகாய்த்தூள், சீரகம் ஆகியவற்றைக் கொட்டி, ஒன்றோடோன்றாக நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, இந்தக் கலவையை நன்கு பிசைந்து கொள்ளவும். பேஸ்ட் பதம் சரியாக இருக்கும்.
வெண்டைக்காய்களை, நீளவாக்கில் முனையிலிருந்து காம்பு வரை கீறுகின்றாற்போல் வெட்டவும். எச்சரிக்கை: வெட்டப் பட்டப் பகுதிகள் தனியே வரக் கூடாது. அவை வெண்டைக்காயின் காம்புப் பகுதியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.
வெண்டைக்காயின் கீறப்பட்ட பகுதி வழியாக, அவற்றினுள்ளே, மேலே கூறப்பட்ட மாவு கலவையை உள்ளே இட்டு, வெண்டைக்காய்களை ஓரளவுக்கு மூடி வைக்கவும்.
இந்த ஸ்டஃபுடு வெண்டைக்காய்களை, சிறிதளவு சமையல் எண்ணை விட்டு, வாணலியில் வாட்டி எடுக்கலாம்.
அல்லது,
இப்படி தயார் செய்யப்பட்ட வெண்டைக்காய்களை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அப்படியே வைத்து, மைக்ரோ வேவ் ஓவனில் உள்ளே வைத்து, ஒரு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடம் ஓவனை இயக்கி, எடுத்துக் கொள்ளலாம்.
(இவற்றை எப்படி சாப்பிடுவது என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றோம்.)
* உ கா மா திணி = "உப்பு, கார, மாவு திணிக்கப்பெற்ற"