அந்த சில நிமிடங்கள்
கீதா ரெங்கன்
கடிகாரத்தின் குயில் 5 முறை கூவியது.
வேலையில் மும்முரமாக இருந்த கவிதாவிற்கு
அப்போதுதான் உரைத்தது,
'4.15 மணிக்குப் பள்ளி முடியும்
நேரம். சரியாக 4.45 மணிக்கு அம்மா என்று அழைத்துக் கொண்டே வந்து நிற்பாளே குழந்தை.'
என்று ரூமிற்குச் சென்று பார்த்தாள். இல்லை..
பள்ளி நிகழ்வுகளை, மெயிலிலோ மொபைலிலோ
அனுப்பும் பெரிய பள்ளி எல்லாம் இல்லை. நடுத்தரப் பள்ளிதான்.
சென்னையின் போக்குவரத்து நெரிசல்
அதிகமான பகுதி. இரண்டு வாரம் முன்புதான் தெருவைக் கடந்த போது, வேகமாக வந்து தெருவில்
திரும்பிய ஒரு கார் குழந்தையைத் தட்டி விட்டுச் சென்று விட்டது. நல்லவேளை சிறிய காயங்களுடன்
தப்பித்தாள்.
குழந்தை என்றதும், ஏதோ எல்.கே.ஜி
படிக்கும் குழந்தை என்று நினைத்து விடாதீர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் பதின்மூன்று
வயது மகள் அதனால் என்ன? எத்தனை வயதானாலும் அம்மாவிற்குக் குழந்தை, குழந்தை
தானே!
ட்ராஃபிக் நெரிசலில் மாட்டிக்
கொண்டிருப்பாளோ? சற்று நேரம் பார்க்கலாம் என்று தன் வேலையில் ஈடுபட்டாள். அடிக்கடி
கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மணி 5.30 ஆனது இன்னும் குழந்தையைக்
காணவில்லை.
மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
ஒருவேளை தோழிகளுடன் விளயாடிவிட்டு வருவாளோ? இல்லை ஏதாவது எக்ஸ்ட்ரா வகுப்புகள் இருக்குமோ? விளையாட்டுப் பயிற்சி வகுப்பாக இருக்குமோ? எதுவாக
இருந்தாலும் முன்பே சொல்லிவிடுவாள் இல்லை என்றால் மொபைலில் மெசேஜ் கொடுத்துவிடுவாள்,
காரணம் சொல்லி, தான் வர தாமதமாகும் என்று. அன்று அப்படியான மெசேஜும் இல்லாததால் மனதில்
பயம் கவ்வியது.
மகளுக்கு மெசேஜ் கொடுத்துப் பார்க்கலாம்
என்று வீட்டினுள் சென்று மெசேஜ் கொடுத்தாள். ஒரு டிக்தான் வந்தது. 'என்னடா இது சோதனை'
என்று நினைத்த போது மொபைல் மூச்சை விடத் தயாராகி அறிவுறுத்தியது. சார்ஜில் போட்டாள்.
பேட்டரி வேறு மாற்ற வேண்டும் என்றும் நினைவுக்கு வந்தது.
மீண்டும் வீட்டின் வெளியே வந்தாள்.
என்னதான் மகளை தைரியமாக வளர்த்திருந்தாலும்.......ஒரு
வேளை அன்று போல் சைக்கிளில் வரும்போது ஆக்சிடென்ட் ஆகி இருக்குமோ? அடிபட்டு ரோட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் கிடக்கிறாளோ?'
'ஐயோ கடவுளே! அப்படி இருக்கக்
கூடாது'
ஒரு பக்கம் உதடுகள் கடவுளைப் பிரார்த்திக்க,
மறு பக்கம் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
தூரத்தில் ஸ்கூல் யூனிஃபார்மில்
இரு குழந்தைகள் சைக்கிளில் வருவது தெரிந்தது. பரபரத்த மனதின் தவிப்பு அடங்கும் நேரம்……….அந்த
சைக்கிள் அருகில் வர வர…..மகளில்லை என்று தெரிந்ததும், மனதில் ஏமாற்றம்………மறுபடியும்
தவிப்பு………
"ஏம்மா இப்படி அங்கயும் இங்கயும்
நடந்துட்டு தெருவையே பாத்துட்டுருக்க? நானும் அப்போலருந்து பார்த்துட்டுருக்கேன்"
- மாடி வீட்டில் வேலை செய்யும் பெண்மணி.
