புதன், 2 ஏப்ரல், 2014

நாலுமுழ நாக்கின் ருசி..



ஹோட்டலில் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தபோதிலும் எத்தனை நாள் ஹோட்டலில் சாப்பிட முடியும்? 'எப்படா வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவோம்' என்ற ஏக்கம் வந்துவிடும். அதுமாதிரி சமயங்களில் வீட்டில் சாப்பிடும் ஒரு மோர் சாதத்துக்கும் நார்த்தங்காய் ஊறுகாய்க்கும் ஈடு இணை எது? அல்லது பழைய சாதத்துக்கு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய்க் கடித்துக் கொண்டு சாப்பிடுவது போலத்தான் வருமா?

         

ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த உறவினர் வீட்டுப் பையன் ஒருவன் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து தங்குவான். வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கி இருக்கும் அவன் நாவுக்கு நாங்கள் கொஞ்சம் ஆறுதலளித்தாலும் அவன் சொந்த ஊர் செல்லும்போது ஒரு விசேஷத்துக்காக நாங்களும் கூடச் சென்றோம். சாப்பிடும் நேரம் "நம்ம வீட்டுச் சாப்பாடு நம்ம வீட்டுச் சாப்பாடுதான்மா...இந்த ருசி வேற எங்கயுமே கிடைக்கல" என்றவனை அவன் அம்மா அடக்கினார். நாங்கள் தவறாக எடுத்துக் கொள்வோமோ என்று!

அவன் சொன்னதில் என்ன தவறு?


ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சுவை இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வீட்டுச் சமையலிலும் ஒரு தனி ருசி! ஒரு சிறு சுவை வேறுபாடு! அவரவர்கள் வீட்டுச் சமையலில் அவர்கள் பரம்பரையின் வழிவழி வந்த ஏதோ ஒரு அம்சம் இருக்கிறது! 


 

தாங்கள் தங்கள் இளமையில் தங்கள் வீடுகளில் சுவைத்த சுவையை இங்கும் சமையலில் தொடர்கிறார்கள்.

நமக்கு நம் வீட்டுச் சமையல்தான் மனதில் நிற்கும், பிடிக்கும்! ஆனாலும்,  சில உணவு வகைகள் அவர்களின் பிரத்தியேகமான பாணியில் ரசிக்க வைக்கும்.  நாம் இவற்றை நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது அனுபவிக்கலாம்.

நம் வீட்டில் அம்மாவின் சமையலை தொடக்கம் முதல் ரசித்த நா அதற்குப் பழகி அதுதான் சிறந்த ருசி என்றாகி விடுவதற்கு உப்புப் புளி காரத்தோடு அம்மாவின் அன்பும் கலந்து பரிமாறப் படுவதுதானே...

எங்கள் ஒரு உறவினர் வீட்டில் குழம்பு, ரசம் ஏன் கூட்டில் கூட புளிப்புச் சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும்.எங்கள் வீட்டில் சரியான அளவில் இதே சுவைகள் இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் வீட்டின் புளிப்புத் தூக்கல் சுவை ரசிக்குமளவு இது அவ்வளவு ருசிப்பதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன்.
 

       

இன்னொரு உறவினர் வீட்டில் குழம்பு, ரசம் எல்லாவற்றிலும் காரம் தூக்கலாக இருக்கும். மற்ற வீடுகளில் 'சப்'பென்று இருப்பதாகவும் தங்கள் வீட்டில்தான் சரியாக இருப்பதாகவும் சொல்வார்கள். சுகுமார் கூட உப்பு ஒரு அரைக்கல் அதிகமோ என்ற அளவில்தான் உப்புப் போடுவார். சொன்னால், 'உன் அம்மா செய்வது போல இல்லை,  அதானே?' என்பார்.

உண்மைதானே? ஆனாலும் அவருக்கும் அந்த அரைக்கல் அதிக உப்பு அளவுதான் சரி என்பது அசைக்க முடியாத கருத்தாக இருந்தது கொஞ்ச நாள் முன்பு வரையிலும் கூட!


அப்புறம் கைப்பக்குவம் என்று ஒன்று.  சிலர் எத்தனைமுறை அதே உணவை சமைத்தாலும் ஒரே மாதிரி சுவை மாறாமல் சமைக்கிறார்கள். சாதாரணமாக் செய்யும் உணவுகள் கூட சுவைக்கும். சிலர் சமைத்தாலோ, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை!


