செவ்வாய், 23 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - தொடர் பதிவு

            
அன்பர்களே... நண்பர்களே... முதற்கண், என்னை இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்த பால கணேஷுக்கு நன்றி. 
             
எவ்வளவு சௌகர்யம் பாருங்க... யோசிச்சு யோசிச்சு  என்ன எழுதறதுன்னு நம்ம மண்டைய நாம உடைச்சுக்க வேணாம்! சுலபம்!
                
தியேட்டரில் படம் பார்த்தபோது வீட்டிலேயே சினிமா பார்க்க டிவி வரும் என்று கண்டேனா... அது போலத்தான் கம்ப்யூட்டரும்! வீட்டில் நானும் ஒரு கம்ப்யூட்டர் வைத்துக் கொள்வேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.    
                                                               

பள்ளிப் படிப்பு முடிந்தவுடனேயே TNPSC, க்ரூப் 4 எழுதத் தொடங்கிய ஆசாமி நான்! தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டி நானும் மதுரை கோ புதூர் 'ரத்னா இன்ஸ்டிடிட்யூட்', அப்புறம் அண்ணா நகர் 'சத்யா இன்ஸ்டிட்யூட்' இரண்டிலும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் உயர்நிலைத் தட்டச்சு தேறினேன்.
                    
சுருக்கெழுத்துதான் பூச்சி காட்டியது. ஏனோ மனம் அதில் பதியவில்லை. பல வகுப்புகள் சென்றும் தொடக்க நிலையிலேயே இருந்தேன். இன்ஸ்டிட்யூட் ஓனர் நண்பர்தான் என்பதால் கண்டிப்பு காட்டவில்லை! சிரித்துக் கொண்டே "ஸ்ரீ... நீங்க இந்த வேலைக்கு போகப் போறதில்லன்னு நல்லாத் தெரியுது" என்று நாகரீகமாகச் சொன்னார். புரிந்தது!
                 
அப்புறம் என்ன, TNPSC, SSC,BSRB, RSC என்று படையெடுத்துக் கொண்டிருந்தேன்.      

                                                    

'முடிஸ் எஸ்டேட்'டில் ஒரு இன்டர்வியூவுக்குச் சென்றேன். பொள்ளாச்சியிலிருந்து வாந்தி எடுத்துக் கொண்டே, கொண்டை ஊசி வளைவுகள் வழியாக மலை ஏறியதில் அனுபவப் பாடம், இது போன்ற மலைப் பிரதேசங்களுக்கு பஸ்ஸில் செல்லும்முன் பரோட்டா  சாப்பிடக் கூடாது! 
               
அந்த எஸ்டேட்டில் என் தட்டச்சுத் தகுதிக்கு வேலை தயாராக இருந்தாலும் நான் அதை ஏற்கத் தயாரில்லாததற்கு இரண்டு காரணங்கள். அதில் ஒன்று அந்த ஊரில் அரை மணிக்கொருதரம்தான் சாலையில் ஒரு ஆள் நடந்து போவதைப் பார்க்க முடிந்தது. இரண்டாவது காரணத்தை  இங்க சொல்லமாட்டேன்ல.....! எனவே சம்பளம் தவிர, வீடு என்ற பெயரில் பங்களா ஒன்று வாடகை இல்லாமல் தருகிறோம், ஒரு ஆள் வேலைக்குத் தருகிறோம், மாதம் 10 கிலோ அரிசி இலவசம், என்றெல்லாம் வந்த சலுகைகளை உதறி மதுரைக்கே திரும்பினேன். இதில் எனக்கு அடுத்த இடத்தில் இருந்த வேலூர்க்கார ஜேம்ஸுக்கு ஏக சந்தோஷம். ஊர் திரும்பியதும் அப்பா முகத்தில் எள் மற்றும் கொள். 5 வருடம் 'பாண்ட்' கையெழுத்திட்டு, எழுதிக் கேட்டார்கள் என்று சொன்னேன். அது ஓரளவு உண்மையும் கூட! 3 வருட பாண்ட் கேட்டார்கள்.

            
                                   

பசுவைப் பற்றி விழுந்து விழுந்து படிச்சுட்டு பரீட்சைக்குப் போனானாம் ஒருத்தன். அங்க போனா தென்னைமரம் பற்றி  கேட்டுட்டாங்களாம். நம்மாளு என்ன பண்ணினானானாம் (ச்சே... ஒரு னா எக்ஸ்ட்ரா ஆயிடுச்சு) பசுவைப் பற்றி விலாவாரியாக இது மாதிரி இது மாதிரி பசு ஒரு சாதுவான பிராணி, இது மாதிரி இது மாதிரி பசு பால் கொடுக்கும், இது மாதிரி இது மாதிரி பசுவைத் தெய்வமாக வணங்குவார்கள் என்றெல்லாம் எழுதி விட்டு கடைசி வரியில் இந்தப் பசுவை  கேள்வியில் கேட்கப்பட்டுள்ள தென்னை மரத்தில்தான் கட்டுவார்கள் என்று முடித்தானாம்.   
                  
