திங்கள், 25 பிப்ரவரி, 2013

கௌரவம் காத்தல்.

                                              
அவ்வப்போது நாம் செல்லும் மணவிழாக்கள் நம்மை பல மாதிரியாக பாதிக்கின்றன. நிச்சயமாக வசதியான புள்ளி என்று தெரிந்த இடத்தில் அவர்கள் ஆடம்பரமாக செய்யும் விழா நிகழ்ச்சிகள் "இங்கு எனக்கும் ஒரு இடம் கிடைத்ததே " என்று மகிழ வைக்கின்றன.  வெகு நாட்களுக்கு முன்பு என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் மு.க.ஸ்டாலின் வந்து பெரிய சலசலப்பை ஏற்படுத்தினார்.  அவர் என்னைப் பார்த்து சிரித்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சி என்ன என்று விவரிப்பது கஷ்டம்.  பயத்தம்பருப்புக்கு பதிலாக முந்திரிப்பருப்பு போட்டு செய்ததோ என்று எண்ண  வைக்கிற பொங்கலை  காலையில் சாப்பிடும்போது ஒரு சின்னஞ்சிறு பொறாமை தலை தூக்குமோ? 
                 
" எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைச்சலா புடவை எடுத்தா பெரிய பிரச்னை வந்துடும் " என்று என் நண்பர் ஒருவர் சொல்லி என் எரிச்சலைத் தூண்டினார். " எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் எல்லாப் புடவையும் சேர்த்து பத்தாயிரத்துக்குக் கொஞ்சம் குறைவாக வர மாதிரி பார்த்துக்குவோம் " என்று அவரிடம் சொல்லிக்கொள்ள ஒருபுறம் ஆசையாகவும் மறுபுறம் வெட்கமாகவும் இருந்தது. 
                    
( "வர தட்சணை கொடுக்க வக்கு இல்லாதவங்க இஞ்சினீயர் மாப்பிள்ளையை ஏன் தேடணும், அவங்க யோக்கியதைக்கு ஏற்றாற்போல் கிளார்க் சம்பந்தம் பாக்க வேண்டியதுதானே " என்று சொல்லக் கேட்டு நான் நாணியதை முன்பே குறிப்பிட்ட தாக நினைவு.)
               
இதற்கு மறுபுறம் நடுத்தர வசதி அல்லது அதற்கும் கொஞ்சம் மட்டாக இருக்கிற இடத்தில் ஆடம்பரமாக கல்யாணம் செய்து தடபுடல் செய்யும்போது மனம் சற்றே சஞ்சலம் அடைகிறது.  இந்த அளவு பணம் இந்த மாதிரி செலவு செய்வது சரிதானா என்ற கேள்வி மனத்தைக் குடைகிறது. அதிகமாக கடன் பட்டு அல்லது சேமிப்பைக் கரைத்து முதலீடு அல்லாத " வெட்டி " செலவு செய்வது வெறும் கௌரவத்துக்கு மட்டும்தானா ?  சில சமயம் மாப்பிள்ளை அல்லது பெண் அல்லது இருவருமே தம் நண்பர்கள் மற்றும் சிலரை இம்ப்ரெஸ்  செய்ய படாடோபம் செய்வதை கண்டிப்பாக்கி விடுகிறார்கள். இது எந்த அளவுக்கு சரியானது?
                 
இளைய தலைமுறை அப்பு ஜேசி பப்பு கூடு என்று  கௌரவத்துக்கு  இடம் கொடுக்கிறார்கள். என்று தோன்றுகிறதே தவிர குடும்பத்தில் மற்றவர்களுக்கும் அதே உந்துதல் இருப்பதையும் காண முடிகிறது. 
                  
ஒரு காலத்தில் ஒரு பத்திரிகைக்கு பத்து ரூபாய் மொய் வரும் என்று கணக்கு போட்டு லாபம் பார்ப்பது உண்டு.  இப்போது அப்படி இல்லை. பத்திரிகைக்கே நாற்பது ரூபாய் ஆகிறது.  சாப்பாடு முன்னூறு, டிபன் இருநூறு டின்னர் நானூறு என்று விலையைக் கேட்ட வுடனே சாப்பிட்டது ஜீரணம் ஆகி விடுகிறது.  
                
ஒரு மன மாற்றம் தேவையோ?  
 
:: ராமன்.
                   

