சந்திரபாபு அடிப்படையில் நடிகர். பாடல்களும் பாடுவார். ஒரு படத்தில் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) ஒரு பாடலுக்கு சிவாஜி கணேசனுக்குக் குரல் கொடுத்திருப்பார்.
கமலஹாசன் நடிகர். பாடுவார். அவர் வேறு நடிகர்கள் இரண்டு பேருக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். (யார், யார் தெரியுமோ?)
இந்தக் காலத்தில் நிறைய பாடகர்கள் வந்து விட்டார்கள். பிரசன்னா,கார்த்திக், திப்பு, நரேஷ் ஐயர், ஆலாப் ராஜு (இந்தப் பெயர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...இவர் பாடிய - எனக்குத் தெரிந்து - இரண்டு பாடல்களும் ஹிட்) இன்னும் என்னென்னவோ பெயர்களில்... எந்தப் பாடலை யார் பாடியது என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஹரிஹரன் விதிவிலக்கு. (அவரை 'இந்தக்கால' லிஸ்ட்டில் சேர்க்க முடியாது). பெண் பாடகிகள் கொஞ்சம் விதிவிலக்கு. ஸ்ரேயா கோஷல் குரலை எளிதாக அடையாளம் காண முடிகிறது. ஹரிணி கஷ்டம். பிரசாந்தினி, சங்கீதா மோகன் என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள். ஊ.... ஹூம்...!
முந்தைய கால கட்டங்களில் இந்தப் பாடல் mkt பாகவதர் பாடியது, இது பி யு சின்னப்பா பாடியது என்றோ டி எம் எஸ், எஸ் பி பி பாடியது என்றோ எளிதாகக் கண்டு பிடிக்கலாம். அப்போதும் கூட சில இரட்டைக் குரல்கள் உண்டு... டி எம் எஸ் க்கு போலியாக ஒரு கோவை சௌந்தரராஜன். மனோ பாடியதையும் எஸ் பி பி பாடியதையும் குழப்பிக் கொள்கிறவர்கள் உண்டு. எஸ் பி பிக்கும் மலேசியா வாசுதேவனுக்குமே வித்தியாசம் தெரியாமல் குழம்புபவர்கள் உண்டு. அடுத்த குழப்பம் கே ஜே யேசுதாஸ் - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள். (எனக்குக் குழப்பம் இருந்ததில்லை!). இந்த இரட்டைக் குழப்பம் பெண் குரலில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்!
மதுரை சோமுவும் பித்துக்குளி முருகதாசும் ஒரே ஒரு திரைப் பாடல்தான் பாடியிருக்கிறார்கள், தெய்வம் படத்தில்.
ஜி ராமநாதன், கே வி மஹாதேவன் காலத்துக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு பாடலாவது பாடியிருக்கிறார்கள். மிகச்சில விதிவிலக்குகள்.
ஜி ராமநாதன், கே வி மஹாதேவன் காலத்துக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு பாடலாவது பாடியிருக்கிறார்கள். மிகச்சில விதிவிலக்குகள்.
தமிழ் பாடகர்கள் முழுநீள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். டி எம் எஸ், எஸ் பி பி, சீர்காழி கோவிந்தராஜன், மனோ.
சில பாடல்கள் முதலில் வரும் வரிகள் ஓரிரண்டு மாற்றப் பட்டு பின்னர் வேறு வரிகளுடன் பாடப் படுவதைக் கேட்டிருக்கிறீர்களா... கொஞ்ச நாள் முன்பு இந்தப் பதிவில் பகிர்ந்த நாளை நமதே பாடல், 'என்னை விட்டால் யாருமில்லை'பாடலையே எடுத்துக் கொள்வோம். சரணத்தில் ஓரிடத்தில் "ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற்போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு...அரச மரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றார்போல் ஒரு நினைப்பு" என்பது ஒரிஜினலாக பல வருடங்கள் இருந்த வரி. பின்னர் இந்த வரியில் மாற்றம் செய்யப் பட்டு அரசமரத்தின் இலை 'அழகர் மலையின் இலைகளில் ஒன்றா'க மாறியது!
'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...' இது ஒரிஜினல் பாடல். இன்னும் சில கேசட்களில் கூட ஒரிஜினல் வடிவம் இருக்கலாம். பருவம் என்பதில் என்ன தவறு கண்டார்களோ... சில வருடங்களுக்குப் பிறகே லேட்டாக பருவம் என்பதை பார்வையாக மாற்றி விட்டார்கள்...! 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா....ராதா...'
ஆனால் இதே பருவம் என்ற வரிகளைக் கொண்ட வேறு பல பாடல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மாற்றப் படவில்லை. மலர்கின்ற பருவத்திலே, பருவத்தின் வாசலிலே, கன்னிப் பருவத்திலே என்றெல்லாம் படங்களே வந்தன. இங்கெல்லாம் பார்வையை சப்ஸ்டிடியூட் செய்தால் எப்படி இருக்கும். பருவ காலம் என்றொரு படம். பழைய படம். அப்போதே வந்ததுதான். அதையும் மாற்ற வேண்டாமா...! அந்தப் படத்தில் மாதுரி (என்று ஞாபகம்) பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. "வெள்ளி ரதங்கள் அழகு மேகம்.. செல்லும் வீதி சிவந்த வானம்... பாவை நெஞ்சின் இளைய ராகம் பாட வந்தது பருவ காலம்.." ரசிக்கக் கூடிய பாடல்.
ஆனால் இதே பருவம் என்ற வரிகளைக் கொண்ட வேறு பல பாடல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மாற்றப் படவில்லை. மலர்கின்ற பருவத்திலே, பருவத்தின் வாசலிலே, கன்னிப் பருவத்திலே என்றெல்லாம் படங்களே வந்தன. இங்கெல்லாம் பார்வையை சப்ஸ்டிடியூட் செய்தால் எப்படி இருக்கும். பருவ காலம் என்றொரு படம். பழைய படம். அப்போதே வந்ததுதான். அதையும் மாற்ற வேண்டாமா...! அந்தப் படத்தில் மாதுரி (என்று ஞாபகம்) பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. "வெள்ளி ரதங்கள் அழகு மேகம்.. செல்லும் வீதி சிவந்த வானம்... பாவை நெஞ்சின் இளைய ராகம் பாட வந்தது பருவ காலம்.." ரசிக்கக் கூடிய பாடல்.
'நான் ஆணையிட்டால்...' இது 'எங்க வீட்டுப் பிள்ளை' எம் ஜி ஆர் படப்பாடல். அதில் ஒரு வரி. "எதிர்காலம் வரும் என் கடமை வரும்.. இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.." என்பது ஒரிஜினல். மாற்றப்பட்ட வரி 'இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்'
ஏன்? என்ன சாதித்தார்கள் இந்த வரிகளை மாற்றி? அதை விட சில வருடம் கழித்து மாற்றினாலும் குரலின் தன்மை, ஸ்ருதி மாறாமல் பாடகர்களை மாற்றிப் பாட வைத்து இந்த வரிகளை மட்டும் எப்படி மாற்றி சேர்க்க முடிந்தது?
பாடல் வரிகள் அல்லது வார்த்தைகள் மாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரு படத்தின் ஒரு பாடல் - இசைத்தட்டில் சூப்பரான பின்னணி இசை. ஆனால் படத்தில் கேட்கும்பொழுது, பாடலின் பின்னணி இசை மாற்றப்பட்டு,கலரை எடுத்துவிட்டு கரி பூசினாற்போல செய்யப்பட்டது. எந்தப் படம், என்ன பாடல்? (ஏன்?) யாருக்காவது தெரியுமா?