ராமலக்ஷ்மி தன் முத்துச்சரம் பக்கத்தில் காமிக்ஸ் நினைவுகளைப்
பகிர்ந்திருக்கிறார். அங்கு பின்னூட்டமிட்டபோதும் முகநூலிலும் என்னுடைய காமிக்ஸ்
விருப்பத்தையும் கடைசிப் புத்தகத் திருவிழாவில் வாங்கிய மாயாவி
புத்தகத்தைத் தொடர்ந்து அது பற்றி எழுத நினைத்திருந்தேன் என்றும் சொன்னேன்.
பதிவிடுங்கள் படிக்கிறேன் என்று பதில் சொல்லியிருந்தார். வாய்ப்பைத் தவற
விடாமல் இந்தப் பதிவு! நன்றி ராமலக்ஷ்மி.
"இளமை நினைவை இசைக்கும்
தெருக்கள்..." பாடல் கேட்டிருக்கிறீர்களா? "அள்ளித் தந்த பூமி அன்னை
அல்லவா" பாடலில் வரும் வரி அது. இளமை நினைவை இசைக்க பாடல், கவிதை, காதல்
போன்ற நினைவுகளோடு காமிக்ஸ் புத்தகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சொல்லப் போனால் மற்ற எல்லா விஷயங்களையும் விட இது இன்னும்
நினைவில் இருக்கிறது. ஆர்வமும் குறையவில்லை. இப்போதும் காமிக்ஸ்
புத்தகங்கள், அதுவும் குறிப்பாக மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி
நீரோ-ஸ்டெல்லா, ரிப் கெர்பி, காரிகன், முகமூடி வேதாளர் கதைகளை
விற்கும் கடைகளில் சிறுவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, அந்தக் காலச்
சிறுவர்கள் கூட்டமாக நிற்கிறார்கள்!
ஒருவருக்கு படிக்கும் பழக்கம் ஆரம்பிப்பதே காமிக்ஸ் புத்தகங்களால்தானோ!
அப்போது அப்படித்தான்! புத்தகங்களில் முதலில் கவர்ந்தது இதுதான். இவை
புகழ் பெற்றதனால்தான் கல்கி, குமுதம் போன்ற பத்திரிகைகளில் சித்திரக்
கதைகள் வந்தன. குமுதத்தில் வந்த சித்திரக் கதை 'ப்ளான் பட்டாபி' நினைவில்
இருக்கிறது. 'செல்லம்' சித்திரத்தில். கல்கியில் ஒரு இளவரசன், இளவரசி
கதை... தலைப்பு நினைவில்லை.
ஐம்பது பைசா முதல் தொண்ணூறு பைசா வரை காசு கொடுத்து வாங்கிய முத்து
காமிக்சுக்கு முதலிடம்! முத்து காமிக்ஸில் இரும்புக்கை மாயாவிக்கு
முதலிடம்! இதைப் படிக்க ஆரம்பித்துதான் மற்ற புத்தகங்கள் படிக்கத்
தொடங்கினேன்! ஆரம்பகாலத்தில் எல்லோரையும் போல(த்தானே?) இவர்கள் எல்லாம்
நிஜமாகவே இருப்பதாக நம்பிய ஆரம்பகாலம் உண்டு.
"ஹேய்... கிழடுகள் துப்பாக்கி வைத்துக் கொண்டு விளையாடக் கூடாது" ,
"இதை இங்கிருந்தும் இயக்குவேன்" (அவர் ஒரு இடத்திலும் கை வேறு இடத்திலும்
இயங்கும்! எதிரிகளைத் தாக்க கை விரலில் துப்பாக்கி, நச்சுப் புகை என்ற
வசதிகள்) போன்ற வசனங்கள் இன்றும் நினைவில். பின்னாளில் 'யாரானா'
படத்தில் அமிதாப் கிளைமேக்சில் வயதான வில்லன் இவர் மீது பாயும்போது "ஏய்
பெரிசு... இன்னொருமுறை இப்படிச் செய்ய வேண்டாம்...வயதானவர்கள் மேல் நான்
கைவைக்க மாட்டேன்" என்று சொல்லும் வசனத்தின்போது மாயாவியின் இந்த வசனம்
நினைவுக்கு வந்தது!
