கல்கண்டு சாதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்கண்டு சாதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.3.15

'திங்க' க்கிழமை : கல்கண்டு சாதம்.


சுகுமார் 22 வருடங்களுக்கு முன்னால் எங்களுக்குச் செய்து கொடுத்தார் இந்தக் கல்கண்டு சாதத்தை.  நடுவில் ஒருமுறை முயற்சிக்கப் போய் சரிவரவில்லை.  இந்த வாரம் செய்து விடுவது என்று முடிவெடுத்து அவரிடம் கேட்டுக் குறித்துக் கொண்டேன்.

செய்துடுவோம்!

"ஹலோ.... சுகுமார்?  சுகுமார் இருக்காரா?"

"ஹலோ....  ரொம்ப நடிக்காத...  நான்தான் பேசறேன்..  என்ன வேணும் சொல்லு..  காரியமில்லாம ஃபோன் பண்ண மாட்டியே..."

"ஹிஹிஹி...  நல்லா இருக்கீங்களா?  முன்னால ஒரு தரம் கல்கண்டு சாதம் செய்து தந்தீங்களே..."

"எப்ப? அடப்பாவி..  எத்தனை வருஷமாச்சு..  இப்ப என்ன அதுக்கு?"

"எத்தனை வருஷம் ஆனா என்ன?  உங்க கைப்பக்குவம் மறக்குமா? அதைச் செய்ய ஆசை.  எப்படிச் செய்யறதுன்னு சொல்லுங்களேன்.."

"ரொம்ப ஐஸ் வைக்காத... நான் வெளியாளுக்கெல்லாம் சொல்றதில்லையே..."

"நான்தான் வெளி ஆள் இல்லையே..  சும்மா அலட்டாமச் சொல்லுங்க.."

"தோ பார்..  வெளில கிளம்பிகிட்டிருக்கேன்...  வேகமாச் சொல்றேன் குறிச்சுக்க... 'நைநை' ன்னு சந்தேகமா கேட்டுகிட்டிருக்கக் கூடாது..."

"சரி சொல்லுங்க.."

"ஒரு பங்கு அரிசிக்கு நாலு பங்கு பால்.  கால் படி அரிசின்னு வச்சுக்கோ,  கழுவிக் களைந்த அரிசியை முக்கால் படி பால்ல போட்டு குக்கர்ல வை.  முன்னால எல்லாம் வெங்கலப் பானைல செய்வோம்.  அடி பிடிக்காமக் கிண்டறத்துக்கு ரொம்பப் பொறுமை வேணும்..  பால் இல்லையா...  அடி பிடிச்சுடும்...!"

"நான் குக்கர்ல வச்சுடறேனே..."

"தெரியுமே! அதான செய்வே...  குக்கர்ல வச்சு நல்லாக் குழைய வேக விடு.  அப்புறம் அதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி இன்னொரு முக்கால் லிட்டர் பாலை ஊற்றிக் கிண்டு..."

"இன்னும் பாலா?"

"எவ்வளவு பாலாயிருந்தாலும் ஓகே.. டேஸ்ட்தான் கூடும்.  நல்லாக் கிண்டினா பாயசம் மாதிரி செமி சாலிடா ஆயிடும். இப்போ அடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் வைத்து கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கணும்.  அரிசிக்கு மூன்று பங்கு சர்க்கரை. அதை இந்தக் கலவையில் இட்டு கவனமா, அடி பிடிக்காமக் கிண்டணும்.  சர்க்கரை, பால் எல்லாம் சேர்ந்து இருக்கறதால தளும்பும்.  தளும்பாமக் கிண்டணும்"
 
 "சர்க்கரையா?  கல்கண்டு வேண்டாமா?"

"கல்கண்டும் வேணாம்.. குமுதமும் வேணாம்...  சர்க்கரையைப் போடு"

"சரி..  மேல சொல்லுங்க.."
 
 

                                                       Image result for milk kova images
 
 
பாலுக்கு பதிலா சர்க்கரை சேர்க்காத கோவா கூடச் சேர்க்கலாம். தளும்பாது பாரு!  அடி பிடிக்கக் கூடாதுன்னு நெய் சேர்த்துடக் கூடாது.  சாதம் முறுக்கிக் கொண்டு அரவனப் பாயசம் மாதிரி ஆகி விடும்.  சாதம் விரை விரையாப் போயிடும். 

 
கொஞ்சம் ஓரளவு கெட்டியானதும் நெய் விட்டுக் கீழே இறக்கிடு.  முந்திரி பாதாம், குங்குமப்பூ அப்புறம் வாசனைக்கு ஏலக்காய் சேர்க்கலாம்.  பாலோடு குங்கமப்பூ சேரும் வாசனைதான் முக்கியம்.  பச்சை கற்பூரமோ,  ஜாதிக்காயோ சேர்த்துட வேண்டாம்.  இதோட தனி டேஸ்ட்ட அது கெடுத்துடும்.  இறக்கி வச்சதும் கெட்டி ஆயிடும்.
 
 

                                                                    Image result for kalkandu sadam images
 
பேஸ்ட் போல இருக்கும் சாதம் விறைத்துக் கொண்டு வருமுன் இறக்கி விட வேண்டும்.  சர்க்கரை ஜாஸ்தி சேர்க்கறோம் இல்லையா,  அது சாதத்தை விறைக்கச் செய்து அரவனப் பாயசம் மாதிரிச் செய்யுமுன் இறக்கி விட வேண்டும்.  முக்கியமான விஷயம் எதையும் வறுத்துப் போடக் கூடாது.  அந்த வாசனை இதற்குச் சரியாய் வராது.."

"அவ்வளவுதானா?  இதற்குத் தொட்டுக் கொள்ள..."

"ஆரம்பிச்சுட்டியா?  ஃபோனை வை..  நான் கிளம்பணும்.."




படங்கள்  :  இணையம்.