திங்கள், 11 ஜூலை, 2016

'திங்க'க்கிழமை 160711:: ராகி அல்வா


ராகி  அல்வா  செய்ய, இந்தப்  பதிவை எழுதுகின்ற நேரம் கூட எடுத்துக்கொள்ளவில்லை  என்னுடைய திருமதி. 

கடையில் வாங்கிய முளைவிட்ட ராகியின் மாவு (sprouted ragi flour) உற்பத்தியாளர்  உத்தரவாத தேதியை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த வகை மாவுகளுக்கு, உற்பத்தியாளர் உத்தரவாத  தேதி  அல்லது  அலமாரி வாழ்வு  காலம்  (என்னென்னவோ தமிழ் எல்லாம் எழுதுகின்றேன் !! சொக்கா! )  மிகவும் குறைவு. 
   
  
அதை எப்படியாவது உபயோக உத்தரவாத கால கெடுவுக்குள் உபயோகப்படுத்திவிடவேண்டும்  என்கிற எண்ணம் எனக்கும், திருமதிக்கும் இருந்தது. நிற்க. 

  Image result for sprouted ragi flour
   

அத்தகைய மாவை ஒரு வாணலியில் ஒரு கோப்பை இட்டார். தண்ணீர் மூன்று மடங்கு சேர்த்தார். வாணலியை அடுப்பில் ஏற்றி கொஞ்சம் உஷ்ண நிலை வந்தவுடன், ஒன்றரைக் கோப்பை சர்க்கரையை  வெந்துகொண்டிருக்கும் மாவில் போட்டார். கிளறிக்கொண்டே இருந்தார். 

இருநூறு கிராம் நெய்யை எடுத்து, அந்த மாவில் ('ஓம் ஸ்வாஹா' என்று சொல்லாமல்) விட்டார். ஹூம் நெய் பாட்டில் காலி. அடுத்த ரிலையன்ஸ் பிரெஷ் விசிட் போகும்பொழுது திரும்பவும் வாங்கணும்.)  
    Image result for நெய் 
     
திடீரென்று ஏலம் கேட்டு ஓலம் .... "உம் சட்டுன்னு ..... சீக்கிரம், கமான் கவிக்.... "
   
உடனேயே செயல் வீரனாகியபடி, ஆனால்,  'அம்மா தாயே - இப்படி கூவிக்கிட்டே இருந்தா எனக்கு கையும் ஓடாது, காலும்  ஓடாது. என்ன வேண்டும் சுருக்கமா சொல்லு' என்றேன். 

திருமதி என்னைத் திரும்பிப் பார்த்து  முறைப்பதற்குள், ஐந்தாறு ஏலக்காய்களை  உரித்து, ஏல அரிசியை உருவி, அதை ஒரு பிடி குண்டு வைத்துப் பொடி செய்து,  அந்தக் கலவையில் போட்டுவிட்டேன். 

அடுத்த கூவல் " சட்டுன்னு முந்திரி பருப்பை எடுத்து, சிறு துண்டுகள் ஆக்கி, நெய்யில் வறுத்து இதுல போடுங்க" 

அவசரம் அவசரமாக ஹாலுக்கு ஓடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன். "எங்கே போறீங்க? இதுக்கெல்லாம் கோவிச்சுகிட்டு உங்க அம்மா வீட்டுக்குக் கிளம்பக்கூடாது " 

"ஹி  ஹி  முந்திரிப்பருப்பு இல்லை. கடையிலோ அல்லது கீழ் வீட்டிலோ வாங்கிகிட்டு வந்துடறேன்."

"அடக்கண்றாவியே! நேத்து சாயந்திரம் நூறு கிராம் முந்திரி பருப்பு அந்த பாட்டிலில் இருந்துச்சே!"

"அதுவா - பாட்டில் காலியா இருக்கு. எலி சாப்புட்டுடுச்சு போலிருக்கு! " என்றேன்  - ரகசியமாக கையை மடக்கி, கையின் மசில் பகுதியை  நோட்டமிட்டபடி. 

"ஓஹோ சாப்பிட்டிருக்கும் , சாப்பிட்டிருக்கும் ... சரி முந்திரி இல்லேன்னா என்ன பாதாம் பருப்புப் போடுங்க." 
   
பளிச் ... சடை ங் .....   சடார்!  