24 கருத்துகள்:

  1. சொல்லப் போனால் இது குறித்து நிறைய எழுத வேண்டும். என்னைப் பொறுத்தவரை வசதி படைத்தவர்கள் கல்யாணத்துக்குப் போனால் இயல்பாக இருக்க முடியலை. என்னமோ ஒரு சங்கடம் இருக்கும். அவங்க நல்லாவே மரியாதை பண்ணினாலும். அதீதப் பணம் காரணமோ? தெரியலை! :)

    பதிலளிநீக்கு
  2. எங்க சித்தப்பா வீட்டுக் கல்யாணங்கள், விசேஷங்கள் எல்லாத்திலேயும் கமல்ஹாசன், நாசர்னு சினிமாப் பிரபலங்களில் இருந்து பத்திரிகையுலகப் பிரபலங்கள் வரை வந்திருக்காங்க. ஒண்ணும் தோணினதில்லை. :))))

    கல்யாணங்கள் ஆடம்பரச் செலவாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்துக்கு மிக மிக அநாவசியச் செலவுகளைக் கொடுக்கிறது. அதிலும் இப்போதெல்லாம் ஸ்டால்கள் போட்டுடறாங்க. ஒரு பக்கம் ஐஸ்க்ரீம் ஸ்டால், ஜூஸ் ஸ்டால், மருதாணி வைக்க ஒரு ஸ்டால், சாட் கொடுக்க ஒரு ஸ்டால், காபி, டீ போன்ற பானங்களுக்கு ஒன்று, இன்னொரு பக்கம் வளையல் கடை என விரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. இதில் எத்தனை பேர் மெஹந்தி போட்டுக் கொண்டார்கள், வளையல்கள் எத்தனை பெண்கள் வாங்கிக் கொண்டார்கள் என்பதெல்லாம், நாம கல்யாண அமர்க்களத்திலே கணக்கு வைச்சுக்கப் போறதில்லை. சமையல் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமை சமையல்காரர் கொடுக்கப் போகும் கணக்குத்தான். :(

    பதிலளிநீக்கு
  4. அடுத்துச் சத்திரங்கள். ம்ம்ம்ம்ம்ம்??? பதிவாவே எழுதிடலாமோ?? ஆமா இல்ல? :)))))

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான். கல்யாணங்கள் இப்பொழுது ஆடம்பரமாக ஆகிவிட்டது.அநாவசியமாக அதிகமாக செலவு செய்வதுடன் சடங்கு சம்பிரதாயங்களை சரிவர செய்யாமல் குறைத்து விடுகிறார்கள்.

    கட்டாயம் மாற்றம் தேவைதான்.

    பதிலளிநீக்கு
  6. கண்டிப்பாய் மாற்றங்கள் தேவை! கல்யாண விருந்து என்று வீணடிக்கும் பொருள்கள் எவ்வளவு? நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  7. மன மாற்றம் தேவை...யே இல்லை... நடுத்தெருவுக்கு வந்தவுடன், அன்று வந்த அதே கூட்டம் கை தட்டி சிரிக்கும் போதும்-மன மாற்றம் தேவை...யே இல்லை...

    பதிலளிநீக்கு
  8. கீதா, பதிவே எழுதிடுங்கோ!

    ஆடம்பரக் கல்யாணங்கள் ஒரு புறம். இன்னொரு புறம் அதீத சிக்கனம்! கட்டுச் சாதக் கூடையுடன் சம்பந்திகளை வழி அனுப்பும்போது தாம்பூலப் பைகள் தீர்ந்து விட்டன. இருந்த இரண்டு தாம்பூலப் பைகளை சம்பந்திகளிடம் கொடுத்து திரும்பி வாங்கி அதையே அவர்களது உறவினர்களுக்கும் கொடுத்து திரும்ப வாங்கி எங்களுக்கும் கொடுத்து....திரும்ப வாங்கி...

    கேட்டதற்கு பிள்ளை வீட்டுக்காரர்களே சமையல் காண்டிராக்ட் எடுத்துக் கொண்டு செய்ததாக சொல்லி பெண் வீட்டார்கள் தப்பித்துக் கொண்டு விட்டனர். இது எப்படி இருக்கு?

    வாயை மூடிக் கொண்டு எங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  9. //ஒரு மன மாற்றம் தேவையோ?//

    நிச்சயமாகத்தேவைதான்..