"இல்லைங்க, பள்ளிக்கூடம்
முடிஞ்சு அரை மணி நேரத்துல குழந்தை கரெக்டா வந்துருவா, இன்னைக்கு காணலை அதான்..."
"அதும் சர்தான்.....இப்பலாம்
வயசுப் பொண்ணுங்களை வெளிய அனுப்பிட்டு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கணுமா
இருக்கு. காலம் கெட்டுக் கெடக்குது.....ம்..எதுக்கும் முண்டக்கணியம்மனுக்கு ஒரு ரூபா
முடிச்சு வையி....."
என்று சொல்லிக் கொண்டே காய்ந்த
துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அப்பெண்மணி.
ஏற்கனவே கலங்கியிருந்த மனதில்
ஒரு கல் விழுந்தது.
'வயசுப்பொண்ணு' என்ற வார்த்தை
கவிதாவின் மனதைக் கூடுதலாகக் கலக்கியது. அந்த வார்த்தை மனதில் வேண்டாத கற்பனைக் குதிரையை
ஓட்டியது குதிரையின் பாய்ச்சலை அடக்க முயன்றாள்.
"என்னங்க கவிதா இன்னும் ஷோபா
வரலைன்னு பாக்கியம் சொல்லிச்சு. அவ ஃப்ரென்ட் வீட்டுக்கு ஃபோன் அடிச்சிக் கேட்டீங்களா?"
மாடியில் இருக்கும் வீட்டு உரிமையாளர் பெண்மணி பால்கனியிலிருந்து குரல் கொடுத்தாள்.
அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது
ஃபோனை சார்ஜில் போட்டிருப்பது. ஒருவேளை மெசேஜ் வந்திருக்குமோ என்று உள்ளே சென்று பார்த்தாள்.
வந்திருக்கவில்லை. இப்போது இரண்டு டிக் வந்திருந்தது ஆனால் மகள் மெசேஜைப் பார்த்திருக்கவில்லை.
குழப்பமாக இருந்தது. மகளின் தோழியின் வீட்டிற்கு ஃபோன் அடிக்க தயக்கம். பழக்கம் இல்லை.
மகளின் தோழிகளின் வீட்டோடு அவ்வளவாகப் பழக்கமில்லை. இன்னும் சற்று நேரம் பார்க்கலாம்
என்றும் தோன்றியது. மீண்டும் வெளியில் வந்தாள்.
ரிங் டோன் சத்தம். 'என் ஃபோனா?'
எந்த ரிங் டோன் கேட்டாலும் தன் ஃபோன் போலவே தோன்றும் ஒரு வித அரண்ட மனம்.
வெளியில் செல்வதற்காக வந்த பக்கத்துவீட்டுப்
பெண்மணி கேட்டைத் தாண்டும் போது...
"பொண்ணு இன்னும் வரலை போல....இல்லைனா
இதுக்குள்ள அவ பசங்களோட தெருல விளையாட இறங்கிருப்பாளே"
தகவல் பரிமாற்றங்கள்.
"அதை ஏன் கேக்கறீங்க இப்படித்தான்
போனவாரம் எங்க அக்கா வீட்டுப் பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு ஸ்கூல் போனவ வரவே இல்லை
பாத்தா யாரோ அவளை..........கலிகாலம் என்னத்த சொல்ல."
போகிற போக்கில் மிகப் பெரிய கல்லை
எறிந்துவிட்டுப் போனாள்.