இந்த வசனங்கள் லண்டனில் வெளியான ஒரிஜினல் கதைகளின் வசனங்கள்தானா
தெரியாது! ஒவ்வொரு புத்தகத்திலும் மாயாவியின் வரலாறு இருக்கும். அவர் பெயர்
க்ராண்டேல். கையில் பொருத்தப்பட்ட இரும்புக்கையை மின்சாரத்தைச்
செலுத்தினால் தாங்க முடியாத உடல் வேதனையுடன் அவர் மாயமாக மறைவர் - கை தவிர.
ரசிக்கும்படி இருக்கும்! அந்தக் கால மொழிபெயர்ப்பு, சீரியல் வசனங்கள்
தனி பாணியில் இருக்குமே, அது போல இதன் வசனங்கள் தனி வாசனை கொண்டவை!
வாங்கி
வாங்கி கள்ளிப் பெட்டியில் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை யார்
எடுத்துச் சென்றார்கள் என்றே தெரியாது! இப்போது பழைய நினைவில்
புத்தகத் திருவிழாவில் மாயாவி புத்தகம் ஒன்று வாங்கினேன். ஐந்து
புத்தகங்கள் 400 ரூபாய் என்றெல்லாம் இருந்தது. அதில் நான் தேடும்
புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டால், 'பிரித்துப் பார்க்கக் கூடாது.
இருந்தால் இருக்கலாம்' என்றார்கள். கண்ணில் பட்ட ஒன்றை மட்டும் 100 ரூபாய் கொடுத்து வாங்கி
வந்து படித்தேன். இரண்டு மூன்று கதைகளின் தொகுப்பு. இப்போதைய விகடன் சைஸ். 290 பக்கங்கள்.
ஸ்பானிய சித்திரக்காரரான Jesus Blasco தான் இரும்புகை மாயாவியை வரைந்தவர். கதை எழுதியவர் Henry Kenneth Bulmer என்று
எஸ் ரா பக்கத்திலிருந்து அறிந்தேன். அந்தப் படங்களில் இருந்த மாயாவி
ஒரிஜினல். இப்போது நான் வாங்கியிருக்கும் மாயாவி போலி!!!!! நல்ல வண்ணக்
காகிதத்தில் தெளிவாக அச்சிடப் பட்டிருக்கும் அப்போது. இப்போது பேப்பரின்
தரமே சரியில்லை. சிறிய புத்தகமாயினும் ஒரு பக்கத்துக்கு இரண்டு படமாகத்தான்
இருக்கும். படிக்க வசதி, எளிது, சுவாரஸ்யம்.
அப்போதே அந்த மாயாவி,
இந்த மாயாவி, என்று மாயாவி பெயரிலேயே நிறைய போலி மாயாவிகள் புத்தகமும்
வரும். புத்தகங்களில் முத்து காமிக்ஸ். இந்த்ரஜால் காமிக்ஸ், ராணி
காமிக்ஸ், லயன் காமிக்ஸ், வாசு காமிக்ஸ் என்று வரிசையாக வந்தாலும் முத்து
காமிக்ஸ் தான் ஸ்பெஷல். நான் விலை கொடுத்து வாங்கியது முத்து காமிக்ஸ்
மட்டும்தான். முல்லைத் தங்க ராசு ஆசிரியர் என்று தெரியும், நினைவில் உள்ளது.
பொது எதிரி அ கொ தீ க வை எதிர்க்கும் மாயாவி தவிர முத்து காமிக்ஸின்
மற்ற ஹீரோக்கள்... மாயாவி போல மறைந்து நின்று தாக்குவதை விட நேருக்கு நேர்
மோதும் லாரன்ஸ் - டேவிட் , துப்பறியும் சாகசத்துக்கு ரசிக்க ஜானி நீரோ -
ஸ்டெல்லா, ஏதோ ஒரு கவர்ச்சி அப்புறம் பின்னாளில் வந்த முகமூடி வேதாளர்
மீது! அப்புறம் ஆர்ச்சி, டின்டின்..
