நன்றி நெல்லைத்தமிழன்.
சொன்னதுபோலவே நெல்லைத் தமிழன் ஒரு செய்வகை அனுப்பியிருக்கிறார். இந்த வாரம் அவரது மோர்க்குழம்பு. படங்கள் அழகாக எடுத்துத் தள்ளியிருக்கிறார். படங்களை பார்க்கும்போதே வர கைவன்மை, கைராசி தெரிகிறது.
நிறைய படங்கள். படங்களை வரிசையாக இணைத்து விடுகிறேன். கீழே படிக்கும்போது மேலே படங்களை ரெபரென்ஸுக்குப் பார்த்துக் கொள்ளலாம்.
தெளிவான புகைப்படங்கள். பொறாமையாக இருக்கிறது நெல்லைத்தமிழன். கேமிராவில் எடுத்தீர்களோ? நான் அலைபேசியில்தான் எடுப்பேன்.
===============================================================
திங்கக்கிழமை - - புளி மோர்க்குழம்பு
நான் சூழ்நிலையினால் கடந்த நாலு வருடங்களுக்கு மேல் பேச்சலர் ஆனபின், என்னுடைய தனிப்பட்ட ஆசையினால், அவ்வப்போது ஏதாவது செய்து பார்ப்பேன். மனைவியும் குழந்தைகளும் இருந்தபோது, நான்தான் அன்றன்று என்ன செய்யணும் என்று சொல்வது. சில சமயம் வார இறுதியிலேயே எல்லோருடனும் மார்க்கெட் சென்று, அந்த வாரத்தில் முக்கியமாகப் பண்ண வேண்டியவைகளுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவேன். பசங்க குட்டியாக இருந்தவரை ஒன்றும் பிரச்சனையில்லை. அவங்க கொஞ்சம் வளர்ந்தபின், மதியச் சமையல் மட்டும் என்னுடைய தேர்வானது.
மனைவி (‘நான் அவளை ஹஸ்பண்ட்னுதான் சொல்லுவேன்) நான் சொல்லுவதையெல்லாம் பண்ணுவாள். நான் தனியாக, வேலைக்காக இந்த ஊரில் (எந்த ஊரில்? ஹி ஹி) இருக்க ஆரம்பித்தபின், ஆசையினால் பல்வேறு ரெசிப்பிக்களைப் பார்த்து, எனக்குப் பிடித்தவைகளை மட்டும் செய்துபார்ப்பேன். எனக்கு எல்லா இனிப்புகளும், சில பல கூட்டு, காய்கறிகள், குழம்புகள்தான் பிடிக்கும். நான் ரொம்ப selective eater. என் ஹஸ்பண்டுக்கு நான் இப்படி இருக்கிறது பிடிக்காது. எப்போதும் ஒரு சில வகைகளையே செய்யச்சொல்லுவது.
ஆனால், எல்லா ரெசிப்பிக்களையும், சாப்பாட்டுவகைகளைப்பற்றியும் யார் எழுதியிருந்தாலும் ஆர்வமாகப் படிப்பேன். அதனால்தான், சாப்பாட்டுவகைகளுக்கு நான் பின்னூட்டம் எழுதத் தவறுவதில்லை. நான் அவ்வப்போது எங்கள் பிளாக்குக்கு நான் செய்துபார்த்தவைகளை அனுப்புகிறேன். ஸ்ரீராமுக்குப் பிடித்திருந்தால் வெளியிடுவார். பேச்சலருக்கு என்ன செய்யத் தெரியுமோ, எந்த அளவு சமையல் திறமை இருக்குமோ அவ்வளவுதான் என்னிடமும் எதிர்பார்க்கலாம். கீதா மேடம் போன்ற ஜாம்பவான்களே.. பொறுத்தருள்க.
எங்கள் வீட்டிலும் தாய்வழி உறவினர்கள் வீட்டிலும் புளி மோர்க்குழம்பு அடிக்கடி செய்வார்கள். எனக்கு மோர்க்குழம்புனாலே ரொம்பப் பிடிக்கும். எனக்கு 4 வகை மோர்க்குழம்பு பிடிக்கும். இந்த புளி மோர்க்குழம்பு பொதுவாக தமிழ்நாட்டில் பண்ணுவதில்லை என்று நினைக்கிறேன். எங்கள் முன்னோர்களுக்கு திருவனந்தபுரம் தொடர்பு இருப்பதால் அங்கிருந்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்போ செய்முறை. இது மூன்று பேர்களுக்கானது.
