புதுசாக ஒன்றுமில்லை. இன்றைக்கு இது நான் செய்தேன். அவ்வளவுதான்.
சேனை என் பெரியவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப சாப்பிடாதீங்க என்று சொன்னாலும் அவன் தன் பங்கையும் மீறி ஓரிரு பீஸ் கூட போட்டுக் கொள்வான். ஆனால் ஒன்று, சேனைக்கிழங்கின் இயல்பு சற்றே கடினமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளாமல் சரியாக வேகவில்லை என்பான்!
எண்ணெயில் பொறித்து எடுக்கும் ஐடியா பெரும்பான்மை இல்லாததால் வாக்கெடுப்பில் தோற்றது. பாஸுக்கு மட்டுமே ஏழு வோட் உண்டு. அதைத்தவிர வீட்டோ (ட) அதிகாரமும் உண்டு. மறுபேச்சு எது?!! எங்கள் வீட்டில் மாமியாராய்ச் சேர்க்காமல் ஐந்துபேர்.
எனவே எண்ணெயில் பொரிக்காமல், தவாவில் போடு எடுப்பது என்று முடிவானது.
போதாக்குறைக்கு இதைச் செய்த நாள் காலை துளசி டீச்சர் வேறு கீழ்க்கண்ட பதிவைப் போட்டிருந்தார். அது இன்னும் கொஞ்சம் டெம்ப்ட் ஏற்றி விட்டது!
பாஸ் வழக்கம்போல சிடுசிடுத்தார். "நாளைக்கு ஹோமத்தை வச்சுக்கிட்டு இதென்ன நேரத்தை இழுக்கற வேலை? நிறைய வேலை இருக்கு"
நானும் வழக்கம்போல அதைக் காதில் வாங்காமல் நறுக்க ஆரம்பித்து விட்டேன். மருமகளிடம் சொன்னால், அவர் வேறு வழியில்லாமல் மரியாதை கருதி எதிர்க்க முடியாமல் சொன்னதைச் செய்வார். செய்தார்.
அதே சமயம், பாஸுக்கும் அவர் அம்மாவுக்கும் அவர் வேண்டுகோளின்படி வழக்கம்போல சின்னதாக நறுக்கி தனியாகக் கொடுத்து விட்டேன்! டைமண்ட் டைமண்டாக நறுக்கவில்லை.
நறுக்கி எடுத்துக் கொண்ட சேனைக்கிழங்கு துண்டங்களை பானில் போட்டு கொஞ்சம் புளி கரைத்த நீரில் உப்பும் கொஞ்சம் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த உடன் சிம்மில் வைத்து அரை வேகல் வெந்ததும் இறக்கியுமாச்சு. குக்கரில் வைத்தால்தான் மாவாகப் போய் விடுகிறதே! அப்புறம் மறுபடி மறுபடி கோஃப்தாதான் செய்ய வேண்டும்!
ஒரு பாத்திரத்தில் கார்ன் மாவு, காரப்பொடி, பெருங்காயப்பொடி, அரிசி மாவு ரெண்டு ஸ்பூன், கடலை மாவு ரெண்டு ஸ்பூன், உப்பு சேர்த்துக் குழைத்து தோசை மாவு போல வைத்துக் கொண்டாச்சு.
துண்டங்களை கார்ன்மாவில் புரட்டி தவாவில் இட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, ஓகே என்னும்போது இறக்கி பாத்திரத்தில் போட்டு விட வேண்டியதுதான்.
எனக்கு இதையும் விட இன்னும் பெரிய துண்டுகளாய் போடவேண்டும் என்று ஆசை. அதன் முழு அகலத்தில் நறுக்கி செய்ய வேண்டும் என்று ஆசை. எபப்டியோ நழுவிப் போகிறது.
அடுத்தமுறை வேறு ஐடியா வைத்திருக்கிறேனாக்கும்!










சேனைக்கிழங்கு ஃப்ரை நல்லா வந்திருக்கு. ரொம்பவே பொறுமை வேண்டும்.
பதிலளிநீக்குசில சேனைகள் ரொம்பவே வெந்து குழையும். அது நம் லக்கைப் பொறுத்ததுன்னு நினைக்கிறேன்.
வாங்க நெல்லை.. முன்பு குழைந்துபோய் வேறு வேறு மாதிரி எல்லாம் செய்திருக்கிறேனே...
