எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறியதிலிருந்தே வழக்கம் போல கச கச என்று நெரிந்த கூட்டம் லேசான கடுப்பையும் எச்சரிக்கை உணர்வையும் தந்தது. சாதாரணமாக பத்தரை மணிக்கு மேல் கூட்டம் இருக்காது என்று பெயர். பதினொன்றரை மணிக்கு இந்தக் கூட்டம் அதிருப்தியைத் தந்தது.
என்ன செய்ய எங்களைப் போலவே எல்லோருக்கும் ஏதோ வேலை...!
மனைவி உள்ளே சென்று உட்கார்ந்திருந்தவர்கள் பக்கத்தில் ஓரமாக நின்று கொள்ள, பிக் ஷாப்பரை காலிடுக்கில் வைத்துக் கொண்டேன். பையில் பணம் பத்திரமாக இருக்கிறதா என்று செக் செய்து, இடுப்பில் செல் இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டேன். கூட்டம் இருந்தாலே தானாக அவ்வப்போது நிகழும் அனிச்சைச் செயல்கள்.
"திருட்டு முழி முழிச்சிகிட்டு பைய பைய தொட்டு பார்த்துக்காதீங்கோ...அப்போதான் பிளேடு போடறவனுக்கு உங்க மேல சந்தேகமே வரும்...." மனைவியின் குரல் மனதில் ஒலித்தது.
"ஆமாம்...என் பையில் ஆயிர ஆயிரமா பணம் வச்சிருக்கேன்...என்னைத்தான் தேடுவான் பாரு..."
"அதைத்தான் நானும் சொல்றேன்...ஒண்ணும் இல்லாத பைன்னு தெரிஞ்சு பிளேடால பையை இன்னும் ரெண்டு கீறு கீறிட்டுப் போவான்...மார்புல விழுப்புண்ணோட வரலாம்...!
நான் செக் செய்வதை யாராவது கவனிக்கிறார்களா என்று என்னை அறியாமல் பார்த்துக் கொண்டேன்!
இருவர் என்னை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பட்டது. ஓரக் கண்ணால் சட்டைப் பையைப் பார்த்துக் கொண்டேன். பணம் உள்ளே கொத்தாக இருந்தது. இப்போதெல்லாம் தவறாமல் எடுத்துச் செல்லும் கைக்கு அடக்கமான கோடக் கேமிரா இருந்தது. பேனா சற்றே வெளியில் தெரியும் படி எனக்கும் என் மனைவிக்குமான டிக்கெட் உள்ளே தளளி விட்டுக் கொண்டேன்.
சாதாரணமாக டிக்கெட்டைக் கையிலேயே வைத்திருப்பது வழக்கம். பைக்குள் வைத்து விட்டால் செக்கிங் வந்தால் அவசரத்தில் எடுக்கும்போது பணமோ வேறு ஏதாவது முக்கிய பேப்பரோ வெளியில் வந்து விழுந்து விடும் என்ற பயம். பஸ்ஸில் போனாலும் பத்திரமாக டிக்கெட்டைக் கையில் வைத்திருந்து விட்டு பஸ்ஸை விட்டு இறங்கி வெகு தூரம் வந்த பிறகு கவனமாக தூக்கிப் போடுவேன். ஒரு முறை பழைய பிட் பேப்பரை தூக்கிப் போடுவதை நினைத்து டிக்கெட்டைத் தூக்கி வெளியில் போட்டு விட்டு பட்ட அவஸ்தை ஞாபகத்துக்கு வரும்.
அடுத்த ஸ்டேஷனில் இன்னும் கூட்டம் ஏறியது, நெருக்கியது. இறங்குபவர்களுக்கு வழி விட்டு, பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் வழியை மறைக்காமல் இருக்கையின் ஓரத்தில் சாய்ந்தவாறு நின்று இடத்தை பாதுகாத்துக் கொண்டேன். காலுடனேயே பிக் ஷாப்பரை அழுத்தி இடுக்கிக் கொண்டேன். அருகில் இருந்தவர் முறைத்தார்.
"அதை எடுத்து மேலே வைப்பா....நிற்கவே இடமில்லை..!"
