சனி, 6 ஜூலை, 2013

பாசிட்டிவ் செய்திகள் 30,ஜூன் 2013 முதல், 6 ஜூலை, 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

1) வாழ்க்கையில் தேடல் அவசியம்! கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் அதிகம் படித்து, போலீஸ் பணியிலிருந்து கல்லூரி பேராசிரியராக மாறிய, ஆறுமுகம்:  
                                                      


"நான், மதுரையின், தேனூரை சேர்ந்தவன். சிறுவயதிலிருந்தே அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஏழ்மை நிலை காரணமாக, கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் போதே, போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் மண்டபம் முகாமில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஒரு பெரும் பணக்காரரின் கல்லறையில், அவர் பெயர் மற்றும் அவர் படித்த படிப்புகள் மட்டுமே இருந்தன. இதைப் பார்த்தது, என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 

என்ன தான் பணம் சேர்த்தாலும், படித்த படிப்பு தான் கூட வரும் என்பதால், மீண்டும் படிக்க எண்ணினேன். ஏற்கனவே, தமிழில் இளங்கலை முடிந்திருந்தால், தொலைதூர கல்வி மூலம், எம்.ஏ., - எம்.எட்., - எம்.பில்., படித்து முடித்தேன். கிடைக்கும் ஓய்வு நேரங்களில், நூலகம் செல்வதை வழக்கமாக்கினேன். பண்டைய மதுரையில், என் சொந்த கிராமமான தேனூரில் தான், சித்திரை திருவிழா நடந்ததாக, தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிந்தேன். அதையே ஆய்வு கட்டுரையாக சமர்ப்பித்து, எம்.பில்., பட்டம் பெற்றேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில், ஐந்து ஆண்டுகள் ஈடுபட்டேன். காவல் துறை கற்று தந்த, விசாரணை செய்யும் திறன், கோவில் குறித்த தகவல்களை ஆராய உதவின. இதனால், மதுரையின் முக்கிய மூன்று கோவில்கள் குறித்த தகவல்களை சேகரித்து, நூல்களாக வெளியிடும் அளவிற்கு, என் தமிழ் திறனை வளர்த்து கொண்டேன். தற்போது, தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதால், போலீஸ் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இளம் வயதில் படித்த மதுரை செந்தமிழ் கல்லூரியிலேயே, பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். போலீஸ் வேலை கிடைத்து விட்டதே என, படிக்காமல் இருந்திருந்தால் இன்று, ஒரு பேராசிரியராக மாணவர்கள் முன்னால், இருந்திருக்க முடியாது. வாழ்வில், என்றுமே ஒரு தேடல் இருக்க வேண்டும். ஏனெனில், இவ்வுலகில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

2) கங்கோத்ரியிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது பாகோரி என்ற கிராமம். விவசாயிகளும் நெசவாளர்களும் நிறைந்த இந்த கிராமம் ஓர் அறிவிக்கப்படாத முகாமாகவே செயல்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் தங்கள் ஊரில் சிக்கிக் கொண்ட நூற்றுக் கணக்கான யாத்ரீகர்களுக்கு ஊரே சாப்பாடு போடுகிறது. இதற்காக ஆப்பிள் கூடத்தில் பொது சமயல்கூடம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டில் இருந்தும் சமையல் பொருட்கள் கொண்டுவரப்பட்டு, சமைக்கப்படுகிறது. "எங்களிடம் கோதுமை இருக்கும்வரையிலும் நாங்கள் சமைத்துத் தருவோம்" என்கிறார்கள் இவர்கள் நெகிழ்ச்சியுடன். (ஆனந்த விகடன்)

3) மேடவாக்கம் பிரதான சாலை, பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பு, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே போக்குவரத்து போலீசார் போல, சீருடை அணிந்த முதியவர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபடுவதை காணலாம்.அவரின் சைகைக்கு கட்டுப்பட்டு வாகனங்கள் நிற்கின்றன; செல்கின்றன. உரிமம் பெற முடியாத வயதில் வாகனங்களை ஓட்டி வரும் சிறார்கள், இருசக்கர வாகனத்தில் அளவுக்கு அதிகமான நபர்களோடு வருவோரை லாவகமாக ஓரம் கட்டுகிறார்.சிறார்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி, அவர்களின் பெற்றோரை வரவழைத்து வாகனத்தை ஒப்படைக்கிறார். அவரின் கனிவான பேச்சுக்கு கட்டப்பட்ட பலர் மன்னிப்பு கேட்டு செல்கின்றனர்.அவர் மடிப்பாக்கத்தை சேர்ந்த பராமனந்தன், 61.அவரிடம் பேசியதில் இருந்து...
                                                   

