பல வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம்.
அது ஒரு அரசு சார்ந்த தொழிற்சாலை. அப்போது மத்திய அரசினால் ஒரு ஆணை பிறப்பிக்கப் படுகிறது.
எந்த ஒரு சிவில் வேலையும், அதாவது கட்டுமானப் பணிகள் போன்ற புதிதாக எந்த ஒரு வேலையையும் தொடங்கக் கூடாது.
அப்போது அந்த ஊரில் ஒரு இயற்கைப் பேரிடர். ஆங்காங்கே சிரமங்கள் இருந்தாலும் ஓரளவு பாதுகாப்பாகவே இருக்கும் ஊர்.
இந்தத் தொழிற்சாலையில் ஒரு முக்கியமான பிரிவில் வேலைகள் சரியாகவே நடக்கவில்லை. அதிகாரிகளால் முதலில் ஏன், என்ன என்று விஷயத்தை ஊகிக்க முடியவில்லை. அனால் வேலை அந்தக்க வேண்டும்.
அப்போது சற்று புத்தி கூர்மையுள்ள அதிகாரிகள் விஷயத்தைக் கண்டு பிடித்தார்கள். அந்தப் பிரிவினர் வாழும் குடியிருப்பில் பாதுகாப்பற்ற நிலை. சுற்றுச் சுவர் உடைந்து விழுந்து வெள்ளம் சூழும் அபாயம். அரசு ஆணை காரணமாக ஒன்றும் செய்யவும் முடியாது என்று அலுவலகத்தில் சொல்லி விட்ட நிலையில் மன அழுத்தம். வேலை நடக்கவில்லை.
என்ன செய்வது என்று யோசித்துக்
கொண்டிருக்கும்போது ஒரு அதிகாரி ஒரு ஐடியா கொடுத்தார். மதியான லஞ்ச் அவரில் இது சம்பந்தமாகப் பேச்சு வந்தது. அவர் இப்படி
எழுதலாம் என்று பேச்சு வாக்கில் சொல்லிக் கொண்டிருந்ததை மறுநாள் அப்படியே
வார்த்தைக்கு வார்த்தை எழுதி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்,
அலுவலகத்தில் பொறுப்பில் இருந்த அதிகாரி.
அதாவது, தொழிற்சாலையின் உற்பத்தி முக்கியம். அதிலும் அந்தத் தொழிற்சாலையின் ஆணிவேரான பகுதி அது. மன அழுத்தம் காரணமாக தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்கப் பட்டிருக்கும் விஷயத்தை முக்கிய விஷயமாகக் குறிப்பிட்டு, அதனால் இந்தக் குறை களையப்பட்டால் இந்த பாதிப்பு நீங்கி, தொழில் உற்பத்திக்கு நன்மை கிட்டும் என்ற வகையில்
அனுமதி கேட்டு கடிதம் எழுதப் பட்டது.
மேலதிகாரி, உயர் அலுவலகம், அதற்கும் உயர் அலுவலகம் என்று ஏதோ ஒரு வகையில் இந்தக் கடிதம் பிரதம மந்திரி வரை சென்று விட, அவர், இந்த அர்த்தத்தில் எல்லாம் இந்த ஆணை பிறப்பிக்கப் படவில்லை. அனாவசியச் செலவுகளைக் குறைக்கத்தான் ஆணை, அத்தியாவசியத் தேவைகளை நிறுத்த அல்ல சில ஆணைகளுக்கான விதி விலக்குகளை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தன் கைப்படக் குறிப்பு எழுதி உடனடி அனுமதி அளிக்க உத்தரவிட்டார்.
வேலையும் நடந்தது. சுற்றுச் சுவராக கருங்கல் சுவர் கட்டப்பட்டது. மன அழுத்தம் நீங்கியது.
பக்கத்து அலுவலகங்களிலிருந்து வந்து, இந்த மாதிரி ஒரு ஆணையால் எல்லாரும் சும்மா இருக்கும் வேளையில் எப்படி இப்படி ஒரு கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்ய முடிந்தது என்று ஆச்சர்யமாகக் கேட்டார்கள்.
விஷயத்தைச் சொன்னதும் 'ஓ.. இப்படிக் கூட டிராஃப்ட் செய்ய முடியுமா?' என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.
சுவர் உடையப் போகிறது, கட்டிக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டிருந்தால் அனுமதி கிடைத்திருக்காது, ஏன், அடுத்தடுத்த லெவல் மேலதிகாரிகளுக்கு அந்தக் கடிதம் ஃபார்வார்டே ஆகியிருக்காது, கடிதம் முதல் கட்டத்தையே தாண்டியிருக்காது. ஆணைகளில் இருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை மட்டுமே படிக்கும் அதிகாரிகள் இங்கேயே மடக்கிப் போட்டிருப்பார்கள். வேலையும் நடந்திருக்காது.