அது மாதிரி என்ன எழுதினாலும் எப்படியும் கடைசியில் கணினி பற்றி(யும்) கடைசியில் வந்து விடும்... ஹிஹி... 
                       
பதிவ எங்க நிறுத்தினேன்.... ஆங்...இதுபோல சிலபல சம்பவங்களுக்குப் பின் விடாது அலைந்து, தலையால் தண்ணீர் குடித்து ஒரு வேலையில் சேர்ந்தேன். எனக்கு மேலே இருந்த சீனியர் எனக்கு 'வேலை கற்றுக் கொடுக்கும்' (அப்படித்தான் அவர் சொல்லிக் கொண்டார்) போதே வருடாந்திர அறிக்கையை தயார் செய்யும் பொறுப்பை என் தலையில் கட்டினார். (கெக்கே.... தலைப்பு மேட்டருக்கு வந்துட்டேன்ல...).  இரண்டு A3 ஷீட்டை ஒட்டித் தயார் செய்யும் அந்த பேலன்ஸ் ஷீட் வேலையைப் பற்றி கேஜீயிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது 'இங்கு வா, அதைக் கம்ப்யூட்டரில் முடித்துத் தருகிறேன்' என்றார்.

                  
                         

அதுவரை லேசுபாசாய் இந்தக் கம்ப்யூட்டர் பற்றிக் கேள்வி பட்டிருந்தேன்.  ஒரு அலாவுதீனின் அற்புதக் கருவி போல மனதில் அதைப்பற்றி ஒரு பிம்பம் இருந்தது. எனவே, 'ஆஹா... சீனியர் ஒரு மாதம், ஒன்றரை மாதம் இழுக்கும் வேலையை நாம் அந்த மேஜிக் பாக்ஸை வைத்து ஒரே நாளில் முடித்து விடலாம்' என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். லோட்டஸ் என்றார், வர்ட்ஸ்டார் என்றார். அவை இந்தக் காதில் நுழைந்து அந்தக் காதில் வெளியேறியது. 'கொக்குக்கு ஒண்ணே மதி' என்று கையில் பெரிய பெரிய பேப்பர்களை வைத்துக் கொண்டு அதை எப்போது அவர் கையில் வாங்கிப் பார்ப்பார் என்று நின்றிருந்தேன்! ஸாரி, உட்கார்ந்திருந்தேன்.   
                
"நீ பாட்டுக்கப் போட்டுக்கோ" என்றார். பாக்கா என்ன நான் பாட்டுக்கப் போட்டுக்க? கணினி பற்றி நான் என்னத்தைக் கண்டேன்? கேஜீயிடம் தெரியாது என்று சொல்லவும் முடியாது. 
                     
ஏனென்று கேட்பவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவும். லிங்க் க்ளிக்கி படிக்காமல் தப்பித்து வருபவர்களைப் பசித்த புலி தின்னட்டும். 

                                                     
               
அப்போதுதான் கம்ப்யூட்டரையே பார்க்கிறேன். என் முதல் கேள்வியே என்னைப் பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு'ம்' உதவியாயிருந்தது.    
                           
"இதுல சினிமா பார்க்க முடியுமா?" திரும்பி நிதானமாக என் முகத்தை ஒரு தரம் பார்த்தார். 
                  
அப்புறமும் அவர் எவ்வளவு சொல்லியும் 'மவுசை'க் கூடத் தொட மறுத்து, சற்றுத் தள்ளி ஜாக்கிரதையான தூரத்திலேயே நின்று பார்த்தேன். நான் தொட்டு ரிப்பேரானால் கூட கவலைப் படாதவர் கேஜி. மக்கள் சுயமுயற்சியில் கற்றுக்,கொள்வதை விரும்பி, ஆதரித்துப் பாராட்டுபவர். 
                   
குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் கொடுத்து அவை அக்கக்காகப் பிரித்து விளையாடுகின்றன என்று சொன்னால்   பாராட்டுவார். அவர்களைத் தடுக்கக்கூடாது என்பார்.    
                                                            
உங்கள் எல்லோருக்குமே தெரியும், நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்!!  அதிகம் பேச மாட்டேன்.  (சரிதானே சீனு? :-) ஆனாலும் கேஜி 'இவனை ஏண்டா அழைத்தோம்' என்று..........  நினைக்கவில்லை! அதான் கேஜி!      
   
(யாருங்க அங்கே தும்மறது!)    
             
"சரி, உட்காரு" என்று சொல்லி அவரும் கூட அமர்ந்தார். பேப்பரை அவர் பக்கம் நீட்டியபடி நான் இருக்க, 'அதைக் கையிலேயே வச்சுக்கோ... இங்க பாரு, இதை முதலில் இப்படி ஓபன் செய்யணும்... ஒண்ணொண்ணா சொல்லு! ஃபார்மேட் எப்படியிருக்கு காட்டு!' என்றார்.
          
இங்கு கேஜி பற்றிக் கொஞ்சம். 
            
எங்கள் வீட்டிலேயே முதலில் கணினி வைத்திருந்தவர் அவர். 80 களிலேயே வாங்கி விட்டார். வாங்கிக் கற்றுக் கொண்டதுதான். அவர் எந்த கணினி வகுப்புக்கும் போனதில்லை. எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை உடனே அக்குவேறு ஆணி வாகக் கழற்றி ஆராய்ந்து விடுவார். என்ன மெக்கானிசம் என்று தெரிந்து  அதைத் தானே ஒன்று சொந்தமாகத் தயாரித்து விடுவார். 60 களில், அப்போது இவர் தானே தயாரித்த ரேடியோ ஒன்றில்தான் அவரது அம்மா லண்டன் பி பி சி வரைக் கேட்பார். ரேடியோ என்றால் நீங்கள் டிரான்சிஸ்டர் மாதிரிக் கற்பனை செய்யக் கூடாது. ஒரு போர்ட் இருக்கும், அதிலிருந்து இரண்டு வொயர்கள் ஸ்பீக்கரில் இணைக்கப் பட்டிருக்கும் அவ்வளவுதான்! 
    
தீபாவளிக்கு வெடிவகைகள் வாங்க இவர் கையில் தாத்தா காசு கொடுத்தபோது என்ன நடந்தது என்பது போன்ற விவரங்களும், 80 களிலேயே தொட்டியில் தண்ணீர் நிரம்பியவுடன் தானாக நின்று, ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தவுடன் தானாக 'ஆன்' ஆகும் மோட்டார் ஒன்றை இவரே  தயாரித்ததுவும், கொசுக்களை விரட்ட அல்ட்ராசானிக் மெஷின் இவர் தயாரித்ததும் அப்புறம் தனியாக வேறொரு பதிவில் சொல்கிறேன். இது கம்ப்யூட்டர் பற்றிய தொடர் பதிவு. 

[கணேஷ்... ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என்று நொந்துகொள்வது தெரிகிறது. இதோ.. இதோ... சப்ஜெக்டுக்கு வருகிறேன்]

ஆக என்ன சொல்ல வருகிறேனென்றால், கம்ப்யூட்டர் பற்றிய அறிவும் இவருக்கு நிறைய. எனக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமல்லாமல், இது போன்ற அரசு அலுவலக வேலைகளைத் தன்னால் செய்ய முடியுமா என்று பார்க்கவும்தான் என்னை அழைத்திருந்தார்.

ஜாக்கிரதையான தூரத்தில் ஸ்டூலில் அமர்ந்து நான் டிக்டேட் செய்யச்செய்ய, அவர் டைப்பிக் கொண்டே வந்தார். ஒரு நாளில்  முடியும் என்று நினைத்தது ஒருவாரம், பத்து நாள் ஆனது. கம்ப்யூட்டர் ஒரு ஸ்ட்ரோக்கில் அத்தனை கணக்கையும் நொடிப்பொழுதில் போட்டதும், காபி பேஸ்ட் வசதியில் நிறைய விஷயங்களைச் சுலபமாக முடித்ததும் அதை அவர் வைத்திருந்த பிரிண்டரில் பிரிண்ட்  எடுத்ததும்  ஆச்சர்யங்கள்.

                                                  
ஆபீஸில் கொடுத்ததும், முடித்த ஷீட்டில் சில  தவறுகளை என் சீனியர் கண்டுபிடித்து, தான் கம்ப்யூட்டரை விடச் சிறந்தவராக்கும்' என்று நிறுவ முற்பட்டதும், அது மனிதத் தவறுகள், 'இன்புட்'டில் வந்த தவறுகள் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லியும் புரிய வைக்க முடியாமல் வேறு வழியில்லாமல் உள்ளுக்குள் பல்லைக் கடித்துக் கொண்டு "சார்...நீங்க ஒரு மேதை" என்று உ.சு.வா அசோகன் வாத்யாரைப் பார்த்துச் சொன்ன மாதிரி சொன்னதும் இந்தப் பதிவுக்கு வேண்டாம்!   
      