எப்போது முதல் இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், 33 ஆண்டுகள் மூத்த உதவியாளராக பணிபுரிந்தேன். 2010ம் ஆண்டு ஓய்வு பெற்ற பின், போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?
ஓய்வு பெற்று விட்டால், வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதேநேரம் சுயநலத்திற்காக பொருள் ஈட்ட வேண்டும் என்றும் நினைக்க கூடாது.
ஓய்வு பெறும் வரை குடும்பத்திற்கு உழைக்க வேண்டும். ஓய்வு பெற்ற பின் நமக்கு ஓய்வு கிடைக்கும் வரை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்க வேண்டும். இதுதான் என் லட்சியம். அதை நோக்கி தான் பயணிக்கிறேன்.

இதில் உங்கள் அன்றாட பணிகளை எப்படி வகுத்து கொள்கின்றீர்கள்?
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரையிலும் போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடுவேன்.இடைப்பட்ட நேரத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டும் பெண்கள், அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வருவோர், உரிமம் பெற வயதில்லாமல் வாகனங்களை ஓட்டி வரும் சிறார்களை நிறுத்தி, என்னால் முடிந்த அளவு அறிவுரை வழங்குவேன்.என் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், போக்குவரத்து போலீசாருக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப தேவையை எப்படி சமாளிக்கின்றீர்கள்?
என் குடும்பம் வறுமையில் தான் வாடுகிறது. ஓய்வூதியம் இல்லை. வாடகை வீடு என, தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அப்படி இருந்தும் மக்கள் சேவை என்ற லட்சியத்தை விடுவதில்லை.நான் செய்யும் பணிக்கு ஊதியமும் எதிர்ப்பார்க்கவில்லை. இருப்பினும் போலீசார் கொடுப்பதை வாங்கி கொள்வேன்.எனக்கு அரசு உதவி புரிய நினைத்தால், பஸ் பாஸ் வழங்கினால் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வேன். என் உடல் தளர்ந்து போகும் வரை சமூக சேவையில் ஈடுபடுவேன்.


3) சமோலி: கடும் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, உத்தரகண்ட் மாநிலத்தில், மீட்புப் பணியில் சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த, இளம் வயதுடைய கலெக்டர் முருகேசன். இவரின் நடவடிக்கையால், ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள, கலெக்டர், முருகேசனை, பாதிக்கப்பட்டவர்கள் பாராட்டியுள்ளனர்.
                                             

கடந்த, 17ம் தேதி, பேரழிவை சந்தித்த உத்தரகண்ட் மாநிலத்தில், அதிகம் பாதிக்கப்பட்டது, சமோலி மாவட்டம். இந்த மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர், தமிழகத்தை சேர்ந்த முருகேசன், 35. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் உள்ள, செலவடை கிராமத்தை சேர்ந்த, ஆறுமுகம் என்ற ஆசிரியரின் மகன் இவர். 2005ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான முருகேசன், உத்தரகண்ட் மாநிலத்தின், தெஹ்ரி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில், கலெக்டராக பணியாற்றியுள்ளார். 2012ம் ஆண்டு மே மாதம், சமோலி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். பேய் மழை, பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய, ஆயிரக்கணக்கானோரை மீட்க, இவர் உதவி செய்துள்ளார். இவர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம், இரவும், பகலும், வெளுத்து வாங்கும் மழையில், மீட்புப் பணியில் ஈடுபடுவதை, அப்பகுதி மக்களும், மீட்கப்பட்டவர்களும் பாராட்டுகின்றனர்.


4) கவனிக்க படாத எளிய மனுஷி

காங்கயம் அருகே வட்டமலை கோவிலில் துப்புறவு பணியில் இருக்கும் இந்த பெண் 1944 ல் இக்கோவில் திருப்பணி நடந்த போது 7வயது சிறுமியாக இங்கே வந்த து.
                                                  


இன்று வரை இங்கே இறைபணியும் கோவில் நிலத்தில் மரம் வளர்க்கும் சமூக சேவையும் தவறாமல் செய்து வருகிறார் .படித்து சமூக ஊடகங்களில் பசுமை ஆர்வலர்களாக இருக்கும் நம்மைவிட மரம் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை உடையவர். களப்பணியாற்றும் இது போன்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

நான் இயன்றதை செய்துவிட்டு வந்தேன் .

மலை மீது நின்று தான் வளர்த்த மரங்களை பெருமையுடன் என்னிடம் அவர் காட்டிய போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம்

அவர் பிறப்பு அர்த்தம் பெற்றது

நம்பிறப்பு ??

- Rohini Sree.