நீக்குகோவிட்டுக்கு முன்னால் கிலோ 30 ரூபாயாக இருந்தது பிறகு விலை ஏறி, இப்கோது ஐம்பது ரூபாய்க்குக் கிடைத்தாலே மிக்க் குறைந்த விலை என்று தோன்றச் செய்துவிட்டது.
பதிலளிநீக்குநாங்கள் பெரும்பாலும் சிறிது சிறிதாக கட் செய்து கறியமுது செய்துவிடுவோம் (சேனை ரோஸ்ட் என்றால் புரியாது என்பதால்). டயட்டில் இருப்பவர்களுக்கு கிழங்கு கூடாதாமே
முன்பு முப்பது ரூபாய்க்கு கிடைத்ததா நினைவில்லை. ஆனால் இப்போது கிலோ எழுபதுக்கும் மேல்..
நீக்குடயட்டில் இருப்பவர்களுக்கு கிழங்கே கூடாதுதான். எப்படியும் எனக்கு உருளைக்கிழங்கு அவ்வளவு இஷ்டமில்லை. கொஞ்சமாய் சாப்பிடுவேன். இது வித்தியாசமாய் செய்யும் நாளில் முன்னபின்ன எடுத்துப்பேன்! சிறிதாக கட்செய்து செய்வதுதான் வாழ்நாள் பூரா இருக்கே...!
சேனைத் துண்டுகள் பிகாசோ ஓவியம் போலத் திருத்தியருக்கிறீர்களே.
பதிலளிநீக்குசதுரம் சதுரமாகத் திருத்த பொறுமை இல்லையா?
சதுரம் சதுரமாய் வரவேண்டும் என்றால் நிறைய வேஸ்ட் ஆகும். சேனையின் ஷேப் அப்படி. ஓரங்களைத் திருத்தினால் அதை தனியாகச் செய்ய வேண்டும் அல்லது தூக்கிப் போடவேண்டும். முழு சேனையாக வாங்கி அதை பாதியாக நறுக்கி அதை தோல்சீவி, அதை முடிந்த வரை பெரிய துண்டுகளாக நறுக்கியது.சதுரம் சதுரமாய் வரவேண்டும் என்றால் நிறைய வேஸ்ட் ஆகும். சேனையின் ஷேப் அப்படி. ஓரங்களைத் திருத்தினால் அதை தனியாகச் செய்ய வேண்டும் அல்லது தூக்கிப் போடவேண்டும். முழு சேனையாக வாங்கி அதை பாதியாக நறுக்கி அதை தோல்சீவி, அதை முடிந்த வரை பெரிய துண்டுகளாக நறுக்கியது.
பதிலளிநீக்கு// பிகாசோ ஓவியம் போல //
:))
/துண்டங்களை கார்ன்மாவில் புரட்டி தவாவில் இட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, ஓகே என்னும்போது இறக்கி பாத்திரத்தில் போட்டு விட வேண்டியதுதான்./
நீக்குபொறுமையாக செய்துள்ளீர்கள். படங்கள் அழகாக உள்ளன. செய்முறை விளக்கமும் அருமை. பாராட்டுக்கள். எதிர்பார்த்த பாராட்டுக்கள் வீட்டில் கிடைத்ததா?
சேனையை நறுக்குவது கொஞ்சம் கஷ்டம். நான் வீட்டிலிருந்தால் நான்தான் நறுக்குவேன், வேலைக்காரர்களிடம் கொடுத்தால் தோலை சீவுகிறேன் பேர்வழி என்று காயையும் சேர்த்து சீவித் தள்ளி விடுவார்கள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் சேனைக்கிழங்கு ஃபரை நன்றாக வந்துள்ளது. சேனைக்கிழங்கு என்றாலே அதை கழுவி சுத்தப்படுத்தி நம் விருப்பத்திற்கு நறுக்கவே நேரம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளும். நீங்கள் பொறுமையாக இதை வீட்டின் பல எதிர்ப்புக்கு நடுவே செய்துள்ளீர்கள். (அதிலும் நிறைய எண்ணெய் விடாமல்) பாராட்டுக்கள்.
இந்த "சேனைபிரிவுகள்" அதிசயமாக "குழை(பணி)ந்து" போய் நாம் எதிர்பாராத சமயங்களில், நம்மை ஏமாற்றும். சில நாம் எவ்வளவு எதிர்த்துப்போரிட்டாலும், தன் நிலையில் மாற்றமில்லாது உறுதியாக இருக்கும். :))
கொஞ்சம் வெள்ளை மஞ்சள் நிறத்துடன் இருக்கும் சேனைக்கிழங்கு சட்டென வெந்து விடும். கொஞ்சம் சிகப்பு கலர் கலந்து இருந்தால், நான் மேற்சொன்னது போல் தன்னிலை மாறாது இருக்கும். முழு சேனை வாங்கினால், நம் அதிர்ஷ்டத்தின்படிதான் அமையும். கட்செய்து வைத்திருப்பதை வாங்கினால் பார்த்து வாங்க முடியும்.