மோர் 300 மில்லி, புளி, வறுத்து அரைக்க, உளுத்தம்பருப்பு, வெந்தயம், 3 சிவப்பு மிளகாய். குழம்பில் போட காய், வெண்டை அல்லது பூசணி. தாளிக்க கடுகு, கருவேப்பிலை. தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். நான் எல்லாத்துக்கும் நல்லெண்ணெய்தான் உபயோகிக்கிறேன்.
2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம், 3 (அல்லது 4. எனக்கு காரம் அதிகம் இருந்தால் பிடிக்கும்) சிவப்பு மிளகாய். இதை எல்லம் வெறுமனே வாணலியில் வறுக்கவும். கருக விட்டுவிட வேண்டாம். இதை ஒரு தட்டில் போட்டு கொஞ்சம் ஆறவிடவும். இங்கு திருவின தேங்காய் கிடைக்கும். அதை வார இறுதியில் வாங்கி ஃப்ரீசரில் வைத்துவிடுவேன். அதில் ஒரு அரைமூடி (6-8 தேக்கரண்டி) எடுத்து, அவனில் 10-30 வினாடிகள் வைத்துவிடவும். அதையும் கொஞ்சம் ஆறவைக்கவும். முன்னெல்லாம், அரை மணி முன்பு தேவையான தேங்காய்த் திருவலை ஃப்ரீசரில் இருந்து எடுத்துவைத்துவிடுவேன். அப்புறம் சோம்பேறித்தனத்தினால் அவனில் போட்டு எடுக்கும் வேலை. முதல்ல உ.பருப்பு, வெந்தயம், மிளகாயை மிக்சியில் போட்டு அரைக்கவும். பின்பு தேங்காய்த் துருவலைப் போட்டு ‘நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். (‘நீர் விடாமல்).
தானுக்கு, நீரில்லாத காய்தான் உபயோகிக்கவேண்டும். எங்க அம்மா பூசணிதான் நன்றாக இருக்கும் என்பார்கள். நான் வெண்டைக்காய் இருந்ததால் அதனை உபயோகித்துள்ளேன். அதை கட் பண்ணி, கொஞ்சம் எண்ணெயில் ஓரளவு வறுத்து (வதக்கி)க் கொள்ளவும். ‘நான் வதக்கும்போதே உப்பையும் சேர்த்துவிடுவேன். பூசணின்ன, உப்பு போட்ட ஜலத்தில் தானைக் கட் பண்ணிக் கொதிக்கவைத்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் (தான் மட்டும்)
புளி ஒன்றரை தேக்கரண்டி (பேச்சலருக்கு ஆபத்பாந்தவனாக Priya brand புளி பேஸ்ட் (15 ரூ) கிடைக்கிறது. அதைத்தான் ஒரு 10 பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்வேன்) எடுத்து, அதில் 150 மில்லி தண்ணீர்விட்டுக் கலந்துகொள்ளவும். (‘நீர்க்க இருக்கவேண்டும்). பாத்திரத்தில் மூன்றில் ஒருபங்குக்குக்கு மேல் போகக்கூடாது. இதை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போனபின், அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்துவைத்த தேங்காய்/உ.பருப்பு/வெந்தய மிக்ஸைச் சேர்க்கவும். அத்துடன் மோரையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பைப் போட்டு நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். அடுப்பை எரியவிட்டு, குழம்பைக் கலக்கிக்கொண்டே இருங்கள். எங்க அம்மா, “குழம்பு பதைக்கற பதம்’ அல்லது ஒரு கொதி என்பார்கள். என்னைப் பொறுத்தவரையில், குழம்புக்குள் விரலை விட்டால் பொறுக்கற சூட்டுக்குக் கொஞ்சம் மேல்வரை கொதிக்கவிடவும். (கலக்கலைனா திரிஞ்சமாதிரி ஆகிவிடும்) அடுப்பை அணையவிட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவேண்டியதுதான்.
பேச்சலருக்கு சுலபமான உருளைக்கிழங்கு கறியுடன் சாப்பிடவேண்டியதுதான்.
கீதா மேடம்.. விரைவில் சங்கீதாவில் செய்யும் மோர்க்குழம்பு ரெசிப்பியுடன் வருகிறேன். அதற்குள் சில பல வெரைட்டி மோர்க்குழம்புகளை எழுதிவிடாதீர்கள். வேணும்னா எங்களை மாதிரி பேச்சலருக்கு துவரம்பருப்பை எப்படி விரைவாக (குழம்பு வகையறாக்களுக்கு) ரெடி பண்ணுவது என்று எழுதுங்கள். ஊறப்போட்டு, குக்கரில் வைத்து ரெடி பண்ணுவதற்குள், சாம்பார் பண்ணும் ஆசையே போய்விடுகிறது.
அன்புடன்,
நெல்லைத்தமிழன்
ரசித்தோம், ருசித்தோம்.
பதிலளிநீக்குசுவையான குறிப்பு. பொதுவாக மோர்க்குழம்பில் புளி சேர்த்து சாப்பிட்டதில்லை. செய்து பார்த்து விட வேண்டியது தான்!
பதிலளிநீக்குஅருமையான குறிப்பு. புளி சேர்த்து செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅம்மா செய்வார்கள். அருமையான விளக்கம் நெல்லைத்தமிழன். நல்ல நளபாகம். வளர்க உங்கள் திறமை.
பதிலளிநீக்குமோர் குழம்புல புளியா...? ஐயையோ கூடாது கூடாது.... தெய்வ குத்தமாயிடும்...???
பதிலளிநீக்குநிறையபேர். இருப்பதோ புளிப்பே இல்லாத தயிர். மோர்க்குழம்பு செய்வதானால் கொஞ்சம் புளியைக் கரைத்து விடுவதுண்டு. புளி வாஸனை போன பின்புதான் மோர் சேர்ப்பது. நீங்கள் குறிப்பிட்ட முறையில் செய்வதை வென்தய மோர்க்குழம்பு என்று சொல்வதுண்டு. வறுத்தரைப்பதில் துவரம் பருப்பு சேர்ப்போம். நல்ல குழம்பு. அன்புடன்
பதிலளிநீக்குசெய்து பார்ப்போம், எனக்கு மிகலம் பிடித்த குழம்பு புளி சேர்த்து செய்தது இல்லை. செய்து பார்க்கனும்.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன், ஹோட்டல்களில் சாப்பாடு சாப்பிடவே எனக்குப் பிடிக்காது. சங்கீதாவில் அப்படி என்ன உசத்தியான மோர்க்குழம்பு வைப்பாங்களா? தெரிஞ்சுக்க ஆவல்! சாப்பாடு நேரம் ஹோட்டலுக்குப் போனால் நான் டிஃபன் செக்ஷன் வேலை செய்தால் டிஃபன், காஃபியாக வாங்கிச் சாப்பிடுவேன். இல்லைனா எப்போவானும் மினி மீல்ஸ்! ஆகவே இந்த இலை போட்டுக் கொண்டு குழம்பு, ரசம், வத்தல், மோர்க்குழம்பு வாங்கிச் சாப்பிடுவது எல்லாம் என்னைப் பொறுத்தவரை வீணான வேலை! மினி மீல்ஸே நான் சாப்பிட்டு மிஞ்சும்! :)
பதிலளிநீக்குஉங்களோட இந்தப் புளி மோர்க்குழம்பு நானும் செய்திருக்கேன். ஆனால் மோர் புளிப்பில்லாமல் இருந்தால் அப்போது மோர்க்குழம்பு தான் செய்யணும்ங்கற கட்டாயம் இருக்கையில் தான் செய்வேன். வறுத்து அரைத்தும் செய்வேன். வறுத்து அரைக்காமல் து.பருப்பு, கபருப்பு, அரிசி ஊற வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், மிளகு, ஜீரகத்தோடுத் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொண்டும் செய்வேன். இதற்கு மி.வத்தல், வெந்தயம் தாளிப்பில் சேர்ப்பேன்.
பதிலளிநீக்குவறுத்து அரைத்த மோர்க்குழம்பு நீங்கள் சொன்ன வகையில் புளி சேர்த்துச் செய்தாலும் இன்னொரு வகையில் புளி சேர்க்காமல் மி.வத்தல். கொ.மல்லி விதை, கபருப்பு, வெந்தயம், தேங்காய்த் துருவல், பெருங்காயம் எண்ணெயில் வறுத்து அரைத்து மோரில் கலப்போம். இதைச் சூடு செய்ய வேண்டாம். பச்சை மோர்க்குழம்பு என்று இதற்குப் பெயர். இதற்குத் தானாக வெண்டைக்காய் வற்றல் தான் அநேகமாக. அல்லது குழம்புக் கறிவடாம். தே எண்ணெயில் வறுத்துச் சேர்ப்போம்.