வாசற்படிகளில் அமர்ந்து தலையைக்
கவிழ்த்துக் கொண்டுவிட்டாள். 'இத்தனை அதைரியமாக எப்போது ஆனேன்' என்று பல கேள்விகள்
அவளைக் குடைந்தன.
ரிங் டோன் கேட்பது போல் தோன்றியது.
பிரமையோ? காட்சிகள் ஓடின. ஹாஸ்பிடலுக்கு ஓடுகிறாள். ஹாஸ்பிட்டலில். நர்சுகள், அங்குமிங்கும் வேக வேகமாக நடக்கின்றார்கள்.....குழந்தைக்கு
என்னாச்சு? .....ஷோபாவோட அம்மா வந்திருக்காங்களா என்ற குரல்....ஓ நோ......காட்சி மாறியது....ஃபோன்
வருகிறது......யாரோ பேசுகிறார்கள்....மகளை அவன்....மகளின் அழுகைச் சத்தம்.....ஓ நோ
நோ.....டக்கென்று தலை சுற்றுவது போலிருந்தது. மூச்சிரைத்தது. மெதுவாக யதார்த்தத்திற்கு
வந்தாள்.
'ச்சே என்ன மாதிரியான காட்சிகள்!
சில நிமிடங்களில்....'
ஃபோன் அடித்துக் கொண்டிருந்தது.
'ஓ! இதுதான் அப்படி மனதில் காட்சிகளை ஓட விட்டது போல' பயந்து கொண்டே ஓடிச் சென்று ஃபோனை
எடுத்தாள்,
ஹலோ!..............
ஹலோ! நல்லசிவமா?.........
"கெட்டசிவம்"
கோபத்துடன் கட் செய்தாள். அயற்சியில்
ஃபோனை வைத்துவிட்டுத் திரும்பும் சமயம்,
"அம்மா." என்ற மகளின்
குரல். சந்தோஷம் ஒரு புறம் கோபம் மறுபுறம்.
கோபமும் வருத்தமும் கலந்த உணர்வுகளுன்
மகளைக் கட்டிக் கொண்டாள். கண்ணில் நீர் துளிர்த்தது. துடைத்துக் கொண்டாள்.
"ஸாரிம்மா நான் காலைல சொல்ல
மறந்துட்டேன்…இன்னிக்கு லேட்டாகும்னு. இன்னிக்கு கேம்ஸ்ல, ரிலே டீமுக்கு செலெக்ஷன்
மா……..அதான் லேட்டு”.
"அதெல்லாம் ஓகே அப்புறம்
ஏன் மெசேஜ் கூடக் கொடுக்கலை? என் மெசேஜையும் பார்க்கலை?"
“என்னம்மா, ஃபோனை கூடப் பார்க்க
முடியலை. பேக்குள்ளேயேதான் இருந்துச்சு. க்ளாஸ் முடியறதுக்கு முன்னவே க்ரவுண்டுக்கு
வரச் சொல்லிட்டாங்க. என்ன இப்படிப் பார்க்கற…….நான் என்ன சின்னக் குழந்தையா? கேர்ப்ஃபுல்லாதான்
வருவேன்மா."
அந்த பதிலில் கவிதாவிற்கு மன தைரியம்
வந்தாலும், அந்த சில நிமிடங்களில் தமிழ் படங்களில் வருவது போல வேக வேகமாகக் காட்சிகள்
மனத்திரையில் விரிந்ததே. மொபைல் ரிங்டோன் கேட்டதும் என்னென்ன விபரீதமான எண்ணங்கள்'
"கொஞ்ச நேரத்துல மனசு பதறிடுச்சுடி"
மனம் கலங்கியிருக்கும் போது அக்கம்
பக்கத்திலிருந்து வீசப்படும் கற்கள் கலங்கிய மனதைக் குழப்பிக் குட்டையாக்கிவிடுகிறது.
"ஏம்மா மனசை குரங்கு மாதிரி
தாவ விடற? எனக்கு சொல்ற அட்வைஸ் எல்லாம் உனக்கு அப்ளை பண்ண மாட்ட போல" சொல்லிக்
கொண்டே யூனிஃபார்மை மாற்றினாள்.
