திங்கள், 26 டிசம்பர், 2016

"திங்க"க் கிழமை 161226 – அரிசி உப்புமா கொழுக்கட்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


பொதுவா விரதம் அல்லது சாதம் சாப்பிடமுடியாத வேளைகளில், இட்லி, தோசை அல்லது குருணை உப்புமா செய்வது எங்கள் வீட்டில் (முந்தைய தலைமுறை) வழக்கம். பொதுவாக சனிக்கிழமை இரவு மாத்திரம்தான் இந்தமாதிரி டிஃபன் உண்டு. முந்தைய தலைமுறைகளில் வெளியில் process செய்யும் பொருட்களை (ரவை, சேமியா, ஜவ்வரிசி, அப்பளாம் போன்றவற்றை) வீட்டில் உபயோகிக்கமாட்டார்கள். சுகாதாரம்தான் இதற்கு அடிப்படை என்றாலும், வீட்டுப் பெண்களுக்கு பயங்கர வேலை (பெண்டு கழண்டுவிடும் என்று சொல்லுவோம்). அரிசியைக் குருணையாக ஆக்குவதால், அது சாதம் வகையில் வராது. அப்படித்தான் அரிசி உப்புமா குருணை உப்புமா என்றாகிவிட்டது.  இதை ருசியோட சாப்பிடணும்னா, வெங்கலப் பானை அல்லது உருளி தேவை (அதெல்லாம் இனி எங்க பாக்கறது). அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு (நல்லா எண்ணெய் விடணும். தேங்காய் எண்ணெய்னா இன்னும் நல்லா மணமா இருக்கும்), வெங்கலப் பானையில் தீய்ந்து (கருகி இல்லை) ஒட்டிக்கொண்டிருப்பது தனி ருசி. எழுதும்போதே ருசி நாக்குக்குத் தெரிகிறது.

இப்போ நான் சொல்லப்போறது, எப்படி அரிசி உப்புமா குழக்கட்டை பண்ணறது என்று.  அரிசி உப்புமாவுக்கு, 1 தம்ளர் அரிசி, ஒரு பிடி கடலைப் பருப்பு, ஒரு பிடி துவரம்பருப்பு, 10-20 மிளகு தேவை. இதைக் கொஞ்சம் வெறும் வாணலியில் வறுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுத்து சுத்தலாம். இல்லைனா, அரிசி தனியாகவும், மற்றதைத் தனியாகவும் ஒரு சுத்து சுத்தலாம். நான் ஊருக்கு வரும் சமயத்தில், கடைகளில், அரிசி உப்புமா மிக்ஸ் என்று 3-4 பாக்கெட் வாங்கிவருவேன். 5-6 மாதம் தாங்கும். இரண்டும் ஒன்றுதான் என்றாலும், நாமே தயார் பண்ணுவதுபோல் இருக்காது.




வாணலியில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், கடுகு, சிறிதாக கட் செய்த 2 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு,, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, பெருங்காயப்பொடி, கருவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி உப்புமா மிக்ஸுக்கு 2 ¼ கப் தண்ணீர் என்பது கணக்கு. தாளித்தவுடன், அதிலேயே, 2 ¼ கப் தண்ணீர் விட்டுத், தேவையான உப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் 3-4 ஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்க்கலாம். (பயணத்துக்குக் கொண்டுபோவதாக இருந்தால், தேங்காய் சேர்க்கக்கூடாது. உப்புமா கெட்டுப்போய்விடும். நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, 1 பாக்கெட் மிளகாய்ப்பொடி தடவின இட்லி, ஒரு பாக்கெட் அரிசி உப்புமா கொண்டுசெல்வேன். போய்ச்சேர்ந்த அன்னிக்கே அடுத்தவேளை சாப்பாட்டுக்கு எங்க போக என்று கவலைப்படக்கூடாது என்பதால்).  தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன், அதில் அரிசி உப்புமா மிக்ஸ் ஒரு கப்பை பரவலாகச் சேர்க்கவும்.  அரிசி உப்புமா கொதிக்கும்போது மேலே தெறிக்கும். நான் கைக்கு துணி கிளவுஸ் வைத்திருக்கிறேன்.  நல்லா கொதித்து தண்ணீர் எல்லாம் போனபின், அடுப்பை அணைக்கவும். 