ரிலாக்ஸ் ப்ளீஸ்


5) ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!
வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

                                            

 
வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network
Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.


வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

தகவலுக்கு நன்றி -அம்மு குட்டி
(முகநூல்)


6) சத்தியமங்கலம் வனப் பகுதியில், ஏழை குழந்தைகளுக்கு, உதவி தொகையுடன் கல்வி கற்று தரும், கருப்பசாமி: நான், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில், மிகவும் தாழ்த்தப்பட்ட, அருந்ததி இனத்தை சேர்ந்தவன். படிக்காமல் கஷ்டப்படுவதை உணர்ந்த என் பெற்றோர், என்னை, எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, எம்.ஏ., வரை படிக்க வைத்தனர். கல்லூரி படிப்பை முடித்ததும், ஒரு கம்பெனியில் வேலை செய்தேன். 
                                                   



படித்த படிப்பு, பலருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வேலையை ராஜினாமா செய்து, சத்தியமங்கலத்திற்கே திரும்பினேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை மீட்டு வர, கல்வியறிவு கொடுப்பதே சிறந்தது என, உறுதியாக நம்பினேன். தொடர்ந்து, 2001ல், "ரீட்' எனும், கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தை ஆரம்பித்தேன். எங்கள் பகுதியில், எந்நேரமும், காட்டு யானை மற்றும் சிறுத்தைகளால் ஆபத்து உண்டாவதால், அருந்ததியினர் மற்றும் தலித் மக்களின் குழந்தைகள், தினமும் அதிக தூரம் வெளியில் சென்று, கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், ஆங்காங்கே, சம்பளத்திற்கு படித்த இளைஞர்களை பணியில் அமர்த்தி, மாலை நேர பள்ளிகளை, இலவசமாக துவங்கினேன். முதலில், போதிய ஆதரவு இல்லாததால், ஆர்வத்துடன் வரும் மாணவர்களுக்கு, வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன். 10 கிராமங்களில் ஆரம்பித்த இரவு நேர பாடசாலை, மிகுந்த சிரமத்திலும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பாலும் வளர்ச்சி பெற்று, தற்போது, 71 கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பவர்களுக்கு ஆண்டிற்கு, 1,500 ரூபாயும், கல்லூரி படிப்பவர்களுக்கு, 5,000 வரை கல்வி உதவி தொகையாக வழங்கி, மேலும் படிக்க ஊக்குவிக்கிறோம். இதனால், பள்ளிக் கூடமே செல்லாத மாணவர்கள், இன்று இன்ஜினியரிங், நர்சிங் என, உயர் படிப்புகளை படித்து வருகின்றனர். எங்கள் உதவியால், 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதை நினைக்கும் போது, மனதிற்கு மகிழ்ச்சியாகவும், பெரிய அளவில் சாதித்த திருப்தியும் கிடைக்கிறது.

7)மாற்றி யோசித்தால் வெல்லலாம்!
மின்வெட்டால், நெசவுத் தொழில் முடங்கினாலும், மாற்று சக்தியால், உற்பத்தியை அதிகரித்து, முதல் பரிசு பெற்ற வேலு: நான், திருவண்ணாமலையில் இருந்து, 65 கி.மீ., தூரத்தில் உள்ள, அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவன். கிராமத்திற்குள் நுழைந்தாலே, தறி நெய்யும் சத்தம், காதுகளில் இசையாய் கேட்கும். சாமுத்ரிகா, ஜரிகை, கல்யாணப் பட்டு என, பல ரகங்களை தயாரித்து, ஆண்டிற்கு, 3 கோடி ரூபாய்க்கு, பட்டு புடவை உற்பத்தி செய்து வந்தோம்.
ஏறக்குறைய, 200 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் கிராமத்தில், மூன்று தலைமுறையாக, நெசவு தொழிலே செய்ததால், வேறு தொழில் தெரியாது. வீட்டின் வெளியிலோ அல்லது கொஞ்சம் பலமாக காற்றடித்தாலோ, பட்டு புடவையை நெய்ய முடியாது. அழுக்கானாலும் விற்க முடியாது என, பல கஷ்டங்கள் இருப்பதால், வீட்டிற்குள்ளேயே தறி வைத்து, "லைட்' வெளிச்சத்தில், மாதத்திற்கு, ஆறு புடவை நெய்வோம்.மின்வெட்டால், இரண்டு புடவை கூட நெய்ய முடியாமல், வறுமையில் தத்தளித்தோம். இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்ற எண்ணத்தில், மாற்றி யோசித்தோம். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற முடிவதை அறிந்து, கூட்டுறவு சங்க மேலாளர் உதவியுடன், முயற்சியில் இறங்கினோம்.நபார்டு வங்கி உதவியுடன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 27 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றோம். அரசு மானியமாக, 10,800 கிடைத்தது. மீதி தொகையை தவணையாக கட்டினோம். மற்ற கிராமங்களில் நெசவுதொழில் முடங்கினாலும், நாங்கள், தொடர்ச்சியாக தறியை இயக்கி, திருவண்ணாமலையின், 27 பட்டு நெசவு கூட்டுறவு சங்கங்களில், சிறந்த சங்கமாக, முதல் பரிசை தட்டி சென்றோம்.
நெசவுக்கு மட்டுமின்றி, வீட்டிற்கும், சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி, மின்கட்டணத்தை குறைத்தோம். ஒரு வாசல் மூடினால், இன்னொரு வாசல் கதவை, நாம் தான் தட்டி திறக்க வேண்டும். மாற்றி யோசித்ததால் தான்,எங்கள் கிராமத்தால் வெற்றி பெற முடிந்தது.