"ஆஞ்சனேயருக்கே சீதாதேவிய
தேடினப்ப மனசு சஞ்சலப்பட்டு வேண்டாதது எல்லாம் மனசுல வரலையா? அவருக்கே அப்படினா நாமெல்லாம்
எந்த மாத்திரம்?"
"உன் புராணம் எல்லாம் அப்புறம்
வைச்சுக்க. இப்ப எனக்கு பூஸ்ட் கொடு. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி. நோ, அவர்
எனர்ஜி"
'ச்சே கொஞ்ச நேரம் முன்ன மனசு எப்படி எல்லாம் போச்சு. மனசு ஒரு பிசாசுதான்' என்று தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள் கவிதா.



பெண்ணைப் பெற்றவர்களுக்கும் பையன் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் இந்தப் பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
பதிலளிநீக்குஅந்த உணர்வை கதையில் கொண்டு வந்துவிட்டார் கீதா ரங்கன்
பாராட்டுக்கள்
வாங்க நெல்லை.. கீதா மெதுவாக வந்து பதிலளிப்பார்.
நீக்குஸ்ரீராம் அட படம் எல்லாம் சேர்த்துவிட்டீங்களே! எடுத்துக் கொடுத்தது எல்லாத்துகும் நன்றி.
நீக்குநேத்து எனக்குப் படம் எடுக்கும் பொறுமை இல்லை. கொஞ்சம் முயற்சி பண்ணினப்ப சரியான படம் கிடைக்கலையா நேரம் வேறு பஞ்சம். பொறுமை இழந்து அப்படியே அனுப்பிவிட்டேன்,
நன்றி ஸ்ரீரம
கீதா
வாங்க நெல்லை. ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி கொஞ்சம் பதற்றம் வரும்தான். அந்த சமயத்தில் மனம் என்னென்னவோ பற்றிச் சிந்திக்கும். கூடவே பக்கத்துல உள்ளவங்க எதையாச்சும் நெகட்டிவாகச் சொல்லிப் போக...அது இன்னும் கொஞ்சம் கூடும். அதுதான் ...
நீக்குமிக்க நன்றி நெல்லை பாராட்டிற்கு!
கீதா
கீதா ரங்கன் எழுதிய கதை என்றதும் தைரியமாக மொபைலில் படிக்க ஆரம்பித்துவிட்டோமே முடியுமா எனத் தோன்றியது. கதைக் கருவை கடத்தல், போலீஸ் என்றெல்லாம் நீட்டி நெடுங்கதை ஆக்கிடுவாரோ என நினைத்தேன்.
பதிலளிநீக்குசுருக்கமாக அதே சமயம் நிறைவாகக் கொண்டுசென்றுள்ளார்
cசிரித்துவிட்டேன் நெல்லை.
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
ஆமாம் கதைத் தலைப்பு நினைவுபடுத்தும் பாடலின் தீமே வேறு அல்லவா?
பதிலளிநீக்குபாடல் தீம் என்னவாக இருந்தால் என்ன, நெல்லை. அந்த இரு சொற்கள்தானே!
நீக்குஸ்ரீராம், ஓடி வாங்க! பாடல் பற்றி தெரிந்த மன்னரே வாங்க!
கீதா
ஹா இன்று கீதா ரங்கன் கதை. நல்ல தங்கை. குறை கூற முடியுமா? நல்ல 'கதை'. ஆனால் எ பி சன்மானம்/பரிசு தருவதில்லை.
பதிலளிநீக்குJayakumar
வாங்க JKC.. கீதா சார்பில் வரவேற்கிறோம்.
நீக்குஹாஹாஹா ஜெ கே அண்ணா, நல்ல தங்கை, ஃப்ரென்ட், நெருக்கமானவர் என்றெல்லாம் இருந்தாலும் குறை இருந்தால் சொல்லத்தானே வேண்டும்!!
நீக்குநீங்க அப்படி எல்லாம் பார்க்கவே மாட்டீங்களே!