வெறும்ன அரிசி உப்புமா மட்டும் வேணும்னா, அடுப்பை அணைத்தபின், உப்புமாவை குக்கரில் வைத்து, இட்லி வேகவைப்பதுபோல் 10 நிமிடம் வேகவைக்கலாம். (Gas அடுப்பில் சாதாரண வாணலியில் கிண்டி அரிசி உப்புமாவை வேகவைப்பது கடினம்).  ஆனால், இப்போ நான் சொல்லப்போறது, உப்புமா குழக்கட்டை செய்வதைப் பற்றி.




அரிசி உப்புமாவை, கை பொறுக்கிற சூடு வந்ததும், குழக்கட்டை மாதிரிப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, இட்லியை வேகவைப்பதுபோல் வேகவைத்துவிடவேண்டியதுதான்.





இதற்கு தொட்டுக்க ஒண்ணும் வேண்டாம். நான் வெந்தயக் குழம்பு கொஞ்சம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன்.  இட்லி மிளகாய்ப்பொடியும் நல்லா இருக்கும். என் குழந்தைகளுக்கு அரிசி உப்புமாவுக்கு தேங்காய்த் தொகையல் ரொம்ப இஷ்டம். (சிவப்பு மிளகாய், உ.பருப்பு, பெருங்காயம் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு, தேங்காயும், சிறிது புளியும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் தேங்காய்த் தொகையல் ரெடி).


 
செய்து பாருங்கள். நிச்சயம் ருசியா இருக்கும்.


(எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நெல்லைத்தமிழன்..  சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு தொட்டுச் சாப்பிட பரம சுகம்!)

34 கருத்துகள்:

  1. அரிசி உப்புமாவும் அதன்மூலம் கிடைக்கின்ற கொழுக்கட்டை உருண்டையும் எனக்கு மிகவும் பிடித்த தின்பொருட்களாகும். தங்களுக்கும் அது பிடிக்கும் என்பதை அறிய மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். - இராய செல்லப்பா (நியு ஜெர்சியில் இருந்து)

    பதிலளிநீக்கு
  2. தேங்காயை துருவாமல் குட்டி குட்டி துண்டுகளாக வெட்டிப் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும். சாப்பிடும்போது பருப்பும், தேங்காயும் பற்களின் இடையே நசுங்கி, அத்துடன் அரிசி மாவு கலக்கும்போது சுவையோ சுவை....

    பதிலளிநீக்கு
  3. தொட்டுக் கொள்ள தனியா துவையல்/சட்னி எம் வீட்டின் ஃபேவரைட்!!

    பதிலளிநீக்கு
  4. சுவையான கொழுக்கட்டை.
    துவையல் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மிக மிகப் பிடித்த டிபன்!!!! அதுவும் ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் கத்தரிக்காய் கொத்சுடன்...வாவ்!!!! யும்மி!!! நாக்கில் தண்ணீர்....சரி அதனாலென்ன இன்று இரவு எங்கள் வீட்டில் இதுதான்...நான் சிலசமயம் தேங்காயைச் சிறிய சிறிய துண்டுகளாகக் கீறிப் போட்டுச் செய்வதுண்டு....

    ஹப்பா இன்றைய டிஃபன் என்ன செய்வது என்ற எனக்கு ஐடியா கொடுத்த நெல்லைக்கும், எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆஹா எனக்கு மிகவும் பிடித்த உப்புமா,,, செய்முறை அருமை,, முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. //அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு (நல்லா எண்ணெய் விடணும்.) வெங்கலப் பானையில் தீய்ந்து (கருகி இல்லை) ஒட்டிக்கொண்டிருப்பது தனி ருசி. எழுதும்போதே ருசி நாக்குக்குத் தெரிகிறது.//

    ஆஹா, அதன் ருசியே ருசிதான். என் அம்மா கையால் இதுபோல வெங்கலப்பானையில் செய்ததை .... அந்த ஒட்டலை .... எவ்வளவு முறை நான் விரும்பிச் சாப்பிட்டிருப்பேன். :) !!!!!

    பதிவும், படங்களும், செய்முறைக் குறிப்புகளும் பிடி கொழுக்கட்டை போன்றே A1 ஆக உள்ளது.

    இதனை நாங்கள் பிடி கொழுக்கட்டை என்றே சொல்லுவோம். ஒருமுறைக்கு இருமுறையாக வேக வைப்பதால் உடம்புக்கும் நல்லது. பிடித்துப் பிடித்து உருட்டி உருட்டி செய்வதாலும், சாப்பிடப் பிடித்தமாக இருப்பதாலும் இந்த பிடி கொழுக்கட்டை என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது எனது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு.

