அத்தியாயம் 06 "என்னுடைய கார் : 'கா' !"
தினசரிச் செய்தியைப் படித்ததும், 'கா' விற்குப் போன உயிர் திரும்ப வந்தது. சென்ற ஞாயிறு பேப்பரில் தான் கொடுத்திருந்த விளம்பரமும் அதற்குப் பின் நடந்தவைகளும் அவருக்குப் பல வகைகளில் ஆச்சரியத்தையும், திகைப்பையும் பயத்தையும் மாறி மாறி ஐந்தாறு நாட்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஆச்சரியம்: ஐம்பதாயிரம் கூடப் பெறாது - அப்பாவோட ஓட்டைக் கார் என்று ஐதராபாதில் இருக்கும் மகனும் மனைவியும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கேலி செய்துகொண்டு இருந்த சமயத்தில், தன்னுடைய காரை யாரும் எதிர்பார்க்காத அளவு அதிக விலைக்கு வாங்குவதற்கு ஆட்கள் இருக்கின்றார்களே என்ற ஆச்சரியம்.
திகைப்பு: காரை வாங்கி சென்ற இருவர், காரை வாங்கிக் கொண்டார்களா - அல்லது எந்த நேரமும் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து - வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ? என்ற திகைப்பு.
பயம்:
# காரை ஓட்டிச் சென்றவர்கள், வழியிலோ அல்லது ஷூட்டிங்கிலோ அதை சேதப்படுத்தி, அதை ஒரு தகர டப்பாவாக ஆக்கித் திரும்பக் கொண்டு வந்து தள்ளிவிட்டு, கொடுத்த் பணத்தைத் திரும்பக் கேட்பார்களோ?
# காரை ஓட்டிச் சென்றவர்கள் இன்னும் காரின் ஒரிஜினல் பத்திரங்களைப் பெற்றுச் செல்லவில்லை. ஏதேனும் கடத்தல் / கொலை / கொள்ளையில் காரைப் பயன்படுத்தி - அவர்கள் தப்பித்து, காரின் தற்போதைய சொந்தக்காரராகிய தம்மை மாட்டிவிட்டுவிடுவார்களோ?
# வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்துச் சிதறிய கார் தன்னுடையதுதானோ? ஒருவர் கார் தீப்பற்றி எரிந்ததில் இறந்துபோனார் என்று பேப்பரில் படித்தோமே, இன்னொருவர் எங்கே?
இந்தக் கடைசி விஷயம்தான் அவருக்கு ரொம்பவும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஞாயிற்றுக் கிழமை காலை, பேப்பரில் வெளியாகியிருந்த திகில் கார், மற்றும் கார் மர்மம் பற்றிய செய்தி, படம் ஆகியவை அவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. அது நிச்சயம் தன்னுடைய கார்தான் என்று அவர் நினைத்தார். தன்னுடைய கார் வேறு எந்த வில்லங்கமான விஷயத்திலும் மாட்டிவிடவில்லை என்ற எண்ணம் அவருக்குத் தெம்பை அளித்தது.
'கா' உடனே கிளம்பி, ஓர் ஆட்டோ பிடித்து, பேப்பரில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றார். காரைச் சுற்றி சிறு கூட்டம். சிலர் காரின் பின் ஜன்னல் வழியாக உள்ளே இருந்தவைகளை பார்த்துச் சென்றனர். சந்தேகமே இல்லை; இது தன்னுடைய கார்தான்! நம்பர் ப்ளேட் மட்டும் காணவில்லை. அந்த இரண்டு திருட்டு தடியர்கள் தன்னுடைய காரை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பிறகு எங்கேயாவது ஓடியிருக்கவேண்டும் என்று எண்ணமிட்டவாறு, வேறொரு ஆட்டோ பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார் 'கா'.
*** *** *** *** ***
போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரங்கனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போயிற்று. காலை மணி ஒன்பதரை ஆன பொழுது, ஒருவர் உள்ளே நுழைந்து, நகரின் பிரதான வீதியில் நிறுத்தப் பட்டிருப்பது, தன்னுடைய கார்தான் என்றவுடன் சோபனாவை மனதிற்குள் பாராட்டினார். தன்னுடைய லாப் டாப்பில் வீடியோ சாட் ஆன் செய்து, வெப் காமில் வந்தவரின் முழு உருவமும் பதியும்படி அமைத்தார். லாப் டாப்பின் ஸ்க்ரீன் மட்டும், வந்து பேசுபவரின் பார்வையில் படாதவாறு திருப்பி வைத்துக்கொண்டார்.