எனவே உங்களிடமிருந்து இப்படியான வார்த்தையை எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி ஜெ கே அண்ணா.
எ பி சன்மானம்/பரிசு தருவதில்லை.//
வேண்டாமே , அண்ணா. அது கமர்ஷியல் உறவு ஆகிவிடும். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!!!!
நன்றி ஜெ கே அண்ணா.
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க முருகா... வணக்கம்.
நீக்குவாங்க துரை அண்ணா.
நீக்குகீதா
ஆணோ,பெண்னோ குழந்தைகள் வர நேரமானல் மனது அடித்துக் கொள்ளும், பெண் குழந்தைகள் என்றால் படபடப்பு அதிகம். அந்த பதட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஆமாம் பானுக்கா எக்குழந்தையாக இருந்தாலும் மனம் அடித்துக் கொள்ளும்.. அதூவ்ம் பெண் குழந்தை என்றால் ரொம்பவே
நீக்குமிக்க நன்றி பானுக்கா. பாராட்டுகளுக்கு
கீதா
அதே கண்கள் மாதிரி மீண்டும் அதே எழுத்துருவாக்கம்...
பதிலளிநீக்குநெருக்கடியான தட்டச்சு ஏன்?.. கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமே...
இது தாழ்மையான கருத்து
முழங்கால் வலியினால் உடலில் அயர்ச்சி...
பார்க்கலாம்...
துரை அண்ணா, நெருக்கடியான தட்டச்சு என்று எதைச் சொல்றீங்க என்று தெரியவில்லை. நான் நேரடியாக ப்ளாகரில் அடிப்பது இல்லை. வேர்டில் அடித்து அதைத்தான் காப்பி பண்ணி ப்ளாகரில் போடுகிறேன். வேர்டில் ஃபார்மாட் பண்ணி பேஜ் லேஅவுட்டில் பத்தி இடைவெளி 6 புள்ளியை எடுத்துக் கொண்டு போடுகிறேன். 10 புள்ளி எடுத்துக் கொண்டால் பக்கம் மிகவும் நீண்டு விடும். என்பதால் 6 புள்ளி. ஃபான்ட் லதா அதன் புள்ளி 12. வரிகளுக்கான இடைவெளி 1.15.
நீக்குஅடுத்த் அமுறை அதை 1.5 இடைவெளியில் அடித்துப் பார்க்கிறேன்.
நன்றி துரை அண்ணா.
கீதா
முழங்கால் வலியினால் உடலில் அயர்ச்சி..//
நீக்குமுழங்கால் வலிக்கு இப்போது நிறைய வைத்தியங்கள் இருக்கின்றனவே துரை அண்ணா. குறிப்பாகப் ஃபிசியோ தெரப்பி.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை நன்றாக உள்ளது. வெளியில் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கோ சென்ற குழந்தைகள் வரத் தாமதமானால், அதுவும் தகவல் ஏதும் தராமல் தாமதப்படுத்தினால் மனது பலவித கற்பனை தந்து சஞ்சலபடுத்தும். எந்த வயதிலிருந்தாலும் அவர்கள் நமக்கு சிறு குழந்தைகள் போலத்தானே! (அந்த இடத்தில் வந்த வரிகளை ரசித்தேன்.)
இறுதியில் பத்திரமாக வீட்டுக்கு வந்து சேரும் மகளை கண்டவுடன் பெருகும் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனதில் தோன்றும் இயல்பான உணர்ச்சிகளுடன் இந்த நல்ல கதையை தந்திருக்கும் சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிக்க நன்றி சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
(அந்த இடத்தில் வந்த வரிகளை ரசித்தேன்.)//
நீக்குநன்றி கமலாக்கா..