எனக்குக் காபி சாப்பிடப் பிடிக்கும். என் மனைவிக்குப் பாயசம், அதாவது காபியைப் பாயசம் மாதிரி சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிடப் பிடிக்கும். சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் டபுள் சர்க்கரை (என் நண்பன் ஒருவன்) , சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் சர்க்கரை கம்மி, சிலருக்கு டிகாக்ஷன் லைட்டாக விட்டு.... என் ஒரு மகனுக்கு இன்றளவும் காபி பிடிக்கவில்லை! இன்னொரு மகன் காபிதான் குடிக்கிறான்! எங்கள் வீட்டில் கத்தரிக்காய் என்னைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. வாழைப்பூவும், வாழைத்தண்டும் அங்ஙனமே! பீன்ஸ் என்னைத் தவிர எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.  

 

எல்லோருக்கும் பிடித்த உ.ருளைக் கிழங்கு எனக்குப் பிடிப்பதேயில்லை. என் நண்பர்கள் நிறைய பேர்கள் ரசமே சாப்பிடுவதில்லை. ரசம் சாப்பிட்டால் உடனே மறுபடி பசி வந்துவிடும் என்று சொல்வான் ஒரு நண்பன்.  


 

ரவா உப்புமா சாப்பிட்டாலும் சீக்கிரமே பசி வந்துவிடும் என்பான் (ரவா சீக்கிரம் ஜீரணமாகிவிடுமாம்!). புரட்டாசியில் கூட அசைவத்தைத் தள்ளிவைக்க முடியாத என் நண்பர்கள் இருக்கிறார்கள். பிரியாணியில் என்னதான் இருக்கிறதோ, ட்ரீட் என்று வந்தாலே பிரியாணிதான் கேட்கிறார்கள்.



என் மனைவி வீட்டுப் பழக்கம், சப்பாத்திக்கு பழைய குழம்பு, சட்னி என்று எது இருந்தாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார். எனக்கு, சப்பாத்தி என்று செய்தால், குருமா வேண்டும்! குறைந்தபட்சம் சின்ன வெங்காயம் சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு பிழியப்பட்ட பருப்புக் கடைசலாவது!
 
   

இந்தக் காலத்தில் வீட்டுச் சமையலில் துவையல் என்ற அம்சமே தொலைந்துகொண்டு வருகிறது. ரசிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். சமீபத்தில் சுட்ட கத்திரிக்காய்த் துவையல் அடம்பிடித்து செய்யச் சொல்லிச் சாப்பிட்டேன். ஆனால் இப்பவும் கத்தரிக்காய் பொடிதூவிக் கறியும், வெண்பொங்கலுக்கு கத்தரிக்காய்க் கொத்சுவும் டியூ!
அவ்வப்போது நண்பி ஒருவர் தயவால் பிரண்டைத் துவையலும் கிடைக்கிறது!


இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் வக்கணையாக தினமும் குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என்று சமைக்கும் வழக்கம் இல்லை. குழம்பு மட்டும் பொரியலோடு என்று அவசரக் கோலத்தில் சமைத்துச் செல்கிறார்கள். பெரும்பாலும் வீடுகளில் வெஜ். பிரியாணி, ஃபிரைட் ரைஸ் என்று பொழுது ஓடி விடுகிறது. அலுவலக அவசரங்கள்!
இன்னும் சில வீடுகளில் வீட்டில் வந்து டெலிவரி செய்யும் கேடரிங் மெஸ் போன்று நடத்துபவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். மும்பை டப்பாவாலாக்கள் போல அவர்கள் ஏகப்பட்ட டிபன் கேரியர் பாத்திரங்களுடன் தெருவெங்கும் விரைகிறார்கள்.

சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் இருவர் பேசிக் கொண்டது, சமையல் புத்தகங்கள் போடுபவர்கள் நஷ்டம் என்று கையைச் சுட்டுக் கொண்டதே இல்லையாம்.