கணேஷ் ஆட்சேபிக்கக் கூடும்! 90 இல் அந்த அலுவலகத்தில் ஹெட் ஆபீஸுக்கு கம்ப்யூட்டரில் இந்த ஸ்டேட்மென்ட்டைக் கொடுத்த ஒரே ஆபீஸ் எங்கள் ஆபீஸ்தான்! 'பெருமை எல்லாம் .................. எனக்குத்தான்' என்று சொல்ல ஆசைதான்.ஆனால் சீனியர் அந்தப் பெருமையை தான் செய்ததாக சொல்லிக் கொண்டார் என்று அப்புறம் தெரிந்தது. சீனியர்கள் அராஜகம் ஒழிக!

           
தொடர் பதிவு என்றால் தொடரும் போடணுமோ.... 
                        
நாம ரொம்ப நியாயமான ஆசாமியாச்சே... பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது... உஸ்... அப்பாடா.... கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு அப்புறம் தொடரவா.... என்னது..? அடுத்துத் தொடரும் ஐந்து பேர்கள் யாரா....? கொஞ்சம் இருங்க சாமிகளா... நானே இன்னும் முடிக்கலை.... 
               
[தொடரும்]
                      

24 கருத்துகள்:

  1. //உங்கள் எல்லோருக்குமே தெரியும், நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்!! அதிகம் பேச மாட்டேன்// உண்மைன்னு நிரூபிக்க ஒரு நெடுந்தொடர் எழுதலாம்ன்னு இருக்கேன் ஹா ஹா ஹா

    //நானே இன்னும் முடிக்கலை.... // ஹா ஹா ஹா பார்ரா ஸ்ரீராம் சார் கூட நாவல் எழுத ஆரம்பிச்சிட்டாறு...

    கே.ஜி சார் கண்ணால பாத்தாலே ப்ரோக்ராம்ல இருக்க எரர் கரெக்ட் ஆகணும், எதாவது தொழில் நுட்பம் இருக்கா

    பதிலளிநீக்கு
  2. இன்னும் முடியலையா....! இதுக்கே கண்ண கட்டுதே!!!

    அடுத்து யார கோத்து விடப் போறீங்க! பாவம் அந்த மக்கா....

    நல்லாருக்குன்னா, அந்த மாடு, தென்னை மரம் கதை சூப்பர்....

    பதிலளிநீக்கு
  3. இரண்டு பதிவுகளில் முடித்து விடுவீர்களா...? சந்தோசம்... சிஷ்யர் சொன்ன காதல் கடிதம் கூட எழுதி விடலாம் போலே...! குரு சொன்ன தொடர்பதிவு இருக்கே சிரமம் தான்... (உங்களைப் போல சப்ஜெக்டுக்கு வர) நானும் ஏதோ "சிறிது" எழுதி வைத்துள்ளேன்... நீளளளளளமாக உள்ளதால் வெட்ட வேண்டும்... எப்படியும் அடுத்த வாரத்தில் தொடர் பதிவு பகிர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. கம்ப்யூட்டர் தொடர் பதிவா. ஹ்ம்ம். கொஞ்சம் கஷ்டம் தான்.:)))))))
    ஆனாலும் நகைச்சுவை தொடர்வதால்

    படிக்கலாம் ஸ்ரீராம். வெற்றி உமதே.

    பதிலளிநீக்கு
  5. படிக்க நல்ல சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தொடரட்டும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. நீங்க யாரையல்லாம் மாட்டி விட்டிருக்கீங்க என்று பார்க்கத்தான் வந்தேன்.....நீங்களே இன்னும் முடிக்கலாயா?
    பலவிடங்களில் வாய்விட்டு சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்! தொடருங்கள்.
    நீங்கள் சொல்லும் கேஜி கௌதமனா?

    மாமா பதிவையும் படித்து கிறுகிறுத்துப் போனேன்! என்னை பசித்த புலி தின்னாது, இல்லையா?

    பதிலளிநீக்கு
  7. //நீங்கள் சொல்லும் கேஜி கௌதமனா?//
    அது நான் இல்லைங்கோ! ஆனால் அந்தக் கேஜியிடம் நானும் நிறைய குட்டுகளும், பாராட்டுகளும் பெற்றதுண்டு.