"வாங்க மிஸ்டர் .......?"
"கார்த்திக். சார் - என் பெயர் கார்த்திக். கடை வீதியில் நிறுத்தப் பட்டிருக்கும் கார் என்னுடையதுதான். அதன் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என்னிடம் உள்ளது. அதை, சென்ற ஞாயிறு அன்று இருவர் என்னிடமிருந்து வாங்கிச் சென்றனர். பிறகு அந்தக் காரை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். கடவுளுக்கு நன்றி - என்னைப் பிடித்த குழப்பங்கள் எல்லாம் விலகிவிட்டன!"
"உட்காருங்க மிஸ்டர் கார்த்திக். ரிலாக்ஸ். உங்கள் காரை எப்படி விற்றீர்கள்? வாங்கியவர்கள் யார்? எப்படி இருந்தார்கள், என்றைக்கு, எப்படி காரை உங்களிடமிருந்து வாங்கி சென்றார்கள்? டாக்குமெண்ட்ஸ் ஏன் இன்னும் உங்களிடம் இருக்கின்றன? எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள். முதலில் உங்கள் விலாசம் சொல்லுங்கள்?"
சோபனா தன்னுடைய மைக்கை மியூட் செய்து வைத்திருந்தார். ஸ்பீக்கர் மட்டும் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கின்ற பேச்சுக்களை இங்கே ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. காதில் கேட்கின்ற முக்கிய விவரங்களை ஒலிப்பதிவு செய்துகொண்டும், ஆங்காங்கே சில நோட்ஸ் எழுதிக் கொள்வதுமாக பிசியாக இருந்தார் அவர்.
கார்த்திக் தன விலாசம் சொன்னார்.
பார்த்துக் கொண்டிருந்த + கேட்டுக் கொண்டிருந்த சோபனா உடனடியாக எலெக்டிரானிக் சாமியாரை - அந்த விலாசத்திற்குப் போய்ப் பார்க்கும்படியும், அந்த விலாசத்திற்கு வருகின்ற எல்லோரையும் எ சா வினுடைய செல் காமிராவில் ஃபோட்டோ எடுத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளும்படி கூறி அனுப்பினார்.
சோணகிரியிடம் தன கைப்பையில் இருந்த கார் சாவியைக் கொடுத்து - உடனே ஒரு ஆட்டோ பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ஒரு போலீஸ்காரரையும் அழைத்துக் கொண்டு போய், நிறுத்தப்பட்டிருக்கும் காரை எடுத்துக் கொண்டு போய் அதை மாருதி வொர்க் ஷாப்பில் திருப்பிக் கொடுத்து, ரமேஷுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்துவிடவும் என்றும் சொன்னார்.
'காரை ரமேஷின் வொர்க் ஷாப்பில் திருப்பிக் கொடுக்க, ஒரு போலீஸ்காரரை சோணகிரியுடன் தயவு செய்து அனுப்பிவைக்கவும்' என்று ஸ்க்ரீனில் டைப் செய்தார். படித்த ரங்கன் சரி என்று தலை ஆட்டினார்.
சோணகிரி, "போலீஸ்காரர் எதுக்கு பாஸ்? - எனக்கு ஒன்றும் பயமில்லை. யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது." என்றார்.
சோபனா, "சோணகிரி - நீங்க நான் சொன்னதை மட்டும் செய்யுங்க. தான்தோன்றித் தனமா எதையாவது செஞ்சி வெக்காதீங்க. இன்னொருவாட்டி ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா சீட்டைக் கிழிச்சுடுவேன்!"
சோணகிரி பின் பக்கமாகத் திரும்பி "வெவ்வேவ்வேவ்வேவ்வே" என்றார்.
சோபனா, "சார் அந்தப் பக்கமும் ஒரு வெப் காம் இருக்கு. அழகுக் காட்டினது போதும் - போய் வேலையைப் பாருங்க" என்றார், குரலை உயர்த்தி.