    பதிலளிநீக்கு
  10. போலி கௌரவம் என்ற இழிவான மன நிலையை ஒழிக்க மன மாற்றம் அவசியம் தேவை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் இந்த போலி கௌரவம் மிக அதிகமாக உண்டு என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. //போலி கௌரவம் என்ற இழிவான மன நிலையை ஒழிக்க மன மாற்றம் அவசியம் தேவை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் இந்த போலி கௌரவம் மிக அதிகமாக உண்டு என்று நினைக்கிறேன்.//

    இந்தியத் தமிழர்களிடம் அதுவும் தமிழ்நாட்டில் இல்லாத போலி கெளரவமா? வெளிநாடுகளுக்கு ஏன் போக வேண்டும்! இங்கேயே இருப்பவர்களே போலி கெளரவம் பார்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. வீட்டில் கல்யாணங்கள் நடந்தது போய் இப்போது காது குத்தக் கூட மண்டபம் தேடுகிறார்கள்.
    இங்கே ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும் ஆடம்பரம் எங்கேயோ போய்விடுகிறது.
    நல்லதொரு பதிவு. மிகப் பெரிய திருமணங்களுக்குக் கொரியரில் வரும் அழைப்பிதழ்களில்,டைப் அடிக்கப்பட்ட அட்ரஸ் கண்டதும்,வாழ்த்துகள் அனுப்பவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நிச்சயம் மனமாற்றம் தேவை தான்.....

    பல வீடுகளில் பெற்றோர்கள் ஒத்துக் கொள்வதில்லை - பல வீடுகளில் மணமக்கள் ஒத்துக் கொள்வதில்லை - இப்படியே ஆடம்பரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  14. மண்டபம் நாலு லட்சம் கேடரர் எட்டு லட்சம்,நகை பத்து லட்சம் மற்றப்படி புடவை,வேஷ்டி வகையறாக்கள் -இதில் எவ்வளவு அநாவசியச் செலவுகள்.இவற்றிக் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  15. நிச்சயம் தேவையே.

    இப்படி செலவழிக்கும் பணத்தை அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைத்தால் அவர்கள் வாழ்க்கைக்கு நல்ல உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. மன மாற்றம் அவசியம் தேவைதான். சிம்பிளா கல்யாணம் பண்ணினா ஊர் ஒலகத்துல தப்பா நினைச்சுடுவாங்களோன்ற பயத்துலயே தான் நிறைய ஆடம்பரங்கள் நடக்குதுன்றது என் கருத்து. மாறணும்! எல்லாம் மாறணும்!

    பதிலளிநீக்கு
  17. To the extent possible we need to reduce unwanted expenditure.

    But, 'wants' are different for different people. That's the main problem.

    It's not that I have money I spend. It's the question of wasting the resources... starting from 'water' to 'fuel'.

    பதிலளிநீக்கு
  18. இந்த “கௌரவம் காத்தல்” என்பது அன்றாட வீட்டு நடப்புகளிலேயே தொடங்கிவிடுகிறது!! ‘இன்னிக்கு எங்க வீட்ல ரசம், வெண்டைக்காய்ப் பொரியல்’னு சொன்னா பார்க்கிற பார்வையே நம்மள ‘கஞ்சிக்கில்லாதவ’ என்று வகைப்படுத்திவிடும் போலிருக்கும்!! ஏழெட்டு மொபைல்கள் இருந்தாலும், அன்று வரும் லேட்டஸ்ட் மொபைல் வாங்குவது; தேவைக்கு வீடு கட்டுவதென்றிருந்த காலம் போய், லோன் வாங்கியாவது மாடிவச்ச வீடு கட்டியாகணும்னு ஆகிவிட்ட காலம். கல்யாணத்தை விடுவாங்களா?

    வீணாக்குறவங்க, என்னவோ செய்துத் தொலையட்டும். சிக்கனமாச் செய்றவங்களை ஏளனப்படுத்தாமல் இருந்தாப் போதும்னுதான் தோணுது.

    பதிலளிநீக்கு
  19. வீண் கெளரவமும், ஆடம்பரமும் தான் இப்போ ஆட்டிப் படைக்கிறது. ஏகப்பட்ட ஐயிட்டங்களை செய்து ஆடம்பரத்தை காண்பிப்பதற்கு பதில் அளவோடு சமைத்து, வசதியிருந்தால் மற்றவர்களுக்கு உதவலாமே...

    பதிலளிநீக்கு
  20. கமெண்ட் மாடரேஷன் இப்ப இல்லியா? என்னென்னவோ புரியாத மொழிகளில் நிறைய அனானி கமெண்ட்கள் வருதே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!