ரொம்ப நாளைக்குப்பின் ஶ்ரீரங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் கோயிலுக்குச் சென்று அதிகாலை தரிசனம் காணவேண்டும் என்று திட்டமிட்டேன்.
யானை குதிரை பசு கொண்டுவ்ந்து நிறுத்தி வீணை இசைத்து, அரையர் சேவையுடன் பஞ்சாங்கம் படித்து பெருமாளை துயிலெழுப்புதல் பரவசப் படுத்தும் அனுபவம்.
ஆனால், என்ன துரதிருஷ்டம், முன் போல் சுறுசுறுப்பு இருந்தால் அதிகாலை தரிசனம் என்பது பழங்கதை என்பது பின்னால் தெரிந்தது.
"முதல் நாளே அறுபதே அறுபது பேருக்கு மட்டும் பதிவு கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
சரி கட்டணம் செலுத்தி தரிசனம் செய்து விடலாம் என்று பார்த்தாலும் நெரிசலாக ஆயிரக் கணக்கானோர் நின்று காத்திருந்ததைப் பார்த்ததும் "இது வேலைக்காகாது" என்று தெரிந்தது.
கடைசியில் ஐம்பது ரூ டிக்கெட்டில் ரங்கனநாயகித் தாயார். தரிசனமும், பத்து பத்து ரூ. க்கு பொங்கல், புளியோதரை, ச.பொங்கல், வெளிப்பிரகாரத்தில் பட்சணப் பிரசாதங்களும் பெற்று அத்தோடு திருப்தியடைய வேண்டியதாயிற்று.
தரிசனம் குறித்த விபரங்கள் எங்கும் அறிவிப்பாக வைக்கப் படவில்லை அல்லது என் கண்ணில் படவில்லை.
ஏமாற்றம்தான் எனினும் இப்படி பக்தி பொங்கி வழிந்து பெருக்கெடுத்தோடுவது எப்படி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் யோசனை ஓடியது.
பெருங்கூட்டம் முட்டித் தள்ளும் இந்த காலகட்டத்தில், இந்த நாட்டில்தான் அதி அக்கிரமங்களும் நடக்கின்றன.
அரங்கனோ அறிதுயிலில் புன்னகைக்கிறார்!