சோணகிரி, ' ஆமாம் இந்த ஓட்ட அதிகாரத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை' என்று முணுமுணுத்தார்.
"என்ன சொல்றீங்க?"
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னேன் பாஸ்!"
"உம் - அந்த பயம் இருக்கட்டும்!"
"அழகாய் இருக்கிறாய் - பயமாய் இருக்கிறது" என்று கூறிய சோணகிரி, "பாஸ் போலீஸ்காரர் எதுக்கு என்பதை மட்டும் சொல்லிடுங்க பாஸ் ... ப்ளீஸ் ..." என்றார்.
சோபனா புன்னகையுடன், "அப்படிக் கேளுங்க. நம்ப நிறுத்திவிட்டு வந்த காரை, திரும்பக் கொண்டுபோய் கொடுப்பது என்பது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு சுலபம் இல்லை. இப்பொழுது தினசரிகளில் இடம் பெற்றுவிட்ட அந்தக் காரைச் சுற்றிலும் பெரும் கூட்டம் இருக்கும். யாராவது முன் பின் தெரியாத ஆசாமி போய் காரை எடுக்கின்றேன் என்று சொன்னால், மக்கள் எல்லோரும் போலீசாக மாறி, கேள்வி மேல கேள்வி கேட்டு, திட்டி, முடிந்தால் தட்டினாலும் தட்டிவிடுவார்கள். போலீஸ் உடன் வந்து, இவர் காரை எடுப்பது எங்கள் அனுமதியோடுதான் என்பது போல முக பாவனை காட்டினாலே பெரும்பாலானவர்கள் சமாதானமாகி சென்றுவிடுவார்கள். போதுமா?" என்று கேட்டார்.
"ஓ இதுதானா மேட்டர்!" என்று வியந்தவாறே புறப்பட்டார் சோணகிரி.
******************
கார்த்திக் நாம் ஏற்கெனவே 'எப்படியாவது தப்பிக்கவேண்டும்' முதல் பகுதியில் படித்திருந்த விவரங்களை ரங்கனிடம் விவரமாகக் கூறினார். கேட்டுக் கொண்டிருந்த சோபனா, 'வந்திருந்த இருவர் உருவ அமைப்பு?' என்று டைப் செய்து கேட்டார்.
ரங்கன், "கார்த்திக் அவர்கள் இருவரும் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்கள் என்று விவரியுங்கள்?" என்று கேட்டார்.
கார்த்திக், "நாகரீக உடை அணிந்தவர் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். நீலக கலர் பாண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பெயர் செல்வப் பெருமாள் என்றார். உடன் வந்தவர், அவருடைய உதவியாளர் போலக் காணப்பட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பெயர் கணேசன் என்று சொன்னார்."
"உடல் அமைப்பு?"
"இருவருமே குண்டாகத்தான் இருந்தனர்."
இந்த விவரம் ரங்கன், சோபனா இருவரையுமே சற்று சிந்திக்க வைத்தது. தீனதயாள் எப்படி இருந்தார் என்ற கேள்விக்கு பொன்னுசாமி, இறந்துபோன தீனதயாள் - ஒல்லியாக, சோளக்கொல்லை பொம்மை போல இருந்தார் என்றும், அதனால்தான் அவரால் சுலபமாக காருக்கு அடியில் சென்று ரிப்பேர் செய்யமுடிந்தது என்று தான் நினைத்ததையும் கூறியிருந்தார்.
"அவர்களை மீண்டும் பார்த்தால், உங்களால் அடையாளம் காட்டமுடியுமா?"
"முடியும்"
"அவர்கள் இருவரும் கொடுத்திருந்த அலைபேசி எண்களில் பிறகு அவர்களைத் தொடர்பு கொண்டீர்களா?"
"புதன் கிழமை தொடர்பு கொண்டேன். இருவருமே என்னை யார் என்றே தெரியாது என்றும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் கார் ஒன்றையும் வாங்கவில்லை என்றும் கூறுகிறார்கள்!"
"அந்த நம்பர்களை எனக்குக் கொடுங்கள்."
