புதன், 24 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை ( 2 )- தொடர் பதிவு

                   
ஆச்சா... எங்க விட்டேன்... ஆங்.. ஸ்டேட்மென்ட்.. இந்த வருடாந்திர ஸ்டேட்மென்ட் அப்புறம் வருடாவருடம் கம்ப்யூட்டரிலேயே போட்டு வந்ததும், மெல்ல மெல்ல கேஜி எனக்கும் தெரியாமல் கணினி சம்பந்தமாக சில விவரங்களை எனக்குள் ஏற்றியிருந்தார். 
                
வர்ட், எக்செல், டாகுமென்ட் கண்ட்ரோல் எஸ் கொடுத்து சேவ் செய்வது, எக்செல்லில் கால்குலேஷன் ஃபார்முலா என்றெல்லாம் தெரிந்தாலும் கணினியைத் தொட்டேனில்லை. தொட்டுத் தப்பாச்சுன்னா மானம் போயிடும் என்று பயம்.  உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்னு...
                      
ஆபீசில் கம்ப்யூட்டர் பற்றிப் பேசுவதில் நான்தான் பிஸ்தா. ஃபிளாப்பி, சிடி என்று பேசி... 
                  

ஆங்... சிடி... சிடி... சிடியை வைத்துத் தனிப் பதிவே எழுதலாம்! இந்த சிடிக்கு கம்ப்யூட்டர் ஆதரவு ரொம்பத் தேவை. 

                 

கிடைக்காத பழைய SPB பாடல்கள், கிஷோர் குமார் பாடல்கள் போன்ற பாடல்கள், கேசெட்டை விட்டு சிடியில் கிடைக்கத் தொடங்கிய நேரம். வீட்டிலும் சிடி ப்ளேயர் இருக்கவே, கிடைக்கும் சிடிக்களைக் காபி செய்ய அடிக்கடி கேஜி வீட்டுக்குப் படை எடுப்பேன்.  
                     
CDக்கள் காபி எடுத்து வைக்கும் கலை பழக்கமானது. அந்த வசதி எல்லாம் மிக ஆச்சர்யமாக இருந்தது. கம்ப்யூட்டரிலேயே பாடல் கேட்கும் வசதி மனதை ஈர்த்தது. 

               

இருந்தாலும் சொந்தமாகக் கம்ப்யூட்டர் வாங்கும் அதிருஷ்டம் 2004 ல்தான் வாய்த்தது. என்னைவிட கேஜிக்கு இதில் ரொம்ப சந்தோஷம். வாங்கும் நேரம் கேஜியைக் கூப்பிட்டு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். இதில் ஒன்றுமில்லை என்றாலும் அவர் என் திருப்திக்காக வேலையை விட்டு விட்டு வந்து உட்கார்ந்து சென்றார்.
                  
இப்போது என் வீட்டில் ஒரு கணினி! அதில் நான் என்ன செய்தாலும் யாரும் பார்க்கப் போவதில்லை. யாரும் சிரிக்க மாட்டார்கள். கேஜியிடம் கேட்டு கேட்டு ஆபரேட் செய்யத் தொடங்கினேன். 
                

"இதோ பாரு... அது வெடித்து விடாது... ஷாக் அடிக்காது... மவுசைக் கையில பிடித்து ஒவ்வொன்றாக ஓபன் செய்... மூடு.  ஹெல்ப் என்றிருப்பதைப் படி... ட்ரை செய்.. என்ன பிரச்னை வந்து விடப் போகுது? ஏதாவது பிரச்னைன்னா இருக்கவே இருக்கு ஃபோனு...அதுல கேளு.."
                   
அப்புறம் அவ்வப்போது பதட்டமான கால்கள் இங்கிருந்து அங்கு பறக்கும்.
              
"அய்யய்யோ... விண்டோ விண்டோ விண்டோவா எக்கச்சக்கமா ஓபன் ஆயிகிட்டே போகுது... என்ன செய்ய?"
                 