7க்கும் 8க்கும் படங்கள்...
                    


8) உலகின் கவனத்தை ஈர்த்தேன்!
மருந்தில்லா புரோஸ்டேட் கேன்சருக்கு, தீர்வு ஏற்படுத்திய, சென்னையைச் சேர்ந்த, 27 வயதே ஆன ஆராய்ச்சி மாணவி, பிரீத்தி: நான், சென்னையைச் சேர்ந்தவள். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில், பி.டெக்., பயோ டெக்னாலஜி பிரிவில், தங்க மெடலுடன் தேர்ச்சி பெற்றேன். அமெரிக்காவின், "டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்' முதுநிலை பட்டம் பெற்று, அங்குள்ள சவுத் வெஸ்ட் மெடிக்கல் சென்டரில், சிறுநீரகவியல் துறை ஆராய்ச்சி மாணவியாகப் பணியாற்றுகிறேன். படிப்பிலும், ஆராய்ச்சியிலும், நான் ஆர்வத்துடன் ஈடுபட, பெற்றோர் தந்த ஊக்கமே காரணம்.


ஆண்களின் உடலில் இருக்கும், புரோஸ்டேட் சுரப்பியின் திசுக்களில் ஏற்படும் புற்று நோயே, "புரோஸ்டேட் கேன்சர்' இந்த வகை கேன்சரால், 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களே, அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். என் ஆராய்ச்சியின் பயனாக, புரோஸ்டேட் கேன்சருக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தி, சென்னை பெண்ணாக இருந்தாலும், மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தேன்.


அதிகப்படியாக வளரும் கேன்சர் புரத செல்களை, ஒரு நுண்ணிய மூலக்கூறை கொண்டு சிதைப்பதன் மூலம், கேன்சர் செல்களை அழிக்க முடியும். "பெப்டிடாமிமெடிக் டி2' என்ற மூலக்கூறு, இந்த வகை கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கும் என்பதைக் கண்டறிந்தேன். இவை, நச்சு தன்மை இல்லாதவை. ஹார்மோனில் ஏற்படும் மரபியல் மாற்றத்தையும் தடுக்க வல்லது.சுண்டெலிக்கு, இம்மருந்தைக் கொடுத்து சோதித்ததில், கேன்சர் செல்களின் வளர்ச்சியை முற்றிலும் கட்டுப்படுத்துவதை உறுதிபடுத்தி, அதை, ஆராய்ச்சி கட்டுரையாகத் தயாரித்தேன். உலகின் எல்லா மருத்துவ ஆராய்ச்சியாளரும், தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச மருத்துவ இதழில் வெளிவருவதைக் கனவாக நினைப்பர்.

சமீபத்தில், என் ஆராய்ச்சி முடிவுகளும், சர்வதேச மருத்துவ இதழான, "நேச்சர் கம்யூனிகேஷனில்' வெளி வந்தது, மகிழ்ச்சியாக உள்ளது. இக்கட்டுரை, புரோஸ்டேட் கேன்சருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு, புதுநம்பிக்கையை ஏற்படுத்தும்.

15 கருத்துகள்:

  1. ஆறுமுகம் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் சிறப்பு, பரமானந்தன் அவர்கள் சேவை... கலெக்டர் முருகேசன் அவர்களின் உடனடி நடவடிக்கை உட்பட அனைத்து செய்திகளும் அருமை...