கார்த்திக் தன அலைபேசியின் நினைவகத்திலிருந்து அவைகளைப் பார்த்துச் சொல்ல, அந்த எண்களை எழுதிக்கொண்டனர் ரங்கனும் சோபனாவும்.
"சென்ற ஞாயிற்றுக் கிழமை, உங்கள் காரை வாங்குவதற்காக உங்களைத் தொடர்புகொண்டவர்களின் தொலைபேசி / அலைபேசி எண்கள் உங்களிடம் உள்ளனவா?"
"இருக்கிறது. இதோ இந்த அலைபேசியிலேயே PCB 1, PCB 2 என்று ஏழெட்டு எண்களை சேமித்து வைத்துள்ளேன். அவைகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன்." அவர் சொல்லச் சொல்ல, ரங்கனும் சோபனாவும் எல்லாவற்றையும் எழுதிக்கொண்டனர்.
" PCB என்றால் என்ன?"
"Prospective Car Buyer"
'அவரை அவர் வீட்டுக்கு சென்று சில கேள்விகள் கேட்க அனுமதி வேண்டும். அவரிடம் கார் பற்றிய உண்மைகளைக் கூறிவிடலாம்' என்று டைப் செய்தார் சோபனா.
ரங்கன் கார்த்திக்கிடம் கூறினார், "இன்றோ அல்லது நாளையோ உங்களை வீட்டில் வந்து என்னுடைய நண்பர்கள் இருவர் பார்த்துப் பேசுவார்கள். வீட்டையும் கார் இருந்த இடத்தையும், மற்ற விவரங்களையும் காட்டி அவர்களுக்கு உதவுங்கள். கார்த்திக் நீங்க யாரோ விரித்த ஒரு பெரிய சதி வலையில், உங்களையறியாமல் மாட்டிவிட்டீர்கள். உங்களை இந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க எங்களால் முடிந்தவரை உங்களுக்கு உதவுகின்றோம். கடைவீதியில் நீங்கள் பார்த்தது, உங்களுடைய கார் இல்லை. உங்கள் காரைப் போன்றே ஒன்றை நாங்கள்தான் நிறுத்தியிருந்தோம். உங்கள் கார், வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது. வெரி சாரி டு சே திஸ்..."
கார்த்திக் திக்பிரமைப் பிடித்து, இன்ஸ்பெக்டரைப் பார்த்தபடியே மயக்கமடைந்தார்.
(தொடரும்)
ஒன்பதரை மணி accuracy மட்டும் புரியவில்லை.
பதிலளிநீக்கும் ம் தொடருங்கள் தொடருங்கள்
பதிலளிநீக்குஅப்பாதுரை சார் - அது எலெக்ட்ரானிக் சாமியாரின் Hunch - அதற்கு அவர் கூறும் காரணம் - போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று நமக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ளவேண்டும் என்றால், பெரும்பாலோர் காலை ஒன்பது மணி முதல் பத்துக்குள் தேர்ந்தெடுப்பார்கள் 'ஏன்' என்று கேட்டால் அதற்குப் பல காரணங்களை அடுக்குகிறார்.
பதிலளிநீக்குhunchஆ? க்ரிகெட் மேட்ச் மாடல் மாதிரி தானா? எதுக்கும் இந்த எசா கிட்ட ஒரு பத்தடி தள்ளியே இருக்கணும்னு தோணுது.
பதிலளிநீக்குWaiting for the next episode....
பதிலளிநீக்குகதை மிகவும் விறுவிறுப்பாக இருக்குது. ஆரம்பத்தில் ஒரு சில பத்திகள் நகைச்சுவையாக இருந்தன. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த பதிவைப் படித்ததும் எனக்கு வியர்த்து..வியர்த்துக் கொட்டியது..
பதிலளிநீக்குகாரணம்...
படிக்கும் போது நானும்,
நீலக் கலர் பேண்ட், வெள்ளைக் கலர் சட்டை அணிந்திருந்தேன்!
நன்றி வை கோ அவர்களே!
பதிலளிநீக்குஆ நி ஆர் ராமமூர்த்தி - சமீபத்துல ஒன்றும் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கவில்லைதானே? வாங்கினாலும் கார்த்திக் கிட்ட வாங்காதீங்க!
ஞாயிறு 100க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு