நன்றி நெல்லைத்தமிழன்.
சொன்னதுபோலவே நெல்லைத் தமிழன் ஒரு செய்வகை அனுப்பியிருக்கிறார். இந்த வாரம் அவரது மோர்க்குழம்பு. படங்கள் அழகாக எடுத்துத் தள்ளியிருக்கிறார். படங்களை பார்க்கும்போதே வர கைவன்மை, கைராசி தெரிகிறது.
நிறைய படங்கள். படங்களை வரிசையாக இணைத்து விடுகிறேன். கீழே படிக்கும்போது மேலே படங்களை ரெபரென்ஸுக்குப் பார்த்துக் கொள்ளலாம்.
தெளிவான புகைப்படங்கள். பொறாமையாக இருக்கிறது நெல்லைத்தமிழன். கேமிராவில் எடுத்தீர்களோ? நான் அலைபேசியில்தான் எடுப்பேன்.
===============================================================
திங்கக்கிழமை - - புளி மோர்க்குழம்பு
நான் சூழ்நிலையினால் கடந்த நாலு வருடங்களுக்கு மேல் பேச்சலர் ஆனபின், என்னுடைய தனிப்பட்ட ஆசையினால், அவ்வப்போது ஏதாவது செய்து பார்ப்பேன். மனைவியும் குழந்தைகளும் இருந்தபோது, நான்தான் அன்றன்று என்ன செய்யணும் என்று சொல்வது. சில சமயம் வார இறுதியிலேயே எல்லோருடனும் மார்க்கெட் சென்று, அந்த வாரத்தில் முக்கியமாகப் பண்ண வேண்டியவைகளுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவேன். பசங்க குட்டியாக இருந்தவரை ஒன்றும் பிரச்சனையில்லை. அவங்க கொஞ்சம் வளர்ந்தபின், மதியச் சமையல் மட்டும் என்னுடைய தேர்வானது.
மனைவி (‘நான் அவளை ஹஸ்பண்ட்னுதான் சொல்லுவேன்) நான் சொல்லுவதையெல்லாம் பண்ணுவாள். நான் தனியாக, வேலைக்காக இந்த ஊரில் (எந்த ஊரில்? ஹி ஹி) இருக்க ஆரம்பித்தபின், ஆசையினால் பல்வேறு ரெசிப்பிக்களைப் பார்த்து, எனக்குப் பிடித்தவைகளை மட்டும் செய்துபார்ப்பேன். எனக்கு எல்லா இனிப்புகளும், சில பல கூட்டு, காய்கறிகள், குழம்புகள்தான் பிடிக்கும். நான் ரொம்ப selective eater. என் ஹஸ்பண்டுக்கு நான் இப்படி இருக்கிறது பிடிக்காது. எப்போதும் ஒரு சில வகைகளையே செய்யச்சொல்லுவது.
ஆனால், எல்லா ரெசிப்பிக்களையும், சாப்பாட்டுவகைகளைப்பற்றியும் யார் எழுதியிருந்தாலும் ஆர்வமாகப் படிப்பேன். அதனால்தான், சாப்பாட்டுவகைகளுக்கு நான் பின்னூட்டம் எழுதத் தவறுவதில்லை. நான் அவ்வப்போது எங்கள் பிளாக்குக்கு நான் செய்துபார்த்தவைகளை அனுப்புகிறேன். ஸ்ரீராமுக்குப் பிடித்திருந்தால் வெளியிடுவார். பேச்சலருக்கு என்ன செய்யத் தெரியுமோ, எந்த அளவு சமையல் திறமை இருக்குமோ அவ்வளவுதான் என்னிடமும் எதிர்பார்க்கலாம். கீதா மேடம் போன்ற ஜாம்பவான்களே.. பொறுத்தருள்க.
எங்கள் வீட்டிலும் தாய்வழி உறவினர்கள் வீட்டிலும் புளி மோர்க்குழம்பு அடிக்கடி செய்வார்கள். எனக்கு மோர்க்குழம்புனாலே ரொம்பப் பிடிக்கும். எனக்கு 4 வகை மோர்க்குழம்பு பிடிக்கும். இந்த புளி மோர்க்குழம்பு பொதுவாக தமிழ்நாட்டில் பண்ணுவதில்லை என்று நினைக்கிறேன். எங்கள் முன்னோர்களுக்கு திருவனந்தபுரம் தொடர்பு இருப்பதால் அங்கிருந்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்போ செய்முறை. இது மூன்று பேர்களுக்கானது.
