வாழைக்காய் பொடிமாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழைக்காய் பொடிமாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.10.16

"திங்க"க்கிழமை பதிவு – வாழைக்காய் பொடிமாஸ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



     இந்த வாரம் 'திங்க'க் கொடுக்கும் கடமை நெல்லைத்தமிழனுக்கு!


     என் ஆபீசில் வேலைபார்ப்பவர்களை எப்போதாவது வீட்டிற்கு அழைத்தால் இந்தக் கறியமுது செய்வேன். இது பொதுவாக எல்லோரும் செய்வதல்ல என்பதால், அவர்களுக்குப் பிடிக்கும். இதுக்கு முக்கியம் ஓரளவு முத்தின வாழைக்காய். இதில் நான் வெங்காயம் சேர்ப்பது என் ஹஸ்பண்டுக்குப் பிடிக்காது. அவங்க, 'ஏன் நம்ம பழக்கத்தை மாத்தி இதுலல்லாம் வெங்காயம் சேர்க்கிறீங்க?' என்பாள். (ஆமாமாம்...  இங்கும் அப்படித்தான் இருந்தது.  ஆனால் இங்கு இப்போது 'பழக்கத்தை' மாற்றி விட்டேன்!!)





     என்னுடைய டேஸ்ட் மாறிடப் போகுதேன்னு அவளுக்கு ரொம்பக் கவலை. அவங்க சொல்றதும் சரிதான். எனக்கு சில மாதங்கள் முன்பு ஆசிரமத்தில் சாப்பிட்ட மதிய உணவு (ஆசிரமம்?) சுவை குறைவதுபோல் தோன்றியது, எதிலும் வெங்காயம் இல்லததால். (ஆமாம்..  அந்த மாளயபட்சப் பதினைந்து நாட்களே கஷ்டம் பாஸ்!)  என்னுடைய சுற்றங்களின் வீட்டிலும் வெங்காயத்தைக் கண்ணால் காணமுடியாது. இனி வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை.




     ஒரு வாழைக்காயை இரண்டா வெட்டி, (இரண்டு முனைகளையும் கட் பண்ணிவிடவும்) 1 ஸ்பூன் ஆயிலும், கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து (100 மி.லிக்கும் குறைவாக) குக்கரில் வேகவிடவும். அப்புறம் வெளியில் எடுத்து ஆறவிடவும். வாழையில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.  





     ஆறின பின்பு, வாழைத்தோலை உரித்துவிடவும். ரொம்ப சுலபமா வந்துடும். பின்பு, கேரட் சீவியின் துணை கொண்டு, வாழைக்காயைச் சீவிக்கொள்ளவும். இது கஷ்டமாக இருந்தால் (அல்லது, வாழைக்காய் கொஞ்சம் அதிகமாக வெந்துவிட்டால்), கையினால் உதிர்த்துக்கொள்ளவும்.




      கொஞ்சம் இஞ்சியை சீவி (grate) வைத்துக்கொள்ளவும். 1 மேசைக் கரண்டி தேங்காய்த் துருவலையும் வைத்துக்கொள்ளவும். வெங்காயம் சேர்ப்பதானால், நீளவாக்கில் வெங்காயத்தை வெட்டிவைத்துக்கொள்ளவும். தாளிப்பதற்கு, 1 மிளகாய் வற்றல், 1 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு மற்றும் கருவேப்பிலை.



     இலுப்புச் சட்டியில் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்தபின், வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின்பு, சீவி வைத்த வாழைக்காய், இஞ்சி, உப்பு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அட்டகாசமான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.





     இது, வற்றல், வெந்தய, புளிக்குழம்புகளுக்கு மிக அருமையாக இருக்கும்.  (நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்... எனக்கும் ரொம்.......பப் பிடிக்கும்)
 


அன்புடன்,

நெல்லைத்தமிழன்