    இதிலும் தேங்காய்த் துருவலோ அல்லது தேங்காய் பற்களோ போட்டு செய்திருந்தால் மேலும் டேஸ்ட் ஜோராகவே இருக்கும்.

    சுவையான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. உப்புமா கொழுக்கட்டையின் நடுவே சுண்டைக்காய் அளவு வெல்லம் வைத்து வேக வைக்க சுவை கூடும். மிகவும் ருசியான் டிபன். செய்யத் தூண்டுகிறது படம்.

    பதிலளிநீக்கு
  10. இது இந்த தலைமுறை மறந்து விட்ட ஒன்று போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  11. ஆஹா சுடச்சுட நல்ல ருசி.எவ்வளவுக்கெவ்வளவு தேங்காய்த்துருவல் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மிருது.இஞ்ஜி,பச்சைமிளகாயும் சேர்க்கலாம்.
    நான் எல்லாம் அடிக்கடி செய்யும் ஒன்றுதான். இந்தக்கலவையையே தவலடையாகவும் தட்டலாம். உப்புமாவிற்கு அடிபிடித்தலைக் காந்தல் என்று சொல்லுவோம். எனக்கு,உனக்கு போட்டிதான். மொத்தமாக தயிர்,சட்னி,கொத்ஸு எள்ளாமே உடன் நன்றாக இருக்கும். மாகாளிக்கிழங்குபோட்ட தயிர் என்னுடைய ஃபேமஸ். வெல்லப் பிடிகுழக்கட்டையும் உண்டு.
    உப்புமாவிற்கு உடைக்கும்போது அரை ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து உடைத்து உப்புமா கிளறிப்பாருங்கள், மிருதுவாக வாஸனையாக இருக்கும். போட்டோவும்.கொழுக்கட்டையும் ஜோர்ஜோர்.
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. மிகவும் ருசியான கொழுக்கட்டை! படங்களும் குறிப்பும் பிரமாதம்!என் கணவருக்கு அந்தக்கொழுக்கட்டை பிடிக்கும்போது அதன் உள்ளே ஒரு வெல்லத்துண்டு வைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டை செய்யும்போது ஒரு நாலைந்து கொழுக்கட்டைகளாவது இப்படி செய்வேன்!

    பதிலளிநீக்கு
  13. பிடி கொழுக்கட்டை, அரிசி உப்புமா, அதுவும் காந்தல் மிகவும் பிடித்தது! உருளியில் குமுட்டி அடுப்பில் செய்து கொடுப்பார் அம்மாவின் அத்தை, அம்மாவும் கூட! அது ஒரு காலம். இப்பவும் உருளி/வெண்கலப் பானை இருக்கிறது என்றாலும், குமுட்டி அடுப்பில் செய்யாமல் கேஸ் அடுப்பில் செய்து கொள்கிறோம் - என்றாலும் அந்த பழைய சுவை கிடைப்பதில்லை! இதே மாவில் தவலை அடையும் செய்யலாம்! அதுவும் ரொம்பவே பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அரிசி உப்புமா கொழுக்கட்டை செய்முறை படங்களுடன் வெகு ஜோர். நான் அடிக்கடி செய்யும் சிற்றுண்டி.எங்கள் வீட்டில் அனைவருக்குமே இது மிகவும் பிடிக்கும்.தொட்டுக்கொள்ள சட்னி கொத்சு எதுவானாலும் நன்றாக இருக்கும்.உடன் வெல்லம் பொடி செய்தும், தொட்டுக்கொள்ளலாம். நன்றாக ஆறின பின் வெறும் கொழுகட்டைகளே வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி எல்லோருக்கும். பயணத்தில் இருப்பதால் பிறகு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அரிசிக் கொழுக்கட்டை என்னும் பெயரில் என் அண்ணி செய்வார் மிகவும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  17. நன்றி இராய செல்லப்பா. நம்முடைய பாரம்பரிய சமையல் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    நன்றி கார்த்திக் சரவணன். தேங்காய்ப் பல்லும் நன்றாக இருக்கும்.

