கையெழுத்து மறையும் நேரம். சூழல் தெளிவாக இல்லை. மங்கலான இருட்டு.
'புஸ புஸ' என்று சீறல் ஓயாமல் கேட்க, மரத்தடியில் நின்ற அவர் அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார்.
தான் நின்ற இடத்துக்கு வெகு அருகில் உயரமாக இருந்த அந்தப் புற்றில் அப்போதுதான் கண்ணில் படுகிறது.
இப்போது இன்னும் பயம். மரத்தின் கீழ் உதிர்ந்திருந்த இலைச் சருகுகள் காற்றில் எழுப்பும் சலசலப்பு ஓசை அச்சத்தைக் கூட்டுகிறது.
ஓடத் தொடங்கினார். மூச்சிரைக்க இரைக்க...... சரசரவென்று பின்னாலேயே அது வேகமாகப் பாய்ச்சலில் வருவது மாதிரி பயம்.
எதிர்ப்பட்டவர் இவரை நிறுத்துகிறார். "ஏன் இப்படி ஓடறீங்க?"
"அதோ மரத்துக்குக் கீழே நாகப் புற்று இருக்குதுங்க.... அதுலேயிருந்து 'அது' என்னைத் துரத்திகிட்டே வருது"
"பயப்பட வேண்டாங்க.... அது என் மனைவிதானே!"
"என்னது...! பாம்பு உங்க ஒய்ஃபா?"
"ஆமாங்க, இதுல என்ன அதிசயம்... இப்போ என்னை சரியாப் பாருங்க...!"
அவர் திடீரென கீழ்ப்பக்கமாகக் குறுகினார்..... அவர் நின்ற இடத்தில் படமெடுத்து சீறி நின்றது ஒரு நாகம்.
அவ்வளவுதான்.... ஒரே பாய்ச்சலில் அவர் மறுபடி ஓடத் தொடங்கினார்.
மெயின்ரோடுக்கு வந்ததும் எதிர்ப்பட்ட கார் நிறுத்தப்பட்டு அதிலிருந்து கீழே இறங்கியவர் வியப்புடன் "அப்பா... அப்பா... உங்களைத்தான் தேடிகிட்டிருந்தேன் ... காலைல கிளம்பினீங்களாம் .. ரொம்ப நேரமாக் காணோமேன்னு அம்மா கவலைப் படறா"
அவருக்குக் காலின் கீழ் 'புஸ' சீறல் மறுபடி. எதிரே 'மகன்' மாதிரி வந்திருப்பவன் 'அது'வாக இருக்குமோ...
பயம்.... பயம்.... பயம்.....
ஏன் இப்படி மறுபடி தலைதெறிக்க ஓடுகிறார் என்று அந்த நிஜ மகன் குழம்பி நிற்கிறான்.