நான் லட்சியம் செய்யவில்லை. தூரத்தில் அமர்ந்திருந்த (ஓரத்தில் ஒட்டி உட்கார இருக்கை கிடைத்துவிட்ட) மனைவியைப் பார்த்தேன். அவளிடம் இரண்டு காய்கறிப் பைகள் இருந்தன. அவசரமாக 'அந்த' இருவரைத் தேடினேன். இறங்கியிருப்பார்களோ...? எதிரில் ஒருவனும் அருகில் ஒருவனும் நின்றிருந்தார்கள்.
மறுபடி என்னை அறியாமல் செல் பெளச்சையும் பாண்ட் பாக்கெட்டையும் தொட்டுக் கொண்டு 'பிக் ஷாப்ப'ரை நோட்டமிட்டுக் கொண்டேன். உள்ளுணர்வு இன்று பிளேடு நிச்சயம் என்றது.
பிக் ஷாப்பரில் அசைவு தெரிந்தது. சட்டென பார்த்தேன். கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், பிக் ஷாப்பரின் வாயை சரியாக மூடி நிமிர்த்தி வைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். சந்தேகத்துடன் பார்த்தேன்.
"ஒரு கயிறு இருந்தா கட்டிடு நைனா.. விழாது... "
கயிறுக்கு எங்கே போக...லேசாய்ப் புன்னகைத்து விட்டு திரும்பிக் கொண்டேன். கூட்டம் நெரிய,
'ம்ஹூம்..ஆட்டோவில் போயிருக்கலாம்...'
அடுத்தடுத்த ஸ்டேஷன்களிலும் கூட்டம் ஏறியது. இறங்கியதோ கொஞ்சம்தான். இன்னும் மூன்று ஸ்டேஷன்கள் இருக்கின்றன, நாங்கள் இறங்க...
ஒரு வழியாய் அடுத்த ஸ்டேஷனும் தாண்ட இவர்கள் இருவரும் என்னை நெருங்கி நின்ற படி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னை இடித்துக் கொண்டு தாண்டிச் சென்று ஒருவன் இறங்கினான். செல் பௌச்சை இறுகப் பற்றியபடி பிக் ஷாப்பரையும் கையால் பற்றிக் கொண்டேன். கவனம் சட்டைப் பையில் இருந்தது. ட்ரெயின் கிளம்பியது. இருவரும் சேர்ந்து டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கொடுப்பது தெரிந்தது. ஒருவன் டிரைன் கடக்கும் போது, என்னைப் புன்னகையுடன் பார்த்து, சலாம் வைத்தான். சந்தேகத்துடன் சட்டைப் பையைப் பார்த்தேன். பணம் இருந்தது. கேமிரா இருந்தது... பேனா இருந்தது.... ஆனால் ...
டிக்கெட்டைக் காணோம்...
பெட்டியில் டிடிஇ வருகிறாரா என்று நோட்டமிட ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டேஷனில் இறங்கும்போது படிக் கட்டுக்கருகில் அல்லது நடைமேடையில் டிக்கெட் பரிசோதகரை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தேன்.
Voted 2 to 3 in INDLI
பதிலளிநீக்குஅருமை, வெகு அருமை. மிகவும் யதார்த்தமான கதை.
எல்லோருக்கும் அன்றாடம் நேருவது தான்.
எனக்கு இதுபோல நிறைய குழப்பங்களும், பயமும் அடிக்கடி ஏற்படும்.
மிகவும் முன்னெச்சரிக்கையாகத்தான் இருப்பேன்.
இப்பொதெல்லாம் எங்கு போனாலும் ஆட்டோ அல்லது கால் டாக்ஸி மட்டுமே.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கதை முடிஞ்சிருச்சா? பிக் ஷாபர் பத்தி அத்தனை செடப் செஞ்சு அம்போனு விட்டுட்டீங்களே?
பதிலளிநீக்குஎதிர்பாராத முடிவு ரகிக்கும்படி இருந்தது.
ப்லேடு நம்ம ஊர் சரக்கு போலத் தெரியலியே?
('வித் அவுட்'டில் போன நாட்கள்.. ம்ம்ம்.)
முடிவை லேசாக யூகித்தேன்.
பதிலளிநீக்குSriraam. the story line is typical of a regular passenger.
பதிலளிநீக்குvery neatly done with an unexpected twist.