அப்போது படித்து இன்றும் நினைவில் நிற்கும் முத்து காமிக்ஸின் சில
புத்தகங்கள் விண்ணில் மறைந்த விமானங்கள், காற்றில் கரைந்த கப்பல்கள்,
இயந்திரத் தலை மனிதர்கள், நடு நிசிக் கள்வன், பெய்ரூட்டில் ஜானி, உறைபனி
மர்மம், கொள்ளைகார மாயாவி, நயாகராவில் மாயாவி, Flight 731, வான்வெளிக்
கொள்ளையர். நான் வாங்கியிருந்த புத்தகத்தில் முத்து காமிக்ஸின் பழைய
அளவிலேயே பத்துப் பத்து ரூபாய்க்கு வெளியிடப்பட இருக்கும் இதுபோன்ற
கதைகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார் கள்.
நாம் செய்ய நினைக்கும், ஆனால் செய்ய முடியாத சாகசங்களின் வடிகால்
சிறுவயதில் காமிக்ஸ். பிற்பாடு சினிமா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.
இன்றைய சிறுவர்கள் காமிக்ஸ் படிக்கிறார்களா தெரியாது. ஆனால் அவர்களுக்கு
இதற்கு இணையான, இதை அப்படியே கணினியில் விளையாடக் கூடிய வசதி இன்றைய
டெக்னாலஜியில் இருக்கிறது! இன்றைய இளைய தலைமுறை நூற்றுக்கு எண்பது பேர்
புத்தகங்கள் படிப்பதில்லை.
இணையத்தில் இந்தப் பழைய சாகச வீர்களின்
கதையைப் படிக்கும் வசதி இருக்கிறது. அதுவும் அகொதீக என்ற பெயரிலேயே ஒரு
வலைப்பூ. இவர்களின் சாகசங்களை இங்கேயே படிக்கலாம்! பல மலரும் நினைவுகளைக் கிளறி விடும் வலைப்பூ.
லயன்-முத்து காமிக்ஸ் பக்கம். இங்கு
இவர் (சிவகாசியிலிருந்து முத்து காமிக்ஸ் வெளியிட்ட சௌந்தர பாண்டியன்
அவர்களின் மகன் எஸ் விஜயன்) மிகச் சமீபத்தில் பெங்களுருவில் நடந்த காமிக்ஸ் திருவிழா
பற்றி எழுதி இருக்கிறார்.
சான்ஸே இல்ல... ராமலக்ஷ்மி மேடம் கிளப்பிவிட்ட மலரும் நினைவுகளால என் காமிக்ஸ் அனுபவங்களை எழுதலாமான்னு ஒரு சபலம் இருந்துச்சு. இப்ப போயே போச்! அப்படியே கண்ணாடி பிம்பமாய் என் அனுபவத்தை பிரதிபலிச்சிருக்கீங்க! சூப்பருங்கோ!
பதிலளிநீக்குjamesbond rani comics kalakkuvar...
பதிலளிநீக்குநன்றி நன்றி:). பல தலைப்புகள் உங்கள் பகிர்வின் மூலமாக நினைவுக்கு வருகின்றன. ஜானி நீரோ-ஸ்டெல்லாவை குறிப்பிட மறந்து போயிருந்தேன். வேதாளரும், மாண்ட்ரேக்குமே இந்திரஜால காமிக்ஸ் மூலமாக முதலில் அறிமுகமானதால் முதல் ஈர்ப்பு அவர்கள் மேல். பிறகுதான் முத்து காமிக்ஸ் வந்தது வீட்டுக்குள். மாயாவி மறைந்து இரும்புக்கை மட்டும் எதிரிகளைத் துரத்தும் இடங்கள் வாய்பிளக்க வைத்தன அப்போது:). லயன் காமிக்ஸ் வாசித்ததில்லை. வேதாளரின் முந்தைய தலைமுறை, அவரது அப்பா வேதாளராக இருந்த கதைகளும் அவர் இறக்கும்போது பொறுப்பை இவரிடம் ஒப்படைக்கும் இதழோடு சேர்ந்த தொகுப்பு ஒன்று, எங்கள் மாமாவுடையது, வாசிக்கக் கிடைத்தது எங்களுக்கு. நிறைய பேருக்கு முந்தைய வேதாளர் குறித்து தெரிந்திருக்கவில்லை, அப்போது. இப்போதும் கூட. எண்பதுகளில் வேதாளர்-டயானா திருமணம் முடிந்து அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது வரை தெரியும்:). பிறகு அவர்கள் வளர்ந்த கதையெல்லாம் காட்டப்பட்டதா எனத் தெரியவில்லை. மாண்ட்ரேக் வீட்டில் சமையல்காரராக இருந்த ஓஜோதான் அவருக்கு இரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கும் உயர் அதிகாரி என்பதை மாண்ட்ரேக்கால் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை:)! எழுபதுகளின் இறுதியில் வண்ண இந்திரஜால காமிக்ஸ் நின்று போய்விட்டதாய் நினைவு. கருப்புவெள்ளை முத்து காமிக்ஸில்தான் லாரன்ஸ்-டேவிட், ஜானி-நீரோ, ரிப் கெர்பி எல்லோரும் அறிமுகமானார்கள்.
