பொதுவா
விரதம் அல்லது சாதம் சாப்பிடமுடியாத வேளைகளில், இட்லி, தோசை அல்லது குருணை
உப்புமா செய்வது எங்கள் வீட்டில் (முந்தைய தலைமுறை) வழக்கம். பொதுவாக
சனிக்கிழமை இரவு மாத்திரம்தான்
இந்தமாதிரி டிஃபன் உண்டு. முந்தைய தலைமுறைகளில் வெளியில் process செய்யும்
பொருட்களை (ரவை, சேமியா, ஜவ்வரிசி, அப்பளாம் போன்றவற்றை) வீட்டில்
உபயோகிக்கமாட்டார்கள். சுகாதாரம்தான் இதற்கு அடிப்படை என்றாலும், வீட்டுப்
பெண்களுக்கு பயங்கர வேலை (பெண்டு கழண்டுவிடும் என்று
சொல்லுவோம்). அரிசியைக் குருணையாக ஆக்குவதால், அது சாதம் வகையில் வராது.
அப்படித்தான் அரிசி உப்புமா குருணை உப்புமா என்றாகிவிட்டது. இதை ருசியோட
சாப்பிடணும்னா, வெங்கலப் பானை அல்லது உருளி தேவை (அதெல்லாம் இனி எங்க
பாக்கறது). அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு
(நல்லா எண்ணெய் விடணும். தேங்காய் எண்ணெய்னா இன்னும் நல்லா மணமா
இருக்கும்), வெங்கலப் பானையில் தீய்ந்து (கருகி இல்லை)
ஒட்டிக்கொண்டிருப்பது தனி ருசி. எழுதும்போதே ருசி நாக்குக்குத் தெரிகிறது.
இப்போ
நான் சொல்லப்போறது, எப்படி அரிசி உப்புமா குழக்கட்டை பண்ணறது என்று.
அரிசி உப்புமாவுக்கு, 1 தம்ளர் அரிசி, ஒரு பிடி கடலைப் பருப்பு, ஒரு பிடி
துவரம்பருப்பு, 10-20 மிளகு தேவை.
இதைக் கொஞ்சம் வெறும் வாணலியில் வறுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுத்து
சுத்தலாம். இல்லைனா, அரிசி தனியாகவும், மற்றதைத் தனியாகவும் ஒரு சுத்து
சுத்தலாம். நான் ஊருக்கு வரும் சமயத்தில், கடைகளில், அரிசி உப்புமா மிக்ஸ்
என்று 3-4 பாக்கெட் வாங்கிவருவேன். 5-6 மாதம் தாங்கும்.
இரண்டும் ஒன்றுதான் என்றாலும், நாமே தயார் பண்ணுவதுபோல் இருக்காது.
வாணலியில்
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், கடுகு, சிறிதாக கட் செய்த 2 பச்சை மிளகாய், 1
ஸ்பூன் உளுத்தம்பருப்பு,, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, பெருங்காயப்பொடி,
கருவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
ஒரு கப் அரிசி உப்புமா மிக்ஸுக்கு 2 ¼ கப் தண்ணீர் என்பது கணக்கு.
தாளித்தவுடன், அதிலேயே, 2 ¼ கப் தண்ணீர் விட்டுத், தேவையான உப்பையும்
சேர்த்து கொதிக்கவிடவும். இதில் 3-4 ஸ்பூன் தேங்காய் துருவலையும்
சேர்க்கலாம். (பயணத்துக்குக் கொண்டுபோவதாக இருந்தால், தேங்காய்
சேர்க்கக்கூடாது.
உப்புமா கெட்டுப்போய்விடும். நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, 1
பாக்கெட் மிளகாய்ப்பொடி தடவின இட்லி, ஒரு பாக்கெட் அரிசி உப்புமா
கொண்டுசெல்வேன். போய்ச்சேர்ந்த அன்னிக்கே அடுத்தவேளை சாப்பாட்டுக்கு எங்க
போக என்று கவலைப்படக்கூடாது என்பதால்). தண்ணீர் நன்றாகக்
கொதித்தவுடன், அதில் அரிசி உப்புமா மிக்ஸ் ஒரு கப்பை பரவலாகச்
சேர்க்கவும். அரிசி உப்புமா கொதிக்கும்போது மேலே தெறிக்கும். நான் கைக்கு
துணி கிளவுஸ் வைத்திருக்கிறேன். நல்லா கொதித்து தண்ணீர் எல்லாம் போனபின்,
அடுப்பை அணைக்கவும்.
வெறும்ன
அரிசி உப்புமா மட்டும் வேணும்னா, அடுப்பை அணைத்தபின், உப்புமாவை குக்கரில்
வைத்து, இட்லி வேகவைப்பதுபோல் 10 நிமிடம் வேகவைக்கலாம். (Gas அடுப்பில்
சாதாரண வாணலியில் கிண்டி
அரிசி உப்புமாவை வேகவைப்பது கடினம்). ஆனால், இப்போ நான் சொல்லப்போறது,
உப்புமா குழக்கட்டை செய்வதைப் பற்றி.
அரிசி
உப்புமாவை, கை பொறுக்கிற சூடு வந்ததும், குழக்கட்டை மாதிரிப் பிடித்து,
இட்லி தட்டில் வைத்து, இட்லியை வேகவைப்பதுபோல் வேகவைத்துவிடவேண்டியதுதான்.
இதற்கு
தொட்டுக்க ஒண்ணும் வேண்டாம். நான் வெந்தயக் குழம்பு கொஞ்சம்
தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன். இட்லி மிளகாய்ப்பொடியும் நல்லா இருக்கும்.
என் குழந்தைகளுக்கு அரிசி உப்புமாவுக்கு
தேங்காய்த் தொகையல் ரொம்ப இஷ்டம். (சிவப்பு மிளகாய், உ.பருப்பு,
பெருங்காயம் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு, தேங்காயும், சிறிது
புளியும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் தேங்காய்த் தொகையல் ரெடி).
(எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நெல்லைத்தமிழன்.. சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு தொட்டுச் சாப்பிட பரம சுகம்!)