பி ஆர் பந்துலு நூற்றாண்டு விழாவை ஒட்டி அவர் இயக்கிய மிகப் புகழ் பெற்ற படமான 'கர்ணன்' திரைப் படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.
டிஜிட்டல் என்பதால் என்ன வசதி, என்ன மாற்றம் இருக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.
நிச்சயம் சிவாஜி கொஞ்சம் ஒல்லியாகத் தெரிய மாட்டார்!
மிக அருமையான, இனிமையான பாடல்களைக் கொண்ட படம். சிவாஜி, அசோகன், என் டி ராமாராவ் முத்துராமன் என்று பெரிய ஆட்கள் எல்லாரும் நடித்த மறக்க முடியாத படம்.
சிவாஜி கொடுத்த காசுக்கு மேலேயே நடிப்பார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்தப் படத்தில் அப்படிச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். குந்தி கர்ணனைச் சந்திக்கும் இடம், தேவிகா சிவாஜியை, கர்ணனை சமாதானப் படுத்தும் 'கண்ணுக்குக் குலமேது' பாடல் காட்சி, சபையில் பிறப்பைக் குறித்து அவமானப்படும்போது அசோகன் உதவியதும் காட்டும் நடிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்ல நிறையவே காட்சிகள் உண்டு.

வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி பேசும் "மஞ்சள் அரைத்தாயா நாற்று நட்டாயா" வசனம் ரொம்ப ரொம்ப பிரபலமாகி எல்லா நடிகர்களும் பேசிப் பார்த்து சின்னி ஜெயந்த் போன்றோர் மிமிக்ரி கிண்டல் எல்லாம் கூடச் செய்து விட்டார்கள்.
அந்தப் படத்தை இப்போது எடுத்தால், அதுவும் மணிரத்னம் ஸ்டைலில் எடுத்து இந்த வசனத்தை அவர் பாணியில் சிக்கனமாக வழங்கினால் எப்படி இருக்கும்?
கட்டபொம்மன் : "என்ன கேட்டாய்.."
ஜாக்சன் : "கிஸ்தி கிஸ்தி..." (சத்யராஜ் ஸ்டைல்!)
கட்டபொம்மன் சிறிது நேரம் மேலே நோக்குகிறார். அப்புறம் மெல்ல ஜாக்சன் துரை முகத்தைப் பார்க்கிறார். மெல்லத் திரும்பி நடக்கிறார்.
ஜாக்சன் : சற்று உரத்த குரலில், "கட்டபொம்மா..."
கட்டபொம்மன் சரேலெனத் திரும்பி "ஏ....ய்" என்ற அலறலோடு கட்டை விரலை நீட்டி விரலை நடுக்கிக் காண்பித்து ஆத்திரத்தை அடக்கி உணர்ச்சி காட்டுகிறார்.
"கட்டபொம்மு.... கட்டபொம்மு என்று சொல்லு" எச்சரிக்கிறார்... சொல்லும்போதே உடைந்துவிடுவது போல 'கட்ட'வில் அப்போடி ஒரு அழுத்தம்!
தாழ்குரலில் (அதுதான் ஹஸ்கி வாய்சில்) ஜாக்ஸனிடம் கேட்கிறார்.
"ஏன், ஏன் தரணும் கிஸ்தி.... ஆங் .... எங்க கூட வயலுக்கு வந்தியா... ஆங் ... நாற்று நாட்டியா... ஆங்... களை பறிச்சியா ஆங்... "
".................................................."
'கண்ணுக்குக் குலமேது' ராகத்தில் "கற்பனைக்கு அளவேது....!"