தோசைக்கு மிளகாய்ப்பொடி மட்டுமே தொட்டுக் கொண்டு எத்தனை நாள்தான் சாப்பிடுவது? இருங்கள், தோசை பற்றி மெதுவாகச் சொல்கிறேன். அதற்காக ஆரம்பித்த பதிவுதான் இது. முன்னுரை நீளமாகி விட்டது. எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்...!

43 கருத்துகள்:

  1. ஆஹா, என்ன ருசி, என்ன ருசி! தோசை பத்தி எழுதுங்க, படிக்கிறேன். தோசையிலே எங்க அம்மாவை மிஞ்ச ஆள் இல்லை னு நாங்க சொல்வோம். :)))

    பதிலளிநீக்கு
  2. உங்களது நிறைய விருப்பங்கள் என்னுடையதுடன் ஒத்துப்போகின்றன. துவையல் உண்மையில் மறந்தே போன ஒன்று. என் அப்பாவின் பூர்வீகம் ஆந்திரா. அதனால் நிறைய வகைவகையான துவையல்கள் திருமணத்திற்கு முன் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது தேங்காய், மற்றும் பருப்புத் துவையல் தான்.
    எங்கள் வீட்டிலும் தினமும் குழம்பு தான் வாரக் கடைசியில் மட்டும் ரசம்.
    என்னது! உ.கிழங்கு பிடிக்காதா? எத்தனை மிஸ் பண்ணுகிறீர்கள், தெரியுமா? எங்க வீட்டிற்கு வாங்க மொறுமொறுன்னு பண்ணிப்போடறேன். அப்புறம் விடமாட்டீங்க!
    நல்லவேளை, சாப்பிட்டப் பிறகு படித்தேன்...!

    பதிலளிநீக்கு
  3. அப்புறம் சமையல் பத்திச் சொல்லி இருப்பது!

    நம்ம ரங்க்ஸுக்குத் தான் ருசி அடிக்கடி மாறும் திடிர்னு வெளியே காடரிங் சாப்பாடு வாங்கறேன்னு கிளம்புவார். நான் உடம்பு முடியாமப் படுத்துட்டு இருந்தாக் கூட எழுந்து உட்கார்ந்துடுவேன். நான் போடற ரசம் சாதம் தான் சாப்பிடணும்னு அடம் பண்ணுவேன். :))))

    பதிலளிநீக்கு
  4. தினம் தினம், குழம்பு, ரசம், மோர் என மூன்றும் உண்டு. அதே போல் துவையலும் வாரம் இருமுறையாவது இருக்கும். துவையல் அரைத்தால் தொட்டுக்கொள்ள மோர்ச்சாறு அல்லது தயிர்ப்பச்சடி, டாங்கர் பச்சடினு செய்வேன். அப்போவும் ரசம் உண்டு. ரசம் இல்லாச் சாப்பாட்டில் ரசமே இல்லை. இன்னிக்கு வெஜிடபிள் சாதம் செய்தேன். அப்போக் கூட ரசம் உண்டு. பருப்பு ரசம் வைத்துப் பப்படம் பொரித்தேன். வெஜிடபிள் சாதம் கொஞ்சம் போல் தான் சாப்பிடுவோம். ஆகையால் ரசம் கட்டாயம் வேணும். கலந்த சாதம் எந்தவகைபண்ணினாலும் ரசம் கட்டாயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. கத்திரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, பூஷணிக்காய், புடலங்காய், அவரைக்காய் போன்ற நாட்டுக்காய்களுக்கே முன்னுரிமை. சப்பாத்திக்குத் தொட்டுக்க உங்களைப் போல் பருப்புக் கடைசலோடு திருப்தி அடையும் ரகமெல்லாம் இல்லை நாங்க.

    பதிலளிநீக்கு
  6. வெண்டைக்காய்க் கறி, கத்தரிக்காய், உ.கி. வெங்காயம் சேர்த்த காரக்கறி, முட்டைக்கோஸ், வெங்காயம் சேர்த்த கறி, ஆலு மட்டர், சனா மசாலா, பச்சைப்பயறுக் கூட்டு, மிக்சட் தால், பட்டாணி மிசல்(மிசல் என்பது மராட்டியச் சமையல் முறையில் ஒண்ணு) மிக்சட் வெஜிடபிள், முள்ளங்கி மசாலாக் கறி, அப்படினு பண்ணினாத் தான் சப்பாத்தி உள்ளே இறங்கும். உங்களுக்கு நாலு முழம் தானே நாக்கு. நமக்கெல்லாம் நாற்பது முழம். :))))