"டெஸ்க் டாப் ஸ்க்ரீன் தலை கீழா தெரியுது... என்ன செய்ய?"  
               
"தானாவே ஆஃப் ஆயிடுது... என்ன செய்ய"
                
"ஆன் செய்தால் ஆனே ஆகலை.. மானிடர் கம்முனு இருக்கு.."
                   
இதுபோன்ற ஒவ்வொரு  சந்தேகங்களுக்கும் பொறுமையாக "கடைசியில் என்ன செய்தே... எதை எதை ஓபன் செய்தே? ஏதாவது எரர் மெசேஜ் வந்ததா... ஓகே கொடுத்தியா.. ரைட் க்ளிக் பண்ணு... பிராபர்டிஸ் போ... கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் அடி... ஆல் ப்ரோக்ராம்ஸ் போ.. அசசரிஸ் போ...சிஸ்டம் ரெஸ்டோர்னு இருக்கா.." என்றெல்லாம் டெலிபோனிலேயே என் கணினியையும் என்னையும் ரிப்பேர் செய்தார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நேரே வந்தும், வேறு சில சமயங்களில் அவரது ஆஸ்தான கணினி மருத்துவரை அனுப்பியும், என்னை பட்டை தீட்டினார். இதுவரை முழுசா பளபளக்கவில்லை என்பது வேறு விஷயம்!!
                
2007 முதலே இணைய இணைப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதைய இணைய பிளான்கள் அருகில் நெருங்கும்படி இல்லை. ஓரிருமுறை டயலப் கனெக்ஷனில் சென்றதோடு சரி. அந்தச் சமயங்களில் ரிடிஃப் மெயிலிலும், யாஃகூ மெயிலிலும் சில கணக்குகள் துவக்கி வெட்டியாக வைத்திருந்தேன். 
               
குடும்ப நெட் க்ரூப் ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் என்னைச் சேரச் சொன்னார். ஊ......... ஹூம். நானா? கேட்டு விடுவேனா? உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்.... நோ.. நோ.. எதுக்குக் கையை .ஓங்கறீங்க... நோ வன்முறை!

                     

அப்புறம் 2009ல் இணைய இணைப்புப் பெற்று, உள்ளே வந்து, மெயில் ஐடி பெற்று, விக்கி, கொக்கி, எல்லாவற்றையும் பக்கி மாதிரி படித்துக் கொண்டு வந்தபோது கே ஜி கௌதமன் இட்லிவடை வலைப்பக்கத்தை அறிமுகப்    படுத்தினார். அப்புறம் அவரே ஒரு ப்ளாக் தொடங்கப் போவதாகச் சொன்னார்.  என்ன பெயர் வைக்கலாம் என்று சஜஷன் எல்லாம் கேட்டார். பெயர்கள் சொன்னோம். எங்கள் ப்ளாக்கும் தொடங்கினார்! அங்கு கமெண்ட் போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார். அதையும் கற்றுக் கொண்டு, "எழுதுங்க... அப்பப்போ வந்து கைதட்ட நானாச்சு" என்று உற்சாகம் கொடுத்தவனை "கை தட்டறதா... தம்பி குழுவில் நீயும் ஒருத்தன். உள்ள வா" என்றார். உங்களுக்கே தெரியும்... நான் கொஞ்சம் கூச்ச...
                       
அதையும் மீறி என்னை ,உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து கதை எழுத வைத்து, கட்டுரை எழுத வைத்து வலையுலகில் ஸ்ரீராம் என்றால் நாலு பேருக்குத் தெரியும் என்ற நிலையை உருவாக்கி, வலையுலக நட்புகளைப் பெற்றுத் தந்து, இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம்  கம்ப்யூட்டரால்தான்  சாத்தியமாயிற்று! (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்!!)

             
நன்றி ஆசான்களே....

              
இனி நான் 5 பேரை  பதிவைத் தொடரச் சொல்லிக் கை காட்டணும்... இல்லையா? நான் முன்னர் இது மாதிரி அழைத்த சில பதிவர்கள் நாளது நாள் வரை தொடரவில்லை. எனினும் முயற்சியில் சற்றும் மனம்  தளராது ஒரு ஐந்து பேர்களை இழுத்து விடுகிறேன்.
                     
1)  நகைச்சுவைப் பதிவுகளில் கொடிகட்டிப் பறப்பவர்களில் ஒருவரான அநன்யா மகாதேவன். அநன்யாவின் எண்ண அலைகள் 
              
2) பயணத் தொடர்களிலும்  பதிவுகளிலும் அலுக்காமல் அசத்தும் தில்லி வெங்கட் நாகராஜ்.
               
3) மூத்த பதிவர்களில் ஒருவர், பதிவர், நகைச்சுவையாக(வும்) எழுதக் கூடிய திரு  சாமியின் மன அலைகள் உரிமையாளர் திரு பழனி கந்தசாமி அவர்கள்.
                 
4) அறிவுசார் பதிவுகள் முதல்  நகைச்சுவைப் பதிவுகள் வரை அசத்தும் டிரங்குப்பெட்டி ஸ்பெஷலிஸ்ட் ஹுஸைனம்மா அவர்கள்.
                
5) கண்ணனுக்காக பதிவுகளை விறுவிறுப்புடன் எழுதி வரும், கல்யாணமும் சம்பிரதாயங்களும் பற்றி விலாவாரியாக எழுதி வரும் இன்னொரு மூத்த பதிவர்  கீதா சாம்பசிவம் அவர்கள்.  


இதில் யாரையாவது வேறு யாராவது முன்னரே அழைத்திருந்தால் சொல்லுங்கள். கைவசம் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், மாட்டி விட! 5 பேர்களைத்தானே சொல்லச் சொன்னார் பாலகணேஷ் என்று கையை அடக்கிக் கொண்டு 5 பெயர்கள் சொல்லியிருக்கிறேன்!!
                          

22 கருத்துகள்:

  1. //சொந்தமாகக் கம்ப்யூட்டர் வாங்கும் அதிருஷ்டம் 2004 ல்தான் வாய்த்தது. என்னைவிட கேஜிக்கு இதில் ரொம்ப சந்தோஷம்//
    இருக்காதா பின்ன .தினமும் அவர் வீட்டுக்கு போய் தொந்தரவு பண்ணிக்கிட்டிருந்தா? ஹிஹி
    KG என்ற அருமையான FRIEND, PHILOSPHER AND GUIDE உங்களுக்கு கிடைத்திருக்கிறார். ஒருவர் எழுதுவைவிட கூட்டாக ப்ளாக் எழுதுவது ப்ளாக்கை லைவ்லியாக வைததுக் கொள்ள உதவும். இந்த வழிமுறையை இன்னும் நிறையப் பேர் பின்பற்றலாம்.
    உங்கள் கணினி அனுபவம் சுவாரசியம்
    .

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கணினி அனுபவம் அருமை.ஆனா இவ்வளவுபேரை மாட்டிவிட்டுடீங்களே

    பதிலளிநீக்கு
  3. பக்கத்திலிருந்து சொல்லிக் கொடுத்து ஊக்குவித்த, திரு கெளதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    நான் நினைத்திருந்த இருவர் இதில் உண்டு... மாட்டி விட ஐந்து பேர்கள் கிடைப்பார்களா...? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. சுவையான அனுபவங்கள் தான்...

    கூச்ச சுபாவம் இருக்கும்போதே இவ்வளவுன்னா... இல்லாம இருந்தா.... :))))

    ஒரு ஓரமா நின்னு எல்லாரையும் வேடிக்கைப் பார்த்துட்டு போலாம்னு நினைச்சுருந்தேனே..... என்னையும் இப்படி களத்துல இழுத்து விட்டுட்டீங்களே ஸ்ரீராம்.....

    எழுதிடறேன்...... லேட் ஆனாலும்....

    பதிலளிநீக்கு
  5. அவ்வ்வ்வ்... என்னையுமாஆஆஆ... நான் ரொம்ப ரொம்ப ஷை டைப்பாச்சே.... எப்படி எழுதப் போறேனோ...

    (தகவல் சொன்ன தி.தனபாலனுக்கு நன்றி)

    அப்புறம்.. நீங்க சொல்லிருக்க எரர்ஸ் - கேஜியிடம் கேட்ட டவுட்ஸ் எல்லாம் ஓக்கேதான், ஒண்ணைத் தவிர...

    //"டெஸ்க் டாப் ஸ்க்ரீன் தலை கீழா தெரியுது... என்ன செய்ய?" //

    இப்படியுமா நடக்கும்? சாத்தியமா..!! இல்ல, அந்தளவுக்கு உங்க கணினியப் படுத்திட்டீங்களா??!! அய்ய்யோஓ பாவம்!!

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா. உலக மகா கதை சொல்லியே!கூச்ச ஸ்வபாவம் உம்மை விட்டுப் போவதாக.
    கௌதமன் சாருக்கு ஒரு பெரிய வணக்கம். நல்லதொரு ஞானியை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.:)

    பதிலளிநீக்கு
  7. இரண்டு பதிவுகளையும் படித்தேன்... தங்கள் கம்ப்யூட்டர் அனுபவத்தை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  8. //வர்ட், எக்செல், டாகுமென்ட் கண்ட்ரோல் எஸ் கொடுத்து சேவ் செய்வது, எக்செல்லில் கால்குலேஷன் ஃபார்முலா என்றெல்லாம் தெரிந்தாலும் கணினியைத் தொட்டேனில்லை.//


    இதெல்லாம் என்னங்க??:P:P:P:P

    அது சரி, எங்கே உங்களை விரதத்தின் போது பார்த்தது! அப்புறம் மத்தியானமா வரவே இல்லை! ஆப்ப்பீச்சிலே லீவு கிடைக்கலையா? :)))))

    பதிலளிநீக்கு
  9. //இரண்டு பதிவுகளையும் படித்தேன்... தங்கள் கம்ப்யூட்டர் அனுபவத்தை ரசித்தேன்...//

    இன்னொண்ணு வேறே இருக்கா? ஹிஹிஹி,அதையும் படிக்கிறேன். :))) ஏற்கெனவே கணினி கற்க நேர்ந்த விபத்து பற்றிச் சொல்லி இருக்கேனே! தேடிப் பார்த்து மீள் பதிவு போட்டுடவா?

    பதிலளிநீக்கு
  10. அனைத்தும் அருமை. ரஸித்தேன்.

    பகிர்வுக்கும், குறிப்பாக மற்றொன்றுக்கும் மிக்க நன்றிகள், ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    பதிலளிநீக்கு
  11. கம்ப்யூட்டர் கத்துண்ட கதை நன்னாருக்கு! பேஷ்! பேஷ்! பிரமாதம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. உங்க கணினி அனுபவங்கள் அருமை. உங்களை பதிவுலகுக்கு கொண்டு வந்த கே.ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு


  13. ஸ்ரீராம்,

    நிஜமாகவே திரு கேஜி அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லையென்றால் எங்கள் ப்ளாக் ஒரு அருமையான எழுத்தாளரை இழந்திருக்குமே!

    நீங்கள் மாட்டிவிட்ட ஐந்து பேர்களும் எழுதுவதில் புலிகள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஐந்து பேர்களில் நான்கு பெண்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி!

