அதீதம் இணைய இதழில் வெளியிடப்பட்டது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதீதம் இணைய இதழில் வெளியிடப்பட்டது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.9.13

வெங்கிட்டு

                                                    venguttu

பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளே வந்த அம்மா தன்னிச்சையாக பேசியபடியே உள்ளே போனாள்.

“மூணாம் வீட்டு வெங்கடேச மாமாவை நேத்து ராத்திரிலேருந்து காணோமாம்..”

வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அமுதா காதில் இது விழுந்தது.

வெங்கடேச மாமா காணோமா… 

அமுதாவுக்கு அவரைக் கண்டாலே அலர்ஜி.

“நைட்டு அவங்க அம்மா அவரை ‘உன்னாலே எனக்குக் கஷ்டம்தான்’னுல்லாம் சொல்லி ஏதோ கன்னாபின்னான்னு திட்டிட்டாங்களாம்… காணும்னதும் இப்போ அழுதுகிட்டு இருக்காங்க…”
பரபரவெனக் கிளம்பிக் கொண்டிருந்தாலும், மனத்தின் நினைவோட்டம் தனியாக ஓடியது.

வெங்கடேசனுக்கு இப்போது வயது 48 இருக்குமா? இருக்கும். இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே… மனநிலை சரியில்லாதவர் என்று பார்க்கும்போதே தெரிந்தது. அந்த வயதுக்கு, டிராயருடன் சுற்றுவது விநோதமாக இருந்தது. சற்றே ஆபாசமாகவும் இருந்தது.

கரளை கரளையாக கை கால்கள். மொச மொசவென்று உடம்பு பூரா ரோமம். எல்லாம் சரிதான். ஆனால் முகம் காட்டிக் கொடுத்தது மனதின் வளர்ச்சியின்மையை. ‘மனதுக்கும் சேர்த்து உடம்பு வளர்ந்திருக்கிறது’ என்பாள் அம்மா. அவ்வப்போது வழியும் எச்சிலை புறங்கையாலும்,கையில் கிடைக்கும் துணியாலும் துடைத்துக் கொள்வார்.

வயதுக்குரிய வளர்ந்த பேச்சு அவ்வப்போது தலை காட்டும். பெரும்பாலும் குழந்தைப் பேச்சுதான். வளர்ந்த அந்தக் குழந்தையை, தன் மகனை, மூன்றாம் வீட்டு அம்மா பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரிடமும் வந்து ஏதாவது பேசுவார். இயல்பாய் தொட்டுப் பேசுவார்.

அவரை விட வயதில் குறைந்தவர்கள் எல்லாம் கூட அவரை ‘வெங்கிட்டு… இங்க வா… அதை எடுத்து வா’ என்றெல்லாம் மரியாதை இல்லாமல் பேசுவதைக் கேட்டிருக்கிறாள்.

பக்கத்து வீட்டு செல்லம்மாவை அவர் தொட்டுப் பேசும் தருணங்களில் அவள் கோபப் படாமல் அவர் கையை விலக்கி, ‘ஏய்…போ… அங்க போய் உட்காரு… அப்போதான் சாப்பிட எதாவது தருவேன்’ என்று மிரட்டுவது மாதிரி சொல்லும்போது விநோதமாக இருக்கும்.

குழந்தைகள் அவரிடம் விளையாடினாலும் குழந்தைகளிடம் அவர் பிரியமாகவே இருப்பார்.

‘நாம்தான் அவர் இவர் என்று நினைக்கிறோம்…. எல்லோருக்கும் அவன் இவன்தான்…. இல்லன்னா வெங்கிட்டு!’ புன்னகைத்துக் கொண்டாள்.

இவளிடம் வெங்கிட்டு பேசவோ, அல்லது எதிரிலோ வந்தால் கூட அருவருப்புடன் ஒதுங்கி வேகமாக வேறுபக்கம் ஒடிவிடுவாள்.

அவர் அணியும் தொள தொள டிராயரும், முண்டா பனியனும் அவரிடம் அவளுக்கு ஒரு வெறுப்பையும், பயத்தையும் வளர்த்திருந்தன, அந்த சம்பவம் வரை!

ஒரு மழை பெய்த இரவில், விளக்கெரியாத் தெருவில், வேலை விட்டு லேட்டாக வர நேர்ந்த இரவில், தினமும் வம்பு செய்யும் ஏரியா ரௌடி மணி வேறு ஒருவனுடன் வந்து வழிமறித்து வம்பு செய்த வேளை. எலெக்ட்ரிக் டிரெயின் இறங்கி நடந்து வரும் வழியில் அவ்வளவாக ஆள் நடமாட்டமிருக்காத ஏரியா அது.