    பதிலளிநீக்கு
  7. இப்போதைக்குக் கொஞ்சம் போயிட்டு மத்தவங்க பின்னூட்டத்தைப் பார்த்துட்டு அப்புறமா வரேன். :))))

    பதிலளிநீக்கு
  8. மறந்துட்டேனே, மசாலாதோசையெல்லாம் நாங்க ஹோட்டலில் அதிகம் வாங்கிச் சாப்பிடறதில்லை. வெங்காய ஊத்தப்பம், மசாலா தோசை எல்லாம் வீட்டிலேயே பண்ணிடுவோம்.

    பதிலளிநீக்கு

  9. என்னதான் சமைத்தாலும் என் அம்மாவின் சமையல் போல் வராது என்று சொல்லி மனைவியின் கோபத்துக்கு ஆளாகாதவரே இல்லை எனலாம் இரு வேளையும் ஃப்ரெஷாக சமைப்பது எங்கள் வீட்டில் இப்போது முடிவதில்லை. காலையில் வைத்ததை இரவில் சாப்பிடத் தயங்கும் எனக்கு இப்போது அது பழகிப் போய் விட்டது என் மனைவிக்கும் வயதாகிறதே. இந்தப் பதிவின் பின்னூட்டம் மூலம் கீதா மேடம் வீட்டு சமையல் ஓரளவு விளங்கி விட்டது. என் மகனுக்குக் கல்யாணம் முடித்த பிறகுதான் எங்கள் சம்பந்தி வீட்டில் ரசம் செய்வது துவங்கியது.சமையல் மற்றும் ருசி பற்றி எழுதி அதையும் நினைவலைகளில் கொண்டு வந்து விட்டீர்கள். முடிந்தால் மீண்டும் வருகிறேன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. இன்னைக்கு "திங்க" கிழமை இல்லையே...? அனால் இது பத்து வாரத்துக்கான "திங்க" கிழமை பதிவை ஒண்ணா சேத்து போட்ட மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. ருசியின் விதங்களை வர்ணித்த ருசி அடங்கவில்லை! அம்மியில் அரைத்த துவையலின் ருசியே தனிதான்! இப்போது மிக்சி வந்து துவையல் சட்னி போல ஆகிவிட்டது!

    பதிலளிநீக்கு
  12. சமையல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முறை. நீங்கள் சொல்வது போல் காரம் புளிப்பு, உப்பு எல்லாம் அவர் அவர் விருப்பம் போல் தான்.
    குழந்தைகள் இருக்கும் போது ரசம் குழம்பு என்று வைத்துக் கொண்டு இருந்தோம், இப்போது ஏதாவது ஒன்று தான் இரண்டும் வைத்தால் செலவு ஆக மாட்டேன் என்கிறது.

    மாமியார் வீட்டில் துவையல், அப்பளம் , வத்தல் இரவு உணவுக்கு உண்டு முன்பு இப்போது டிபன் ஆகி விட்டதால் கிடையாது.
    நான் எல்லா துவையலும் அடிக்கடி செய்வேன். வீட்டில் தொட்டியில் பிரண்டை வளர்ப்பதால் பிரணடை துவையலும் உண்டு.

    நீங்கள் சொல்வது போல் அவர்கள் பரம்பரையில் வழி வழி வந்த பராம்பரிய உணவு சுவை மாறுபடும்தான்.
    நீங்கள் சொல்வது போல் அம்மாவின் சமையலை நாக்கு எதிர்பார்க்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா..ருசியான பதிவு.செமையா ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிங்க.இதை படித்துக்கொண்டு இருக்கும் பொழுதேஇதில் குறிப்பிட்டு இருக்கும் வரிகளில் நமக்கு பொருத்தமான வரிகள் என்ன என்று மனம் கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தது:)

    பதிலளிநீக்கு
  14. படங்கள் பசியைத் தூண்டிப்போகிறது
    விரிவான அருமையான முன்னுரை
    அதிக எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....