    பதிலளிநீக்கு
  8. உங்களை பத்தி தெரிஞ்சுகிட்டோமோ இல்லையொ கேஜி பற்றி தெரிஞ்சிக்கிட்டோம்.ஒரு விஞ்ஞானியா இல்ல இருந்திருக்காரு.

    பதிலளிநீக்கு
  9. ////நீங்கள் சொல்லும் கேஜி கௌதமனா?//
    அது நான் இல்லைங்கோ! //

    நானும் அப்படித்தான் நினைச்சேன்...

    பதிலளிநீக்கு
  10. தொடர் பதிவுன்னா, ‘தொடர்கதை’ மாதிரின்னு நாங்க நம்பிகிட்டிருக்கோம்னு நீங்க நம்பிகிட்டிருக்கீங்கன்னு புரியுது. :-))))

    பதிலளிநீக்கு
  11. தொடர் பதிவுன்னா தொடரா எழுத வேண்டும் என்ற புதிய கண்டுபிடிப்பினை கண்டறிந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்! சுவாரஸ்யமாகத்தான் சொல்லிவர்றீங்க! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. கணினி என்றாலே சுகமான அனுபவம்தான்... நல்லா இருக்கு...அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. இன்னும்முடிக்கலியா?5பேருக்காகநீங்களேஎழுதிடுங்கோ

    பதிலளிநீக்கு
  14. பதிவு ரொம்ப நீள்ள்ள்ளளளமாப்போகுது...

    தொடர் பதிவு தொடரத்தானே வேணும்... சரித்தான் ஏதோ முடிவுல இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது... நடக்கட்டும் நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  15. குழந்தைகள் படைப்புகள் பிடிக்கும் தானே....? http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/All-my-time.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
  16. ஆஹா.... தொடர்பதிவுலேயே ஒரு தொடரும்.... : நடத்துங்க!

    கொடுத்திருந்த சுட்டிகளையும் சுட்டி படித்து விடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  17. /முதல் கேள்வியே/ நல்ல கேள்வி.

    பசித்த புலி என்னை விட்டு விடும்:)!

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் மாட்டு தென்னை மரம் கதை அருமையாக இருந்தது. தொடர் பதிவு என்பதால் தொடரும் போட்டிருக்கிறீர்களோ?
    தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அது மாதிரி என்ன எழுதினாலும் எப்படியும் கடைசியில் கணினி பற்றி(யும்) கடைசியில் வந்து விடும்... ஹிஹி..//
    நல்ல நகைச்சுவை பதிவு.

    கடைசியில் கணினி எப்படி கற்றுக் கொண்டீர்கள் என்பதை
    தொடர்ந்து வந்து படிக்கிறேன். .
    தானே தயாரித்த ரேடியோ படித்தேன் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. இரண்டு பதிவுகளையும் படித்தேன்... தங்கள் கம்ப்யூட்டர் அனுபவத்தை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  21. //ஏனென்று கேட்பவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவும். லிங்க் க்ளிக்கி படிக்காமல் தப்பித்து வருபவர்களைப் பசித்த புலி தின்னட்டும். //

    ஓஹோ, அந்தக் கேள்வியின் நாயகன் இவர்தானா?

    அது சரி, பதிவிலே கணினி பத்திக் கடைசியிலே சொன்னாப் போதும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  22. நான்தான் கம்ப்யூட்டர் ப்ராப்ளம்னால லேட்டா கவனிச்சிருக்கேன். தொடர் பதிவுன்னா தொடரும் போடணும்ங்கற சிம்பிள் விஷயம் தெரியாம ஒரே பதிவுல முடிச்சுட்டியேடா கணேஏஏஏஷ்!ன்னு தலையில குட்டிக்கிட்டேன். நீங்க அண்ணா நகர் இன்ஸ்டிட்யூட்டா? நான் தபால்தந்தி நகர். தென்னைமரம், பசுமாடு கதை சூப்பர். முதல் அனுபவத்தையும் அழகா இங்க சொல்லிட்டிங்க... ரெண்டாம் பாகத்தைப் படிக்க ஆவலுடன் கோயிங் மீ!

    பதிலளிநீக்கு
  23. தொடர்கதை.. ஐமீன் தொடர்பதிவு சுவாரஸ்யமாப்போகுது.

    பதிலளிநீக்கு
  24. கணணிக் கலவரம் இவ்ளோ எழுதமுடியுமான்னு இருக்கு.தொடரட்டும் நகைச்சுவையோடு !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!