அதானே எத்தனை வயதானால் என்ன? குழந்தைகள்தானே....நீங்க கூட ராகவேந்திரர் கோயில் போனப்ப, குழந்தைகளைத் தனியாக விடக் கூடாதுன்னு நீங்களும் அவங்க கூட ஆற்றில் நெஞ்சளவு நீரில் நடந்தீங்களே!!! அப்ப உங்க குழந்தைகள் எல்லாரும் 20 வயதையும் கடந்தவங்க இல்லையா!!!!!!!!!!!! அதான் அம்மாக்களுக்கு குழந்தைகள்தான்.
//மனதில் தோன்றும் இயல்பான உணர்ச்சிகளுடன் இந்த நல்ல கதையை தந்திருக்கும் சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//
நன்றி கமலாக்கா பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்
கீதா
கீதா! ரொம்பவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்! தாய்மையின் உணர்வுகளை, கலக்கங்களை அருமையாக விவரித்திருக்கிறீர்கள்! நீங்கள் சொல்வது போல, எந்த வயதாயிருந்தால் என்ன, தாய் எப்போதும் தாய் தானே? மனசு எப்படியெல்லாம் நடுங்கும், கற்பனைகள் எந்த அளவுக்குப் போகும், அதையெல்லாம் அப்படியே, யதார்த்ததிற்குள் விழுந்து நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறீர்கள்!! இனிய பாராட்டுக்கள், கீதா!!
பதிலளிநீக்குமனோ அக்கா ரொம்பா நாளாச்சு பார்த்து.
நீக்குஎன் அப்பாவின் வயது 70 ஐ தொட இருந்த சமயம் என் பாட்டியின் வயது 84, 85 ஆனாலும் அப்பா வெளியில் போகும் போது கண்ணா பார்த்து போய்டு வா. எல்லாம் எடுத்து வைச்சியா மறக்காம என்று வேலைகளையும் நினைவுபடுத்துவார்.
இதைக் கூட சின்னதாக தலைமுறை தலைமுறையாக தொடர்வதை எழுதிவைத்திருக்கும் நினைவு.
மிக்க நன்றி மனோ அக்கா, பாராட்டுகளுக்கு.
கீதா
இங்கே(கனடாவில்) நவராத்திரி அன்று என் மகள் வீட்டிற்கு வந்த ஒரு ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒரு நாள் வந்திருந்தாள். அந்தப் பெண் வேலைக்குச் செல்கிறாள், தனியே கார் வைத்திருக்கிறாள். கொலு பார்க்க வந்த பெண் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு என் பேத்திகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள், மணியோ இரவு பத்தை தாண்டி விட்டது. அவளுக்கு 20+தான் வயதிருக்கும். எனக்கோ இந்தப் பெண் வீட்டிற்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறதே என்று கவலை. அவள் வீட்டிலிருந்தும் யாரும் அழைக்கவில்லை. இந்த ஊர் பழக்கம் இப்படியோ என்று நினைத்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குஓ! பானுக்கா, அந்த ஊர்க்காரர்கள் என்றால் இது சகஜம். ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களும் கவலைப்படவில்லையா? ஆச்சரியம். ஒரு வேளை அந்த ஊர்ப்பழக்கம் வந்திருக்கும்.
நீக்குஊரில் இருந்திருந்தால் கவலைப்படுவாங்களா இருக்கும். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளை அதுவும் அவர்கள் அடல்ட் என்றால் கேட்க முடியாது!
