சனி, 12 செப்டம்பர், 2009

நாசமாகப் போக நாலு வழிகள்...

தனி வாழ்வில் எப்படியோ, போது வாழ்வில் களையிழந்து போக நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் முன்பாகவே சென்று கையைச் சுட்டுக் கொண்டவர்கள் எவ்வளவு பேர் இருப்பினும் அந்த வழிகளுக்கு என்று ஒரு கவர்ச்சி உண்டு. எனவே சிலந்தி வலையில் சென்று விழும் பூச்சி போல மீண்டும் மீண்டும் சென்று விழுவோர் அநேகம்.
முதலாவதாக தனிக் கட்சி ஆரம்பித்தல். வேடிக்கை பார்க்க கூடும் கூட்டத்தை நம்பி இவ்வளவு பேரும் அவர் மனைவி மக்களும் எனக்கே எனக்குத்தான் வோட் போடுவார்கள் என்று தப்புக் கணக்கு போடுவது தலைகளுக்கு இயல்பு. கூடிய கூட்டம் பிரியாணி சுற்றுலா கொண்டுவந்த கூட்டம் என்பதைப் பார்க்க மறந்து கருப்பும் வெளுப்புமே சேர்த்த காசை வாரியிறைத்து காணமல் போவது செல்வாக்கு மிக்கவராக தம்மை எண்ணிக் கொள்பவரின் பலவீனம்.
அடுத்தது சொந்தப் படம் எடுத்து பாழாய்ப் போவது. இது பற்றி சொல்லித் தெரிய என்ன இருக்கிறது. அவ்வப்போது புத்திசாலித்தனம் அல்லது பகுதி பகுதியான சாமர்த்தியம் என்று ஒன்று திரை உலகில் எப்போதும் உண்டு. அதிர்ஷ்ட வசமாக ஒரு ஹிட் கொடுத்த அரை வேக்காடுகள் இந்த வலையில் விழுந்து மாயமாவது எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் கவரும் வலை.
நண்பர்களை நம்பிக் கெடுவது மூன்றாவது. அவரை நம்பி முதலீடு செய்தேன் என்று தலையில் கைவைத்து அழுபவர் எத்தனை பேர்!
மண், பெண், பொன் என்று வரும் சமயம் சிறந்த யோக்கியனும் மோசமான அயோக்கியனாக மாற சந்தர்ப்பங்கள் அதிகம்.
ஆன்மீக குரு என்று கூறிக்கொள்ளும் சித்து வேலை சாமியார்களை நம்பி அசலாக நாசமாகப் போவது அடுத்த ரகம். இதில் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் வெளியில் சொல்ல முடியாத வெட்கக் கேடுகள் உண்டு. ஆடம்பரமும் ஆன்மீகமும் இணைவதில்லை என்ற உண்மை புரியாதவரை, வெள்ளி தங்க சிம்மாசனங்களும் ஸ்படிக உத்திராக்ஷ மாலைகளும் மலை மலையாக பூக்குவியல் தீபச்சுடர்களும் மனதை மயக்கி பொருளை இழக்க வைக்கின்றன. புதையல், ஆண் வாரிசு என்று சாமியார்கள் உதவியுடன் தேடப் புகுந்து புதைந்து போவது பலரின் இயல்பு.
வரவுக்குள் செலவு, வார்த்தையில் சிக்கனம், பிறர்க்கின்னா செய்யாமை முடிந்தவரை பரோபகாரம் இன்சொல் என்று நிம்மதியான மகிழ்ச்சி தரும் வாழ்க்கைக்கான சட்ட திட்டங்கள் மிக எளிமையானவை. இயற்கையையும் இசையையும் இலக்கியத்தையும் ரசித்தலுக்கு மேலாக வாழ்வில் சுவாரசியம் வேண்டுமா என்ன?

6 கருத்துகள்:

  1. "அங்கு" மூன்றுண்டு...."இங்கு" நான்குண்டா?

    பதிலளிநீக்கு
  2. மண், பெண், பொன் என்று வரும் சமயம் சிறந்த யோக்கியனும் மோசமான அயோக்கியனாக மாற சந்தர்ப்பங்கள் அதிகம்//
    சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியரே..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் அனுபவம் போலிருக்கிறதே உண்மையா.

    பதிலளிநீக்கு
  4. படம் எடுக்கும் துர்பாக்கியம் எனக்கு இன்னும் வரவில்லை. அதே போல என் அபிமான சாமியார் காணிக்கைகளை நாடாதவர்! என் நண்பர்களும் நல்லவர்கள் தான். கண்ணால் கண்ட மெய்களை கம்ப்யூட்டரில் சொல்லக் கூடாதா என்ன!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அனுபவம் போலிருக்கிறதே உண்மையா//

    அனுபவங்கள் எல்லோருக்கும் பொதுதானே நண்பரே...!

    பதிலளிநீக்கு
  6. அங்கு மூன்று உண்டு, இங்கு நான் குண்டு என்பது சரியான வெடி குண்டு.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!