சனி, 16 பிப்ரவரி, 2013

பாசிட்டிவ் செய்திகள் 10/2/2013 முதல் 16/2/2013 வரை


எங்கள் B+ செய்திகள்.     

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும். 

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
====================================================================

1) குடிசை வீட்டில் வசித்தாலும் மல்யுத்தப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஈரோடு மூலப்பாளையம் முத்துசாமிக் காலனியில் வசிக்கும் செல்லப்பன் என்பவர் மகனான 23 வயது குமார்.       

                                                          
                       
 இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மல்யுத்த வீரரான மகேந்திரகுமார் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார்.

இவர் மணிப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் 63 கிலோ பிரிவில் பங்கேற்று முதல் பரிசான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் கொரியாவில் நடைபெறும் சர்வதேச மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள மகேந்திரகுமாருக்கு அழைப்பு வந்துள்ளது.

மகேந்திரகுமாரின் தாயும், தந்தையும் சாதாரண கூலித்தொழிலாளர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த அளவு கூலிப் பணத்தில் தங்களது ஒரே மகனான மகேந்திரகுமாரை படிக்க வைத்து வருகிறார்கள். பெற்றோருடன் குடிசை வீட்டில் வசிக்கும் மகேந்திர குமார் கொரியா சென்று போட்டியில் பங்கேற்க லட்சக் கணக்கில் செலவாகும். அந்த அளவுக்கு அவரது பெற்றோருக்கு வசதி இல்லாததால் அவர் இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு சர்வதேச போட்டியில் பங்கேற்க தமிழக அரசின் நிதி உதவியை பெற்றுத்தரும்படி கேட்டு மனு கொடுத்தார். தொடர்புக்கு, மகேந்திரன் : 960055533

2) கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00 : வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00
மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,000. 00

இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), அவர்களுடைய சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!                                  
 


  இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிகமிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.     
                
 என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை.
                    
அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக அமர்ந்திருக்கும் இவர், நான்காவது முறையாகவும் போட்டியிடுகிறார்.
இப்படியும் ஒரு முதலமைச்சர்!
          
'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்...
                    
மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா... ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்தி 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.   

3) "பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், லஞ்ச, ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும், தேசிய நதிகளை இணைக்க வேண்டும்' என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, முதியவர் ஒருவர், ஆத்தூரில், சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கினார்.   
                  
 சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பழனியாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து, 57. சமூக ஆர்வலரான இவர், திருமணம் செய்து கொள்ளாமல், பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, அரசு, உடனடியாக மதுவை தடை செய்து, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளே, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அளிக்க வேண்டும்.      
           
                  
                  

இந்திய நதிகளான, கங்கை, காவிரியை இணைக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, 11 மணியளவில், ஆத்தூர் காந்தி சிலையில் இருந்து, பெரம்பலூர் வரை, சைக்கிளில், விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை துவக்கினார்.

தொடர்ந்து, ஆத்தூர், நரசிங்கபுரம், வாழப்பாடி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் வழியாக, வரும், 24ம் தேதி, ஆத்தூரில் பயணத்தை முடித்துக் கொள்கிறார்.

விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட பழனிமுத்து கூறியதாவது:

நதிநீர் இணைக்க வேண்டும், விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தல், பூரண மதுவிலக்கு அமல்படுத்தல் போன்ற அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சைக்கிளில் பிரச்சாரம் துவக்கியுள்ளேன். தினமும், 50 கி.மீ., தூரம் சென்று, 100 பேரிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கியபடி, 750 கி.மீ., தூரம் கடந்து சென்று, 5,000 மக்களிடம், நோட்டீஸ் வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.  
                 
4) பெங்களூரு நகரில், ஆட்டோ ஓட்டி, பிழைப்பு நடத்திய பெண், வழக்கறிஞராகி, சாதனை படைத்துள்ளார்.வெங்கடலட்சுமி, 40, பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டும் பெண்களில் ஒருவர்.  
             
                  
                      
 பட்டப்படிப்பு முடித்திருந்த இவர், வழக்கறிஞராக வேண்டும் என, சிறு வயதிலிருந்தே விரும்பினார்.எனினும், பட்டப்படிப்பு முடித்ததும், திருமணம், குழந்தை, வாழ்க்கையை ஓட்ட, ஆட்டோ ஓட்ட வேண்டிய நிர்பந்தம் போன்ற கட்டாயங்களால், நேரடியாக அவரால், வழக்கறிஞர் ஆக, தேவையான படிப்பை படிக்க முடியவில்லை.கடந்த, 13 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டி வரும் வெங்கடலட்சுமி, தினமும் காலை, 8:00 மணிக்கு, தன் பணிகளை துவக்கி விடுவார். 8:30 மணிக்கு, மகளை, பள்ளியில் கொண்டு விடும் இந்த பெண், 10 கி.மீ., தூரத்தில், பசவேஸ்வர் நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் சட்ட கல்லூரியில், எல்.எல்.பி., படிக்க, ஆட்டோவிலேயே செல்வார்.வகுப்புகள் மதியம் முடிந்ததும், கறுப்பு, வெள்ளை சீருடையை கழற்றி, வீட்டில் போட்டு விட்டு, ஆட்டோ டிரைவருக்குரிய, காக்கி சீருடையை அணிந்து, ஆட்டோ ஓட்ட செல்வார்.

