செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அலுவலக அனுபவங்கள் 07:: நகைப் படலம்

                 
சிலபல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு அனுபவம். இதே போன்ற அனுபவம் ஒன்றை சமீபத்தில் வேறெங்கோ படித்தபோதுதான் இந்த அனுபவம் நினைவுக்கு வந்தது. 

          
அன்று அந்த அலுவலகத்தில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கூடி எதையோ பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அலுவலகப் பெண் ஊழியர் ஒருவர் பன்னிரண்டு பவுனில் ஒரு நகை வாங்கியிருந்தார்.  கையில் ஏந்தி,  தன் மேனியில் வைத்து அழகு பார்த்து, என்று ஆளாளுக்கு அபிப்ராயம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 'ஸ்ரீராம் சிட்ஸ்'ஸில் சீட்டு போட்டு சேர்ந்த காசில் வாங்கியதாகக் கூறிக் கொண்டிருந்தார் அந்தப் பெண் ஊழியர்.
             
கடைசியாக என் கைக்கு,  பார்வைக்கு வந்தது. எனக்கு நகை பற்றி(யும்) ஒன்றும் தெரியாது. டிசைன், பிடி என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் சும்மா பார்த்து விட்டு "அருமையாயிருக்கு" என்று டெம்ப்ளேட் கமெண்ட்டுடன் திருப்பிக் கொடுத்தேன். 
           
ஒருமணி நேரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 
          
"நகையைக் காணோம்" 
              
எனக்கு பயம் வந்தது. கடைசியில் என் கைகளுக்குத்தான் வந்திருந்ததால்  அந்த ஊழியர் என்னை சந்தேகத்துடன் பார்ப்பது போல பிரமை. 
                   
முப்பது பேருக்கு மேல் வேலை பார்க்கும் இடம். எல்லா தரத்திலும் - மேல் நிலை முதல் கீழ் நிலை வரை - எல்லோரும் பணி புரியும் இடம். யாரைக் கேட்க... ? மத்திய உணவு யாருக்கும் உள்ளே செல்லவில்லை. என் பயம் எல்லோருக்குமே இருந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம். என்னைப் போலவே நிம்மதி தொலைத்தவர்களையும் பார்த்தேன். கவலை இல்லாமல் யாராவது சாப்பிடுகிறார்களா என்றும் பார்த்தேன். துப்பறிகிறேனாம் :))) 
               
அன்று மட்டுமில்லை, அடுத்த இரண்டு நாட்களுமே அலுவலகத்தின் மூடை சொல்ல முடியவில்லை. நான் வேறொரு இடத்தில் கேள்விப் பட்ட ஒரு விஷயத்தை செயல் படுத்தத் தீர்மானித்தேன். அந்தப் பெண் ஊழியரை அழைத்துப் பேசினேன். 
             
மெல்ல ஒவ்வொருவரிடமும் பேச்சைப் பரவ விட்டேன். 
                 
"அவங்க ஒரு மலையாள மாந்த்ரீகரைப் பார்த்திருக்காங்களாம்...ஏதோ வெற்றிலையில் மை தடவிப் பார்த்தாங்களாம்... இந்த வாரம் டைம் கொடுத்துடு என்று அவர் சொல்லியிருக்காராம். அப்புறமும் கிடைக்கவில்லை என்றால் 'விஷயத்தை' ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருக்காராம்"
               
மனிதனுக்கு ஆசை இருக்கும் அதே அளவு பய உணர்ச்சியும் இருக்கும் போலும். அல்லது தப்பு செய்தவன் அலட்சியமாக இருப்பதில்லை. கவனமாக சுற்றிலும் ஆராயந்துகொண்டே இருக்கிறான். இது எதிர்பார்க்கக் கூடியதுதான். இதைத்தான் உபயோகித்துக் கொண்டேன். 
                 
இந்த வசனங்கள் மெல்ல எல்லோரிடமும் பரவியது. சிலர் வரவேற்றார்கள். சிலர், "வேண்டாம் மேடம்... சில சமயம் அது ஏவுபவரையே திருப்பித் தாக்கும்னு சொல்லுவாங்க" என்று பயமுறுத்தினார்கள். அப்படிச் சொன்னவர்களை,சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் நிறுத்திக் கொண்டார்கள்.
              
இந்த பயமுறுத்தலிலேயே கிடைத்து விடும் என்று நம்பவில்லைதான்... கிடைத்துவிடும் என்ற நப்பாசை இருந்தது. ஆனால் நடக்கவில்லை. 
                 