    பதிலளிநீக்கு
  15. வெளிநாட்டில் பணி நிமித்தம் குடியிருப்பதால் சுய சமையல் மற்றும் உணவகங்களின் ஓவர் பில்ட் அப் உணவு வகைகளை உண்டு, நாக்கு செத்துக் கெடக்கிறோம். வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்காத நாட்களே கிடையாது. நண்பர்கள் ஸ்ரீகாந்தன் மற்றும் கௌரிஷங்கரின் கைப்பக்குவம் அந்தக்குறையை ஓரளவு போக்குவதென்னவோ உண்மை. படங்கள் பசியைக் கிளப்புவதே.

    பதிலளிநீக்கு
  16. கடைசியில் மினுமினுப்பாய் சிரிக்கும் தோசை சாப்பிட ஆசையென்று சொல்ல நினைத்தாலும்..நேற்று சொக்கன் ஜி அவர்களிடம் பிடிக்காது என்று காது கடித்து சொன்னது ஞாபகம் வந்து தடுக்கிறது !

    பதிலளிநீக்கு
  17. //சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் டபுள் சர்க்கரை //

    வீட்டுக்குள்ளயே ஸ்டார்பக்ஸ் வைக்கணும் போலயே ..!! ஹஹஹா

    பதிலளிநீக்கு
  18. எனக்கு காஃபி டபுள் ஸ்ட்ராங்காவும், சர்க்கரை தூக்கலாவும் இருக்கனும். ஆனா, என் பெரிய அத்தையும், அம்மாவும் காஃபி தூளை பாலில் காட்டுவதோடு சரி. என் சின்ன அத்தைதான் எனக்கு பிடிச்ச மாதிரி காஃபி போட்டுத் தரும்.

    பதிலளிநீக்கு
  19. கீதா மேடம்... மறுபடியும் கலக்கிட்டீங்க...பதிவை விட அதிக விஷயங்கள்...

    1) எங்க அம்மா தோசை போலவும் வராது! :)))

    2) எனக்கும் வித்யாசமா சாப்பிட்டுப் பார்க்கறது பிடிக்கும். (யாருக்குதான் பிடிக்காது, இல்லை?) அப்புறம் மறுபடி வீட்டுச் சாப்பாடுதான் பெஸ்ட்!

    3) ஒரு மாதிரி திட்டமிட்டு சமைக்கறீங்கன்னு தெரிகிறது. உங்கள் பக்கத்து வீடு காலியாயிருக்கா... ? தினம் ரசம் செய்வது இல்லை. துவையல் எப்போதாவதுதான்!

    4) சப்பாத்திக்கு துவையலும், தொக்கும், குழம்பும் தொட்டுக் கொள்ளத்தான் பிடிக்காது. குருமா ஓகே. கூட்டு தொட்டுக் கொள்ளப் பிடிக்காது! தக்காளி வெங்காயம் கூட ஓகே!

    5) மசாலா தோசை நான் கூட ஹோட்டல்ல வாங்கி சாப்பிடறதேயில்லை... அதைப்பத்தி அப்புறம் சொல்றேனே...






    பதிலளிநீக்கு
  20. சுவையானப் பதிவு தான். நீங்கள் ஒவ்வொரு ஐட்டமும் சொல்லும் போதே சாப்பிடத் தோன்றுகிறது.
    கீதாமேடம் ,அதன்ன முட்டைகோஸ்,வெங்காயம் கலந்த கறி?

    பதிலளிநீக்கு

  21. ரஞ்சனி மேடம்..

    நம்ம ரசனை ஒரே மாதிரி என்பது சந்தோஷம்! என் பாஸ் உருளைக் கிழங்கு ஸ்பெஷலிஸ்டாக்கும்! சந்தேகம்னா அப்பாதுரை மற்றும் சாய்ராம் கோபாலனைக் கேட்டுப் பாருங்க! :))) எனக்கு முன்னாடி எல்லாம் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பிடித்தது. இப்போ அதுவும் பிடிக்காது. உருளைக்கிழங்கு எப்பவுமே சும்மா பேருக்குதான் டேஸ்ட் செய்வேன். உருளை வெங்காயக் கரி செய்தால் ரெண்டு ஸ்பூன் கூடப் போட்டுப்பேன்!

    ஜி எம் பி ஸார்...

    அம்மா சமையல் மாதிரி இல்லைனு சொல்லி பாட்டு வாங்கறது எல்லார் வீட்டிலும் உண்டா? ஐ.. ஜாலி!