மோர் 300 மில்லி, புளி, வறுத்து அரைக்க, உளுத்தம்பருப்பு, வெந்தயம், 3 சிவப்பு மிளகாய். குழம்பில் போட காய், வெண்டை அல்லது பூசணி. தாளிக்க கடுகு, கருவேப்பிலை. தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். நான் எல்லாத்துக்கும் நல்லெண்ணெய்தான் உபயோகிக்கிறேன்.
2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம், 3 (அல்லது 4. எனக்கு காரம் அதிகம் இருந்தால் பிடிக்கும்) சிவப்பு மிளகாய். இதை எல்லம் வெறுமனே வாணலியில் வறுக்கவும். கருக விட்டுவிட வேண்டாம். இதை ஒரு தட்டில் போட்டு கொஞ்சம் ஆறவிடவும். இங்கு திருவின தேங்காய் கிடைக்கும். அதை வார இறுதியில் வாங்கி ஃப்ரீசரில் வைத்துவிடுவேன். அதில் ஒரு அரைமூடி (6-8 தேக்கரண்டி) எடுத்து, அவனில் 10-30 வினாடிகள் வைத்துவிடவும். அதையும் கொஞ்சம் ஆறவைக்கவும். முன்னெல்லாம், அரை மணி முன்பு தேவையான தேங்காய்த் திருவலை ஃப்ரீசரில் இருந்து எடுத்துவைத்துவிடுவேன். அப்புறம் சோம்பேறித்தனத்தினால் அவனில் போட்டு எடுக்கும் வேலை. முதல்ல உ.பருப்பு, வெந்தயம், மிளகாயை மிக்சியில் போட்டு அரைக்கவும். பின்பு தேங்காய்த் துருவலைப் போட்டு ‘நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். (‘நீர் விடாமல்).
தானுக்கு, நீரில்லாத காய்தான் உபயோகிக்கவேண்டும். எங்க அம்மா பூசணிதான் நன்றாக இருக்கும் என்பார்கள். நான் வெண்டைக்காய் இருந்ததால் அதனை உபயோகித்துள்ளேன். அதை கட் பண்ணி, கொஞ்சம் எண்ணெயில் ஓரளவு வறுத்து (வதக்கி)க் கொள்ளவும். ‘நான் வதக்கும்போதே உப்பையும் சேர்த்துவிடுவேன். பூசணின்ன, உப்பு போட்ட ஜலத்தில் தானைக் கட் பண்ணிக் கொதிக்கவைத்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் (தான் மட்டும்)
புளி ஒன்றரை தேக்கரண்டி (பேச்சலருக்கு ஆபத்பாந்தவனாக Priya brand புளி பேஸ்ட் (15 ரூ) கிடைக்கிறது. அதைத்தான் ஒரு 10 பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்வேன்) எடுத்து, அதில் 150 மில்லி தண்ணீர்விட்டுக் கலந்துகொள்ளவும். (‘நீர்க்க இருக்கவேண்டும்). பாத்திரத்தில் மூன்றில் ஒருபங்குக்குக்கு மேல் போகக்கூடாது. இதை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போனபின், அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்துவைத்த தேங்காய்/உ.பருப்பு/வெந்தய மிக்ஸைச் சேர்க்கவும். அத்துடன் மோரையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பைப் போட்டு நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். அடுப்பை எரியவிட்டு, குழம்பைக் கலக்கிக்கொண்டே இருங்கள். எங்க அம்மா, “குழம்பு பதைக்கற பதம்’ அல்லது ஒரு கொதி என்பார்கள். என்னைப் பொறுத்தவரையில், குழம்புக்குள் விரலை விட்டால் பொறுக்கற சூட்டுக்குக் கொஞ்சம் மேல்வரை கொதிக்கவிடவும். (கலக்கலைனா திரிஞ்சமாதிரி ஆகிவிடும்) அடுப்பை அணையவிட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவேண்டியதுதான்.
பேச்சலருக்கு சுலபமான உருளைக்கிழங்கு கறியுடன் சாப்பிடவேண்டியதுதான்.
கீதா மேடம்.. விரைவில் சங்கீதாவில் செய்யும் மோர்க்குழம்பு ரெசிப்பியுடன் வருகிறேன். அதற்குள் சில பல வெரைட்டி மோர்க்குழம்புகளை எழுதிவிடாதீர்கள். வேணும்னா எங்களை மாதிரி பேச்சலருக்கு துவரம்பருப்பை எப்படி விரைவாக (குழம்பு வகையறாக்களுக்கு) ரெடி பண்ணுவது என்று எழுதுங்கள். ஊறப்போட்டு, குக்கரில் வைத்து ரெடி பண்ணுவதற்குள், சாம்பார் பண்ணும் ஆசையே போய்விடுகிறது.
அன்புடன்,
நெல்லைத்தமிழன்