5) 83 வயது ஷீலா கோஷ்.   

                   
                
இதய நோய் காரணமாக சில மாதங்களுக்கு முன்னால் இவரது ஒரே மகன் இறந்து விட, இப்போதும் உழைத்து உண்கிறார். தினமும் மாலையில் பாலி கோல்கட்டாவிலிருந்து பஸ்ஸில் வந்து சிப்ஸ் விற்கும் இவர் " இந்த வயதில் பஸ்ஸில் வந்து பிழைப்பைக் கவனிப்பதில் ஒரு கஷ்டமுமில்லை எனக்கு" என்கிறார். இந்தச் சூழ்நிலையில் வேறு யாராக இருந்தாலும் பிச்சையெடுக்க ஆரம்பித்திருப்பாகள். இவர் மானம் சுயமரியாதையை பெரிதும் மதித்திறார். கடைசி வரை உழைத்துச் சாப்பிடுவதில் உறுதியாக இருக்கிறார்.

6) காயம் பட்ட ஒருவரது அனுபவம். எல்லோருக்கும் உதவலாம்! "நேற்று வனத்தோட்டம் ஒன்றை தணிக்கை செய்து வரும்போது ஒரு புல்லின் காய்ந்த குச்சி பிளந்து எனது விரலை அறுத்து விட்டது! (இந்த புல் ஏறக்குறைய 4 - 5 அடி உயரம் வளரும் ! காயம் சற்றே ஆழமானதால் இரத்தம் நிற்கவில்லை! கையிலிருந்த பஞ்சை வைத்து அமுக்கியும் கட்டுப்படவில்லை! உடனே எனது வனச்சரகர் திரு. அங்குமிங்கும் தேடி ஒரு செடியின் இலையை பறித்து வந்தார்! அதை கசக்கி அதன் சாறை காயத்தில் விட்டார்! சற்று நேரத்தில் இரத்தம் நின்று விட்டதுடன் வெட்டுக்காயமும் ஒட்டிக்கொண்டது!   
                  
                

இதன் பெயர் அரிவாள்மனை பூண்டு அல்லது வெட்டுக்காயப்பூண்டு தாவரவியல் பெயர் . Tridax procumbens .  இதன் புகைப்படம் மேலே உள்ளது! தேடிப்பாருங்கள்! கிராமங்களில் வயதானவர்கள் இதை நன்கு அறிவார்கள்!" 
              
7) நூற்பாலைகளில் தரத்தை மேம்படுத்துவதற்கு கண்டறிந்த கருவியை உற்பத்தி செய்ய, மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் கைகொடுக்காததால், கண்டுபிடிப்பாளர் வேதனையில் உள்ளார்.                                           
  
 

                                                          
திருப்பூர் மாவட்டம், உடுமலை எஸ்.வி., புரம் பகுதியில் வசிப்பவர் கனகராஜ், 71; ஸ்பின்னிங் மில் பிட்டர். ஸ்பின்னிங் மில்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவத்தில், நூலின் தரத்தை மேம்படுத்த "நியு மோட் நைப் செபரேட்டர்' எனும் எளிய கருவியை உருவாக்கினார்.கருவியை, மைய விலக்கு விசை தத்துவத்தில் வடிவமைத்து, ஸ்பின்னிங் இயந்திரத்தின் ஸ்பிண்டில்களில் பொருத்துமாறு அமைத்துள்ளார். இக்கருவி நூற்பாலையில், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.இதை அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளிடம் ஊக்குவிப்பு நிதிக்காக விண்ணப்பித்தார்.மத்திய அரசின் தொழில் நுட்ப தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட அதிகாரிகளிடம் இக்கருவி குறித்து தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

கோவை தனியார் கல்லூரியில் நடந்த நேர் காணலில், கருவி உற்பத்தி குறித்த திட்ட கருத்துருவை அளித்தார். இது ஏற்கப்பட்டு, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.இக்கருவியை உற்பத்தி செய்ய, 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகவும், இந்நிதி கோவையிலுள்ள தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட மையத்திற்கு அனுப்பப்படும்; அம்மையத்தில் கனகராஜ் கருவியை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இவரது கண்டுபிடிப்புகள் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளன.இதே போல், புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு மின் உற்பத்தி மற்றும் மனித வள மேம்பாட்டிற்கான கருவியை தயாரிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கனகராஜ் கூறுகையில், ""பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் போதிய ஊக்குவிப்பு இல்லாமல் வெளியுலக பயன்பாட்டிற்கு வருவதில்லை. பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட கருவியை உற்பத்தி செய்ய பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். முதியோர் உதவி தொகை ஒன்றே எனக்கு வருவாயாக உள்ளது. போதிய நிதி உதவி அளித்தால், எனது கண்டுபிடிப்பு கருவிகள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் செயல்பாட்டிற்கு வரும்,'' என்றார்.