    மாடிப்படி மாது..

    உங்கள் சுவையைச் சொல்லவில்லையே...! :)))

    'தளிர்' சுரேஷ்...

    மிக்சியில் அரைத்து துவையல்கள் சட்னியாகி விட்டன என்று சரியாகச் சொன்னீர்கள். ன் மகன் முன்பு 'தேங்காய்ச் சட்னி சாதம் சாப்பிட்டேன்' என்றே சொல்லியிருக்கிறான்!

    கோமதி அரசு மேடம்...

    பெண்கள் கூட 'அம்மா சமையல் ருசி போல உண்டா' என்று சொல்வார்களா? ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் இந்த வரிகள் என்று நினைத்திருந்தேன்!

    நீங்கள் சொல்வது போல செலவாவதில்லை என்பதாலேயே சமையலைச் சுருக்கி விடுகிறோம்!

    ஸாதிகா மேடம்..

    ருசித்ததற்கு... ஸாரி.. ரசித்ததற்கு நன்றி!

    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

    ரமணி ஸார்...

    ரொம்ப எதிர்பார்க்காதீங்க... அப்புறம் சுவையில்லை என்று சொல்லி விடுவீர்கள்!

    உமேஷ் ஸ்ரீநிவாசன்..

    வாங்க... முதல் வருகைக்கு நன்றி. இதுபோன்ற சந்தர்ப்பங்கள்தான் நம் சமையல் திறனையும் அதிகரித்து விடுகின்றன. ஸ்ரீகாந்தன் மற்றும் கௌரி ஷங்கரின் கைப்பக்குவத்தில் எது ஸ்பெஷல் என்று சொல்லக் கூடாதோ!

    பகவான்ஜி

    தோசை பிடிக்காதா... ஏன்? மதுரையில் பிரேம் நிவாஸ் ஓட்டலில் தோசைத் திருவிழா நடக்குமே, போயிருக்கீங்களா, சுவைத்திருக்கிறீர்களா?

    கோவை ஆவி..

    சுருக்கமாகச் சிரித்து விட்டுப் போய்விட்டீர்களே... நன்றி!

    ராஜி மேடம்...

    நீங்கள் பாயசத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! :)))))))))))

    ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்..

    முட்டைகோஸ் வெங்காயக்கறி தெரியாதா? வெறும் முட்டைகோஸ் துவட்டல், முட்டைகோஸ் தேங்காய்க் கறி, முட்டைகோஸ் வெங்காயக் கறி, முட்டைகோஸ் + கேரட் தேங்காய்க் கறி, அல்லது வெங்காயக்கறி...ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  22. சிலர் மோர் சாதம் சாப்பிடுவதில்லை . ஆனால் என்னால் மோர் இல்லாமல் சாப்பிட முடியாது.

    பதிலளிநீக்கு
  23. துவையல் கட்டியாக அரைக்கலாம் மிக்ஸியில். நான் எல்லா துவையலும் கட்டியாக அரைக்கிறேன்.
    அம்மியில் அரைப்பது போன்றே அரைக்கலாம் தளிர்சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  24. துவையல் கட்டியாக அரைக்கலாம் மிக்ஸியில். நான் எல்லா துவையலும் கட்டியாக அரைக்கிறேன்.
    அம்மியில் அரைப்பது போன்றே அரைக்கலாம் தளிர்சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  25. கீதா அம்மாவின் கருத்துரைகள் மேலும் சுவை கூட்டியது...

    பதிலளிநீக்கு
  26. சமையல் பதிவுக்கு இலையே போட்டுவிட்டீர்கள். அப்பாடிஉ கீதா மாதிரி வராது. என்ன என்ன விதம். நாங்கள் நாக்கு அடங்கிப் போனவர்கள். சிங்கத்துக்கு ஒரு குழம்பு ஒரு கறி தான் பிடிக்கும். எனக்கோ உ.கிழங்கு டயபடீஸ்க்கு ஆக்காது அதனால் பச்சை காய்கறி ஒன்று. ஒஉ.கிழங்கு கறி ஒன்று எப்பவும் இருக்கும் மாங்காய்த் துண்டம் பிசிறனது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சுவையோ சுவைன்னு பெயர் வைத்திருக்கலாம் இந்தப் பதிவுக்கு. காஃபி இருவருக்கும் டபிள் ஸ்ட்ராங் நோ சுகர்,.