    மாட்டிக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. வெங்கட்டை மாட்டி விட்டாச்சா? பேஷ்! அனன்யா மேடம் எழுதறதப் படிக்கவும் ஆவலோட வெயிட்டிங்..! ஏன்யா, நான் எழுதறதல்லாம் படிக்க ஆவலில்லையான்னு கீதா மேம் தலையில குட்ட வர்றாங்க... ஹச்சச்சோ... எல்லாரின் எழுத்தையும் படிக்க ஆவலோட வெயிட்டிங்ப்பா! நீங்க ஒரு கூச்ச சுபாவிங்கறது உங்களைவிட அதிக கூச்ச சுபாவியான எனக்கு (மட்டும்)தான் நல்லாத் தெரியும் ஸ்ரீராம். அசத்தலா அனுபவங்களைப் பகிர்ந்த உங்களுக்கும்... உங்களை வலையில இழுத்துப் ப‌ோட்ட மீனவன் ஆகிய கல்யாணமகாதேவி கோபால கெளதமன் ஸாருக்கும் மனம் நிறைய நன்றி!

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் அண்ணா.. கலக்கல்ஸ் ஆஃப் இண்டியா.. முக்கியமா அது எர்ரர் காட்டும்போது கன்னா பின்னா டென்ஷன் ஆயிடுவோம்.. என்ன தான் பண்றதுன்னு கை கால் ஓடாது.. :) கட்டாயம் எழுதறேன்.. இப்படி ஒரு டாப்பிக் கிடைக்காதான்னு ஏங்கி இருக்கேனே.. கலக்கியுடுவோம்.. ஹெ ஹெ.. ஐய்யாம் வெரி ஹேப்பி... ஸ்டாட் மீஸிக்க்க்க்க்க்க்!

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம்! கம்ப்யூட்டர் கதைகளா?

    பதிலளிநீக்கு
  17. July 24, 2013 at 9:28 PM
    Ananya Mahadevan said...

    // சூப்பர் அண்ணா..//

    (இப்படி) ஒரு டாப்பிக் கிடைக்காதான்னு ஏங்கி இருக்கேனே.. !!

    பதிலளிநீக்கு
  18. ஹா ஹா ஹா ரசித்துப் படித்தேன் ஸ்ரீராம் சார்...

    //அதையும் மீறி என்னை ,உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து கதை எழுத வைத்து, கட்டுரை எழுத வைத்து வலையுலகில் ஸ்ரீராம் என்றால் நாலு பேருக்குத் தெரியும் என்ற நிலையை உருவாக்கி, வலையுலக நட்புகளைப் பெற்றுத் தந்து, இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த, சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம் கம்ப்யூட்டரால்தான் சாத்தியமாயிற்று! (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்!!)

    // இந்த பாராவின் மூலம் உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.. பின்னால் தெரியும் சூட்சுமம் :-)

    இங்கயாவது எனக்கு கொஞ்சம் ஸ்பெஸ் விட்டுவையுங்க மக்காஸ்

    பதிலளிநீக்கு
  19. சுவாரஸ்யம்:)! அதுசரியே கணினி, இணையம் திறந்த விட்ட கதவுகளின் வழியே கிடைத்த உலகம் மிகப் பெரியது. கெளதமன் அவர்களுக்கும் எங்கள் ப்ளாக் குழுவிற்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. //இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த, சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம் கம்ப்யூட்டரால்தான் சாத்தியமாயிற்று! (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்!!)

    // இந்த பாராவின் மூலம் உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.. பின்னால் தெரியும் சூட்சுமம் :-) //

    பின்னால் தெரியும் சூட்சுமம்! - என்னோட முதுகுல டின் கட்ட ஏதோ சதி செய்கிறார் சீனு ...

    ஹெல்ப் மீ, ஹெல்ப் மீ
    போலீஸ், போலீஸ்!
    முஜே பச்சாவ்!!

    பதிலளிநீக்கு
  21. எவ்ளோ பெரிய கதை சுவாரஸ்யமா....வெற்றிதான் !

    பதிலளிநீக்கு
  22. உங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் எனது முதல் கணினி அனுபவம்......

    http://venkatnagaraj.blogspot.com/2013/07/blog-post_29.html

    முடிந்தபோது வந்து படித்து கருத்து சொல்லுங்கள......

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!