பதிலளிநீக்குபருப்புருண்டை மோர்க்குழம்பு என்றால் பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், அரை டீஸ்பூன் ஜீரகம், இரண்டு டீஸ்பூன் அரிசி ஊற வைத்தது சேர்த்து அரைத்து கெட்டி மோரில் கலந்து கொதிக்க விடுகையில் பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடுவோம். அவை வெந்து மேலே மிதக்கும். எல்லாமும் போட்டு மிதந்த பின்னர் கீழே இறக்கிக் கருகப்பிலை, கடுகு, மி.வத்தல் நெய்யில் அல்லது தே.எண்ணெயில் தாளிக்கலாம். எங்க அம்மா வீட்டில் பருப்பு உருண்டைபோட்டுக் குழம்பு (வத்தல் குழம்பு போல் அடியில் தாளித்துக் கொண்டு கொஞ்சமாகப் பருப்புப் போடும் முறை) தான் செய்வார்கள். பருப்புருண்டை போட்ட மோர்க்குழம்பு மாமியார் வீட்டில் தான் அதிகம் செய்வார்கள்.
பதிலளிநீக்குதுவரம்பருப்பு நல்ல பருப்பாக இருந்தால் ஊறவைத்துக்குக்கரில் போட்டாலே நன்கு குழைந்து விடும். நான் சில சமயங்களில் கல்சட்டியிலேயே வேக விடுவேன். உங்களுக்கு அதெல்லாம் சரியாக வரும்னு தோணலை! :)
பதிலளிநீக்குபுளி விட்ட மோர்க்குழம்பு பார்க்கும் போதே ஜோராக இருக்கிறது...எரி குழம்பு என்றும் சொல்வார்களோ??? சிறுவயதில் அத்தை வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்...நல்ல காரசாரமாக இருக்கும்..
பதிலளிநீக்குதுவரம்பருப்புடன் சமையல் எண்ணெய் துளி விட்டு வேகவைத்தால் குழைவாக வெந்து விடும்.. தில்லியில் நான் இப்படித்தான் செய்வேன்...என் மாமியாரின் அட்வைஸ் படி... தேங்காய் ஒரு துண்டு சேர்த்தாலும் வெந்து விடும் என்றும் சொல்வார்..
பதிலளிநீக்குதுவரம்பருப்புடன் சமையல் எண்ணெய் துளி விட்டு வேகவைத்தால் குழைவாக வெந்து விடும்.. தில்லியில் நான் இப்படித்தான் செய்வேன்...என் மாமியாரின் அட்வைஸ் படி... தேங்காய் ஒரு துண்டு சேர்த்தாலும் வெந்து விடும் என்றும் சொல்வார்..
பதிலளிநீக்குபுளி விட்ட மோர்க்குழம்பு பார்க்கும் போதே ஜோராக இருக்கிறது...எரி குழம்பு என்றும் சொல்வார்களோ??? சிறுவயதில் அத்தை வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்...நல்ல காரசாரமாக இருக்கும்..
பதிலளிநீக்குஆதி வெங்கட் சொல்லி இருப்பதும் சரியே! இங்கெல்லாம் பருப்பில் எண்ணெய் தெரிவதில்லை. ராஜஸ்தான், குஜராத்தில் பருப்பில் எண்ணெய்ப் பளபளப்புடனேயே கிடைக்கும்! நிமிஷமாக வெந்துவிடும் பருப்பு. நல்லெண்ணெய் விடலாம், அல்லது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கலாம். பருப்பு நன்றாக வேகும். ஆனால் ரசத்துக்கும் அதே பருப்பு என்றால் வெந்தயம் சேர்த்த பருப்பு சரியாக வராது!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசுவையான மோர்க்குழம்பு.நானும் இந்தவகை மோர்குழம்பை அடிக்கடி செய்திருக்கிறேன்.மோரில் சற்று குறைவாக புளிப்பிருந்தாலோ, அல்லது மோரின் அளவு நான்கு ஐந்து பேருக்கு குறைவாக இருந்தாலோ, காய்களை வேக வைக்கும் போது கொஞ்சம் புளி சேர்ப்பதுண்டு.மற்றபடி மோரை மட்டுமே வைத்து வறுத்தரைத்து செய்யும் இந்த மோரக்குழம்புக்கு எங்கள் வீட்டில் என்றுமே வரவேற்ப்பு இருக்கும். நெல்லை தமிழன் அவர்கள் அழகான படங்களுடன் செய்முறை விளக்கங்களும் மிக அழகாக தந்திருக்கிறார்.அவருக்கும், பதிவை சுவை மாறாது தந்த தங்களுக்கும், நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செய்து (சாப்பிட்டு) பார்ப்போம்
பதிலளிநீக்குநன்றி இதை வெளியிட்ட எங்கள் பிளாக்குக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும். செய்து பார்த்தாலும் சுவையாகத்தான் இருக்கும். நான் எப்போதும் கொடுத்திருக்கும் ரெசிப்பிக்கு ஏற்ற மாதிரி, பலவகையான செய்முறைகளைப் பின்னூட்டத்தில் எழுதுவதைக் குறிப்பு எடுத்துக்கொள்வேன். அதிலும் கீதா மேடம் நிறைய எழுதுவார். அவர் சொன்ன பச்சை மோர்க்குழம்பை, கொத்தமல்லி விரை, தேங்காய் இல்லாமல் (மற்றவற்றைப்போட்டு) வறுத்து, மோரில் மஞ்சப்பொடியுடன் கலந்து செய்வதை நாங்கள் மோர்ச் சாத்துமது என்று சொல்வோம். அதுக்கு (எனக்கு), கோஸ் மிளகு சேர்த்த கூட்டு செம காம்பினேஷனாக இருக்கும். சமையல் என்பது பரம்பரையாக வரும் அறிவு. வித்தியாசமாக, அந்த வட்டாரத்துக்கோ அல்லது சமூகத்துக்கோ உள்ள தனித்துவமான (unique) ரெசிப்பிக்களை எழுதினால், மற்றவர்களும் அறிந்துகொள்ளலாம்.
