
மாட்டுக்கார வேலன் படப் பிடிப்பில் கூட்டத்தில் சிக்கித் தடுமாறிய ஒரு வயதான பெண்மணியை எம் ஜி ஆர் தன்னருகே கூட்டி வரச் செய்து யார் என்ன என்று விசாரித்தாராம். கொளுத்தும் வெய்யிலில் 'யார்கூட வந்தீங்க? பிள்ளைங்க கூடவா' என்று கேட்க 'இல்லை' என்று மறுத்த கிழவி தனக்கு ரெண்டு மகன்கள் என்றாராம். எங்கே இருக்கிறார்கள் என்று எம் ஜி ஆர் கேட்க, ஒருவன் பட்டாளத்துலயும், இன்னொருவன் சினிமாவிலும் இருப்பதாகக் கூற யார், எங்கே இருக்கிறான் உன் மகன், சொல்லு கூடி வரச் செய்கிறேன் என்று பரபரத்த எம் ஜி ஆரைக் கை காட்டிய கிழவி 'நீதான் ராசா' என்றாராம். லா ரா சப்தரிஷி எம் ஜி ஆர் பற்றி எழுதிய பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. இன்னொரு ரசிகர் எம் ஜி ஆர் இறந்து போன நாள் முதல் பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.

அந்தக் காலத்தில் மிக அதிகம் சம்பளம் வாங்கிய கலைஞர் கே பி எஸ். ஒரு லட்ச ரூபாய். கிட்டப்பா காலமானவுடன் ஒதுங்கி இருந்தவரை நந்தனார் சரித்திரத்தில் நடிக்கவைக்க அழைத்தபோது அதைத் தவிர்க்க எண்ணி அவர் சொன்ன சம்பளம் அது. பின்னர் சிறப்பாகப் பாடி நடித்துக் கொடுத்தாராம். பாடல்கள் மிக மிக அருமையாக வந்திருந்தனவாம். வயித்தெரிச்சல் என்னவென்றால் அந்தப் படம் ரிலீசாகும் முன்பு தீக்கிரையாகி யாருக்கும் உதவாமல் போனதுதான். யாரும் பார்க்காமல், யாரும் கேட்காமல் அத்தனை உழைப்பும் வீணாய்ப் போனதாம். எஸ் வி ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டுள்ளது இது. பிறகு எம் எம் தண்டபாணி தேசிகர் நடித்து வெளிவந்த நந்தனார் சரித்திரம் சூப்பர் ஹிட் ஆயிற்று!

கபாலீஸ்வரர் கோவில் பற்றிய அதிசயத் தகவல். 1500 களில் கடற்கரையில் இருந்த கோவிலை அப்படியே பெயர்த்தெடுத்து மயிலையில் மாறாமல் கட்டினார்களாம். நல்லி செட்டியாரின் தகவல் இது.

புலவர் கீரனுடன் சேர்ந்து அ.ச.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் பேசியது முதல், உத்திராட்ச மாலையில் சிலுவை கோர்த்து போட்டிருப்பது வரை (பழைய குன்றக் குடி அடிகளார் கொடுத்ததாம்) சாலமன் பாப்பையாவின் சுவாரஸ்யமான பேட்டி.
எதில் இதெல்லாம் என்கிறீர்களா?
டிவி இல்லாத கணினி இல்லாத முந்தைய தீபாவளிகளில் பதின்ம வயது நினைவுகளையும் பட்டாசுகளையும் பட்சணங்களையும் தவிர்த்து விசேஷம் ஒன்று உண்டென்றால் அது தீபாவளி மலர்கள்.
கலைமகள், அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, என்று குண்டு குண்டாக தீபாவளி மலர்கள் வரும். குண்டூசி என்று கூட புத்தகம் வந்தது. அதற்கும் தீபாவளி மலர் வரும்.
இந்த தீபாவளி மலர்களுக்கு பொதுவான தன்மை உண்டு. வழு வழுப்பான அட்டை. அதில் பிரபல ஓவியர்களின் அழகிய படங்கள். உள்ளே விளம்பரப் பக்கங்களைத் தொடர்ந்து அல்லது இடையில் சுவாமி படங்கள், மகான்கள், மகாப் பெரியவரின் படம் மற்றும் அவரின் அமுத மொழிகள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஜோக்ஸ்....(குமுதம் தீபாவளி மலர், குனேகா சென்ட் வாசனையுடன் வந்த, வாச மலர்!)
எந்தெந்த பிரபல எழுத்தாளர்களின் கதைகள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதில் ஓர் ஆர்வம் இருக்கும். உலகத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக'க்கள் இல்லாத காலத்தில் இவைதான் அது போன்ற சுவாரஸ்யத்தைத் தந்தன. சுஜாதா, பாலகுமாரன் கதைகள் இருக்கிறதா என்று தேடிய அனுபவங்கள்...
இதெல்லாம் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் சமீபத்தில் தீபாவளி மலர்கள் பார்ப்பதில்லை. வாங்கும் சுவாரஸ்யம் இருப்பதில்லை. ஒரே மாதிரி இருப்பதில் அலுப்பா அல்லது விரும்பும் எழுத்தாளர்கள் கதை படிக்கும் ஆர்வம் போய் விட்டதா, அல்லது டிவி கணினி சலனங்கள் காரணமா...இந்த நிலையில் ஓசியில் அமுதசுரபி தீபாவளி மலர் கிடைத்தது. பேப்பர்களில் தீபாவளி மலர்கள் விமர்சனம் படித்திருக்கிறேன்...எனக்குக் கிடைத்த அமுத சுரபி தீபாவளி மலர் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று.....! அட்டையில் பழம்பெரும் ஓவியர் கோபுலுவின் கைவண்ணம். 328 பக்கங்கள்.
கொத்தமங்கலம் சுப்பு பற்றி, அவர் மகனின் நினைவோடை. தில்லானா மோகனாம்பாள் எழுதிய அனுபவம் பற்றியும்...
சாவி, தி.ஜானகிராமன், கல்கி, கண்ணதாசன், பி.எஸ் ராமையா, லக்ஷ்மி பற்றியெல்லாம் நினைவோடைகள்...
ராமதாசு, இல கணேசனின் கட்டுரைகள்...
இந்திரா பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா, பா. ராகவன், வாஸந்தி போன்ற பிரபல எழுத்தாளர்கள் கதைகள்...
சிவாஜி பற்றி தயாரிப்பாளர் கிருஷ்ணஸ்வாமி...
சுவாரஸ்யம்தான்.