    விசாலினி அவர்களுக்கு மெயில் அனுப்புகிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மோசமான பத்திரிக்கைச் செய்திகள் படித்து சோர்ந்த மனதிற்கு
    தங்கள் பாசிடிவ் செய்திகள் தொகுப்பு கொஞ்சம் தெம்பளித்தது
    பகிர்வுகளுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //ஒரு வாசல் மூடினால், இன்னொரு வாசல் கதவை, நாம் தான் தட்டி திறக்க வேண்டும்.//

    உண்மைதான்..

    எனர்ஜி ட்ரிங் பகிர்வுக்கு நன்றி :-)

    பதிலளிநீக்கு
  4. கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள்///பெருமைபடுவோம் இன்னும் சிறக்க வாழ்த்துச் சொல்லுவோம்.

    நல்ல நல்ல தகவலைத்தரும் உங்களுக்கு உள்ளம்கனிந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அனைத்துமே அருமையான செய்திகள். தகவல்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. இரண்டும் மூன்றும் மனம் திறந்து பாராட்டப் பட வேண்டியவை... போக்குவரத்து சீர் செய்யும் பணியில் இருக்கும் இவர் போன்ற தன்னார்வளர்களை அரசு நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும்

    எட்டாவது ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய சபாஷ்

    பதிலளிநீக்கு
  7. அனைத்து பாசிட்டிவ் செய்திகளுக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க்கையில் தேடல் அவசியம் =. உண்மை, காவல் பணியிலிருந்து பேராசிரியர்ரன ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    சமூக சேவை செய்யும் பராமனந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    கலெக்டர் முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மரம் நடும் எளிய மனிஷிக்கு வாழ்த்துக்கள்.
    நெல்லை ம்ண்ணின் மகள் விசாலினிக்கு வாழ்த்துக்கள்.
    திரு கருப்பசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஆராய்ச்சி மாணவி பிரீத்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நல்ல செய்திகளை தொகுத்து தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பாசிடிவ் செய்திகள் அனைத்தும் மனதிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் நெகிழ்வையும் அளிக்கிறது. பாசிடிவ் செய்திகளாய் தேடிப்பிடித்து வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தும் உங்களுக்குத்தான் பாராட்டுக்களையும் நன்றிகளையும் சொல்ல வேண்டும்.

    திரு.ஆறுமுகத்தின் தேடல், சிறுமி விசாலினியின் அதீத புத்திசாலித்தனம், கலெக்டர் முருகேசனின் சுறுசுறுப்பு, நெசவாளரின் உழைப்பு, ப்ரீத்தியின் சாதனை- இவைகளை மனதார பாராட்டுகின்ற அதே நேரம் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுப்ட்டிருக்கும் பரமானந்தன், வட்டமலைக் கோவிலில் துப்புறவுப் பணி செய்து கொண்டே மரங்கள் வளர்க்கும் பெண்மணி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்விப்பணியை தளராது செய்து வரும் கருப்பசாமி –இவர்களின் தன்னலமற்ற சேவை பிரமிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. அனைத்து செய்திகளும் வெகு பாசிடிவ். இருந்தாலும் கோவில் பணியோடு மரங்களையும் வளர்து சந்தோஷப்படும் அம்மாவுக்கு வணக்கங்கள்.
    அதே போல ஓய்வு பெற்ற நிலையில்,வறுமையோடு போராடிக் கொண்டு சனூக சேவை செய்யும் காவலருக்கு என்ன சொல்லி வாழ்த்துவது. அவரது ப்பணக்கஷ்டமாவது தீரவேண்டும்.சிறுமி விசாலினிக்கு மெயில் அனுப்புகிறேன்.
    ப்ராஸ்டேட் கான்சருக்கு மருந்து கண்டு பிடித்திருக்கும் ப்ரீத்திக்கும் சிறந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அனைத்துமே அருமையான செய்திகள். தொகுத்து அளித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அனைத்துமே அருமையான செய்திகள்...

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல நல்ல செய்திகளை நாடி தரும் உங்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. நல்ல செய்திகள். பேராசிரியர் ஆறுமுகம் பேட்டி நன்று. தன்னார்வத்துடன் சேவை செய்யும் பராமானந்தம் பாராட்டுக்குரியவர். விஷாலினிக்கு வாழ்த்துகள். கலெக்டரும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களும் மனதில் நிற்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. தினந்தோறும் ஏதேதோ செய்திகளைக் கேட்டு நொந்து போன மனதுக்கு உங்கள் பாசிடிவ் செய்திகள் மிகுந்த ஆறுதலைத் தருகின்றன.

    நல்ல பணி தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  15. இதமான செய்திகள். வைசாலினி. கடந்த வருடம் ஏப்ரல மதத்தில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பில் கௌரவிக்கப் பட்டார்.அப்போது நானும் அங்கு இருந்தேன்.
    சேவை செய்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!