பதிலளிநீக்குமோர்ச்சாறு அல்லது மோர்ச் சாத்தமுது நாங்களும் செய்வோம். லேசான புளித்த மோரில் உப்பு, அரிசிமாவு, மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி கலந்து கொண்டு கரைத்துக் கொண்டு, அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் கொட்டி கரைத்த மோரை அதில் ஊற்றி உடனே எடுத்துவிடுவோம். உடம்பு சரியில்லை எனில் இவற்றோடு ஓமம் சேர்ப்பது உண்டு.
பதிலளிநீக்குஇந்த மோர்ச் சாத்தமுது துவையல் சாதங்களுக்கு ஏற்ற காம்ப்னேஷனாக நாங்க பயன்படுத்துவோம். துவையல் அரைத்தால் இது அல்லது டாங்கர் பச்சடி!
பதிலளிநீக்குஇதே ரெசிப்பிதான் எங்கள் வீட்டிலும்....நெல்லை-நாகர்கோயில்-கேரள தொடர்பாயிற்றே!!!
பதிலளிநீக்குஇதில் புளி விட்டும் செய்யலாம்...புளி இல்லாமால் தயிரிலும் செய்யலாம்.
புளி விட்டு உளுத்தம்பருப்பு இல்லாமல் மற்றவை சேம்...செய்து விட்டு தயிர் ரொம்பவே கொஞ்சம் இறுதியில் சேர்த்து செய்வதை எரிகொள்ளி/தேங்காய் அரைச்ச குழம்பு என்றும் செய்வதுண்டு.
கீதா
நெல்லைத் தமிழன் ஸ்ரீராமுக்கு செம போட்டி போல...சபாஷ் சரியான போட்டி!!!! அப்படியாக எங்களுக்கும் கலந்து கட்டி ரெசிப்பிஸ் கிடைக்கும்னு சொல்லுங்க....ஹஹ்
பதிலளிநீக்குசூப்பர்....
பதிலளிநீக்குஎன்னவளின் கவனத்துக்கு கொண்டு சென்று ,ருசித்துப் பார்க்கிறேன் (செய்து கொடுத்தால் :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநான் அறியாத புதிய ரிசிப்பி... எனக்கும் சமைப்பதில் மிகவும் இஷ்டம் .. நன்றாகவும் சமைப்பேன் என்பதுமட்டுமல்ல எனது உணவுகளை நண்பர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சாப்பிட்டுவிட்டு அவர்கள் சொல்லுவது நீங்கள் ஏண் ஹோட்டால் ஆரம்பிக்க கூடாது என்று ... நான் ரிசிப்புகளை தேடி சென்று படிப்பேன். நான் திங்கள்கிழமை மட்டும்தான் எங்கள் ப்ளாக் பக்கம் வருவேன். ஹீஹீ மீண்டும் அடுத்த திங்கள் கிழமை வருகிறேன் இப்ப மனைவி வரும் நேரம் வந்துவிட்டது சமையல் ரெடியாகவில்லை என்றால் பூரிக்கட்டைக்கு வேலை வந்துவிடும்
இதை இருவுளி(இரு புளி)குழம்பு என்போம். முருங்கைக்காய் தானும் நன்றாக இருக்கும். நான் வாழைத் தண்டிலும் இருவுளி குழம்பு செய்வேன். நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஎங்கள் அம்மா வீட்டில்(திருவனந்தபுரம்) இப்படித்தான் மோர் குழம்பு செய்வார்கள். அழகான படங்களுடன் செய்முறை அருமை.
பதிலளிநீக்கு