    பதிலளிநீக்கு
  27. ஆஹா..... என்ன ருசி என்ன ருசி !!!!

    உங்கபதிவு மெயின்ஸ்!

    அதிலும் கீதாவின் பின்னூட்டங்கள் சைட் டிஷ் போல சூப்பர்:-)

    நம்ம வீட்டில் ஒரு குழம்பு, ஒரு கறி. இதுக்கே வேலை ரொம்ப. எழுத நேரம் இல்லைன்னு அலட்டிக்குவேன்:-)

    பதிலளிநீக்கு
  28. @ராஜலக்ஷ்மி பரமசிவம், முட்டைக்கோஸ்+வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாய் அல்லது குடைமிளகாய் சேர்த்துக் கடுகு மட்டும் தாளித்து வதக்கினால் அந்தக் கறி சாம்பார்+வத்தல்குழம்பு+சப்பாத்தி எல்லாத்துக்கும் சுவையான சைட் டிஷ் ஆகத் துணை நிற்கும்.

    ஶ்ரீராம் சொன்னது போல முட்டைக்கோஸ்+காரட்+பீன்ஸ் சேர்த்தும் கொஞ்சம் பாசிப்பருப்பு ஊற வைத்துக் கலந்து, தேங்காய் போட்டு தேங்காய்க் கறியும் செய்வேன். முட்டைக்கோஸ்+காரட் மட்டும் போட்டும் செய்வதுண்டு. முட்டைக்கோஸ்+வெங்காயம்+பச்சைப்பட்டாணி+தக்காளிபோட்டு சப்பாத்திக்குக்கூட்டு செய்து பாருங்க. வெறும் சாம்பார்ப் பொடி மட்டும் கூடப் போதும். ஒன்றோ இரண்டோ பச்சை மிளகாய் தாளிதத்தில் போட்டுவிட்டு சாம்பார் பொடி போட்டு வதக்கிக் கொண்டு நீர் சேர்த்துக் கூட்டு செய்தால் நல்லா இருக்கும். தேவையானா இறக்கும்போது கொஞ்சம் போல் கரம் மசாலா போட்டுக்கலாம். முட்டைக்கோஸ் அடை/வடை கூடப் பண்ணலாம். முட்டைக்கோஸ் ஸ்டஃப் பண்ணலாம். ஆனால் எங்க வீட்டில் ஸ்டஃப் பிடிக்கிறதில்லை. :)))))

    பதிலளிநீக்கு
  29. எங்க பக்கத்து வீடு காலியா இருந்தது ஸ்ரீராம்,! :))))) வாங்க எங்க வீட்டுக்கு, ரசம் குடிச்சுப் பாருங்க!

    பதிலளிநீக்கு
  30. என்னது.... ஸ்ரீராமுக்கு நாலுமுழ அளவுக்கு நீள நாக்கா...? அவர் வாயைத் திறந்து நாக்கை நீட்டினா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்து ரசிச்சிட்டே இருக்கேன்...! ஹி... ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  31. உங்கள் எழுத்தை எந்தளவுக்கு ரசிச்சுப் படிச்சனோ அதே அளவுக்கு பின்னூட்டங்களையும் ரசிச்சேன் ஸ்ரீ. இப்படி டபுள் மீல்ஸ் சாப்பிட்டப்புறம் நான் என்ன சொல்ல...? ஏவ்வ்வ்வ! செமிச்சப்புறம் மறுபடி வாரேன்...

    பதிலளிநீக்கு
  32. ஆஹா ஆஹா...

    கல்யாண சமையல் சாதம்....

    வகை வகையாக பார்க்கும்போதே சாப்பிடத்தோன்றுகிறதேப்பா..

    இங்க எல்லோரும் எங்கம்மா கைப்பக்குவம் அப்டின்னு எழுதி இருக்காங்க.

    எங்க அம்மா சமைக்க கத்துக்கிட்டதே குவைத் வந்து தான்னு சொன்னா நம்புவீங்களா? :) ஆமாம் அது தான் உண்மை..