Reminds me of my old uncle who lost his pension money long back in the same Thambaram beach train.
உண்மையா இது புனைவு இல்லை இல்லை இல்லை.5 பேர்ல யார் மாட்டிக்கிடு முழுசினீங்க !
பதிலளிநீக்குஎதிர்பாராத திருப்பம்:)! கவனமாக இருக்கச் சொல்லும் கூர்மையான ப்ளேடு!
பதிலளிநீக்குவக்கணையாக அவசரப்படாமல் நிதானமாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது.. ப்ளேடு என்று தலைப்பு வைத்த சூட்சுமம் நன்றாக வேலை செய்து விட்டது. அந்த தலைப்பு வைத்த சாமர்த்தியம், எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை வெட்ட வெளிச்சமாக்க, 'எந்த நிமிடமும் நடக்கலாம்; அது எப்போ நடக்கும்' என்கிற எதிர்பார்ப்பு தான் எஞ்சி நின்று விறுவிறுவென்று கதையை இழுத்துச் செல்கிறது.
பதிலளிநீக்குமுழுசும் படிக்கப் பொறுமை இல்லாமல், கடைசி பாராவிற்குத் தாவியவர்கள், கதையை நகர்த்திய ஜோரை மிஸ் பண்ணியிருப்பார்கள் என்பது நிச்சயம். கை தேர்ந்த 'நடை' தன் பங்களிப்பை வஞ்சனையில்லாமல் செய்ய, ஆர அமர ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்து, கட்டக் கடைசியில் 'டிக்கெட்டைப் பறிகொடுத்ததில் படக்கென்று முடித்த பொழுது, எதிர்பார்க்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். மனைவியிடம் பெரிய தொகை இருப்பதாகவும், அதை திசைதிருப்பவே இந்தப் போக்குக் காட்டல் என்று யூகித்து ஏமாந்தேன்.
வெல், ஸ்ரீ! ரா.கி.ரா. படித்தால் மனமார பாராட்டுவார் என்பது சர்வ நிச்சயம்.
நன்றி ஜீவி சார்....தங்கள் பாராட்டு கூச்சத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது. அன்பின் மிகுதியில் அதிகமாகவே பாராட்டி விட்டீர்களோ என்று தோன்றுகிறது. நன்றி.
பதிலளிநீக்குஆஹா...இங்கயும் ட்ரெயின்'ஆ? ஹா ஹா ஹா... சூப்பர் திருட்டு தான்... :))
பதிலளிநீக்குnalla nadai.. vaalththukkal
பதிலளிநீக்குமுதல் வருகை
பதிலளிநீக்குஎதார்த்த நடையில் , நடப்புகளை சொல்லிய விதம் அருமை
அதிலும் அந்த டிக்கெட் திருட்டு யாரும் எதிர் பாராதது
நல்ல அனுபவப் பதிவு
அமர்க்களம்
இன்ட்லியில் பாதி மூன்று யாரு ??நான்தான்
கலக்கல்! சின்ன சின்ன விஷயங்களை கூட விடாமல் எழுதி இருக்கிறீர்கள் . மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பயண சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற பயம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. அதனால் நான் எப்பவுமே என்னுடைய கைகடிகார ஸ்ட்ராப்பில் சொருகி வைத்து கொள்வேன். இன்று வரை ஒரு முறை கூட கோட்டை விட்டதில்லை. ஆனால் பர்சை ஒரே ஒரு முறை கோட்டை விட்டுவிட்டு, பாண்டி பஜாரில் இருந்து எங்கள் வீட்டுக்கு நடந்தே சென்றிருக்கிறேன். வழியெல்லாம் என்னிடம் இருந்து பர்சை திருடிய அந்த அவனோ, அவளோ என்னை என்னவெல்லாம் திட்டி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே சென்றேன். ஏனென்றால் அன்றைக்கு என் பர்சில் இருந்தது வெறும் ஒரு ருபாய், ஐம்பது காசுதான். :)
பதிலளிநீக்குஅடக் கடவுளே. இப்படி கோட்டை விட்டுட்டீங்களே. ( ஓடுற ட்ரைன்ல இருந்து குதிக்கலியே ? )
பதிலளிநீக்கு