பாதாம் பருப்பை எடுத்து வேறொரு வாணலியில் நெய் விட்டு, அதில் போட்டு வீரதீரமாக வறுக்க  ஆரம்பித்தேன். 

"பாதாம் பருப்பை சின்ன துண்டுகளாக நறுக்கவில்லையா?" 

"இல்லையே!" 

"இப்ப என்ன செய்வதாக உத்தேசம்?" 

"இந்த ஐடியா மணி கிட்ட ஐடியாக்களுக்குப் பஞ்சமே இல்லை. இப்புடு சூடு!"

"இப்போ நீங்க ஏதாவது சொதப்பிட்டீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு சூடுதான் வைப்பேன் .."

"நீ செய்வே, நீ செய்வே" என்று சொல்லியபடி, வறுத்தெடுத்த பாதாம் பருப்புகளை மிக்சி ஜாடியில் போட்டு, விப்பரில் ஓட்டி, உடைத்துக் கொடுத்தேன். 

அதை அல்வாவில் போட்டுக் கிளறி, தயாராக வைத்திருந்த, நெய் தடவிய எவர்சில்வர் பாத்திரம் ஒன்றில் அல்வாவைப் போட்டு, மூடிவைத்துவிட்டோம். 
   Image result for ragi halwa  
   
ராகி அல்வா ரொம்ப சுவையாக இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ? 
     


17 கருத்துகள்:

  1. ஹூம், இதுக்கு நாங்க "களி"னு பெயர் சூட்டுவோமாக்கும்! :P என்ன ஒண்ணு வெல்லம் போடுவோம். :)

    பதிலளிநீக்கு
  2. கேழ்வரகு மாவுக்கெல்லாம் காலாவதித் தேதி நிர்ணயம் செய்யறாங்களா என்ன? புதுசா இருக்கு! காலாவதித் தேதி அதுக்கெல்லாம் இல்லைனு நினைக்கிறேன். ஏனெனில் அதுக்குள்ளே வண்டு வந்து மாவையே காலாவதி ஆக்கி இருக்கும்! :)

    பதிலளிநீக்கு
  3. கீதா மேடம் சொல்வது சரி. இதை ராகி இனிப்புக் களி என்ற பெயரில் 6வது படிக்கும்போது சாப்பிட்டிருக்கிறேன். நெட்ல எடுத்த படம்லாம் நன்றாகத்தான் இருக்கு. ஆனாலும், கோதுமை அல்வா படம்போல் இருக்கு. இதுக்கு எதுக்கு ஏலக்காய்ப்பொடி? பரவாயில்லை.. பிடித்த ரெசிப்பிதான். செய்து பார்க்க, உங்கள் வீட்டைப்போல், இருவராவது தேவையே. அதற்கு என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  4. சிறுவயதில் இந்த மாதிரி களி, ஒரு கிண்ணம் (எனக்கென்றே தனியாக ஒரு பெரிய சைஸ் கிண்ணம்) சாப்பிடாமல் எழுந்திருக்க மாட்டேன் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்..:))

    மாவை வறுத்து நெய் விட்டு உருண்டை பிடிக்கலாம்...அடை தட்டி சாப்பிடலாம், தோசை, இட்லி என நிறைய செய்யலாம்...(சாரி!! கீதா மாமி)

    பதிலளிநீக்கு
  5. சிறுவயதில் இந்த மாதிரி களி, ஒரு கிண்ணம் (எனக்கென்றே தனியாக ஒரு பெரிய சைஸ் கிண்ணம்) சாப்பிடாமல் எழுந்திருக்க மாட்டேன் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்..:))

    மாவை வறுத்து நெய் விட்டு உருண்டை பிடிக்கலாம்...அடை தட்டி சாப்பிடலாம், தோசை, இட்லி என நிறைய செய்யலாம்...(சாரி!! கீதா மாமி)

    பதிலளிநீக்கு
  6. @ஆதி வெங்கட், எனக்கு எதுக்கு சாரி? 2 நாள் முன்னே தான் நான் கேழ்வரகு இட்லி பண்ணினேன். :) கேழ்வரகை ஊறவைத்துப் போட்டும் பண்ணலாம். கடையில் விற்கும் கேழ்வரகு ரவையிலும் பண்ணலாம். அடை, சப்பாத்தி(வெந்தயக்கீரை போட்டு), வெல்ல அப்பம், வெல்ல தோசை, உப்பு தோசை, குழி அப்பம், கார அப்பம்னு நிறையப் பண்ணி இருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    நிச்சயம் செய்து பார்க்கிறோம் குறிப்புக்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி த.ம 2
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் சரி நண்பரே புகைப்படத்தில் உள்ளது நீங்கள் செய்த அல்வா இல்லையே...... ?