கீதா
இந்த உணர்வுகளைப் பெண்ணுக்காக சிகந்திராபாதில் இருந்தப்போவும் பையருக்காகச் சென்னை அம்பத்தூரில் இருந்தப்போவும் அனுபவிச்சிருக்கேன். இரண்டு முறைகளிலும் நான் பள்ளிக்கே கிளம்பி விட்டேன். பெண்ணுக்காகப் போகும்போது நாங்க இருந்த சஃபில்குடா ஸ்டேஷனில் ரயில் இன்னும் வரல்லை என்றதும் பெண் விரைவு வண்டியில் போயிருக்கக் கூடும் இங்கே நிற்காததால் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி இருப்பாள், அவளை எப்படி அழைத்து வருவது என யோசித்துக் கொண்டே ட்ராக் ஓரமாய்க் குழந்தையையும் தூக்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்தேன். பையர் அப்போ ஒன்றரை வயதுக் குழந்தை. கொஞ்ச தூரத்திலேயே பெண் அதே ட்ராக்கில் எதிர்த் திசையிலிருந்து யாரோ அழைத்து வர வந்து கொண்டிருந்தாள். அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். குழந்தை வந்ததும் சொன்னாள். சஃபில்குடா வரும்போது தூங்கி விட்டாளாம். கண் முழித்துப் பார்க்கையில் ஸ்டேஷன் தாண்டி விட்டது. ஆகவே என்ன செய்வது என அழுதிருக்காள். கூட வந்த ஒரு மனிதர் விபரம் கேட்டுவிட்டுத் தான் அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு பெண்ணிடம் வீட்டு விலாசம் கேட்டுக் கொண்டு அழைத்து வந்தார். நானும் பாதியிலேயே பார்த்துவிட்டேன். அப்போது ஏற்பட்ட மன நிம்மதியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பையர் விபரம் ஏற்கெனவே பதிவாகப் போட்டிருக்கேன்.
பதிலளிநீக்குகீதாக்கா, உங்கள் அனுபவத்தை வாசிக்கும் போதே, கடவுளே என்று தோன்றியது. இப்படியான சூழலில் ஒரு நல்ல மனிதர் வந்திருக்கிறார் அவளைக் கூட்டிக் கொண்டு வர இல்லைனா நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
நீக்குஎப்படியோ தெய்வ அருளால் நல்லபடியாக எல்லாம் முடிந்துவிட்டது அதுவரை நீங்க தவிச்சிருப்பீங்க. அதுவும் அப்போது எல்லாம் கையில் ஃபோனா எதுவும் கிடையாதே
கீதா
தி/கீதா ஒரு தாயின் தவிப்பை அதிலும் பெண்ணைப் பெற்ற தாயின் தவிப்பை மிக அழகாகச் சொல்லி இருக்கார்/ பானுமதியின் பாணியில் இவரும் இப்போ "சுருக்"கமாக எழுத ஆரம்பிச்சிருக்கார் போல. கச்சிதம்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்கு....அக்கா இது போன்று சுருக்கமாக கதைகள் முன்பு ஏபியில் எழுதி இருக்கிறேன். சில கதைகள் பெரிதாக போவதற்கு காரணம் கதைக்கான உணர்வுகளையம், கதையின் அம்சங்களையும் சொல்லி வரும்போது அது குறைக்க முடியாமல் குறைத்தால் கதையின் முக்கிய அம்சம் உணர்வுகள் தொலைந்து விடுமோ என்பதால் பெரிதாகி விடுகின்றன.
ஆனால் இதற்கு முன்னும் நான் எழுதிய சிறிய கதைகள் ஏபியில் வந்திருக்கின்றன. இந்தக் கதைக்கு அதன் முக்கிய பொருளுக்கு இவ்வளவுதானே சொல்ல முடியும். ஆனால் என் கதைகள் பெரிதாகவே இருக்கும் என்ற எண்ணம் பொதுவாக எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. ஹாஹாஹா
நன்றின்கீதாக்கா
கீதா
கீதா அக்கா அவர்களது அனுபவம் நல்ல மனிதர் வடிவில்
பதிலளிநீக்குதெய்வம் இருக்கின்றது என்பதை உறுதி செய்தது.
/// முழங்கால் வலிக்கு இப்போது நிறைய வைத்தியங்கள் இருக்கின்றனவே துரை அண்ணா. குறிப்பாகப் ஃபிசியோ தெரப்பி.... ///
பதிலளிநீக்குதங்களது அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
முழங்காலில் வீக்கம் எதுவும் இல்லை... வலி மட்டுமே...
வைத்திய முறைகள் பல இருப்பினும்
முக்கியமான ஒன்று சற்றே %%&&%%&& !?...
துரை அண்ணா நீங்க சொல்ல வருவது என்ன என்று புரிகிறது.