மழையில் நனைந்த உடுப்பு உடலுடன் ஒட்டியிருக்க, மேய்ந்த மணியின் கண்களில் தெரிந்த வெறி பீதியூட்டிய நேரம். கைப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒதுங்கிச் செல்ல முயன்றவளை இன்னும் குறுக்கே வந்து மறித்தான் மணி.

பின்னால் காலடியோசை.

வெங்கிட்டுதான்.

வந்து இவர்கள் குறுக்கே நின்றார். ‘என்ன அமுதா? வீட்டுக்குப் போகணுமா?’ என்றார்.

“டேய் கிறுக்கா… விலகி ஓடிடு… இங்க வந்து ..விளையாடாதே.” அடிக்குரலில் மிரட்டிய மணி கூட்டாளிக்கு ஜாடை காட்ட, அவன் கையில் சிறியதாய் ஒரு கத்தி.

‘போ..மணி..போ… அமுதா… வா.. நாம போகலாம்’ என்று அமுதாவின் கையைப் பிடித்துக் கொண்ட வெங்கிட்டு தாண்டி நடக்கத் தொடங்க, அடியாள் வந்து வெங்கிட்டு பனியனைப் பிடித்தான்.

வெங்கிட்டுவின் பலம் அப்போது தெரிந்தது. அந்த இருவரையும் பந்தாடிய வெங்கிட்டு எச்சிலை எச்சிலைத் துடைத்துக் கொண்டு ‘அமுதா… நீ போ… நான் பின்னாடியெ வர்றேன்’ என்று அவர்களை நெத்தித் தள்ளிக் கொண்டு சென்றான். இல்லை, இல்லை சென்றார்.

இவள் வீட்டுக்குள் நுழைவதற்குள் வெங்கிட்டு பின்னாலேயே வந்து விட்டது தெரிந்தது. இவள் பத்திரமாக வீட்டுக்குள் நுழைவதைப் பார்ததுக் கொண்டே தன் வீடு செல்வதும், கொஞ்ச நேரத்தில் அவர் அம்மாவின் ‘கைல என்னடா ரத்தம்?’ என்ற பதற்றக் குரலும் கேட்டது.

மறுநாள் வெங்கிட்டு அம்மாவைப் பார்க்கும்போது இவளுக்குக் குற்ற உணர்வாய் இருந்ததே தவிர, அந்த அம்மாள் அதை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. ‘ஜாக்கிரதை அம்மா… ராத்திரி நேரம் கழித்து வந்தால் யாராவது துணையோடு வா.. ஒரு சமயம் போல இருக்காது’ என்று இவளை ஜாக்கிரதைப் படுத்தினாள்.

அப்புறமும் கூட வெங்கிட்டுவிடம் இவளுக்கு ஒன்றும் பாசம் வந்து விடவில்லை. ஆனால் வெறுப்பு கொஞ்சம் குறைந்திருந்தது. தெருக் குழந்தைகளுடன் அவர் பந்து தூக்கிப் போட்டு விளையாடுவதையும், கோடி வீட்டு கைக்குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வேகம் வேகமாக நடப்பதையும் புன்னகையோடு பார்க்கப் பழகியிருந்தாள்.

மணி ஏழரையை நெருங்கிக் கொண்டிருக்க, அம்மா தந்த டிஃபன் பாக்ஸை வாங்கிப் பைக்குள் வைத்தபடியே தெருவுக்கு வந்தபோது தெரு பரபரப்பாக இருந்தது.

வெங்கிட்டுவின் அம்மா தெருவில் மூர்ச்சையாகிக் கிடந்தாள். பக்கத்து வீட்டுப் பாட்டி அவளை தண்ணீர்த் தெளித்து எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
தெருக் குழந்தைகள் அழுதபடி ஓடிக் கொண்டிருக்க, எதிர்வீட்டு ப்ளஸ் டூ படிக்கும் பையனிடம் என்னவென்று கேட்டாள் அமுதா.

“வெங்கிட்டு மாமா ரயிலில் அடிபட்டு செத்துப் போயிட்டாருக்கா… நைட்டு கவனிக்காம லைன் க்ராஸ் பண்ணியிருக்கார் போல…பீஸ் பீஸாயிட்டாருக்கா…” சொல்லும்போதே அழுதான்.

எப்போதும் வேகமாக நடக்கும் அமுதா மிக மெதுவாக கைப்பையை இறுகப் பற்றியபடி வெறித்த பார்வையுடன் நடந்தாள்.

******************************************
******************************************

அதீதம்  இணைய இதழுக்காக எழுதிய சிறுகதை  (2013 செப்டம்பர் முதலாம் இதழ் )