கடந்த எட்டு வருடங்களாக காலையில் நானும், நண்பர் ஷ்யாமும் சுமார் ஒரு மணி நேரம் நடப்போம். ஷ்யாம் வீடடில் காபி குடித்துவிட்டு நடக்கத் தொடங்குவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அமையும். சற்று சீக்கிரம் செல்வோம் என நினைத்தால் எல்லார் வீட்டிலும் பெருக்குகிறோம் என்ற பெயரில் தூசியை பறக்கவிட்டு எங்கள் தும்மலை பெருக்குவர். ட்ராஃபிக் அதிகம் இருக்காது என்ற கணிப்பில் வண்டிகள் வெகு வேகமாகக் கண்டபடி செல்லும். சென்ற வாரம் அந்தக் காலை வேளையில், ஒரு பெண், அப்பாவுடன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு திருப்பத்தில் தேமே என்று வந்து கொண்டிருந்த பேப்பர் போடும் பையனின் சைக்கிளில் மோதிவிட்டாள். நாங்கள் அந்த பையனின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தோம். சற்று தப்பியிருந்தால் எங்கள் மேலும் இடித்திருப்பாள்! இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார். அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான். பாவம் அப்பாவிப் பையன்!. சாலையில். நடப்பவர்களுக்கு உள்ள அசௌகர்யங்களில் இதுவும் ஒன்று. நாம் பாட்டுக்கு நடக்கிறோம் என்று இல்லாமல் நாலா பக்கமும் பார்க்கவேண்டும். காலையில் நிதானமாக எழுந்து சற்று லேட்டாக போனால் காலை வெய்யில் கூட சுட்டெரிக்கும்!
நாங்கள் நடப்பதற்கு தேர்ந்தெடுதத ஏரியா அசோக நகர் - மே.மாம்பலம் பார்டர் சாலைகள். நாங்கள் நடக்க காரணம் உடல் எடை குறைப்பு/அதிகரிப்பு ஆகாமல் இருக்க. .ஷ்யாமும் நானும் மாட்ச் ஆனதற்கு நாங்கள் நீண்ட கால நாகை நண்பர்கள் என்ற காரணம் மட்டுமில்லை. ஷ்யாம் நிறைய பேசுவார். நான் நிறைய கேட்பேன் . தவிர இருவருக்கும் டயபெடிஸ் உண்டு!! பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள். ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார். டாபிக் இது அது என்று கிடையாது. தெரு கிசுகிசு, ஆஃபிஸ் கிசு கிசு, பாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk! மற்ற நேரங்களில் வெளியில் போனால் ஊர் சுற்றுகிறாயென்னும் வீட்டினர், காலையில் நடந்தால் ஒன்றும் சொல்வதில்லை
இப்போது நிறைய பேர் வாக் செய்கிறர்ர்கள். டாக்டர்கள் சர்வ ரோக நிவாரணியாக இதை பரிந்துரைப்பதாலும், அதிக செலவில்லா சமாச்சாரம் என்பதாலும், ஒருவிதமான தப்புதல்(escape) காரணி என்பதாலுமோ(?) வயதானவர்கள் பெரும்பாலும் துணைவியருடன் வருகிறார்கள். அவர்களைப் பர்ர்த்தால் நமக்கும் உத்வேகம் வரும். வழக்கமாக நடப்பவர்களைப் பார்க்கும்போது உடனே பேசமாட்டோம். சில காலம் சென்று முறுவலித்து பின் ஹெல்லோ சொல்லும் அளவிற்கு கடந்த பின் அளவளாவலாம் என்ற ஸ்டேஜ் வரும்போது அனேகமாக இருவரில் ஒருவர் வர இயலாமை ஏற்பட்டுவிடும். இரயில் ஸ்னேகிதம் போல்தான் இந்த வாக் ஸ்னேகமும்!
சாலையில் நடப்பவர்களைவிட பார்க்குகளில் உலாத்துபவர்கள் சற்றே வித்யாசப்படுவார்கள். எப்படி? இவ்வளவு சுற்றுதான் என்று கணக்கிட்டு நடப்பர். வண்டிகள் தொந்திரவு இல்லாததால் ஹெட்செடடுடன் நடை பழகுவர். நடக்கையில் மீண்டும் மீண்டும் ஒருவரை கடந்து செல்கையில் பார்க்க வேண்டியிருப்பதால் இவர்கள் இளமுறுவல்கூட காண்பிக்கமாட்டார்கள்.
சில பெரியவர்கள் சற்றே அசட்டு தைர்யத்துடன் வயதுக்கு பாந்தமில்லாத பயிற்சிகளை செய்வார்கள். சொன்னாலும் ஒப்பபுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் வேகமாக தலையை சுழற்றும்போது எங்கே தலைசுற்றி மயக்கமாகப் போகிறார்களோ என்று பயம் வரும்
வயதான பெண்களும் காலையில் பார்க்குக்கு வருவார்கள். அவர்கள் சற்றே கூச்சத்துடன் சிறார்களுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார்கள். இளமைக்காலத்திலோ, சிறு பிராயத்திலோ நேரமோ, சுதந்திரமோ இல்லாமல் இருந்திருப்பார்களோ? அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வைஸ்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும். தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும். வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கை) சில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள்! பார்க்கில் பிறிதோரிடத்தில் RSS ஷகா நடக்கும். சிறுவர்களை எப்படி கவ்ர்ந்து அவர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.