    அம்மா வேலைக்கு போகும்போது நாங்க தான் சமைத்து கொடுத்து அனுப்புவோம் அம்மாக்கு...

    இப்ப அம்மா ஜமாய்க்கிறாங்க அது வேற விஷயம்...

    ஃப்ரைட் ரைஸ், கோபி மஞ்சுரியன், வெஜிடபிள் கட்லட், பாகற்காய் உசிலி, கோவைக்காய் மோர்க்குழம்பு, பரங்கிக்காய் கீர் இப்டி அசத்துறாங்க அம்மா சமைக்கிற எல்லாமே தனி ருசி தான்... :) ஓரு வழியா நானும் சொல்லிட்டேன் அம்மா சமையல் ருசி என்று....

    ஸ்ரீராம் சார் எல்லோருக்கும் இந்த பகிர்வு பார்க்கும்போதே பசிக்க ஆரம்பிச்சிரும் :) எனக்கு ஆரம்பிச்சாச்சுப்பா..

    பதிலளிநீக்கு
  33. கீதா சாம்பசிவம் // நான் போடற ரசம் சாதம் தான் சாப்பிடணும்னு அடம் பண்ணுவேன். :))))// செம்ம க்யூட் பா உங்க ரகளை :)

    பதிலளிநீக்கு
  34. டி என் முரளிதரன்.. உண்மைதான்.. நிறையபேர் மோர்சாதமே வேண்டாம் என்பார்கள். சிலருக்கு எது சாப்பிட்டாலும் கடைசியில் மோர்சாதம் வேண்டும்.

    கோமதி அரசு மேடம்.. எங்கள் வீட்டிலும் கெட்டியாக மிக்சியில்தான் அரைக்கிறோம்!

    நன்றி DD!

    ரசித்ததற்கு நன்றி வல்லிம்மா... இப்போ பெரும்பாலும் நிறைய வீடுகளில் ஒரு குழம்பு ஒரு கறிதான்!

    வாங்க துளசி மேடம்.. கீதா மேடம் கமெண்ட்ஸ் சைட் டிஷ் போல இல்லாமல் மெய்ன் டிஷ் ஆகவே ஆகிவிட்டன!


    நன்றி ரத்னவேல் நடராசன் ஸார்!

    கீதா மேடம்... கோஸ் மோர்க்கூட்டு விட்டுட்டீங்க...

    பால கணேஷ்.. பின்னூட்டங்கள் சுவை கூட்டி விட்டன இந்தப் பதிவுக்கு!

    வாங்க மஞ்சுபாஷிணி.. ரொம்ப நாளா காணோம்! உங்கம்மா பற்றி நீங்க சொல்லியிருப்பது சுவையாய் இருக்கு!

    பதிலளிநீக்கு
  35. ரசனையான ஆய்வு:). அருமை. தொடரக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  36. வயிறு நிரம்பிய உணர்வு..... :)

    நாக்கு அளந்து பார்த்த மாதிரி சொல்லி இருக்கீங்களே! :))))

    பதிலளிநீக்கு
  37. வழக்கமாக ரீடரில் படித்துக் கொள்வேன். இன்றைய டாபிக்குக்கு, பின்னூட்டங்களும் சுவையாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன்... ஏமாறவில்லை!! :-))))

    ஆண்கள் எல்லாருமே அம்மியை ரொம்ப மிஸ் பண்றாங்க போல!! :-)))))

    பதிலளிநீக்கு
  38. "எங்கள் பவனில்" பரிமாறிய எல்லாமே செம ருசி :-))

    பதிலளிநீக்கு
  39. "எங்கள் பவனில்" பரிமாறிய எல்லாமே செம ருசி :-))

    பதிலளிநீக்கு
  40. இதையெல்லாம் எப்ப சாப்பிடப் போறேனோ, தெரியவில்லை. அடுத்த ஜன்மமாகக் கூட இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  41. சமையல் பதிவு எழுதறவங்கள்ளாம் நல்லா சமைப்பாங்களா? எல்லாம் அவர் அவர் வீட்டு ஆட்கள்கிட்டத்தான் கேட்கணும். அல்லது நம்ம சாப்பிட்டுப் பார்க்கணும். இப்போல்லாம் இன்டெர்னெட்ல படத்தை எடுத்துப் போட்டுடறாங்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!