ஆண்ட்ராய்ட் அடிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்ட்ராய்ட் அடிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.2.16

அன்றாட வாழ்க்கையும் ஆண்ட்ராய்ட் போனும்!

  

                           Image result for android phone images Image result for android phone images
 
 
ஆண்டிராய்ட் ஃபோன் வந்தாலும் வந்தது.  அதில் இருக்கும் ஏகப்பட்ட 'ஆப்'ஸ் நம்மைத் தீயாய் அணைத்துக் கொண்டது.  லேண்ட்லைன் மட்டும் இருந்த, அல்லது அதுவும் இல்லாதிருந்த காலத்தை எண்ணி ஏங்குகிறது மனம்.
                       Image result for landline phone images   Image result for landline phone images Image result for landline phone images
 
தொலைத் தொடர்புக்கு என்று உண்டான சாதனம்!   இன்றோ?   அதன் சின்னத் திரையில் உலகமே அடங்கி விடுகிறது.

ஒரு வீட்டுக்குள் நுழைந்து பாருங்களேன்..  எல்லோரும் ஆளுக்கொரு அலைபேசியின் திரையில் ஆழ்ந்து போயிருப்பார்கள்.  நிமிர்ந்து நம்மைப் பார்ப்பது சில நொடிகள்தான்.  பின்னர் மீண்டும் தலை கவிழ்ந்து அலைபேசித் திரையில் மூழ்கி விடுவார்கள். 

நிமிர்ந்து பார்க்காமல்தான், அல்லது நிமிர்வதும், குனிவதுமாகத்தான் நலம் விசாரிப்பு,  பேச்சு எல்லாம்.  வீட்டுக்கு வந்திருப்பவரும் கூட, கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டில் வைஃபை இருக்குமாயின் அவரின் அலைபேசியை எடுத்துத் திறந்து அவரும் அதில் மூழ்கி விடுவார்.
 
 வீட்டுக்குள்ளேயே ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதே மிக மிக மிக அபூர்வமாகி விட்டது.  இளைஞர்களின் இரு கை விரல்களும் அலைபேசியின் 'கீ பேட்'களில் விளையாடும் வேகம் இருக்கிறதே..  அப்படி என்னதான், யாரிடம்தான் 'உரை'யாடுவார்களோ!

அவர்கள் படிப்பையும் கெடுத்து, உறவின் மேன்மையையும் உணரவைக்காமல் கெடுத்து, நேரத்தையும் வீணாக்கி...  படுத்துக் கொண்ட பின்னும் கைகளில் அலைபேசி.  திரையில் கண்கள்.  விரல்களில் 'கீ பேட்'கள்.  தூங்குவதோ நள்ளிரவு தாண்டி..
இப்போதெல்லாம் அதிகாலைத் துயிலெழுவோர் மிகச் சொற்பம்தான்.  அதுவும் வார இறுதி நாட்களாக இருந்து விட்டால்...  ஐயோடா!  படுக்கையிலிருந்து எழும் போதே கைக்குழந்தையைத் தேடுவது போல ஃபோனைத் தேடிக் கைகள் துழாவும்!

முன்பெல்லாம் தொலைக் காட்சித் தொடர்கள் பற்றி புலம்பாதோர் இருக்க மாட்டார்கள்.  அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது இன்றைய ஆண்ட்ராய்ட் அடிமைத்தனம்.  வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி சீரியல் பார்க்க மாட்டார்.  அதைத் துறந்துதானே இங்கு இவர்களைப் பார்க்க வந்திருக்கிறார்?  ஆனால் இப்போது என்னடாவென்றால் இவரும் ஆண்ட்ராய்டில் ஆழ்ந்து விடுவார்.  சீரியல்களை விட தீதான மோகம்!  தொலைகாட்சி இடியட் பாக்ஸ் என்றால் ஆண்ட்ராய்ட் ஃபோனை என்னவென்று அழைக்கலாம்?

                               Image result for subway surf images    Image result for temple run  images Image result for angry birds images 
 
கேம்ஸ் முதல்பட்சமாக அடிமை கொள்ளும்.  ஸப் வே ஸர்ஃப், ஆங்க்ரி பர்ட்ஸ், டெம்பிள் ரன் என்ற கேம்ஸ் மக்களை ஆட்டி வைக்கும்.  அதில் தற்போது பிரபலம் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்.  இந்த ஆட்டத்தில் கூடுதல் கஷ்டம், இதை ஆன்லைனில்தான் விளையாட முடியும்.  
                                                                   Image result for clash of clans images
 
சாதாரணமாகவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஃபிராடு அடிப்பவை.  என்னுடைய 5 ஜி பி இலவச நேரம் ஐந்தாம் தேதிக்குள் முடிந்து விட்டது என்று அறிவிப்பு வரும்.  "காசு கூட கட்டறியா?  இல்லை, குறைந்த வேகத்தில் இணைப்பைப் பெற, மோடம் ரீஸ்டார்ட் செய்யறியா?"  என்று கேட்கும்!  இது மாதிரி ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுகள் இந்த இலவச நேரத்துக்கான முதல் எமன்.
 