இதில், சாம்பார், தேங்காய் பூ போட்டு கறி, தாங்கள் செய்தபடி ரோஸ்ட், புளி, அல்லது எலுமிச்சை சேர்த்த மசியல், வறுவல் என அனைத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பக்குவம் பார்த்ததும் எனக்கும் சேனைக்கிழங்கு சாப்பிட ஆசை வருகிறது. செய்து விடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// இந்த "சேனைபிரிவுகள்" அதிசயமாக "குழை(பணி)ந்து" போய் நாம் எதிர்பாராத சமயங்களில், நம்மை ஏமாற்றும். சில நாம் எவ்வளவு எதிர்த்துப்போரிட்டாலும், தன் நிலையில் மாற்றமில்லாது உறுதியாக இருக்கும். : //
நீக்குமிகச் சரியாக சொன்னீர்கள். அதுவும் உங்கள் பாணியில்.
சேனை வைத்து சாம்பாரா.... அட.. ஒருமுறை செய்து பார்க்கிறேன். அல்லது நீங்கள் எப்படி செய்வீர்கள் என்று உங்கள் ரெசிபியை எழுதி அனுப்புங்களேன். சேனை சாம்பார் இதுவரை யாரும் செய்து நான் பார்த்ததில்லை.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரவணா சரணம். வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஐயா பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அஞ்சலி
பதிலளிநீக்கு__/\__
நீக்குஒவ்வாமையினால் இதையெல்லாம் ஒதுக்கியாயிற்று
பதிலளிநீக்குஅடடா...
நீக்குசேனையை இதுவரை பஜ்ஜி போட்டதில்லை. சிப்ஸ், பிரெஞ்சு பிரைஸ், சாப்ஸ், தீயல், மசியல், அவியலில், புழுக்கில், என்று பல விதங்களில் சமைத்ததுண்டு. பிடித்தது சிப்ஸும், பிரெஞ்சு பிரைஸ். கேரளா விருந்துகளில் ஏதாவது ஒரு விதத்தில் சேனை இடம் பெறும்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க JKC ஸார்... விதம் விதமான வடிவ அளவுகளில் சேனைக்கறி, அலலது எரிசேரி இதுதான் நாங்கள் சேனையை வைத்து இதுவரை செய்தது.
நீக்குஎரிசேரிக்குதான் நீங்கள் நறுக்கிய படி irregular shape இல் நறுக்குவார்கள்.
பதிலளிநீக்குJayakumar
ஆம். கறிக்கும் நறுக்கிய காரணம் மாமியாருக்கு பற்கள் கிடையாது!!
நீக்குபொதுவாக கறி என்றால் இப்படி நறுக்க வேண்டும், கூட்டு என்றால் இப்படி நறுக்க வேண்டும் என்னும் எழுதப்படாத விதிகளை சமீப காலமாக நான் எங்கள் வீட்டில் உடைத்து வருகிறேன். மாறி மாறி விதம் விதமாக இருக்கும்!
இதைச் செய்து விட்டு முகநூலில்,' சேனை கிழங்கிற்கும், சேப்பங்கிழங்கிற்கும் இல்லாத அதுப்பு என்ன உ.கிக்கு?' என்று கட்டுரை எழுதினீர்களா? அல்லது அதை எழுதிவிட்டு இதைச் செய்தீர்களா?
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... உண்மைதான். சேனை நறுக்கிக் கொண்டிருக்கும்போதுதான் உருளை ஊருக்குப்போன விஷயத்தை மருமகள் காட்டினார். அப்போதே எழுதியதுதான் அது!!!
நீக்குஇங்கே பெரிய துண்டங்களாக நறுக்கப்பட்ட சேனை frozen vegetable பகுதியில் கிடைக்கும். ஃப்ர்ஷாகவும் சில இந்தியன் மற்றும் ஸ்ரீலங்கன் கடைகளில் கிடைக்கிறது.
பதிலளிநீக்குஇது நான் சுடச்சுட நானே நறுக்கியது. சேனையின் வடிவத்திலேயே நறுக்கி விட்டேன்.
நீக்குசேனையில் மசியல் செய்து எ.பி.யின் திங்கற கிழமை பதிவுக்கு ரொம்ப நாட்கள் முன்பு அனுப்பி, வெளியாகியது.
