கொய்யாப்பழ ஜல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொய்யாப்பழ ஜல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.12.14

'திங்க'க் கிழமை : கொய்யாப்பழ ஜல்லி



                               
 
தலைப்பைப் பார்த்து நான் ஏதோ ஜல்லியடிக்கிறேன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.  இதுவரை எதிலிருந்து எடுத்துப் போட்டேனோ,  அதே புத்தகத்திலிருந்துதான் எடுத்துப் போடுகிறேன்.

கொய்யாப்பழம் எனக்கு ரொம்பப் பிடித்த பழம்.  அதை இப்படியெல்லாம் துன்புறுத்தி, அதைச் சாப்ப்பிடவேண்டுமா என்று தோன்றினாலும், அதிகம் பழம் கிடைக்கும் காலத்துக்கு இப்படிச் செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

என் மனைவி, பிள்ளைகள் கொய்யாப் பழத்தைத் துண்டாக்கி அதில் மிளகாய்ப் பொடி  (காரப்பொடி) தூவிச் சாப்பிடுவார்கள். எனக்கு அதில் சம்மதமில்லை! கொ. பழத்தின் ஒரிஜினல் சுவை கெட்டுவிடுகிறது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ரொம்பக் கனிந்து இருந்தால் சாப்பிட வசதிதான். ஆனால் அதைவிட, செங்காயாக இருக்கும் அல்லது முக்கால் கனிந்திருக்கும் பழங்களே என் சாய்ஸ்!  அதைச் சிறு துண்டுகளாக்கி, தட்டில் போட்டுக் கொண்டு அவ்வப்போது ஒரு துண்டை வாயிலிடுவது இனிமையான அனுபவம்!
                                                                  
                                                   
 
சிறுவயதில் - நான் மூன்றாம் வகுப்புப் படித்த சமயம் - தங்கையுடன் ஏற்பட்ட சில்லுண்டித் தகராறில், எங்கள் வீட்டுக் கொய்யா மரத்திலில் ஏறி மேல் கிளையில் அமர்ந்து கொண்டு அவளை வம்பிழுத்துக் கொண்டேயிருந்தபோது மேலிருந்து தலை கீழாகக் கீழே விழுந்து அரைநாள் மயக்கமாக இருந்து வீட்டாரை பயமுறுத்தியிருக்கிறேன்.

வத்ராப்பில் வேலைபார்த்த காலத்தில் அங்கு கிடைக்கும் கொய்யாப் பழ சைஸைக் கண்டு மிரண்டு போயிருக்கிறேன். வத்ராப், கிருஷ்ணன் கோவில் கொய்யாப் பழங்கள் சம்திங் ஸ்பெஷல்! தேங்காய் சைஸில் இருக்கும்! சுவையும் அபாரமாக இருக்கும். இந்தவகைக் கொய்யாப் பழங்கள் மதுரையில் பெரியார் நிலையம் அருகேயும் கிடைக்கும். 
 

           
 
ஸி விட்டமின் அதிக அளவில் இருக்கும் கொய்யா நார்ச்சத்து மிகுந்தது. இந்த வாசனை சிலருக்குப் பிடிப்பதில்லை. சிவப்புக் கொய்யாவும் கிடைக்கிறது. அது இன்னும் இனிப்பாக இருக்கும் என்பார்கள். ஆனாலும் எனக்கு வெள்ளைக் கொய்யாதான் இஷ்டம். பார்த்து வாங்காவிட்டால் கொய்யாக்கள் சுவையின்றி தண்ணீர் குடிப்பது போல சுவையற்றும் அமைந்து விடும்.
 
பல் பிரச்னை இருப்பவர்களுக்கு கொய்யா விதைகள் எதிரி! பற்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை கொடுக்கும்.


வெட்டிக் கதை போதுமென்று அதை இந்த அளவில் பூர்த்தி செய்துகொண்டு, மேலே தலைப்பில் சொல்லப்பட்டுள ரெசிப்பிக்குச் செல்கிறேன்!



=====================================================================

கொய்யாப்பழ ஜல்லி 
 

                                      
 
கொய்யாப்பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பழத்துண்டு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டவும்.
                              
 
வடிகட்டிய நீரில், கொய்யாப்பழத் துண்டு எவ்வளவு இருந்ததோ, அதில் பாதி சர்க்கரை போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். அடுப்பைப் பெரியதாக வைத்து ஒருமணி நேரம் கொதிக்க வைத்தால் பொங்கிப் பொங்கி நுரைத்து வரும்.
 
பிறகு அடுப்பைச் சிறியதாக எரிய வைக்கவும். அப்போது ஐந்து நிமிடங்களில் நுரைத்துப் பொங்கும் சமயத்தில் ஐந்து பத்து நிமிடங்களில் இறக்கி வைத்து 2 டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட்,இரண்டு டீஸ்பூன் பைனாப்பிள் எஸ்சென்ஸ் விட்டு, உடனே ஒரு பாட்டிலில் கொட்டி அசைக்காமல் ஓரிடத்தில் வைக்கவும்.


                                                                            
 
சூடாக இருக்கும்போது பாட்டிலை மூடாமல் வைக்கவும்.  ஆறியவுடன் மூடிவைக்கவும்.  மறுநாள் கெட்டியாக ஆகியிருக்கும்.  அப்படி கெட்டியாக ஆகவில்லை என்றால் மறுபடியும் 10 -15 நிமிடங்கள் கொதிக்கவைத்து பாட்டிலில் கொட்டவும். 

=====================================================================
 
 
                                    

இதுவரை குறிப்பு கொடுத்திருக்கும் மாமி, அதை என்ன செய்ய வேண்டும் ன்று சொல்லவில்லை. அப்படியே சாப்பிடவேண்டுமா, தண்ணீரில் விட்டு ஜூஸ் போலச் சாப்பிட வேண்டுமா என்று சொல்லவில்லை! 

                    

இரண்டாவதாகச் சொல்லி இருப்பதற்குத்தான் சாத்தியக்கூறு அதிகம். ஏனென்றால், 'பான வகைகள்' என்ற தலைப்பின் கீழ்தான் இது வருகிறது!







படங்கள் : எப்படி, எப்படிச் சாப்பிடலாம் என்றும் கற்றுக் கொடுத்திருக்கும் இணையத்துக்கு நன்றி!