ஆண்ட்டிராய்டுகளில் உள்ள 'ப்ளே ஸ்டோர்' மூலம் எத்தனை செயலிகளை நிறுவ முடியுமோ அத்தனையையும் முயற்சி செய்து பார்த்து, அலைபேசியின் இடத்தையும், நம் நேரத்தையும் வீணடிப்போம்.  இதில் காட்டும் ரத்த அழுத்தத்தையும், நாடித்துடிப்பையும், ஜோசியங்களையும் நம்புவதற்கும் ஆள் இருக்கிறது!
 
அதற்காக உபயோகமே இல்லை என்று சொல்ல முடியாது.  ஏகப்பட்ட உபயோகங்கள் இருக்கின்றன.  எதையும் நாம் உபயோகிக்கும் விதத்தில்தானே இருக்கிறது!

               Image result for whatsapp imagesImage result for whatsapp images
 
ஆண்ட்ராய்டின் அடுத்த வசதியான 'வாட்ஸப்' நமக்கு அறிமுகமாகும்போது ஒரு பரபரப்புத் தோன்றும்.  நம்மிடம் இருக்கும் தொடர்பு எண்களில் யார் யாரிடம் வாட்சப் இருக்கிறது என்று பார்ப்பதில் தொடங்கும்.  அவர்களுக்கு அவசரம் அவசரமாக ஒரு ஸ்மைலியோ, 'Hi' யோ அனுப்புவோம்.
 
அப்புறம் Forward வெள்ளம்தான்.   நமக்கு அலுத்துப் போகும் நேரம் யாராவது ஒரு புதிய நண்பர் 'வாட்சப்'புக்கு வந்து நம்மை அகழ்ந்து எடுத்திருப்பார்.   இதுவரை நாம் பார்த்த, அனுப்பிய Forwards எல்லாம் அவருக்குப் புதிதாகத் தெரிவதால் அவை மீண்டும் நம்மிடையே படை எடுக்கும். இந்த வாட்சப் வசதியில் க்ரூப் அமைப்பது பற்றித் தனிப்பதிவு கட்டாயம் உண்டு!
 
இது போல வரும் Forward களில் வரும் வீடியோக்கள் அலைபேசியின் நினைவகத்தை அடைத்துப் பிரச்னையை உண்டாக்கும்போதுதான் அடுத்த கட்டம் தோன்றும்.

                                        Image result for memory card images    Image result for memory card images
 
 
மெமரி கார்ட்.  இது ஒரு அரக்கன்.  ஒரு காலத்தில் கணினிக்கான 5 MB நினைவகத்தைக் கப்பலில் கொண்டு வந்தார்களாம்.    இப்போதோ 64 GB, 128 GB எல்லாம் மிகச் சிறிய 'சிப்'களில் அடக்கம்.  அலைபேசியின் உள் நினைவகமே 16, 32 ஜி பிக்கள் இருப்பவை கிடைக்கின்றன. 
உள்ளங்கையில் உலகம்.  அதன் ஆச்சர்யங்களும் பிரமிப்புகளும் நம்மை அடிமை கொண்டு சீரழிக்கத் தொடங்குகின்றன.
 
அதை உபயோகமான வழியில் பயன்படுத்தினாலாவது தேவலாம்.  பொழுது போக்கு, பொழுது போக்கு, பொழுது போக்குதான்!

எவ்வளவு லேட்டஸ்ட்டான அலைபேசி வாங்கினாலும் அதன் வாழ்வு ஓரிரு வருடங்கள்தான். அதற்குள் இந்த அலைபேசியை பழையதாக்கு, மேம்பட்ட வசதிகளுடன் புதிய அலைபேசிகள் வந்து நம் கையை அரிக்க வைக்கும், கடிக்க வைக்கும்!
 
சாலையில், ஹோட்டலில், பஸ்ஸில், எலெக்ட்ரிக், மெட்ரோ டிரெயின்களில் பாருங்கள்..  எல்லோரும் - அல்மோஸ்ட் எல்லோரும் - காதில் ஒரு இயர் ஃபோனுடன் தனி உலகத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.  பாட்டுக் கேட்பவர்கள் பாதி.  ப்ளூ டூத்தில் பேசிக் கொண்டிருப்பவர்கள் மீதி!
 
ரோபோக்கள் உலகை ஆள்வது போலப் படம் எடுத்திருக்கிறார்கள்.  இப்போது இந்தச் சிறிய சாதனங்கள் மனிதனை அடிமை கொள்வதை என்னவென்று சொல்ல..
 
 
 
 
பின்குறிப்பு :  கீதா சாம்பசிவம் மேடம்...  "என்னிடம் ஆண்டிராய்ட் ஃபோன் இல்லை.. சாதாரண ஃபோன்தான்" என்கிற வரியைப் பின்னூட்டத்தில் தவிர்க்கவும்!! 


                                                                         Image result for tongue smileys images