பதிலளிநீக்குஓ.. அப்படியா?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குசேனைக்கிழங்கு ஃப்ரை நன்றாக வந்து இருக்கிறது. நீங்கள் பொறுமையாக மருமகளின் துணையுடன் செய்தது அருமை. சேனை நன்றாக மென்மையாக இருக்குமே , ! மகன் சொல்வது போல இன்னும் கொஞ்சம் வேக வைக்கலாம் .
பதிலளிநீக்குகவனமாக வேக வைக்க வேண்டும் சிவப்பு கலரில் இருந்தால் வாங்கி வைத்து இரண்டு, மூன்று நாள் கழித்து செய்ய வேண்டும் உடனே செய்தால் தொண்டை அரிப்பு இருக்கும் .
படங்கள் நன்றாக இருக்கிறது
சாருக்கு சேனை சிப்ஸ் பிடிக்கும் . பொரிச்ச குழம்பு வைத்தால் சேனை சிப்ஸ் நன்றாக இருக்கும்.
துளசி வாழைக்காயை மீன் போல செய்து இருக்கிறார்.
இதற்கு மேல் வேக வைத்தால் அது குழைந்து மாவாகி விடும். அந்த நிலையில் எடுத்து கவனமாக காரம் தடவி செய்ததுதான் இது. சேனை சிப்ஸ் இரண்டு முறை மருமகள் மகனுக்காக செய்திருக்கிறார்.
நீக்குஸ்ரீராம், இதை சேனை டோஸ்ட், அல்லது ஷாலோ ஃப்ரை னு சொல்லலாமோ?!
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு ஸ்ரீராம். நல்ல பொறுமையா செய்திருக்கீங்க. அடி பொளி!!!! பார்க்கவே ஈர்க்குது!
இப்படிச் செய்வதை நான் பாண்டிச்சேரியில் இருந்தப்ப மகனின் நண்பர் வீட்டில் அவங்க அம்மா செய்தப்ப தெரிந்து கொண்டு செய்தேன். அவங்க தோசைக்கல்லிலேயே பரத்தி வைச்சு செய்தாங்க. அப்பலருந்து இதையே விதம் விதமான பூச்சு பூசி செய்ததுண்டு/செய்வதுண்டு. மகனுக்கு இப்பச் செய்வது ரொம்பப் பிடிக்கும்.
அப்புறம் உங்களைப் போல பானிலும் செய்கிறேன்.
கீதா
வாங்க கீதா... எனக்கும் பெரிதாக சேனை வாங்கி பெரிய சைஸாக நறுக்கி இப்படிச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. தோல் சீவி குறுக்கு வாக்கில் நறுக்கி இருக்கலாம். வீட்டின் பலத்த எதிர்ப்பு செய்ய விடாமல் தடுத்து விட்டது.
நீக்குதுளசி அக்கா ரெசிப்பி போய்ப் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅவங்க செய்தது போலவும் செய்திருக்கேன் ஷேப். பொறுமையாகக் கட் செய்யணும்.
நீங்க பதிவில் சொல்லியிருக்காப்ல ஓரங்கள் வீணாக்காமல் அதையும் வதக்கிவிடுவதுண்டு.
நிஜமாகவே சேனையை பொரித்தால் ஃபிஷ் ஃப்ரை வாசனைதான் வரும்!!!!
சேனைக்கிழங்கு என்றாலே எனக்கு என் மகனின் சிறு வயது நிகழ்வு நினைவுக்கு வந்துவிடும்.
கீதா
துளசி அக்கா ரெசிப்பி எல்லாம் போடவில்லை. பேஸ்புக்கில் படம் மட்டும் போட்டிருந்தார்! அவர் நறுக்கி இருந்தது வாழைக்காய்.
நீக்குஸ்ரீராம், நிஜமாகவே சேனைக்கிழங்கை வெட்டி தோல் எடுத்துச் செய்வது கொஞ்சம் கடினம்தான் உங்களுக்கு அதுக்கே ஹாட்ஸ் ஆஃப்!!
பதிலளிநீக்குமுதலில் அது சில சேனை வகைகள் குறிப்பாகச் சிவப்பு கையைப் பதம் பார்க்கும். எனவே சிவப்புச் சேனைதான் கிடைத்தால் அதை அப்படியே 3, 4 நாட்கள் வைத்துவிடுவேன். அதை வெட்டுவதும் கொஞ்சம் கஷ்டம். கடினமாக இருக்கும் .