    நன்றி கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  18. நன்றி கீதா மேடம். உங்கள் பதிவை வெகு நாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இப்போல்லாம், உருளியைப் படத்திலோ அல்லது உங்களைப் போன்றவர்களின் வீட்டிலோ பார்த்தால்தான் உண்டு. உருளியில்தான் 'காந்தல்' எனப்படும் பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் உப்புமா கிடைக்கும். அதுவும் மிகச் சுவையாக இருக்கும். நான் எண்ணெய் குறைவாக விடுவதாலும், குக்கரில் வைத்து எடுப்பதாலும் பாரம்பரியச் சுவை நிச்சயமாக வராது.

    பதிலளிநீக்கு
  19. நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு

    நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    நன்றி மிடில்கிளாஸ்மாதவி. தனியா என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, கொத்தமல்லியைத்தான் என்று நினைக்கிறேன். நாங்கள் பொதுவாக 'தனியா' என்று சொல்வது, கொத்தமல்லி விரையைத்தான். தழைகளைக் குறிப்பிட எப்போதும் கொத்தமல்லி என்றுதான் சொல்லுவோம். கொத்தமல்லி தொகையல் நல்லாத்தான் இருக்கும். (சட்டினியைவிட)

    பதிலளிநீக்கு
  20. நன்றி கோமதி அரசு மேடம்.

    நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். பொதுவா ரவா உப்புமா பிடிக்காதவர்கள் கூட, அரிசி உப்புமாவை விரும்புவார்கள்.

    நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களுக்கு

    நன்றி அசோகன் குப்புசாமி அவர்களுக்கு

    பதிலளிநீக்கு
  21. 'நன்றி கோபு சார். தேங்காய்த் துருவலோ, தேங்காய்ப் பல்களோ மிகுந்த சுவை சேர்க்கும். நான் பயணம் பண்ணும்போது இதனை எடுத்துப்போவேன். ஒரு தடவை லண்டனுக்கு நிறையத் தேங்காய்த் துருவலைச் சேர்த்து எடுத்துப்போய், அடுத்த வேளையில் பாக்கெட் பிரித்தபோது கெட்டுப்போயிருந்தது. அதனால், பயணத்தின்போது தேங்காய் சேர்க்காமல் செய்வேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே.. வெல்லம் சேர்த்துப் பண்ணியதில்லை. ஆனால், இனிப்புக் கொழுக்கட்டை (பிள்ளையார் கொழுக்கட்டை இல்லை. அரிசிமாவு ரெசிப்பியில், தேவையில்லாதவைகளை நீக்கிவிட்டு, வெல்லம் சேர்த்துச் செய்வது) செய்துள்ளோம்.

    பகவான்'ஜி - என்ன இந்தத் தலைமுறை மறந்து விட்டது என்று சொல்லிவிட்டீர்கள். இளைஞர்களை மனதில் வைத்துச் சொல்லியிருந்தால்.. அது உண்மைதான். அவர்களுக்கு நூடுல்ஸ், பிட்ஸா, மோமோஸ் இவைகளைவிட்டால் எதுதான் பிடிக்கிறது?

    பதிலளிநீக்கு
  23. நன்றி காமாட்சி மேடம். இஞ்சி சேர்த்தால் வாசனையாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் சொல்லும் தவலடை வேறு. அதையும் எழுதி அனுப்புகிறேன். என் ஹஸ்பண்ட் நீங்கள் சொல்லும் தவலடையைத்தான், அரிசி அடை என்ற பேரில் பண்ணுவாள். பசங்களுக்கு எனக்குப் பிடித்ததைவிட அரிசி அடை ரொம்பப் பிடிக்கும். எனக்குத்தான் அது கொஞ்சம் எக்ஸ்ட்'ரா வேலை என்று தோன்றும். அடுத்தமுறை வெந்தயம் சேர்த்துச் செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

    நன்றி மனோ சாமினாதன் மேடம். இதுவரை வெல்லம் சேர்த்துச் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி வெங்கட். தவலை, உருளி, குமுட்டி அடுப்பு - இதை எங்க பார்க்கிறது... நீங்களும் 'தவலை அடை' என்று அரிசி அடையைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நெல்லையில் தவலடை என்பது முற்றிலும் வேறு.

    பதிலளிநீக்கு
  26. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். நீங்கள் சொல்லியிருப்பதுபோல், வெறும் கொழக்கட்டைகளே அருமையாக இருக்கும்.

    நன்றி ஜி.எம்.பி ஐயா. தங்கள் அண்ணியின் கைப்பக்குவத்தை ஞாபகப்படுத்தியதற்கு மகிழ்ச்சி

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!