நீக்குமுழங்கால் வலிக்குதான் சொன்னேன் அண்ணா.
கால் மூட்டிகளுக்கான பயிற்சிகள் மட்டும் கற்றுக் கொண்டு வீட்டில் செய்தாலும் போதும் அண்ணா. முடிந்தால் பாருங்கள், துரை அண்ணா.
கீதா
சகோ கீதா அவர்களது அன்பினுக்கு
பதிலளிநீக்குமீண்டும் நெஞ்சார்ந்த நன்றி..
துரை அண்ணா நன்றி.
நீக்குகீதா
எழுத்துருவாக்கத்தை சற்றே தளரவும் தட்டச்சு செய்யலாம்...
பதிலளிநீக்குஅதன் வழி முறைகளை தற்சமயம் மறந்து விட்டேன்...
கைத்தொலைபேசியில் செல்லினம் இருக்கின்றது...
எனக்குத் தான் இயலவில்லை
துரை அண்ணா, எனக்கு கைத்தொலைபேசியில் தட்டச்சு செய்ய முடியவில்லை. இயலாது. நான் கணினியில்தான் பதிவுகள், கருத்துகள் தட்டச்சு செய்கிறேன். அழகி செயலி, லதா எழுத்துரு. நிர்மலாவும் இருக்கிறது. அடுத்த முறை அதையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
நீக்குநீங்கள், கமலாக்கா எல்லாரும் எப்படி கைத்தொலைபேசியில் தட்டச்சு செய்து பதிவு வெளியிடுகிறீர்கள் என்பது மிகவும் வியப்பு எனக்கு.
கீதா
சகோ.,
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கும் ஆலோசனைக்கும் மீண்டும் நன்றி.. நன்றி..
கீதா நன்றாக இருக்கிறது கதை. கதையின் தலைப்பும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகுழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்பும் நேரம் கொஞ்சம் மாறினாலும் மனம் பட படக்க ஆரம்பித்து விடும் தான். நம் மனதில் நிறைய வேண்டாத எண்ணங்கள் வந்து பயமுறுத்தும். இப்போது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்பங்கள் நிறைய கேள்வி படுகிறோம் அவை நினைவில் வந்து பயமுறுத்தும்.
அக்கம் பக்கம் வீட்டினர், உறவுகள் ஆறுதல் சொல்ல வந்து விட்டு நீங்கள் கதையில் சொல்வதை போல பலவதையும் பேசி பயமுறுத்துவார்கள்.
மிக்க நன்றி கோமதிக்கா. தலைப்புக்கு நம்ம ஸ்ரீராமுக்கு அதை அனுப்பிவிடுகிறேன்!!!!!
நீக்குஆமாம் பெண் குழந்தைகளை என்னதான் நாம் தைரியமாக வளர்த்தாலு நாமும் தைரியமாக இருந்தால் அந்த நொடிப் பொழுதுகளில் மனம் கொஞ்சம் சஞ்சலப்பட்ட்டு விடுகிற்துதான்
ஆமாம், அக்கம் பக்க ம் என் அனுபவம்!!!
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
"//உன் புராணம் எல்லாம் அப்புறம் வைச்சுக்க. இப்ப எனக்கு பூஸ்ட் கொடு. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி. நோ, அவர் எனர்ஜி"//
பதிலளிநீக்குகுழந்தை திரும்பி வந்து அம்மாவின் அந்த நிமிட பயத்தை போக்கி விட்டார்.
கீதா ,கதையில் சொல்லவந்ததை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். கீதா.
ஆமாம் அக்கா, அந்த டென்ஷன் நிமிஷங்களை என் மகன் பெரும்பாலும் லைட் ஆக்கிவிடுவான் அப்படித் தோன்றியதால் அதை வைத்தேன்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
கணினி இல்லாமல் ஐபாடில் அடித்துக் கருத்தும் கொடுத்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குசிரமப்படாதீங்கன்னும் சொல்லுவேன்!!
கீதா