அடுத்த கட்டமாக மூன்று நாட்கள் கழித்து அவர்கள் இடத்துக்கு அருகில் ஒரு முட்டையில் மஞ்சள், குங்குமம் என்று கைக்கு வந்ததை எல்லாம் தடவி யாரும் வருமுன்னரே போட்டு வைத்தோம். பார்த்தால் மறைவாய் இருப்பது போல, அதே சமயம் ஓரளவு கண்ணில் படுவது போல.... ஒருவர் பார்த்து விட்டாலும் போதும், எல்லோருக்கும் பரவி விடும் என்பதுதான் ஐடியா! அருகிலேயே வெற்றிலை முழுசாய், பாதியாய்க் கிள்ளி, வாழைப் பழம் முழுதாய் ஒன்று, இரண்டாய் வெட்டி அதிலும் ரத்தக் கலரில் குங்குமம் தடவி என்றெல்லாம் கண்ணில் படுமாறு வைத்தோம். இது எல்லாமே கற்பனைதான். எங்கும் செல்லவில்லை, யாரையும் கேட்கவில்லை!
                  
அதற்கு ஒருவாரம் டைம் வைத்திருப்பதாய்ச் செய்தியைப் பரப்பி விட்டோம். ஒருநாளைக்கு மூன்று தரம் தனிமைச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். யார் எடுத்திருந்தாலும் வைத்து விட்டுப் போய் விட்டால் தொல்லை இல்லை. யார் என்பதும் யாருக்கும் தெரியவும் தெரியாது. டைம் தாண்டி விட்டால் எடுத்தவர்களுக்கு என்னென்ன நேரும் என்பதை அவரவர்கள் கற்பனைக்கே விட்டோம். குறிப்பாக அவர்கள் குழந்தைகளைப் பாதிக்கும் என்றெல்லாம் பேசி பயத்தைக் கிளறினோம்! என்னுடைய யோசனைப் படி நகையைத் திருப்பி வைக்க வேண்டிய இடம் ஒரு ஜன்னலுக்கு அருகில் இருக்கும்படி வைக்கப் பட்டது. குறிப்பாக மூன்று பேரை சந்தேகப் பட்டோம். அவர்களுக்கு தனிமையில் அதைத் திருப்பி வைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகவே கவனமாக அளிக்கப் பட்டது. 
                
போலீசில் சொல்லியிருக்கலாமே என்று தோன்றலாம். அல்லது அன்றே எல்லோரையும் சோதனை செய்திருக்கலாமே என்றும் தோன்றலாம். வெளியாட்கள் வந்து போகும் இடம். கை மாறியிருந்தால் தெரியாது. சோதனையில் ஒன்றும் கிடைக்காமல் போனால் அலுவலகத்தில் அப்புறம் யார் முகத்தையும் பார்க்கவும் முடியாது என்றெல்லாம் பேசித்தான் இந்த ஏற்பாட்டுக்கு வந்திருந்தோம். 
              
பயம் வேலை செய்தது. இரண்டாவது நாளில் பொருள் வைக்கச் சொன்ன இடத்தில் இருந்தது! ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோருமே சம அளவில் ஆச்சர்யப் பட்டார்கள். எடுத்தது யார் என்பதைப் பற்றி ஓரளவு எங்களுக்கு ஐடியா இருந்தாலும் அதைக் கண்டு பிடிப்பதற்கு நாங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. பொருள் திரும்பக் கிடைத்த சந்தோஷமே பெரியதாக இருந்தது. 
              
பல வருடங்களுக்கு முன் இந்த டெக்னிக் செல்லுபடியானது!   

                

19 கருத்துகள்:

  1. என்னமா யோசித்து... பயமுறுத்தி... எப்படியோ நகை கிடைத்து விட்டது...

    இந்தக் காலத்தில்... No Chance...!?

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஐடியா! ஆனா இந்த காலத்துல மக்கள் மனரீதியா ரொம்ப ஸ்ட்ராங் ஆயிட்டாங்க!

    பதிலளிநீக்கு
  3. 12 பவுன் நகையை ஆஃபீஸுக்குக் கொண்டுவந்து பெருமையடிக்கத் தேவைதானா!! என்ன மக்களோ!!

    இப்பவெல்லாம் அரைபவுனுக்கே கொலைகூட செய்யத் தயங்குறதில்லை...

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஐடியாதான்.இந்தக்காலத்திலும் மக்கள் மனத்தில் இந்த விஷயங்களில் பயம் இருக்கவே செய்றது.

    பதிலளிநீக்கு
  5. ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா, காலம் இருக்கற இருப்புல 12 பவுன் நகையெல்லாம் வெளியே கொண்டாந்து காமிக்கணுமா என்ன?..