மஞ்சள் டக்கென்று குழைந்துவிட வாய்ப்புண்டு.
நால் சேனைக் கிழங்கை நறுக்கியதும் புளி, உப்பு தண்ணீரில் போட்டு அப்படியே சில மணி நேரங்கள் வைத்துவிடுவேன். அதன் பின் நமக்கு வேண்டிய வடிவங்களில் வெட்டி லைட்டாக ஸ்டீம் செய்துவிட்டு செய்வதுண்டு.
தண்ணீரில் போட்டு வேக வைத்து வடிக்கும் போது சத்து போய்விடுமோ என்ற ஒரு எண்ணம். அதனால!!
கீதா
நான் புளித்தண்ணீரில் அவ்வளவு நேரமெல்லாம் எப்போதுமே ஊற வைத்ததில்லை. சமயங்களில் புளித்தண்ணீரில் வேகவைப்பேன். தெளித்து விடுவேன். 99 சதவிகிதம் பாஸ் அல்லது மருமகள் சமைத்து விடுவார். நான் எப்போதாவது உள்ளே நுழையும் நாட்களில்தான் இந்த அலட்டல் எல்லாம்! இதுவரை அரித்ததில்லை.
நீக்குநேற்றும் சேனைக்கிழங்கு ஆனால் வெறும் வதக்கல்தான் நேற்று
பதிலளிநீக்குசேனைக் கிழங்கு எரிசேரி, மசியல், சாம்பார், சேனை கோஃப்தா, கோஃப்தா குழம்பு, சேனை ஃப்ரை - ஃபிங்கர் சிப்ஸ் போன்று, டொஸ்ட், சிப்ஸ், அவியலில் போடுவது, சேனை புளிக்கூட்டு, சேனைக் கிழங்கு பொரியல்,
பஜ்ஜி, (ஆனால் இதுக்கு அதன் அரிப்பை எடுக்கணும்) சேனைக் கிழங்கை மசித்துவிட்டு அதில் சேர்மானங்கள் சேர்த்து உருட்டி பொரித்தல் இல்லைனா போண்டோ போல....இன்னும் ஏதாச்சும் விட்டிருக்கேனா? பார்க்கணும்...
சேனையை கொஞ்சம் பெரிய சதுரமாக அல்லது செவ்வகமாக நறுக்கிக் கொண்டு அதன் நடுவில் ஸ்டஃப்ஃபிங் பரத்தி இரண்டும் ஒட்டிக் கொள்ள ஏதாச்சும் கலந்துகிட்டா அதாவது பைண்டிங்க் ஃபேக்டர்... மெதுவாகப் புரட்டிப் போட்டு...நல்லாருக்கும் ஸ்ரீராம்.
மகன் இங்கு இருந்த வரை விதம் விதமாக....
கீதா
சேனைக்கிழங்கை பெரும்பாலும் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். விசு படம் போல குறைந்த பட்ஜெட்டில் எல்லோரும் ரசிக்கும் காய் - கிழங்கு அது!
நீக்குபடங்கள் எல்லாம் சூப்பரா வந்திருக்கு, ஸ்ரீராம்
பதிலளிநீக்குஅடுத்த முறை என்ன செய்யப் போறீங்கன்னு ஆவல்...
கீதா
ஹிஹிஹி... என்னன்னு இனிமேதான் யோசிக்கணும்!
நீக்குசேனைக்கிழங்கு வறுவல் மிகவும் அருமை! செய்முறை குறிப்பும் அருமை!
பதிலளிநீக்குபொடிப்பொடியாக நறுக்கியதை எப்படி வீட்டில் செய்தார்கள்?
வாங்க மனோ அக்கா... அது சாதாரண வதக்கல்தான். காரம் சும்மா பேருக்கு தூவி வதக்கல். எரிசேரி சென்ற வாரம் செய்திருந்தோம்.
நீக்குசேனை கிழங்கு ப்ரை நன்றாக வந்துள்ளது.
பதிலளிநீக்குமிகவும் சிறிய துண்டுகளாக்கவும் நறுக்கி உஉள்ளீர்கள்.
நாங்களும் பெரிய துண்டங்களாக சீவி தவாவில் சிறிது எண்ணைவிட்டு போட்டு எடுப்போம்.
எமது பழைய பகிர்வு பொரித்த குழம்பு ...https://sinnutasty.blogspot.com/2011/03/blog-post_30.html?m=1
நன்றி மாதேவி. உங்கள் பதிவையும் பார்த்தேன். கமெண்ட் கொடுத்திருக்கிறேன்.
நீக்கு