பதிலளிநீக்குசுட்டிகளுக்கும் நன்றி. எஸ்.ராவின் நினைவுகளும், காமிக் கான் விழாவில் கடை விரித்திருந்தவரின் அனுபவமும் சுவாரஸ்யம். குறிப்பிட்ட கதைகளை வண்ணத்தில் வெளியிடக் கேட்பது, தீபாவளி மலர் கோரிக்கை ஆகியன ஆச்சரியப்படுத்துகின்றன.
அந்தக் காலத்தில் ரசித்து படித்த நினைவுகள் ஞாபகம் வந்தன...
பதிலளிநீக்குஇணைப்புகளுக்கும் நன்றி...
பல மலரும் நினைவுகளைக் கிளறி விடும் அருமையான தொகுப்புகள்..பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குஎன்னுடைய காமிக்ஸ் நினைவுகளையும் கிளறி விட்டீர்கள்! என்னிடமும் சுமார் 100 ராணிகாமிக்ஸ் புத்தகங்கள் இருந்து பலரிடம் சென்று இன்று ஒன்றும் இல்லை! காமிக்ஸ் லிங்க் கொடுத்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஇந்தக் காமிக்ஸுகள் புதுமையாகவும்
பதிலளிநீக்குதமிழ்லயும் இருப்பது நன்றாக இருக்கிறது.அறியாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமும். ஃபாண்டம்,மாண்ட்ரேக் இவர்களெல்லாம் ஆங்கிலத்தில் உலவிவந்தார்கள். இத்தனை விச்றிகளா இவர்களுக்கு.!!ஒவ்வொருவரிடமும் ஒரு குழந்தையைப் பார்க்கிறேன்.
தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும் போதெல்லாம் காமிக்ஸ் வாங்கி வருவேன்... இரும்புக் கை மாயாவி மட்டும் தான் நியாபகம் உள்ளது :-)
பதிலளிநீக்குஅந்தகக் கால சிறுவர் கூட்டம் ரசித்தேன் :-)
பதிவும் இணைப்புகளும் மலரும் நினவுகளுக்குள் மூழ்கச்செய்து விட்டன.
பதிலளிநீக்குஇப்பத்திய பிள்ளைகளைக்கு கார்ட்டூன் மாதிரி, அப்போ நமக்கு காமிக்ஸ். இருந்தாலும், இவ்ளோ காமிக்ஸ்கள் தெரியாது எனக்கு. வீட்டிலே ரேஷன்; யார் தயவிலாவது கிடச்சாத்தான் உண்டு. காமிக்ஸைவிட அம்புலிமாமா வகைப் புத்தகங்கள் அதிகம் படித்ததுண்டு.
பதிலளிநீக்குஇத்தனை காமிக்ஸ் புத்தகங்களா? எங்கள் காலத்தில் அம்புலி மாமா வரும். அதில் பரோபகாரி பழனி என்று ஒரு பாத்திரம் வரும். இந்தப் புத்தகமும் எங்கள் வீட்டில் வாங்க மாட்டார்கள். மாமா வீட்டிற்குப் போகும்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை படித்து விடுவேன்.
பதிலளிநீக்குஇதைத்தவிர கண்ணன் என்று ஒரு இதழ் வந்து கொண்டிருந்தது.
என் குழந்தைகள் Tinkle, அமர் சித்ர கதா படித்து வளர்ந்தவர்கள்.
பேரன்கள் டின் டின், ஹாரி பாட்டர் படிக்கிறார்கள்!
ஸ்ரீராம் சார்,
பதிலளிநீக்குஎன்னை மீண்டும் காமிக்ஸ் படிக்கும் சிறுமியாக்கி விட்டது உங்கள் பதிவு.
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்று மலரும் நினைவுகளை கொண்டு வந்து குவித்து விட்டது உங்கள் காமிக்ஸ்.