    பதிலளிநீக்கு
  6. செல்போன் திருட்டு போயி அதை ஒரு மாதிரி மிரட்டி திரும்ப அதே இடத்தில் கொண்டு வந்து வைக்க வைத்த கதை தான் நியாபகம் வருது

    பதிலளிநீக்கு
  7. நல்ல பயமுறுத்தல் தான். கடைசி வரைக்கும் நீங்க ப்ளான் போட்டது தெரியாம இருந்ததே, அது வரைக்கும் பாராட்டுகள் தந்தே ஆகணும். அந்த அம்மாவும் வாயை விடாமல் இருந்திருக்காங்களே1

    அட, ஜிமெயில் ஃபாலோ அப்புக்கு "டிக்" போட்டு ரெடியா வைச்சிருக்கே???? ஆச்சரியமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. //சிலபல//

    என்ன பொருள்?.. நேர்-எதிர் சேர்ந்து! :))

    பதிலளிநீக்கு
  9. ஐடியாவும் செயல்படுத்திய விதமும் அருமை. பாராட்டுகள்.

    /பலவருடங்களுக்கு முன்/ தைரியமாய் 12 பவுனைத் தூக்கிவந்திருக்கிறார். இப்போது செய்வார்களா, சந்தேகமே.

    பதிலளிநீக்கு
  10. பலசிலனு சொன்னா சரியா கண்டுபிடிச்சுடலாம், சிலபல புதுசா இருக்குங்க.

    கமெண்டுறப்பத்தான் ஜீவி சொல்லியிருக்குறதை கவனிச்சேன்.

    பதிலளிநீக்கு
  11. ஆச்சரியம். அழுகும் முட்டை வாழைப்பழ நாற்றத்துக்கு எப்படியெல்லாம் பயன் வருகிறது!

    பதிலளிநீக்கு
  12. // ஸ்ரீராம் சிட்ஸ்' // தலைவா உங்களைத் தான் நான் தேடிட்டு இருக்கேன்...

    //நான் சும்மா பார்த்து விட்டு "அருமையாயிருக்கு// அப்போ என்ன மாதிரி "அருமையாயிருக்கு" ன்னு கமென்ட் போடுறவங்க எல்லாரும் டெம்ப்ளேட்ஸ் ஆ... நீங்க ஒரு பிரபல பதிவர் அதனால இப்படி எல்லாம் பேசலாமா...ஹா ஹா ஹா #கொளுத்திப் போட்டிங்

    //பல வருடங்களுக்கு முன் இந்த டெக்னிக் செல்லுபடியானது! /// நீங்க இந்தியாவுல இருக்க வேண்டிய ஆளே இல்லை சார்...என்னா டெக்னிக்கு

    பதிலளிநீக்கு
  13. தனபாலன் சொன்னது போல இந்த காலத்தில் கிடைக்காது! அன்று கிடைத்துவிட்டது! அலுவலகத்திற்கு நகை அவசியமா? யோசிக்க வைக்கிறது!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    பதிலளிநீக்கு
  14. என்னா டெக்னிக்...

    எனிவேஸ், நல்லது நடந்திருக்கே...

    இப்பல்லாம் இது ஒத்துவராதுன்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  15. பன்னிரண்டு பவுன் நகை திரும்ப கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம். திருடினது யாருன்னு எல்லாருக்கும் வெளில தெரியாம போனாலும், இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு அங்க எல்லாரும் பழகின விதத்துல எப்பவும் போல் இல்லாமல் ஒரு நெருடல் இருந்திருக்கும், இல்லையா!

    பதிலளிநீக்கு
  16. மூட நம்பிக்கையென்று கிண்டல் பண்ணினாலும் பயன்பட்டிருக்கே செய்வினை சூனியம் !

    பதிலளிநீக்கு
  17. 12 பவுனுக்கு 12 கொலை செய்ய ஆட்கள் வேண்டுமா? எங்க ஊருக்கு வாங்க.

    பதிலளிநீக்கு
  18. போவான் போவான் ஐயோ என்று போவான்னு குடுகுடுப்பாண்டியைக் கூட வரவழைத்திருக்கலாM:)

    நல்ல ஐடியா வொர்க் அவுட் ஆனது. புத்தியுள்ளவன் பிழைத்தகதை.
    இப்ப இருக்கற மலை முழுங்கி மஹாதேவன்கள். அசர மாட்டார்கள்.
    ஆனால் இது நடந்த பிறகும் எல்லாரும் சமமாகப் பழகினது அதிசயமே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!