8) ஒடிசாவில், டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார்.

                            

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி ஒன்றை அமைத்துள்ளார். அதில் தற்போது 3ம் வகுப்பு வரை கல்வியளிக்கப்பட்டு வருகிறது. 3ம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க, பிரகாஷ் உதவி செய்து வருகிறார்.

               
இப்பள்ளியில் சுமார் 60 ஏழை குழந்தைகள் படித்து வருகின்றன. குழந்தைகளுக்கு கல்வியளிக்க 4 டீச்சர்களை நியமித்துள்ள பிரகாஷ், அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தந்து வருகிறார். மேலும், சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகி வருகிறது. இவை அனைத்தையும் தனது டீக்கடையிலிருந்து மட்டுமே எடுத்து செலவிட்டு வருகிறார் பிரகாஷ். தனது பள்ளிக்காக இதுவரை யாரிடம் பணஉதவி அவர் கேட்டதில்லை.            

11 கருத்துகள்:

  1. நல்ல விளக்கமான பாசிடிவ் செய்திகள், ஒவ்வொரு வாரமும் இதே போல் எழுதுங்கள் சார்.


    # ஊருப் பக்கம் போயிருந்தேன் அதான் இணையம் பக்கம் வர முடியல

    பதிலளிநீக்கு
  2. மாணிக் சர்க்கார் அவர்களும் ஷீலா கோஷ் அவர்களும் மனதை மிகவும் கவர்ந்து விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  3. 83 வயதில் உழைத்து வாழ எத்தனித்த பெண்மணியை போற்ற வேண்டும். ஆட்டோ ஓட்டினாலும் படிக்கும் ஆர்வத்தை விடாத பெண் பாராட்டுக்குரியவர் நல்ல பகிர்வுங்க. அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. இப்படியும் முதல்வர்கள் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது! அனைத்தும் அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. எண்பத்து மூணு வயது ஷீலா பாட்டி மனதில் உயர்ந்து நிற்கிறார்.
    வெங்கடலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்கு.
    அறுபது குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது, கண் கொடுத்தது போல். மிகவும் உயர்ந்த செயல்.

    மொத்தத்தில் எல்லா செய்திகளுமே சிறப்பான செய்தி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அரிவாள்மனை பூண்டு அல்லது வெட்டுக்காயப்பூண்டு தாவரவியல் பெயர் . Tridax procumbens

    இதன் பூக்களை எடுத்து தலைவெட்டி சிறுவர்கள் விளையாடுவார்கள்..

    விவசாயிகள் காலில் கையில் மண்வெட்டியில் வெட்டிக்கொண்டால் இதன் இலைகளை கசக்கி சாறெடுத்து பூசிக்கொள்வார்கள்.. சீக்கிரம் இரத்தப் பெருக்கு நின்று காயம் ஆறும் மாயம் கண்டிருக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே நல்ல செய்திகள். வெங்கடலஷ்மியும், ஷீலா பாட்டியும் பிரமிக்க வைக்கிறார்கள். வெட்டுகாய பூண்டு புதுத் தகவல்.

    பதிலளிநீக்கு
  8. களிப்பிரண்டை
    http://www.tamilkadal.com/?p=1880
    இதனால் குருதிமூலம் ஒழியும் குன்மம் கால் உளைச்சல் நீங்கும். பிரண்டை வடகத்தை உணவு முறையாலேனும் மருத்துவ வகையாலேனும் உட்கொள்ள கப நோய்களும் செரியாமையும் நீக்கும்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வு.

    3. நம்பிக்கையுடன் இவர் மேற்கொண்டிருக்கும் பயணத்துக்கு அரசோ மக்களோ எந்த அளவுக்கு மதிப்பு கொடுப்பார்கள் என நினைக்கையில் வருத்தமும் பரிதாபமும் வருகிறது.

    5. உப்புத் தாத்தா போல இன்னொரு வியக்க வைக்கும் பெண்மணி.

    பதிலளிநீக்கு
  10. ஷீலா கோஷ் - இந்த வயதிலும் இருக்கும் இவரது தன்னம்பிக்கைக்குப் பூங்கொத்து.....

    அனைத்துமே அருமையான செய்திகள்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!