    பதிலளிநீக்கு
  9. உங்க பதிவு என் டாஷ்போர்டுக்கு வரவே இல்லை! :( ஏன்னு தெரியலை! அது சரி, அடுத்தவாரம் ராகி முத்தேயும் பாவக்காய் கொஜ்ஜுவுமா? கர்நாடகா ஸ்பெஷலாப் போடுங்க கௌதமன் சார்! :)

    பதிலளிநீக்கு
  10. கீதா மேடம் ஆதிவெங்க்ட்மேடம் & நெல்லைதமிழன் நீங்கள் உங்கள் வீட்டில் களி செய்து சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் இங்கு இவர் இட்டது ராகி அல்வா அதனால சத்தம் எல்லாம் போடாம இது மாதிரி அல்வா செய்து சாப்பிடுங்க. ஒருவர் கஷ்டப்பட்டு மனைவியிடம் அடிவாங்கமா அல்வா செய்து அதை பதிவா போட்டா அதை களி என்று சொல்லி கிண்டல் பண்ணுவதா... bad bad...

    பதிலளிநீக்கு
  11. அல்வா டேஸ்ட் எப்படி இருக்கும் என்பதை அதை செஞ்சு பார்த்தால்தான் சொல்ல முடியும் ஆனால் நீங்கள் ரிசிப்பியை பதிவில் சொல்லி சென்ற விதம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. இப்போது இந்த ரிசிப்பியை ரசித்து படித்தேன் நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சுவைத்து மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
  12. ராகி பயன்படுத்தி நிறைய பதார்த்தங்கள் செய்து தருவார் பெரியம்மா.... அடுத்த முறை வரும்போது சாப்பிடணும்....

    பதிலளிநீக்கு
  13. என் பெண் வீட்டில் ரொம்பவும் சகஜமாகச் செய்யும் அல்வா இது. ஹால்பாயி (haalbaayi) என்பார்கள். கோதுமையை ஊறவைத்து பால் எடுத்து அல்வா கிளருவதுபோல ராகியையும் ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்துக் கிளறுவார்கள். ராகியுடன் கூட தேங்காயையும் போட்டு அரைப்பார்கள்.வெல்லம் போட்டுச் செய்வார்கள். முந்திரிப்பருப்பு எல்லாம் போடமாட்டார்கள். போனால் போகிறது என்று ஏலக்காய் போடுவார்கள்.
    நீங்கள் சொல்வதுபோல ரொம்ப சீக்கிரம் கிளறிவிடலாம்.
    நானும் ராகி தோசை, இட்லி, ரொட்டி செய்வேன் - இந்த அல்வாவைத் தவிர.

    பதிலளிநீக்கு
  14. எனக்கு என்னவோ இந்த ராகி சமாச்சாரமே பிடிப்பதில்லை.மனைவியிடம் இதற்காக நிறைய வசவு வாங்கி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. ராகி அல்வா! முன்பு அடிக்கடி செய்வதுண்டு. என் மகன் கைக்குழந்தையாக இருந்த போது அவனுக்குத் திட உணவு கொடுக்க ஆரம்பித்த போது ராகியை முளை கட்ட வைத்து அம்மியில் ஓட்டி பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்ததுண்டு. அப்போது அப்படிப் பால் எடுத்த போது ஒரு முறை கோதுமையில் பால் எடுத்து வீட்டில் அல்வா செய்வது வழக்கமாக இருந்ததால் இதிலும் செய்து பார்த்தேன்...(26 வருடங்களுக்கு முன்) நன்றாக இருந்ததால் செய்வது வழக்கம்....மாவிலும் செய்ததுண்டு. இப்போது ரொம்பவே நான் இனிமையானவள் என்பதால் செய்வது அரிதாகிவிட்டது...மிகவும் சுவையாக இருக்கும். நான் கொஞ்சம் சர்க்கரை குறைவாகப் போடுவதுண்டு. உங்கள் பதிவு அல்வாவைப் போல சுவைபட இருக்கிறது ரசித்தோம்...
    கீதா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!