என்னை என் சிறு வயதிற்கு அழைத்து சென்ற உங்களுக்கு என் நன்றி.
புத்தகவிழாவில் வாங்கிய காமிக்ஸ் மூட்டையில் எதுவுமே தேறவில்லை. தண்டம்.
பதிலளிநீக்குபழைய முத்து காமிக்ஸ் எங்கயாவது இருக்கும். எத்தனை காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தேன்!!!
எங்கள் வீட்டின் எதிரிலேயே ஒரு பெட்டிக்கடை. அங்கே எல்லா வாராந்திர, மாதாந்திர பத்திரிகைகள் விற்பார்கள். காமிக்ஸ் புத்தகங்களும் உண்டு. நமக்கு நெருங்கிய நண்பர் என்பதால், அவர் கடையிலேயே எல்லா காமிக்ஸ் புத்தகங்களையும் படித்து விடுவேன்... அதுவும் விற்பனைக்கு வந்த உடனேயே.....
பதிலளிநீக்குநினைவுகளை மீட்டெடுத்தது உங்கள் பகிர்வு.
ஃபான்டம் இருந்தாலும் புத்தகம் வாங்கிப் படிக்க நேர்ந்ததில்லை. குமுதத்தில் வரும்.அப்போப் படிச்சது தான். குமுதமே அப்பாவுக்குத் தெரியாமல் படிக்கணும். :))))
பதிலளிநீக்குஎங்கள் காலத்தில் சிறுவர் புத்தகம் என ஆட்சி செலுத்தியது, கலைமகள் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த "கண்ணன்" பத்திரிகை ஒன்றுதான். எழுத்தாளர் "ஆர்வி" ஆசிரியராக இருந்தார். பல நல்ல கதைகள் இதில் வந்தவை பின்னர் பைன்ட் செய்யப்பட்டு உறவினர் வீட்டிலிருந்து கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்து படித்ததுண்டு. என் கணவர் சின்ன வயசில் கண்ணன் பத்திரிகையில் எழுதி இருக்கேன் என்றார். இதைத் தவிர சிறுவர்கள், சிறுமிகளை அப்போதெல்லாம் யார் லட்சியம் செய்தாங்க? :))) படித்ததெல்லாம் கல்கண்டு வாரப் பத்திரிகையும் அதில் வந்து கொண்டிருந்த சங்கர்லால் தொடர்களும் தான். சங்கர்லால் பல ஆண்டுகளுக்கு எங்களுக்கு ஹீரோவாக இருந்தார். மாணிக்கம், கத்தரிக்காய், மாது, கமிஷனர் வஹாப் போன்றவர்களை எல்லாம் உயிருள்ள கதாபாத்திரங்களாகவே நினைப்போம்.
அட?? கமென்ட் மாடரேஷன் இருக்குனு சொல்லுதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஅம்புலி மாமாவை விட்டுட்டேனே. அதுவும் சிறுவர் பத்திரிகை தான். அதையும் போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். முக்கியமாய் துர்கேச நந்தினி என்னும் தொடரும், வேதாளம், விக்கிரமன் கதைகளும் கவர்ந்தவையாக இருந்தன. பின்னர் எங்கள் குழந்தைகளுக்காக ஆங்கிலச் சந்தமாமாவும், டிங்கிளும் வாங்கிக் கொடுத்திருந்தோம். அதன் பின்னர் அவர்களால் நானும் ஆர்ச்சி காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சு இப்போ போரடிச்சா ஆர்ச்சி காமிக்ஸ் தான்.:))))
பதிலளிநீக்குபின்னூட்டமிட்ட அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி : வேதாளரின் அப்பா கதை நானும் படித்திருக்கிறேன்! நீங்கள் நினைவு படுத்தியதும்தான் ஓஜோ ரகசியம் நினைவுக்கு வந்தது.
அம்புலிமாமா, கோகுலம் பற்றி சொல்ல விட்டு விட்டேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள்!
நானறிந்து படித்ததாகச் சொல்லியிருப்பது நீங்கள் மட்டுமே:). ‘கோகுலம்’ அதன் முதல் இதழிலிருந்து வாசிக்க ஆரம்பித்திருப்போம். ‘பலே பாலு’ தொடர் அதிகமாக விருப்பப்பட்டது.
பதிலளிநீக்கு