(G)old Hindhi songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
(G)old Hindhi songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.1.11

"இசையால் மயங்காத..." - கிஷோர்.

அன்றைய பொழுதுகளில் மனதை வருடிய சில பாடல்களை சொல்லிப் பகிர்ந்து கொள்ள ஆசை.

நீண்ட நாள் ஆசை. சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போன் ஆசை.

அந்த நாள் 'ரங்காவளி, மன் சாஹே கீத், மனோ ரஞ்சன் ஜெய் மாலா சாயா கீத், ஆப் கே ஃபர்மாயிஷ்' காலங்களை நினைவு 'படுத்தும்' ஆசை.

ஹிந்திப் பாடகர்களில் மிகவும்....மிகவும் பிடித்த பாடகர் கிஷோர் குமார். கடவுள் இந்தியாவுக்கு அளித்த கொடைகளில் ஒருவர். முதலில் எல்லாம் கொஞ்சம் மூக்கால் பாடிக் கொண்டிருந்தார் என்று ஆரம்பக் காலப் பாடல்களைக் கேட்கும் போது தோன்றும். சல்தி க நாம் காடி படத்தில் அவர் பாடிய 'ஏக் லடுக்கி பீகி பாகி சி' பாடல் ஒரு புதிய பாணியில் அமைந்தது என்று சொல்லலாம். எஸ் டி பர்மனும் ஆர் டி பர்மனும் கிஷோரின் பல இனிய பாடல்களைக் கொடுக்கக் காரணமாயிருந்தவர்கள்.


குறிப்பாக ஆர் டி பர்மன் கிஷோர் காம்பினேஷன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாயின.


ஆர் டி பர்மன் கிஷோர் கூட்டணியுடன் ராஜேஷ் கன்னா வும் சேர்ந்தால்... இதில் பல பாடல்கள் சூப்பர் ஹிட். ராஜேஷ் கன்னாவின் நடனத்தைப் பாருங்கள். அது தனிரகம். இந்தப் பாடலுக்கு (ஏ ஜோ மொஹப்பத் ஹை) தமிழில் நினைவுக்கு வரும் பாடல் சொல்ல முடிகிறதா,,,


கீழே வரும் பாடலில் வருபவர் சஞ்சீவ் குமார். அந்தக் காலத்தில் இது மாதிரி காட்சிகள் அதிகம். அதாவது ஒரு பார்ட்டி நடக்கும். 'அப்பாவி' இளம் ஹீரோ யாரோ கேட்டதற்கு பதிலாகவோ அல்லது எல்லோருடைய வற்புறுத்தலுக்கும் இணங்கியோ பாடுவார். குறிப்பாக தனது கனவில் நினைத்து வைத்திருக்கும் 'பெயரில்லா' தனது கனவுக் காதலியை நினைத்துப் பாடும் பாடல். கிஷோரின் குரல், ஆர் டியின் இசை, பாடல் வரிகள்..."என் அன்புக்கு பதிலாக நீ ஏன் எனக்கு இவ்வளவு துன்பத்தைத் தருகிறாய்?" என்று பாடுவதும் அழகு. இதே மாதிரி பார்ட்டியில் அப்புறமும் ஒரு ஹீரோ தன் வருங்கால மனைவியைப் பற்றி பாடிய பாடல் மிகப் பிரபலம்..என்ன சொல்லுங்கள்...!


மகனைப் பற்றியே சொன்னால் எப்படி? மறுபடி ஒரு எஸ் டி பர்மன் பாடல். காட்சியில் வருபவர் தேவ் ஆனந்த்.. ஹிந்தித் திரையுலகின் எவர் கிரீன் ஹீரோ...அவர் ஸ்டைல், அவர் நடையைப் பாருங்கள். ஹிந்தியின் எம் ஜி ஆர் அவர்! இந்தப் பாடல் ஒரு புதிய முறையில் அமைந்தது. வரிகளில் அந்தாதி கேள்விப் பட்டிருக்கிறோம். இது ட்யூனில் அந்தாதி போல மாலையாகக் கோர்க்கப் பட்ட அழகிய பாடல்! "பூக்களின் வண்ணம் கொண்டு இதயத்தின் பேனாவைக் கொண்டு உனக்கு தினமும் எழுதும் கடிதம்... நீ என் இதயத்தின் அருகிலேயே இருப்பதை எப்படிச் சொல்வேன்... மேக மின்சாரம், நிலவின் குளிர்ச்சி இரண்டையும் ஒருங்கே கொண்ட உன் காதல் என்னை பலப் பல ஜென்மம் எடுக்க வைக்கிறது..." பாடலில் வரும் இசை..சந்தூர் என்று நினைக்கிறேன்... அப்பா பர்மன் ஒன்றும் சளைத்தவரல்ல!


ஒரு வேண்டுகோள்...கிஷோர் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போய் விடாமல் எல்லாப் பாடல்களையும் முழுமையாகக் கேட்டு அனுபவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நிறையப் பேருக்கு தெரிந்திருக்கும். இவரைத் தெரியாதவர்கள் இருந்தால் அல்லது கேட்காதவர்கள் இருந்தால் கேட்டு ரசியுங்கள்.

இது முதல் தவணை. இனி அவ்வப் போது தொடரும்..! கபர்தார்!