சில வருடங்களுக்கு முன் ஸைக்கிளில் அருகம்புல் ஜூஸ் கொண்டு வந்த பெண்மணி, இன்று மாருதி வானில் பல வேறு பாத்திரங்களில் கலர் கலரான திரவங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்! அவர் எங்கு புல் வளர்க்கிறார்? எப்போது புல் பறிக்கிறார்?? எப்போது அரைக்கிறார்?? நல்ல தண்ணீர்தானா?? என்றெல்லாம் கேள்விக் கணைகள் மனதில் தோன்றினாலும் மக்கள் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று தீவிரமாக நம்புவதால் மேற்கொண்டு ஆய்வதில்லை!
தினமும் நடந்து பழகி விட்டால் பின் ஒரு நாள் வாக்கிங் போகாவிட்டால் கூட ஒரு வெறுமை தோன்றும்!with love and affection,
ரங்கன்.
பேசிக் கொண்டே நடந்தாலும், நடந்து கொண்டே பேசினாலும் பேச்சு ..பேச்சு.. உலகத்தை கவனிக்கும் அனுபவம்... நல்ல Observation
பதிலளிநீக்குஎன் வாக்கிங் அனுபவம் சற்றே மாறுபட்டது. எங்கள் குழுவில் மூன்று பேர். நான்தான் அறிவிக்கப் படாத தலைவர். காரணம் அவர்கள் இருவரும் என் இலாகாவில் எனக்கு அடுத்தடுத்த பதவிகள் வகித்தவர்கள். எனவே என் மேல் மிகுந்த மரியாதையை. நான் அவர்களுக்கு ஒரு வாத்தியார் பாணியில் அறிவுரையும் ஆலோசனையும் சொல்லிக் கொண்டு நடப்பேன்.
பதிலளிநீக்குஒருவர் ஐயோ இந்த சமுதாயம் இப்படி இருக்கிறதே என்று ஓயாமல் கவலைப் படுவார். நாமும் அந்த சமுதாயத்தின் ஒரு துளி தானே என்று அவர் எண்ணுவதில்லை. ஒரு விவாதம் என்று வந்துவிட்டால் தன கட்சிதான் சரி என்பதற்கு ஆவேசமாக காரணங்களை அள்ளி வீசுவார்.
அடுத்தவர் பரம சாது. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஊர் பூரா உபகாரம் செய்து வாராக்கடன்கள் பல கொடுத்தவர். அவர் என்ன சொன்னாலும் சரி சரி என்று ஆமோதித்துக் கொண்டே வருவார்.
நாங்கள் நடை பழகும் நங்கநல்லூர் பகுதியில் நாங்கள் நடக்கும் காலை ஆறு முதல் ஏழு மணிக்கிடையிலான நேரத்தில் வீடு வாசல் பெருக்குவது கோலமிடுவது போன்ற விஷயங்கள் எதுவும் நடைபெறாது. எதிரில் நடப்பவர் ஏராளம். எங்களில் ஒருவருக்கு ஊரெல்லாம் தெரிந்தவர்கள் அதிகம். எனவே அவ்வப் போது முனிசிபல் குப்பை வண்டி மாதிரி நின்று பேசிச்செல்வோம்.
அவ்வப்போது நங்கநல்லூர் பழமுதிர்சோலையில் காய் கனிகள் வாங்கிக் கொண்டு திரும்புவோம். பாரம் அதிகமாக இருந்தால் பேருந்தில் திரும்புவதும் உண்டு. தினசரி சுமார் நாலு கி.மீ. நடப்பது வாடிக்கை. இடையிடையே சில நாட்கள் பிரேக் விட வேண்டியும் வந்து விடும்.
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே.
நான் நடை பயிலுவது பக்கத்தில் இருக்கும் பூங்கா. காலை ஏழுக்கு மேல் எட்டுக்குள் - அது எந்த லக்னமாக இருந்தாலும்! நடை பாதையில் உள்ள டைல்ஸ் கணக்கு வைத்துப் பார்க்கையில் - ஒரு டைல் இருபது செ.மீ - left - right - left - right கணக்கில் இரண்டு ரைட்டுக்கு நடுவே உள்ள சராசரி தூரம் - ஆறரை டைல்ஸ் - எனவே 130 செ.மீ - ஒரு சுற்றுக்கு 160 pair steps - so - 5 rounds = 1 km. நான் ஒன்பது ரவுண்டு வருவேன். வீட்டிலிருந்த சென்று வந்த தூரத்தையும் கணக்கில் கொண்டு வந்தால் மொத்தம் இரண்டு கிலோ மீட்டர்! பார்க்கில் நான் பார்க்கும் கேரக்டர்கள் பற்றி தனிப் பதிவு ஒன்று போடலாம் (அவர்கள் யாரும் எங்கள் Blog படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்!)
பதிலளிநீக்குநான் நடை பயிலும் இடத்தில் மனைவி பிள்ளைகள்தான் எதிரே வருவார்கள்....ஹி....ஹி...வீட்டுக் குள்ளயேதான் நடை எல்லாம்...
பதிலளிநீக்கு